புதன், 8 அக்டோபர், 2014

சங்கச் சிந்தனைகள் - 4

வெகுதூரத்தில் கிராமத்து நாய் ஒன்று ஊளையிட்டு ஓய்ந்தது.

அவன் அந்த வேலியின் ஓரமாக மெதுவாக நடந்து சற்றே முயன்றால் தாண்டிவிடக்கூடிய ஒரு இடத்தில் நின்றான். அதிகம் சப்தம் செய்யாமல் தாண்டியாக வேண்டும். தாண்டும்போது காலில் கல்லோ முள்ளோ குத்தாமல் இருக்க வேண்டும். கால் வைக்கும் இடத்தில் ஊர்வனவோ நெளிவனவோ இருந்து தொலைக்கக்கூடாது. நேற்றுத் தாண்டிய இடம் இதுதானா என்பது சரிவரத் தெரியவில்லை. அமாவாசைக்கு இரண்டு நாட்கள்தான் உள்ளன என்பதால் பொட்டு வெளிச்சம் கிடையாது. கொற்றவையை நேர்ந்துகொண்டு தாண்டிவிடவேண்டியதுதான் !

ஹா!

தாண்டும்போது இருளில் சரியாகப் புலப்படாத பெருங்கல்லொன்று தடுக்க ஏறக்குறைய விழுந்துவிட்டான் ! நாசமாய்ப்போக ! நேற்று தாண்டிய அதே இடம் - அதே இடத்தில் மீண்டும் அடி... விண் விண்ணென்று தெரிக்க... மண்டையில் கோபம் பரபரவென்று ஏறியது.

முடியாது - இப்படி ஒவ்வொரு நாளும் திருட்டுத்தனமாக வந்து போய்க்கொண்டிருக்க முடியாது. நேன்றே ஜாடை காண்பித்தாகிவிட்டது. இன்று பகிரங்கமாகவே அவளிடம் கேட்டுவிட வேண்டியதுதான். என்னுடன் வாழ்வதற்கு விருப்பமா இல்லையா ? உன் அன்னை தந்தை அல்லது செவிலித்தாய் ஒருவேளை எதிர்த்தால் - ஒருவேளை என்ன, உன் அப்பன் நிச்சயம் எதிர்க்கத்தான் போகிறான் ! - அவர்களைப் பிரிந்து கட்டிய துணியோடு என்பின்னே வர சம்மதமா இல்லையா ? 

இரண்டில் ஒன்று எனக்கு இன்று தெரிந்தாக வேண்டும்.

இப்படி நாய்போல தினம் தினம் வேலிதாண்டி குதிக்க முடியாது என்னால். இவள் இல்லாவிட்டால் இன்னொருத்தி ! போனால் போகிறதென்று விட்டுத் தொலைக்க வேண்டியதுதான்.

அவன் புழக்கடை தாண்டி முற்றத்தின் கதவை மெதுவாக தட்டப்போகும்போது சரியாக அந்தக் கதவு திறந்தது. ஒரு கையில் தாங்கிய சிறு அகல் விளக்கோடு - அந்த அகலின் வெளிச்சம் அணைந்துவிடக்கூடாதே என்று சுடர் அரவணைத்த மற்றொரு கையொடு - குனிந்த தலையோடு - 

ஒரு நிலவு தெரிந்தது.

அவன் நெஞ்சில் பந்தாக ஒரு பரவசம் மேலெழும்பி மேலண்ணத்தை அடைத்தது. சிறிது நேரத்திற்கு முன் காலில் பட்ட அடி மறந்து போனது. சட்டென்று அந்த ஊர், நாய், வேலி, இரவு, கல், அடி, அவள் வீடு - எல்லாமே சில நொடிகள் காணாமல் போயின. அந்த முகம் மட்டும் நின்றது. அல்ல, அந்த முகம் கூட அல்ல - முகத்தில் கவிந்திருந்த அந்தக் கண்களும் அவற்றை தடவிச்சென்ற கருவிழிகளும் மட்டும் நின்றன.

இருவரும் மாட்டுக் கொட்டிலுக்கருகில் அமைந்திருந்த சிறு அறையில் ஒடுங்கினார்கள். சிறிது நேரத்திற்கு எவரும் புழக்கடைப் பக்கம் ஒதுங்காமலிருந்தால் பிழைக்கலாம் !

அவன் தைரியசாலிதான் - வீரன்தான் - ஆனால் எதிலும் நிதானமில்லை. நிதானம் கொடுக்கும் கம்பீரமில்லை.

அவசர அவசரமாக அவளிடம் சொல்ல வந்ததை - கடந்த ஒரு ஜாம நேரமாக ஒத்திகை பார்த்த வாசகங்களை - பரபரப்பாகச் சொல்லி முடித்தான்.
"இதோ பார் ! நேரடியாகவே கேட்டு விடுகிறேன் - என்னைத் திருமணம் செய்து கொள்ளச் சம்மதமா இல்லையா ? எதற்கும் நான் சித்தமாகிவிட்டேன் - தினந்தோறும் ஊர்தாண்டி ஊர் வந்து நாய் நரிகளுக்கு பயந்து - வேலிதாண்டிக் குதித்து - என்னால் ஆகாது ! உனக்கு விருப்பமெனில் இப்போதே என்னிடம் சொல்லிவிடு - மற்ற ஏற்பாடுகளை நான் கவனித்துக் கொள்கிறேன் !"

ஓ தலைவ ! நீ நல்லவன் - ஆனால் பெண்மை புரிதாதவன். பெண்ணின் நுண்மை புரிதாதவன். அதன் தன்மை அறியாதவன். என்ன சொல்லச் சொல்கிறாய் அவளை ? எப்படிச் சொல்லச் சொல்கிறாய் ? நீ கேள்வி கேட்கும் முன்னரே அவள் பதில் சொல்லி விட்டாள் - உனக்குத்தான் அந்த பதிலைப் படிக்கத் தெரியவில்லை.

வார்த்தைகளால் சொன்னால்தான் புரிந்துகொள்வாயா ? மெளனத்தின் மொழி வார்த்தைகளைவிட அர்த்தமானது - ஆழமானது என்பதை அறிவாயா ?

முற்றக் கதவு நீ நெருங்கும்போது சொல்லி வைத்தாற்போலத் திறந்ததே - அதற்கு என்ன அர்த்தம் ? எத்தனை நாழிகைகளாக அவள் உனக்காக வழி மேல் தன் செவி வைத்து - இதயம் வைத்துக் காத்துக்கொண்டிருக்கிறாள் என்பதை அறிவாயா ? உன் மென்மையான - குறடு தரிக்காத - பாதச் சுவடுகளின் சப்தத்திற்காக நேற்று இரவு முழுவதும் அவள் ஏங்கி இருந்ததை அறிவாயா ?

உன் தரிசனம் கிடைத்ததும் அவளது மேனி மெல்ல நடுங்கிற்றே - அந்த மெல்லிய அகல் வெளிச்சத்தில் அது உன் கண்களுக்குத் தெரியவில்லை ? மாட்டுக் கொட்டிலை அடைவதற்குள் அவள் மேனி முழுவதிலும் முத்து முத்தாக வியர்வை திரண்டுவிட்டதே என்ன அர்த்தம் அதற்கு ? 

இதோ ! கடுமை பொருந்திய உன் மொழிகள் அவளது இதயத்தைக் கலக்கி விட்டன. 

விழியோரம் ததும்பி நிற்கும் நீர் - அவளின் காதலுக்கு சாட்சி. 
உன்னை இழந்துவிடுவோமா என்று அவள் கண்களில் விரியும் மருட்சி - அவளின் காதலுக்குச் சாட்சி.
பசலை படர்ந்து நிற்கும் அவளது மேனி - நடுங்கும் அவளின் கரங்கள் - இந்த பூமி, ஆகாயம், நட்சத்திரங்கள் - எல்லாம், எல்லாம்... அவளின் காதலுக்குச் சாட்சி.

காதல் உன் மனதை இன்னும் நுட்பமாக்கிவிடவில்லையா ? விழிகளின் பாஷையைப் படிக்கும் வித்தை நீ இன்னும் பழகவில்லையா ?
வாய்விட்டுச் சொல்லும் சொல் எச்சில் பட்டு அசுத்தமாகிவிடுகிறது. இதயத்தின் மொழி இரவில் திரளும் பனிநீரைப்போல பவித்திரமானது அல்லவா ?

