புதன், 9 ஏப்ரல், 2014

குமரிக்கண்டம் (Lemuria)

"மறைந்த குமரிக்கண்டம் (Lost Lemuria) என்னும் ஆங்கில நூலுட் போந்த படத்தினாலே, ஒரு பெருமலையானது மேலைக் கடலில் தொடங்கி வடக்குந் தெற்குமாகக் குமரிக்குத் தென்பகுதியிலுள்ள நிலப்பகுதியிலே நெடுந்தொலைவு சென்று பின் தென்மேற்காகத் திரும்பி 'மடகாசுக்கர்' என்ற ஆப்பிரிக்கத் தீவுவரை சென்றதாகத் தெரிகின்றது. அம் மலைக்குக் கீழ்ப்பக்கம் உள்ள நாட்டில் பெருமலை ஒன்றுமிருந்ததாகத் தெரியவில்லை. இந்த மலையானது தென்கிழக்கு முதல் வடமேற்குவரை செல்லுகின்ற இமயமலையைப் போல வடமேற்குத் தொடங்கித் தென்கிழக்கிற் செல்லுகின்ற ஒரு பெரு மலைத்தொடராக இருந்திருப்பதாகத் தெரிகின்றது"2 என்று பேரா.கா. சுப்பிரமணியப்பிள்ளை வரைந்திருப்பதனின்று, தெற்கில் முழுகிப்போன குமரிக்கண்டம் என்னும் நிலப்பகுதி ஏறத்தாழ 2500 கல் தென்வடலாக நீண்டிருந்ததென்றும், அதன் மேற்குப்பகுதி நெடுகலும் ஒரு பெருமலைத்தொடர் தொடர்ந்திருந்ததென்றும் அறியப்படும்.

"முந்நீர் விழவின் நெடியோன்
நன்னீர்ப் பஃறுளி"

(புறம். 9)
என்று நெட்டிமையாரும்,

"பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடும்"

(சிலப்.11:19-20)
என்று இளங்கோவடிகளும் பாடியிருப்பதால், குமரிக்கண்டமும், அதன் தென்கோடியின் மேலைப்பகுதியிலிருந்த குமரிமலைத் தொடரும், அதனின்று பாய்ந்தோடிய பஃறுளியாறும் கட்டுச் செய்திகளல்ல வென்றும் உண்மையாயிருந்தவை யென்றும் அறியலாம்.
"தொடியோள் பௌவமும்"3 என்னும் சிலப்பதிகாரத் தொடரின் உரையில், "தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளி யென்னும் ஆற்றிற்கும் குமரியென்னும் ஆற்றிற்கும் இடையே எழுநூற்றுக் காவதவாறும், இவற்றின் நீர்மலிவானென மலிந்த ஏழ்தெங்கநாடும், ஏழ்மதுரைநாடும், ஏழ்முன்பாலை நாடும், ஏழ்பின் பாலைநாடும், ஏழ்குன்றநாடும், ஏழ்குணகாரைநாடும், ஏழ் குறும்பனைநாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும், குமரி கொல்லம் முதலிய பன்மலைநாடும், காடும் நதியும் பதியும்" என்று அடியார்க்குநல்லார் குமரிக்கண்டப் பகுதியாகிய பழம் பாண்டி நாட்டைப் பகுத்துக் கூறியிருப்பதும், கட்டுச்செய்தியா யிருக்க முடியாது.

"காலமுறைப்பட்ட உண்மைகளைக் கொண்டு, இற்றை மலையத் தீவுக் கூட்டம் முற்றிலும் வேறுபட்ட இருபகுதிகளைக் கொண்ட தென்று, உவாலேசு கூறியுள்ள முதன்மையான சான்று சிறப்பாக உவகையூட்டத்தக்கது. பொருநையோ (Borneo), சாலி (Java), சுமதுரா(Sumatra) என்னும் பெருந்தீவுகளைக் கொண்ட மேலைப் பிரிவாகிய இந்தோ-மலையத் தீவுக்கூட்டம், முன்காலத்தில் மலாக்காவினால் ஆசியாக் கண்டத்தோடு இணைக்கப்பட்டிருந்தது. ஒருகால், சற்று முந்திக் கூறிய குமரிக் (Lemuria) கண்டத்தோடும் அது இணைக்கப்பட்டிருந்திருக்கலாம். இதற்கு மாறாக, செலிபிசு, மொலுக்காசு, புதுக்கினியா, சாலோமோன் தீவுகள் முதலியவற்றைக் கொண்ட கீழைப் பிரிவாகிய ஆத்திரேலிய-மலையத் தீவுக்கூட்டம், முன்காலத்தில் ஆத்திரேலியாவுடன் நேரே இணைக்கப் பட்டிருந்தது."4

"செடிகொடிகளிலும் உயிரிகளிலும் ஆப்பிரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் மிகப் பழங்காலத்திலிருந்த மிக நெருங்கிய ஒப்புமைகளைக்கொண்டு, திருவாளர் ஓல்டுகாம் ஒரு காலத்தில் தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக்கொண்டு ஒரு தொடர்ந்த நிலப்பரப்பிருந்ததென்று முடிபு செய்கின்றார்."

"இந்தியர்க்குப் பெயரே தெரியாத சில பழங்காலத்து மாபெரிய பப்பரப்புளி அல்லது யானைப்புளி அல்லது மேனாட்டு (சீமை)ப்புளி (Baobab) என்னும் ஆப்பிரிக்க மரங்கள், இந்தியத் தீவக்குறையின் (Peninsula) தென்கோடியில், அயல்நாட்டு வணிகம் நிகழ்ந்து வந்த சில துறைமுகங்களில், அதாவது குமரிமுனை யருகிலுள்ள கோட்டாற்றிலும் திருநெல்வேலி மாவட்டத்தில் தூத்துக்குடியருகில் பழைய கொற்கையிருந்திருக்கக்கூடிய இடத்திலும், இன்னுங் காணப்படுகின்றன.
குமரிக்கண்ட நால்நிலைகள்

1. ஆப்பிரிக்காவொடும்,ஆத்திரேலியாவொடும் கூடிய பழம் பாண்டிநாடு.

2. ஆப்பிரிக்கா நீங்கிய பழம்பாண்டிநாடு.

3. ஆத்திரேலியாவும் நீங்கிய பழம்பாண்டிநாடு.

4. சிறிது சிறிதாய்க் குறைந்துவந்தபழம் பாண்டிநாடு