தலைவா - உடனடியாக அவளைத் தழுவு ! அவள் தாபம் தணி ! அவள் சாய்ந்துகொள்ளத் தோள்கொடு ! அணையும் நிலையில் தவிக்கும் அவளின் உயிர்ச் சுடருக்கு உன் அணைப்பே மருந்து !

களவியல் ஒழுக்கத்தைச் சொல்லி பலரின் கூற்று நிகழும் இயல்புகளையும் விளக்கி முடிக்கும் தொல்காப்பியர், தலைவன் தலைவி இருவருக்கிடையில் பொங்கும் வேட்கையைச் சொல்லத் துணிகையில்...தன் உறு வேட்கை கிழவன் முன் கிளத்தல்
எண்ணும் காலை, கிழத்திற்கு இல்லை;
"பிற நீர் மாக்களின் அறிய, ஆயிடைப்
பெய்ந் நீர் போலும் உணர்விற்று" என்ப.

(தொல்காப்பியம் / பொருளதிகாரம் - களவியல் - எண் 1062)


என்கிறார்.

மிக மிக நுட்பமானதொரு விஷயத்தை எதிர்பார்க்கமுடியாததொரு உதாரணம் மூலம் பளிச்சென்று காண்பித்துவிடும் வித்தை தொல்காப்பியருக்கே உரியது.

"தன்னுடைய வேட்கை மிகுதியைத் தலைவன் முன்னே நின்று சொல்லுதல், ஆராயுமிடத்துத் தலைவிக்கு இல்லை. அவ்வாறு கூறாத இடத்து புதுமட்கலத்துள் ஊற்றப்பட்ட நீர் புறத்தே பொசிந்து தன்னுடைய இருப்பபைக் காட்டுவதைப்போல அவளின் உணர்வு வெளிப்படும்"

என்ன அற்புதமான சிந்தனை !

இதில் "எண்ணும் காலை" - அதாவது "ஆராயுமிடத்து" என்று ஒரு வார்த்தை சேர்க்கிறார் பாருங்கள் - அதுதான் தொல்காப்பியர் ! அதாவது காதலன் முன்பு எந்த நிலையிலாவது தலைவி தன்னுடைய வேட்கை மிகுதியைத் தெரிவிக்காறாளா என்று கொஞ்ச நேரம் யோசிக்கிறாராம்... எப்படி யோசித்துப் பார்த்தாலும் தலைவி தன் உணர்வுகளை வாய்விட்டுச் சொல்வது இல்லையாம் !

பின் எப்படிச் சொல்கிறாள் ?

புதிதாக வனையப்பட்ட மட்பாண்டத்தில் ஊற்றப்பட்ட நீர் மெது மெதுவாகக் கசிந்து (புறத்தே பொசிந்து) தன் இருப்பைக் காட்டுவதைப் போல அவளும் தன் உணர்வுகளை மெளனமாக வெளிப்படுத்துகிறாளாம். அதாவது தலைவி - அல்லது அவளது இதயம் - காதல் வயப்பட்ட நிலையில் புதிதாகப் புனையப்பட்ட மட்பாண்டம்போல ஆகிவிடுகிறது என்று கொள்ளலாம். புதிதாகப் புனையப்பட்ட மட்பாண்டத்தில் எவராவது சிறிதளவு கையை வைத்தாலே குழைந்து விடும். அது போல இருக்கிறது தலைவியின் இதயம். அவளது இதயத்தின் தாபமும் அன்பும் அவளுக்கு ஈரம் கொடுக்கின்றன.

ஆனால் சமூகம் என்ன செய்கிறது ? அந்த மட்பாண்டத்தை நன்கு வெய்யிலில் வைத்து உலர்த்தி, செங்கல் சூளையில் இட்டு அதன் ஈரத்தை ஒட்டுமொத்தமாகத் துடைத்தெடுத்துவிடுகிறது. இனி அந்த இதயத்தில் குழைவு இல்லை. குழைவு இல்லாத இதயம் சுட்ட மட்பாண்டம்போல தன் உணர்வுகளை இரகசியமாக பிறர் அறியாத வண்ணம் பாதுகாக்கும் பலத்தைப் பெற்றுவிடுமல்லவா ? குழைவாகக் கிடந்த நமது பலரின் மனத்தையும் சமூகம் இவ்வாறு வறண்டதாக்கிவிட்டதுதானே உண்மை ?

காதல் - அந்தக் காதல் எழுப்பும் தாபம் - நீராகச் சொல்லப்பட்டிருக்கிறது. சரியான உதாரணம்தான். நீர் இண்டு இடுக்குகளிலெல்லாம் புகுந்து புறப்பட்டுவிடும். காதலும் அதேபோலத்தான் - இதயத்தில் சிறிது இடம் கிடைத்தாலும் ஆசனமிட்டு அமர்ந்துவிடும். நீரைப்போலவே காதலும் நமது இதயத்திற்கடியில் எவராவது தன்னைக் கண்டுபிக்கவேண்டும் என்பதற்காக ஒளிந்துகொண்டிருக்கிறது. நீர் சாதாரணமாக மிக அமைதியாகத் தெரியும். ஆனால் ஊழிக்காலங்களில் எல்லாத் தடைகளையும் உடைத்துக் கொண்டு வெளிப்படும் வேகத்தைப் பெற்றுவிடும். 

காதலும் அதைப்போலத்தான் !

இந்த மட்பாண்டம் - பொசியும் நீர் உதாரணத்தில் என்னால் வாய்விட்டுச் சொல்லமுடியாத வேறு சில நுட்பமான விஷயங்கள்கூட இருக்கின்றன. "சொல்லாத சொற்களை"ப் படிக்கத்தெரிந்த வாசகர்கள் அதனையும் சிந்தித்துப் புரிந்துகொள்வார்களாக.

சங்கச் சிந்தனைகள் - 3

வழக்கம்போல அவன் ஆற்றங்கரையில் தோழர்களுடன் ஆடிப்பாடி சாவகாசமாகக் குளித்துவிட்டு வீட்டிற்குத் திரும்பினான்.

"உணவுண்டவுடன் வெளியில் ஓடிப்போய்விடாதே ! உன் தந்தையின் தோழர் எருமியூர் நாடரும் அவர் குடும்பமும் நம்மூர் விழாக்காண்பதற்காக வந்துகொண்டிருக்கிறார்கள். இன்னும் சிறிது நேரத்தில் அவர்களை எதிர்பார்க்கிறேம் - அவர்கள் வரும்வேளையில் நீ வீட்டில் இல்லையென்றால் நன்றாயிராது !" என்றாள் அன்னை.

"ஹ!" என்றான் அலட்சியத்துடன். என்றாலும் வயிற்றில் ஒரு பந்து உருண்டது. நாடரின் குடும்பமென்றால்.... பொன்னங்கையும் வருகிறாளா என்ன ? மூன்று நான்கு வருடங்களுக்கு முன் அவள் குடும்பத்துடன் வீட்டிற்கு வந்ததும் இருவரும் இடைவிடாமல் தட்டாமாலை, சில்லு, புளியாமர விளையாட்டு என்று கூத்தடித்தது நினைவுக்கு வந்தது. இப்போது அப்படியெல்லாம் விளையாட முடியுமா என்ன ? அவன் இளவட்டமாக வளர்ந்து நிற்கிறானே... மீசைவேறு லேசாக அரும்பத்தொடங்கிவிட்டது ! 

முடிந்தவரை நன்றாக ஆடையுடுத்திக்கொண்டு குடுமியை இறுக்க முடிந்து கொண்டை போட்டுக்கொண்டான்(1). இருப்பதில் நல்ல வேட்டியாக பார்த்துக் கட்டிக்கொண்டான். அவளைப் பற்றிய எண்ணங்களைப் புறக்கணித்துவிட்டு உணவில் மனதைச் செலுத்த முயன்றான்.

(1) அந்நாளில் குடுமி - கொண்டை போட்டுக்கொள்வது பரவலான வழக்கத்திலிருந்தது

ஏறக்குறைய ஒரு நாழிகை கழித்து வாயிலில் அந்த வில்வண்டி வந்து நின்றது. நாடர்தான் ! வாயிலுக்கு அவனுடைய தந்தையார் ஆவலுடன் ஓடிச் சென்று வரவேற்றார். இருவருக்கும் முப்பது வருட நட்பு. 

"உள்ளேயே நின்றுகொண்டிருக்கிறாயே - வாயிலுக்குப் போய் அவர்கள் சாமான்களை வாங்கி உள்ளே வைக்க வேண்டியதுதானே !" என்று அதட்டினாள் அன்னை. அவன் மறுத்துவிட்டான். ஏனோ பொன்னங்கையைப் வாயிலுக்குச் சென்று எதிர்கொண்டு பார்ப்பதற்கு சங்கடமாக இருந்தது - வெட்கப்படுகிறோமா என்ன ? சை ! அவர்கள் குடும்பத்தோடு வீட்டினுள் நுழைந்து ஆசுவாசப்படுத்திக்கொண்டு பானகமும்கூட அருந்தியாகிவிட்டது. அவன் இன்னமும் புழக்கடைப் பக்கம் ஏதோ வேலையிருப்பதாகச் சொல்லிக்கொண்டு ஒளிந்துகொண்டிருந்தான்.

நாடர்தான் "எங்கே திதியன் ?" என்று முதலில் வினவினார். அது அவன் காதுகளிலும் விழுந்தது. நாடரின் தலையில் இடிவிழ ! நண்பர் எள் என்பதற்குமுன் எண்ணையாக நிற்பதுதான் தன் தந்தையின் வழக்கமாயிற்றே.. "ஏங்கேயடி - திதியனை வரச்சொல் !" என்று சொல்லிவிட்டார். வேறு வழியின்றி முற்றத்தை நோக்கி வளைந்து நெளிந்து நடந்தான். முடிந்தவரை தான் வெட்கப்படுவது ஒருவருக்கும் தெரியக்கூடாது என்று நினைத்தாலும் அதை செயப்படுத்துவது எளிதானதாக இல்லை. ஒரு விதமாகக் கோணிக்கொண்டு தூணைப் பிடித்துக்கொண்டு நின்றான்.

"அட, இத்தனை உயரமா வளர்ந்துவிட்டான் !" என்று வியந்தார் நாடர். அவருடைய அகமுடையாள்(2) ஒருபடி மேலே போய் கையைச் சுற்றி நெற்றியில் முஷ்டியை மடக்கி திருஷ்டி கழித்தாள் !

(2) மனையாள்

அவனுக்கு சற்றே தைரியம் வந்து நிமிர்ந்து பார்த்தான். உடனடியாகத் தென்பட்ட நாடரை - நாடரின் மனைவியை - அவர்களுடைய மகனை - வேளக்காரனை - சடுதியில் புறக்கணித்து அதற்குப்பின் கண்களையோட்டினான்.

நாடரின் மனைவியின் தோள்பட்டைக்கருகில் மெதுவாக அந்த முகம் உயர்ந்தது.

முதலில் கருகருவென்று அடர்ந்த கூந்தல் தெரிந்தது. அடுத்து அந்தக் கருங்கூந்தலைப் பிளந்துகொண்டு தகதகவென்று நெற்றியில் வழியும் அழகான நெற்றிச்சுட்டி புலனாயிற்று. அப்புறம் தந்த நிறத்தில் நெற்றியும் அதன் நடுவில் இடப்பட்ட கருஞ்சாந்துப் பொட்டும்..... கண்களைப்பார்க்க தைரியமில்லாமல் நேராக மூக்கு பவளவாய் கழுத்து அதில் மணியாரம் என்று இறங்கிவிட்டு சற்றே நிமிர்ந்து அந்தக் கருவரியோடிய கண்களை சந்தித்த அந்தக் கணத்தில் - சொல்லி வைத்தாற்போல் அவளும் அவனை நோக்கினாள்.

அந்தக் கணத்தில்.... அதற்கடுத்த ஓரிரு கணங்களில்...

ஒரு மாயாஜாலம்போல அது நிகழ்ந்தது. அவனுக்கும் அவளுக்கும் அடுத்த அறுபது எழுபது வருடங்களுக்குத் தொடரப்போகின்ற அந்த இறுக்கமான பிணைப்பின் முதல் முடிச்சு அப்போது விழுந்தது.

அவன் அவளைக் கண்டுகொண்டான். அவளும் அவனைக் கண்டுகொண்டாள். அவர்கள் அப்போதுதான் முதன்முதலில் சந்திக்கிறார்களா ? அல்லது ஜென்ம ஜென்மங்களுக்கு முன்னர் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு காலங்களில் - மரங்களாக, பறவைகளாக, ஊர்வனவாக, நடப்பனவாக - அவர்கள் முன்பே சந்தித்திருக்கிறார்களா ? அந்த ஆழமான அன்பின் பிணைப்பு அந்த ஒரு கணத்தில் விழுந்து விட்டதை வேறு எவ்வாறு விளக்க முடியும் ?

அந்தக் கணத்தில் அவள் தன்னிலை மறந்தாள் - தன் நாமம் கெட்டாள் - அகன்றாள் தன் அகம்விட்டு.

அவனும் அவளைத் தன் சிந்தையில் நிரப்பிக்கொண்டான். காதலானான். கசிந்தான்.

காலம் அவர்கள் காதலைக் கனியவைக்கும். இருட்டை - பிரிவை - அது நீராகக் கொண்டு மரமாகி வளரும். அவர்கள் காலம் முழுவதும் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தி மகிழ்வார்கள். மீண்டும் அவர்கள் இந்தப் பூமியிலோ பிரபஞ்சத்தின் வேறு ஏதாவது மூலையிலோ பிறக்கலாம். அப்போதும் அவர்கள் ஒருவரையொருவர் எவ்வாறேனும் அடைவார்கள். 

இணைவார்கள்.

காதலாகிய களவொழுக்கத்தின் இயல்பை உரைத்து களவியலைத் துவங்கும் தொல்காப்பியர், அடுத்ததாக தலைவன் தலைவியை எதனால் சந்திக்க நேர்கிறது - காதல் அவர்களுக்குள் என்ன காரணத்தினால் முகிழ்க்கிறது என்று விளக்க முற்படுகிறார்."ஒன்றே வேறே என்று இரு பால் வயின்
ஒன்றி உயர்ந்த பாலது ஆணையின்,
ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப.
மிக்கோன் ஆயினும், கடி வரை இன்றே.

(தொல்காப்பியம் / பொருளதிகாரம் - களவியல் - எண் 1036)


என்ன சொல்கிறார் தெரியுமா ?

"கூடியிருக்கும்படியும் பிரிந்திருக்கும்படியும் செய்யும் இருவகைப்பட்ட ஊழ்வினையிடத்து, இருவருடைய உள்ளமும் ஒன்றியிருக்கும்படி செய்து அதனால் அன்பு உயர்வதற்குக் காரணமான நல்லூழின் ஆணையினால், ஒத்த தலைவனும் தலைவியும் எதிர்படுவர். தலைவன் தலைவியைக் காட்டிலும் உயர்ந்த நிலைமையில் இருக்கும்படியாக நேரிடினும் தலைவியை நீக்கும் நிலைமை ஏற்படாது"

இதில் பால் என்பதை ஊழ்வினை என்கிற அர்த்தத்தில் புரிந்துகொள்ளவேண்டும். ஊழ் என்பதற்கு பழைய கன்மம், விதி, தம்மை மீறிய சக்தி என்றெல்லாம் பொருள். பண்டைய தமிழரின் பலமான நம்பிக்கைகளுள் இதுவும் ஒன்று. வள்ளுவரே ஊழைப் பாடியிருக்கிறார்.

ஊழ்வினையின் ஆணையினால்தான் தலைவனும் தலைவனும் சந்திக்க நேர்கிறது என்கிறார். வேறு எவ்வாறு இதை விளக்குவது ? வாழ்வில் எத்தனையோ பேரை சந்திக்கிறோம். அத்தனை பேருமா நம்மிடம் மகரந்தப் புணர்ச்சி செய்கிறார்கள் ?

இதில் "ஒத்த" என்கிற வார்த்தை மிக மிக அழகானது. ஒத்தவர் சந்திக்கிறார்கள். அதாவது ஒருவரை ஒருவர் முன்பே அறிந்தவர்கள், உறவு கொண்டவர்கள், பிரபஞ்சச் சங்கிலியில் இரு அடுத்தடுத்த கண்ணிகளாக இணைந்தவர்கள் - சந்திக்கிறார்கள். அந்த முந்தைய உறவின் பலத்தால்தான் "கண்டதும் காதல்" அவர்களுக்கு ஏற்பட்டுவிடுகிறது. இந்த நிலையில் அவர்களுடைய தனிப்பட்ட உலகத் தகுதிகள் - உயர்ந்தவர் / தாழ்ந்தவரென்ற பாகுபாடுகள் - பொருளாதார / சமூக வேறுபாடுகள் - அர்த்தமிழந்து விடுகின்றன.

"காண்ப" - அவர்கள் சந்திப்பார்கள். சந்தித்தாக வேண்டும். உலகத்தின் இருவேறு மூலைகளில் இருந்தாலும் அவர்கள் சந்தித்துத்தான் ஆகவேண்டும்.
ஏனெனில் அதுவே விதி. இயற்கை இட்ட ஆணை.

தலைவன் தலைவியின் முதல் சந்திப்பை இதனைவிட அழகாக விளக்கிவிட முடியுமா என்ன ?

சங்கச் சிந்தனைகள் - 2

அதோ ! போர்முரசம் ஒலிக்கிறது....
கூடவே பறை, கொட்டு முதலான கருவிகள் எழுப்பும் ஓசைகளும் கேட்கின்றன. கொம்பு "பூ.....ம் ! பூ....ம் !" என்று அதிர "ஓ.....ம் !" எனும் சங்கநாதம் கம்பீரமாய் கிழக்கு வாசல் அமைந்துள்ள திசையிலிருந்து எழுகிறது.

அது அழைப்பொலி. "பகைவன் படையெடுத்திருக்கிறான் - நாட்டில் உள்ள ஆண்கள் யாவரும் நாட்டைக் காக்க வருக !" என்று வேந்தன் எழுப்பும் வரவேற்பொலி.

அவன் மெய்ப்பையை சரிசெய்து கொண்டான். இடைக்கச்சை சற்றே இறுக்க உள்ளே அணிந்திருந்த ஐம்படைத்தாலி உறுத்தியது. வில்லை வலக்கையில் மாட்டி அம்பறாத்துணியை இடமுதுகில் படியவிட்டு நெஞ்சின் குறுக்கே கட்டிக்கொண்டான்.

வேல் பூசையறையில் ஒரு ஓரத்தில் மஞ்சள் குங்குமமெல்லாம் தடவி தயாராக இருந்தது. அதனைத் தீண்டுகையில் சுரீரென்று ஏதோ கணுக்கால்களில் பாய்ந்தது. 

அது அவன் தந்தையின் வேல். போர்க்களத்தில் மார்பில் ஈட்டியும் அம்புகளும் துளைத்தெடுத்திருக்க உயிர் எப்போதோ பிரிந்துவிட்டபோதும் அவருடைய கைகள் இந்த வேலினை விடவேயில்லையாம் ! சிரமப்பட்டுத்தான் பிரித்தார்கள் என்று அன்னை சொல்வாள்.

அவன் தன் தந்தையை கண்களால் கண்டதில்லை. ஆனால் அவ்வப்போது இந்த வேலினை தொடும்போதெல்லாம் அவரைத் தீண்டுவது போலிருக்கும் - அதிலும் இன்று சற்று அதிகமாகவே....

அன்னை சற்று தள்ளாடியபடியே எழுந்து வருகிறாள்... "கிளம்பும் நேரம் வந்துவிட்டதா என்ன ?"

"சங்கொலி எழும்பிவிட்டதே அம்மா ! இப்போது கிளம்பினால்தான் கிழக்கு வாசலை இன்னும் அரை நாழிகை நேரத்தில் அடையலாம் !"

அவளுக்கு இப்போதெல்லாம் பார்வை அடிக்கடி மங்குகிறது. சற்றே கண்களைக் கசக்கிக்கொண்டு நிமிர்ந்து பார்க்கிறாள். அவன் சிரித்த முகத்தோடு நின்றுகொண்டிருக்கிறான். 

அடடா ! இந்தக் கோலத்தில் அவரே மீண்டும் மறுபிறவியெடுத்து நம்முன் நிற்பதாகவல்லவா தோன்றுகிறது ! "ஐயா ! நீ ஜெயிக்க வேண்டும் ஐயா !" நான் கொற்றவைக்கு நேர்ந்து கொள்கிறேன் !" - அவள் தன் மடியிலிருந்த ஒரு சில எளிய கழஞ்சுகளை ஒரு மஞ்சள் துணியில் அவசர அவசரமாக முடிந்து வைக்கிறாள்.

இருபது வருடங்களுக்கு முன்புகூட அவள் இப்படித்தான் நேர்ந்து கொண்டாள். ஆனால் கொற்றவைக்குக் கண்ணில்லை. நெஞ்சு நிறைய அம்புகளாக வாயிலில் அவருடைய உடல் வந்து இறங்கியபோது.... கண்களில் சரசரவென்று நீர் கோர்த்துக் கொள்கிறது. 

இல்லை ! இப்போது அவள் அழக்கூடாது. இவள் அழுதால் பிள்ளை தளர்ந்துவிடுவான். இவள் கண்களின் கண்ணீரை அவனால் தாங்க முடியாது. அவன் பார்க்காத கணத்தில் இரகசியமாக அவள் கண்களைத் துடைத்துக் கொள்கிறாள்.

அவனுடைய மனையாளும் குழந்தையையும் உக்கிராண அறையிலிருந்து வெளிப்படுகிறார்கள். அழுதிருக்கிறாளா என்ன - கண்களெல்லாம் சிவந்ததுபோல் தெரிகின்றனவே....

குழந்தை அவனைப் பார்த்த மாத்திரத்தில் சிரித்துக்கொண்டே அவனிடம் தாவுகிறது. அவன் அதனைக் கட்டியணைத்து உச்சி முகர்கிறான். பால்மணம் நாசியை நிறைக்கிறது.

குழந்தையை தூக்கியபடி வாயிலுக்கு வருகிறான். கால்களில் கழல்களை அணிந்துகொள்கையில் குழந்தை கழல்களை ஏதோ விளையாட்டுப்பொருள் என்று நினைத்துக் கைகளால் அளைகிறது.

அவனுடைய தாயும் மனையாளும் அவனுக்கு ஆரத்தி எடுத்து நெற்றியில் பொட்டிடுகின்றனர்.

அவனுடைய தாய் அவனை மீண்டும் ஒருமுறை நன்றாகப் பார்த்துக்கொள்கிறாள்.... முகத்தைக் கட்டிக்கொண்டு உச்சி முகர்கிறாள்... ஏனோ திடீரென்று அவனைப் பிரசவிக்கையில் ஏற்பட்ட தவிப்பு மீண்டும் அவளுக்கு ஏற்படுகிறது.... 

அவனுடைய மனையாளும் அவனை விழுங்கிவிடுவதைப் போல் ஒருமுறை நன்றாகப் பார்த்துக் கொள்கிறாள்... இரவில் வலிந்து வலிந்து காதலோடு தழுவிய உடல்.... முத்தங்களால் நனைத்த மார்பு.... ஒரு வேளை இப்போது பார்க்கும் இந்தக் கோலத்தை மட்டுமே மனதில் தாங்கிக்கொண்டு மீதிவாழ்நாளை அவள் கழிக்க நேரலாம்... அதனால்தானோ என்னவோ கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருக்கிறாள்... இரவெல்லாம் அழுது அழுது கண்கள் சிவந்திருந்தாலும் ஒரு சொட்டு நீர்கூட அவன் முன்னால் வீட்டுவிடக்கூடாது என்ற முனைப்புடன் நிற்கிறாள்...

அவனும் அவர்களை நன்றாகப் பார்த்துக்கொள்கிறான். ஏனோ தந்தையின் ஆன்மா அவனை ஆக்கிரமிப்பதைப்போன்றதொரு உணர்வு அந்த வேலினைக் கையிலேந்திய கணத்திலிருந்து அவனுக்கு ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது....

"வெற்றிவேல் ! வீரவேல் !" என்று வானத்தைப் பார்த்து முழங்குகிறான். மறுகணம் திரும்பிப்பாராமல் கிழக்கு வாசலை நோக்கி வீறு நடைபோட்டுச் செல்கிறான்.

அவனுடைய முகத்தில் சூரியனைப்போல ஒரு வீரக்களை சுடர்விட்டுப் பிரகாசிக்கிறது.

அவன் வீரனாகவே பிறந்தவன். வீரனாகவே வளர்ந்தவன். எப்போதும் அவன் தன்னை வீரனாகத்தான் உணர்ந்திருக்கிறான் - ஒருவேளை அவன் தந்தையும் அதற்குக் காரணமாக இருக்கலாம்...

தன்னுடைய படையின் பலம் எத்தனை ? எதிரிகள் படையின் பலம் எத்தனை ? நாம் இன்று தோற்போமா ? ஜெயிப்போமா ? என்பதான எந்தக் கேள்விகளும் அவன் மனதில் எழவில்லை. போர் ! அந்தப் போரில் அவன் வாள்சுழற்றியாக வேண்டும் ! அவ்வளவுதான்....

அவனுடைய தாய் தாரமொடு நாமும் நின்றுகொண்டு அவன் விலகி விலகிச் செல்வதைப் பார்க்கிறோம்.

போரில் அவன் ஒருவேளை வெற்றி பெற்று பெருவீரனாகத் திரும்பி வரலாம்..... அவனுடைய மகனை அவனினும் சிறந்த வீரனாகப் பயிற்றுவிக்கலாம்...

அல்லது மார்பில் வேலோ அம்புகளே தாங்கி விழுப்புண்களோடு குற்றுயிரும் குலையுயிருமாய்க்கூடத் திரும்பலாம்....

அல்லது அவனும் தன் தந்தையைப் போலவே வீழ்ந்து பட்டும் கைகளில் வேலினை விடாமல் பற்றியபடியே உயிர்துறக்கலாம்... ஏதாவது ஒரு புலவன் அவன் புகழைப் பாடலாம்... போர் பூமியில் அவனுடைய உற்றார் அவனுக்கு நடுகல் வைத்து வழிபடலாம்... அவன் குலத்திற்கு அவன் வீரம் நல்கும் குலதெய்வமாக ஆகலாம்.... 

அவன் அப்பழுக்கில்லாத சுத்த வீரன் ! அதுதான் இப்போது முக்கியம்.

அன்றைய தமிழ்ச் சமூகத்தில் இரு உணர்வுகள் - இயல்புகள் - மற்றவற்றினும் மதித்துக் கொண்டாடப்பட்டன. அவை காதலும் வீரமும். காதலின் உச்சத்தையும் வீரத்தின் உச்சத்தையும் பல்வேறு விதமாகப் படம்பிடிக்கும் பாடல்கள் சங்க இலக்கியங்களில் பல உண்டு. அவை காலக் கண்ணாடிகளாக நின்று அந்த மனிதர்களின் மனப்போக்கை இன்றும் விளக்குகின்றன..

சங்க நூல்களுள் மிகத் தொன்மையான தொல்காப்பியம் இலக்கண நூல் மட்டுமல்ல - இலக்கியமும் கூட.

புறத்திணையியல் வகைகளை விளக்கப்புகும் தொல்காப்பியர் வெட்சி, கரந்தை, வஞ்சி, உழிஞை என்று விளக்கிக்கொண்டே வரும்போது தும்பைத்திணையின் இயல்பைக் கூற முற்படுகிறார். எதிர்த்து வரும் பகைவேந்தரை வீரம் பொருதப் போரிட்டு அழிப்பது தும்பைத்திணையாகும். மற்ற திணைகளுக்கெல்லாம் அவ்வத் திணைகளின் இயல்பையும் இலக்கணத்தையும் மட்டும் கூறிவிட்டுச் செல்பவர் தும்பைக்கு மட்டும் சற்றே நிதானித்து - நான்கு வரிகள் எடுத்துக்கொண்டு - அந்தத்திணையின் பெருமையை விரித்துரைக்கிறார்.

இந்தக் கட்டத்தில் திணையின் சிறப்பியல்பான வீரத்தின் உச்சத்தை விளக்க ஒரு உதாரணம் அவருக்குத் தேவைப்படுகிறது. தாம் பார்த்தவற்றுள் கேட்டவற்றுள் உச்சக்கட்ட வீரக் காட்சியாக எது அவரது மனதில் நின்றதோ அதையே பதிவாக்கியிருக்கிறார் அவர் என்று நம்பலாம்."கணையும் வேலும் துணையுற மொய்த்தலின்
சென்ற உயிரின் நின்ற யாக்கை
இரு நிலம் தீண்டா அரு நிலை வகையொடு
இருபாற்பட்ட ஒரு சிறப்பின்றே..."

(தொல்காப்பியம் / பொருளதிகாரம் - புறத்திணையியல் - எண் 1017)


தொல்காப்பியர் காட்டும் இந்தக் காட்சியும் இந்தக் காட்சியின் பதிவிற்கு உபயோகப்படுத்தப்பட்டுள்ள சொற்களும் நீடித்த அதிர்வுகளை ஏற்படுத்தக்கூடியவை.

"பகைவரால் எறியப்பட்ட அம்பும் வேலும் மேன்மேலும் வந்து பாய்தலால் உயிர்நீங்கிய வீரனின் உடல் இருகூறுபட்ட போதும் நிலத்தில் சாய்ந்துவிடாமல் போர்முகம் காட்டும் சிறப்பினை உடையது இத்திணை !" என்கிறார்.

சற்று விரித்துக் கூறின் :

அந்த வீரனுடைய உடலை அம்புகளும் வேலும் விடாமல் தாக்கின. ஒரு கட்டத்தில் உயிர் பிரிந்துவிட்டது. உயிரைப் பிரிந்த உடல் தாக்கப்பட்ட அம்புகள் மற்றும் வேல்களினால் ஏறக்குறைய இரண்டாகப் பிளந்தது. அப்படிப் பிளந்த பிறகும்கூட அந்த உடல் தாங்கியிருந்த உயிர் ஒரு சுத்த வீரனுடைய உயிர் என்பதால் அது நிலத்தில் சடேலென மரம்போல விழுந்துவிடாமல் மெதுவாக ஆடியபடி நிற்கும் வீரப்புகழை விரித்துரைக்கும் சிறப்புக்களை உடையது தும்பைத் திணையாகும் !

புறநானூற்றுப் பாடல்களில் வீரத்தைப் பாடும் பாடல்கள் பல உண்டு. ஆனால் தொல்காப்பியம் காட்டும் இந்தக் காட்சி அவற்றிலிருந்து தனித்து நின்று அந்நாளைய நிலத்தில் விளைந்த வீர விளைச்சலை ஒரு அதிர்ச்சி மிக்க உதாரணம் மூலம் பளிச்சென்று வெளிச்சம்போட்டுக் காட்டிவிடுகிது.

உடலெங்கும் அம்புகளாலும் வேலாலும் துளைக்கப்பட்டு லேசாகத் தள்ளாடியபடி முன்னேறும் அந்த வீர உடலை கற்பனை செய்து பாருங்கள் - அதிர்ந்துபோய் விடுவீர்கள் !

"கணையும் வேலும் துணையுற மொய்த்தலின்.." - அந்த உடலில் அம்புகள் பாயவில்லை, ஈ மொய்ப்பதுபோல் மொய்த்திருக்கின்றன... அப்பப்பா ! ஒரே வரியில் சாட்டையடியாக அந்தக் காட்சி நமது மனக்கண்களில் சட்டென்று உருப்பெற்று விடுகிறது.

இப்படி உடல் இருகூறான பின்பும் மெதுவாக உடல் ஆடுதல் அட்டை என்னும் உயிரினத்தின் இயல்பென்பதால் இந்த வகை வீரத்திற்கு "அட்டையாடுதல்" என்றும் பெயராம் !

இதெல்லாம் ஒரு காலம்.

இந்நாளைய தமிழ் வீரத்தைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. ஏனெனல் பேனாக்கத்தியை நீட்டி ஒரே ஒரு குப்பத்து ரெளடி முரட்டுத்தனம் செய்தால் ஒரு கூட்டமே கைகட்டி வாய்பொத்தி நிற்கிறது.

இன்றைய கவிஞர்களால் வீரத்தைப் பாட முடிவதில்லை. பாடுபொருளாகக்கூடிய வீரம் அவர்களுக்குத் தென்படுவதில்லை.

காதலோடு அவர்கள் நின்றுவிடுகிறார்கள். நிறைவடைந்துவிடுகிறார்கள்.

சங்கச் சிந்தனைகள் 1

இரு மலை முகடுகளுக்கிடையில் ஏற்பட்ட இயற்கையான சரிவில் - சோவென்ற இரைச்சலுடன் பொங்கி வழியும் அருவியின் கரையில் - அந்த அழகிய தோட்டம் அமைந்திருந்தது. அது ஏதேன் தோட்டம் என்று அழைக்கப்பட்டது.

அந்தத் தோட்டத்தில்தான் ஒரு மாயக் கரங்களால் மானுடத்தின் முதல் ஆண்வித்தும் பெண்வித்தும் இரத்தம் கலந்த ஈரமண்ணில் நடப்பட்டன. 

நடப்பட்ட விதைகள் வேர்விட்டன - முளைவிட்டன - நாளடைவில் கிளைபரப்பி வான்தொட்டன.

மலையிலிருந்து பொங்கிப் பெருகிய அருவி அவர்களுக்கு நீர் கொடுத்தது. மரங்களும் தாவரங்களும் கனி, காய், கிழங்கு வகைகளை வாரி வாரி வழங்கின. ஒரு குகை அவர்களின் இருப்பிடமாய் இருந்தது. 

ஏதேன் தோட்டத்தில் ஏவாள் ஆதமுடன் மகிழ்ச்சியாக வசித்து வந்தாள்.

அவர்கள் மகிழ்ச்சியாக ஒருவருக்கொருவர் அன்பு செய்து வாழ்ந்தார்கள். இயல்பாக இன்பம் துய்த்தார்கள். பட்டாம்பூச்சிகளைப் போல் சிலிர்த்துச் சிலித்துக் கூடினார்கள் - பிரிந்தார்கள்.

தோட்டத்தின் ஓரமாய் இருந்த பல்வேறு மரங்களில் ஒன்றில் அந்த விலக்கப்பட்ட கனி பழுத்துத் தொங்கிக்கொண்டிருந்தது. அதனையொட்டிய மரப் பொந்தில் அந்த சைத்தான் நாகம் வசித்து வந்தது. ஆதாமும் ஏவாளும் இன்னும் அந்த விலக்கப்பட்ட கனியை உண்ணவில்லை. விலக்கப்பட்ட கனியை உண்ணாமலே ஒரு இயல்பான நிகழ்வாக காமம் அவர்களுக்குள் முகிழ்ந்தது. 

படைத்தவன் காமத்தை விலக்கிவைக்கவில்லை. ஏனெனில் காமமின்றி - இரு பால் கலப்பின்றி - அந்தக் கலப்பின் பூரிப்பும் பரவசமும் இன்றி - படைப்பு நிகழாது. அது வாழ்வின் ஆதார சக்திகளுள் ஒன்று. அதனால் பசியைப் போல - அன்பைப்போல - இயல்பாகப் பெருகிய காம உணர்ச்சியை ஒப்புக்கொண்டு அவர்கள் இன்பமாக இருந்தார்கள். அதனை அடக்கவில்லை - விலக்கவுமில்லை.

அவர்களுக்கிடையில் நிலவிய அன்பின் அடையாளமாய் குழந்தைகள் பிறந்தன. அன்னை தந்தைக்கிடையில் ஓடிய உறவும் நெகிழ்வும் குழந்தைகளுக்கு ஒட்டிக்கொண்டன. அவர்களும் ஒருவருக்கொருவர் அன்பு செய்தார்கள். அவர்களைச் சுற்றியிருந்த பிராணிகளிடம் அன்பும் நேசமும் கொண்டார்கள். ஆடி ஓடி விளையாடினார்கள்.

ஒரு பலகீனமான தருணத்தை நோக்கி அந்த சைத்தான் நாகமும் ஆப்பிள் மரத்தில் பொறுமையோடு காத்திருந்தது.

ஒரு நாள் அந்தப் பக்கம் தனியாக வந்த ஆதமுடன் நாகம் நயமாகப் பேச்சுக் கொடுத்தது.

"ஒரு முறை இந்தக் கனியை சுவைத்துத்தான் பாரேன் ! வாழ்க்கையில் நெறிமுறைகளைப் பின்பற்றி என்ன கண்டாய் ? நெறிகளை மீறுவதில் உள்ள சுவாரஸ்யம் ஒரு முறை மீறினால்தான் விளங்கும்... ஏன் கோழையாகவே காலத்தைக் கழிக்கிறாய் ? கடவுளிடம் அப்படியென்ன பயம் உனக்கு ? அட, எத்தனை பழங்களை தின்றிருக்கிறாய் ! இன்னும் ஒரு பழம் - வேறு வகை - வேறு சுவை - அவ்வளவுதான் !"

ஆதமுக்கு சற்று பயமாக இருந்தது... கடவுள் கண்டுபிடித்துவிட்டால்கூட பரவாயில்லை ! ஏவாளின் காதுகளுக்கு இந்த விஷயம் எட்டிவிட்டால் ?

"அட, யார் மெனக்கெட்டு ஏவாளிடம் போய் இந்த விஷயத்தைச் சொல்லப் போகிறார்கள் ? உன் மீது சத்தியமாக நான் அந்த நீச காரியத்தைச் செய்ய மாட்டேன் ! நீங்களெல்லோரும் இந்தப் பழத்தை என்னைப்போலவே உண்டு அதன் ருசியை அனுபவிக்க வேண்டுமென்பதுதான் என் ஒரே ஆவல் !"

ஆதாம் அந்த நாகத்தின் சொற்களுக்குப் பணிந்தான். கனியை உண்டான். உண்டதும் அவனுக்குத் தோன்றிய முதல் எண்ணம் இதனை ஏவாளிடமிருந்து மறைத்து வைத்து விடவேண்டும் என்பதுதான் !

வேடிக்கை என்னவென்றால் ஏவாளும் அதற்கு முதல்நாள் நாகத்தின் பேச்சில் மதிமயங்கி அதே பழத்தை உண்டு அந்த விஷயத்தை ஆதமிடமிருந்தும் மறைத்திருந்தாள்.

இதுதான் இருவருக்குமிடையில் பொய்மையை முதன்முதலில் ஆரம்பித்து வைத்தது.

நாளடைவில் அவர்கள் இருவரும் அடிக்கடி சண்டையிட்டுக்கொண்டார்கள். ஒருவரை ஒருவர் ஏசினார்கள் ! தாம் மறைத்து வைத்த விஷயம் எங்கே வெளிவந்துவிடுமோ என்று பயந்தார்கள். அந்த பயம் கோபமாக, வஞ்சகமாக, ஆத்திரமாக, பொறாமையாக, வெறுப்புணர்வாக பல்வேறு வேடங்களில் பரிணமித்தது.

அவர்கள் ஒருவரை ஒருவர் விட்டு விலக ஆரம்பித்தார்கள். 

இப்படித்தான் மனித இனம் தீமையின் பாதையில் முதன்முதலாக அடியெடுத்து வைத்தது. 

பொய்மைதான் விலக்கப்பட்ட கனி. அதிலிருந்துதான் பல்வேறு தீமைகளும் முகிழ்த்தன.

விலக்கப்பட்ட கனி கதை தத்துவார்த்தமானது. அது கவிஞன் ஒருவனால் உருவாக்கப்பட்டது. அதனால்தான் அது கவித்துவமாக மிளிர்கிறது. அதனை ஏதோ வரலாற்று சம்பவமாகவோ மதரீதியாகவோ காண்பவர்கள் அதன் உள்ளார்ந்த அர்த்தத்தை இழந்து விடுகிறார்கள்.

தீமை என்று ஒன்றை காணாமல் மனித இனம் ஒரு காலத்தில் இருந்தது. அப்புறம் ஒரு காலத்தில் தீயதன் முதல் வித்து மனித மனத்தில் விழுந்தது. அதற்கப்புறம்தான் மனிதன் நல்லதை விட்டுவிட்டு அல்லதைக் கைக்கொள்ள ஆரம்பித்தான்.

அதற்கப்புறம்தான் நல்லது எது தீயது எது என்ற பிரிவினையே எழுந்தது.

நல்லதை விளக்க சாத்திரங்களும் வேத நூல்களும் எழுதவேண்டிதாகிவிட்டது. அவதாரங்களும் தேவ தூதர்களும் மனிதனுக்கு தேவைப்பட ஆரம்பித்தார்கள்.

இன்னமும்கூட வேத நூல்களை - இப்படி இப்படியெல்லாம் நடக்க வேண்டும் என்னும் உபதேச மார்க்கங்களை - மனிதன் எழுதிக்கொண்டுதான் இருக்கிறான். தன்னை உய்விக்கப்போகும் அவதார புருஷர்களை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறான். "இதோ இப்போது வந்துவிடுவார் ! எல்லோரும் இறுதித் தீர்ப்புக்குத் தயாராகுங்கள் !" என்று வருடக்கணக்காகப் புலம்பிக்கொண்டிருக்கிறான்.

பாவம் - இத்தனை முயற்சிகள் செய்தும் பெருகிவரும் தீமைகளுக்கு அவனால் ஈடுகொடுக்கமுடிவதில்லை !

தொல்காப்பியர் சொல்கிறார் :"பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் வகுத்தனர் கரணம்" என்ப


(பொருளதிகாரம் - கற்பியல் - எண் 1089)

இவர் எந்த இடத்தில் இதனை சொல்லியிருக்கிறார் என்பது மிக மிக ஆச்சரியமான விஷயம். கற்பியலில் கற்பு முதலான விஷயங்களை விளக்க முற்படும்போது திடீரென்று இப்படி ஒரு போடு போட்டுவிடுகிறார்.

என்னதான் சொல்கிறார் ?

"பொய் முதலான குற்றங்கள் தோன்றிய பிறகே சான்றோர் சடங்குகளை வகுத்து வரையரைப்படுத்தினர் என்று சொல்வார்கள் !" என்கிறார்.

சற்று விரித்துக் கூறுவதானால் இப்படிச் சொல்லலாம் :

அதாவது பொய் மற்றும் பிற குற்றங்கள் இல்லாத காலம் ஒன்று இருந்தது. அப்போது சடங்குகளும் சம்பிரதாயங்களும் நெறிகளும் தேவையில்லாமல் இருந்தன. பிறகு மானுடத்தின் முதல் தீமையாக பொய்மை தோன்றியது. அதனைத் தொடர்ந்து பல்வேறு குற்றங்களும் பிறந்தன. இதற்குப் பின்னால்தான் - இவை வாழ்வில் புகுந்துவிட்ட காரணத்தினால்தான் - சான்றாளர்கள் சாத்திர சம்பிரதாயங்களை வகுக்கவேண்டிதாகிவிட்டது என்று சொல்வார்கள் !

இதனை வேறு நூற்றாண்டைச் சேர்ந்த யாராவது சொல்லியிருந்தால் கதையே வேறு. ஆனால் காலத்தால் மிகவும் முற்பட்ட தமிழ்க் கவியானவர் இப்படிச் சொல்லும்போது இதன் பரிமாணங்கள் வானளாவ உயர்ந்துவிடுகின்றன.

"என்று சொல்வார்கள் !" என்று சொல்கிறார். அதாவது தொல்காப்பியர் காலத்திலேயே பொய்யும் வழுவும் நிலைபெற்றுவிட்டன. ஆக அதற்கும் முற்பட்ட ஒரு காலகட்டத்தில்தான் அவை தோன்றியிருக்கவேண்டும்.

மற்ற குற்றங்களையெல்லாம் ஒன்றாகச் சேர்த்துவிட்டவர் பொய்யை மட்டும் தனியாக முதன்மையாகக் குறிப்பிடக் காரணம் அது மானுடம் கண்ட முதல் தீய வித்து என்பதே. அதிலிருந்துதான் பிற குற்றங்களும் தவறுகளும் தோன்றியிருக்கவேண்டும்.

"வழு" - என்ன அழகான சொல் ! வழுக்குதல் என்பதே இதிலிருந்து தோன்றியதுதானோ !

"ஐயர்" என்பது அந்தக் காலகட்டத்தில் குறிப்பிட்ட சாதியைச் சுட்டும் பெயராக இருக்கவில்லை. பொதுவாக சான்றாளர்களைக் குறிக்கவே பயன்பட்டு வந்தது. "ஐயன்மீர்" என்னும் சொல்வழக்குகூட இன்றைக்கு அவ்வளவாக தென்படுவதில்லை.

இதனை திருமணம் மற்றும் கற்பு சம்மந்தப்பட்ட இடத்தில் சொல்வதிலிருந்து மனிதன் பெண்ணாசையின் பாற்பட்டுத்தான் குற்றம் புரியும் பாதையில் ஈடுபடத்தொடங்கினான் என்பதும் ஒரு கருத்து. மண்ணாசை - பெண்ணாசை- பொன்னாசையில் முதலிடம் பெண்ணாசைக்குப் போலும்.

தொல்காப்பியர் இப்படி நிறைய ஆச்சரியங்கள் வைத்திருக்கிறார்.

வியாழன், 18 செப்டம்பர், 2014

விஞ்ஞானிகளையே வியக்க வைத்த நடராஜர் தத்துவம்


....................................................................
உலகின் மிகப் பெரும் இயற்பியல் விஞ்ஞானிகளில் ஒருவர் கார்ல் சகன். (பிறப்பு 9-11-1934; மறைவு 20-12-1996). சிறந்த விஞ்ஞான எழுத்தாளராகவும் விளங்கியது இவரது தனிச் சிறப்பு!பாமரனுக்கும் அறிவியலைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற அவாவில் இவர் கடுமையாக உழைத்தார். தொலைக்காட்சித் தொடர்களை எளிய முறையில் அமைத்து பெரிய விஞ்ஞான விஷயங்களை அழகுற எளிமையாக விளக்கினார்.அமெரிக்காவில் ஒளிபரப்பப்பட்டு உலகெங்கும் உள்ளோர் பார்த்த 'காஸ்மாஸ்' என்ற பிரபஞ்சம் பற்றிய தொடரை எடுக்கும் மாபெரும் பொறுப்பை இவர் மேற்கொண்டார். 13 எபிசோடுகளில் பிரபஞ்சத்தைப் பற்றி விளக்க வேண்டும்.
இந்தத் தொடரை ஒரு நல்ல அறிமுக உரையுடன் துவக்க அவர் எண்ணினார். இதற்காக பிரபஞ்சம் பற்றிய அறிவை சரியான முறையில் விஞ்ஞானக் கண்டுபிடிப்பிற்கும் விளக்கத்திற்கும் ஒப்ப எந்த நாகரிகம் கொண்டிருக்கிறது என்று ஆராய ஆரம்பித்தார். உலகின் மிகப் பழம் பெரும் நாகரிகங்களான எகிப்திய, சுமேரிய, கிரேக்க ரோமானிய, பாபிலோனிய நாகரிகங்கள் உள்ளிட்ட அனைத்து நாகரிகங்களையும் ஆராய்ந்தும் அவருக்குத் திருப்தி ஏற்படவில்லை. பல்வேறு நாகரிகங்களையும் அவை சார்ந்த மதங்களையும் ஆராயப் புகுந்தவர் அவற்றின் இதிஹாஸ புராணங்களையும் படிக்க நேர்ந்தது. இறுதியாக அவர் பார்வை ஹிந்து நாகரிகத்தின் மீதும் ஹிந்து இதிஹாஸ புராணங்களின் மீதும் பதிந்தது. ஹிந்து மதத்தின் அறிவியல் ரீதியான பிரபஞ்சம் பற்றிய கொள்கையைப் படித்துப் பிரமித்து அவர் அசந்தே போனார்.
இந்தியர்கள்தான் உலகிற்கே பூஜ்யத்தை வழங்கியவர்கள். ஒன்றுக்கு பக்கத்தில் பூஜ்யத்தைப் போட்டால் அது பத்து, நூறு, ஆயிரம் என்று அதிகரிக்கிறது. ஆனால் ஒன்றுக்கு இடப்பக்கதில் எத்தனை பூஜ்யங்களைப் போட்டாலும் ஒன்று ஒன்றாகவே இருக்கிறது. இந்த வியப்பிற்குரிய அமைப்பு கணிதத்தையே எளிமையாக்கி எவ்வளவு பெரிய எண்ணானாலும் எழுதுவதற்கும் கணக்குகளைப் போடுவதற்கும் சௌகரியத்தை ஏற்படுத்தியது. ரோமானிய எழுத்துக்களால் எழுதப்படும் எண்ணோ ஒரு பெரிய தொகையை எழுதும் போது மிக்க குழப்பத்தை விளைவிக்கிறது. சுலபமான நடைமுறையில் இல்லாத அதை எழுதவே சிரமப்பட வேண்டும்.
இது மட்டுமன்றி எல்லையற்ற பிரபஞ்சத்தில் ஆயிரம், பத்தாயிரம், லட்சம் என்ற எண்களெல்லாம் மிக மிகச் சிறியவை ஆகி விடுகிறது. பெரிய பெரிய எண்களைக் குறிக்கும் வார்த்தைகள் எந்த நாகரிகத்தில் இருக்கிறது என்று பார்த்தால் திரும்பவும் பார்வை ஹிந்து மதம் பக்கமே திரும்ப வேண்டும்!
விஞ்ஞானத்தின் முக்கிய இயல்களில் ஒன்றான இயற்பியல் (பிஸிக்ஸ்) முன்னேற முன்னேற, அதன் புதுப் புதுப் பகுதிகளாக க்வாண்டம் பிஸிக்ஸ், பார்டிகிள் பிஸிக்ஸ் போன்றவை உருவாகி உள்ளன.
கார்ல் சகன் தனது காஸ்மாஸ் டி.வி. தொடருக்காக நடராஜரைத் தேடி சிதம்பர ரகசியத்தை அறிய தமிழ்நாடு வந்தார். தமிழ்நாட்டில் ஒரு நாள் காலை ஆறரை மணிக்கு தனது படப்பிடிப்புக் குழுவினர் புடைசூழ நந்தி இருக்கும் இரு கோவில்களுக்கு விஜயம் செய்தார். ஒரு கோவிலின் அருகே தாமரைத் தடாகம் ஒன்று இருந்தது. இவர்கள் வருவதைப் பார்த்த பத்து வயதுச் சிறுவன் ஒருவன் சரேலென தாமரைக் குளத்தில் பாய்ந்து ஒரு அழகிய தாமரை மலரைப் பறித்து வந்து கார்ல் சகனின் மனைவியிடம் தந்து தனது பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டான்.
எளிமையான, ஆனால் உணர்ச்சிபூர்வமான இந்த அன்பளிப்பால் அனைவரும் அசந்து போனார்கள். இதை நினைத்து நினைத்து நெகிழ்ந்து போன கார்ல் சகன் பின்னால் நியூ டைஜஸ்ட் என்ற பத்திரிக்கையின் ஆசிரியரான ப்ளேசிடோ பி.டி.சௌஸா என்பவரிடம் இதைச் சொல்லி தமிழக விஜயம் தனக்கு பல அதிசய அனுபவங்களைத் தந்ததாகக் குறிப்பிட்டார்.
பிரபஞ்சத்தில் எல்லையற்ற காலத்தையும் ஆக்கலையும் அழித்தலையும் சுட்டிக் காட்டும் சிவநடராஜரைப் பற்றி தமிழகத்தில் அறிந்து கொண்டு நடராஜரைத் தன் காஸ்மாஸ் தொடரில் பத்தாவது எபிசோடான 'தி எட்ஜ் ஃபார் எவரில்' (The edge forever) அவர் பயன்படுத்திக் கொண்டார். கலிஃபோர்னியாவில் பாஸடோனா என்ற இடத்தில் உள்ள நடராஜரை அவர் படம் பிடித்தார்.
இதே கால கட்டத்தில் அணுத்துகள் விஞ்ஞானத்தை விளக்க வந்த உலகின் மிகப்பெரும் இயற்பியல் விஞ்ஞானியான டாக்டர் பிரிட்ஜாஃப் காப்ரா சிவ நடராஜாவின் நடனத்தைக் கண்டு அதிசயித்திருந்தார்! ஆஸ்திரியாவில் பிறந்த அமெரிக்க விஞ்ஞானி இவர். "தி டாவோ ஆஃப் பிஸிக்ஸ்' (The Tao of Physics) என்ற இவரது நூல் உலகப் பிரசித்தி பெற்றது. இந்த நூல் 1975ல் வெளிவந்தது. 23 மொழிகளில் 43 பதிப்புகளாக வெளிவந்த இந்த நூலை லட்சக்கணக்கானோர் படித்தனர்; இன்றும் படித்து இன்புறுகின்றனர்!
அதில் அவர் சிவ நடராஜரின் நடனம் பற்றிக் கூறுகிறார்:-"மேலை நாடுகளின் இயந்திரத்தனமான பார்வையை விட கீழை நாடுகளின் பார்வை உயிருள்ள முழுமையான ஒன்று; அது சுற்றுப்புறச் சூழலை ஒட்டியது! கீழை நாட்டு ஞானிகளுக்கு பொருள்கள் எப்போதும் மாறிக் கொண்டே இருக்கும் திரவ வடிவம் போன்ற ஒன்றுதான்! பிரபஞ்சம் எப்போதுமே இயங்கிக் கொண்டிருக்கும் பிரிக்க முடியாத ஒன்றாக அவர்களால் காணப்பட்டது. இந்தக் கருத்தே இன்றைய நவீன பௌதிகத்திலும் உருவாகி வருகிறது. நவீன பௌதிகம் அணுத்துகளை - தொடர்ந்து நடனமாடும் ஒன்றாக - அதிர்ந்து கொண்டே இருக்கும் ஒன்றாகக் கூறுகிறது. கீழை நாட்டு ஞானிகள் உலகைப் பற்றி விவரிப்பது போலவே இது உள்ளது. ஆற்றல் நடனம் அல்லது உலகை உருவாக்கி பின்னர் அழிக்கும் நடனமானது சிவ நடராஜரின் நடனம் போலவே உள்ளது."
அணுத்துகள் விஞ்ஞானம் கற்க விரும்புவோர் நடராஜரின் நடனத்தைப் பற்றி முதலில் சற்று அறிய வேண்டும் என்றார் காப்ரா! அணுவில் உள்ள அசைவை - நடனத்தை - சிவ நடராஜரின் ஆட்டத்தில் கண்ட காப்ரா அதை அப்படியே லாஸ் ஏஞ்சலீஸில் 1977 அக்டோபர் 29ம் தேதி பிஸிக்ஸ் அண்ட் மெடா பிஸிக்ஸ் என்ற கருத்தரங்கத்தில் தான் ஆற்றிய முக்கிய உரையில் உலகத்திற்கு விளக்கினார்:
"நவீன இயற்பியல் விஞ்ஞானிகள் பொருளை அசைவற்ற ஜடமாகக் கருதவில்லை. துடிப்புள்ள தொடர்ந்து நடனமிடும் ஒன்றாகக் கருதுகின்றனர். இந்தியக் கலைஞர்கள் சிவ நடராஜரின் நடனத்தைச் சித்தரிக்கும் அருமையான ஓவியங்களையும் சிற்பங்களையும் படைத்துள்ளனர். இவை பிரபஞ்ச நடனத்தின் பார்வை சித்திரங்களாகும். மேற்கத்திய நவீன உபகரணங்களை உபயோகித்து இப்போது நாம் கண்டறிந்துள்ளவை சிவ நடனத்தின் புதிய பிரதியே. ஹிந்து சிற்பங்களில் உள்ள பிரம்மாண்டமும் அழகும் இதிலும் உள்ளன என்றே எனக்குத் தோன்றுகிறது. ஆகவே அவை இரண்டையும் இணைத்துள்ளேன்."
நவீன உபகரணங்கள் மூலமாக அணுவில் உள்ளே துகள்கள் நடனமிடும் அற்புதக் காட்சியைப் படம் பிடித்து அதை அப்படியே நடராஜரின் நடனத்துடன் ஒப்பிடும் காட்சியைப் பார்த்த உலக விஞ்ஞானிகள் வியந்தனர்.
விஞ்ஞானிகள் தங்களது நவீன உபகரணங்கள் வாயிலாகக் கண்டதை நம் மெய்ஞானிகள் அந்தக்கரணம் வழியே கண்டு அப்படியே உலகிற்கு எடுத்துரைப்பதன் உதாரணம்தான் அருணகிரிநாதர் தன் திருப்புகழில் பாடிய பரமகுருவாய், அணுவில் அசைவாய் என்ற வரிகளாகும் (இருவர் மயலோ என்று தொடங்கும் திருப்புகழ்)
இதைத் தொடர்ந்து 2004ம் ஆண்டு ஜூன் மாதம் 18ம் தேதி ஐரோப்பிய அணுத்துகள் இயற்பியல் ஆராய்ச்சி மையத்திற்கு இந்திய அரசாங்கம் 2 மீட்டர் (சுமார் ஆறு அடி) உயரமுள்ள நடராஜரின் சிலையை அந்த நிறுவன விஞ்ஞானிகள் இந்தியாவுடன் தொடர்ந்து கொண்டிருக்கும் நல்லுறவைப் போற்றும் வகையில் வழங்கியது. (ஜெனிவாவில் அமைந்திருக்கும் இந்த மையத்துக்கு இந்தியா வழங்கிய நடராஜரின் சிலையைப் படத்தில் பார்க்கலாம்)
செர்ன் (CERN) விஞ்ஞானிகள் அணுத்துகள் நடனத்தையும் நடராஜரின் நடனத்தையும் ஒப்பிடுவதைப் போற்றி நன்றி தெரிவிப்பதற்காக இதை வழங்குவதாக நம் அரசு பெருமையுடன் தெரிவித்தது.
ஆக, விஞ்ஞானம் வியக்கும் மெய்ஞான நடனம் நம் சிதம்பர நடராஜரின் நடனம் என்பதை அறியும் போது நம் மெய் சிலிர்க்கிறது அல்லவா?

https://www.youtube.com/watch?v=o8ENNgO4z5c