பல்லவர் பாதையில்

அவனிபாஜன பல்லவேஸ்வரம் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டம் சீயமங்கலம் என்னும் சிற்றூரில் அமைந்துள்ளது. வேலூரிலிருந்து செல்ல சேத்துப்பட்டு வழியாக தேசூர் அடைந்தவுடன் 2 கி.மீ. தொலைவில் சீயமங்கலம். விழுப்புரத்திலிருந்து செல்ல விரும்பினால், திண்டிவனம் சென்று காஞ்சிபுரம் சாலையில் 20 கி.மீ. பயணித்தால் தெள்ளாரினை அடையலாம். அங்கிருந்து 8 கி.மீ. தொலைவில் சீயமங்கலம் நம்மை வரவேற்கும். 

எந்த தடத்தில் சென்றாலும் வழிநெடுக வறண்ட பூமி தான் என்றாலும் செல்லும் வழியெங்கும் நிலக்கடலை சாகுபடியில் செழித்த வயல்வெளிகளின் மரகத வண்ணம் மனதினை அள்ளும். அதையும் தாண்டி மரங்களற்ற பொட்டல்வெளி, வான்வெளியினையும், மலைமுகட்டினையும் தடையின்றிக் காணச் செய்து நமது பயணத்தினை இனிமையாக்கும். 

சீயமங்கலம், அவனிபாஜன குடைவரையை ஒன்றுமே தெரியாமல் 03.6.2010 அன்று ஒருமுறையும், கொஞ்சம் தெரிந்த பின் 20.6.2010 அன்று மறுமுறையும் சென்று வந்தேன். இவ்விரண்டு முறையும் நிகான் D90 மாடல் காமிராவை பயன்படுதினேன். குடைவரையின் குறை வெளிச்சத்தில் எடுத்த படங்கள் மணிரத்தினம் படங்கள் போல மங்கலாகத் தெரிந்ததால், கெனான் 7D காமிராவுக்கு மாறினேன். எனவே, 16.10.2010 அன்று 7D. கெனான் 5D Mark IIIக்கு மிகக்குறைந்த வெளிச்சமே போதும் என்று கேள்விப்பட்டதால் 19.9.2013 அன்று கடைசி தடவையாக 5D Mark III காமிராவைப் பயன்படுத்தினேன். (செயற்கை வெளிச்சத்தை (Flashgun) தவிர்ப்பது எனது முடிவு). ஒவ்வொரு முறையும் சென்று வரும் போது எதையோ பதிவு செய்யத் தவறி விட்டோமென்ற குற்ற உணர்வு கூட எனது நான்கு முறை படையெடுப்பிற்குக் காரணமாயிருக்கலாமோ என்னவோ!


தூணாண்டார் திருக்கோயில் வளாகம்


சீயமங்கலம் குடைவரையை பார்க்க வேண்டும் என்று முதல் முறை திடீரென்றுதான் புறப்பட்டேன். பயணத்தை முன்னதாக திட்டமிடுவதென்பது எனது கட்டுப்பாட்டில் இல்லை என்பதால் எல்லா பயணங்களும் திடீர் பயணங்கள் தான். புத்தகங்களும் கேமராவும் எந்த நேரமும் என்னோடு பயணிக்கும். திட்டமிடக் கூடிய விஷயங்கள், குடவரையின் திசை, சூரிய வெளிச்சத்தின் திசை என்ன? கேமராவுடன் நான் எப்படி செயல்பட வேண்டும்....? என்பவை மட்டுமே. குடைவரை அல்லது கோவில் எந்த திசை நோக்கி அமைந்திருக்கிறதோ அதற்கேற்ப எனது பயணம் காலையிலா அல்லது மாலையிலா என்று மட்டும் முடிவு செய்வது வழக்கம்.

சீயமங்கலம் சிற்றூரின் அமைவிடத்தை தெரிவித்து அக்குடைவரையைக் காண உதவி செய்தவர் அவ்வூரில் உள்ள கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கச் செயலாளர் திரு. அன்பழகன் ஆவார். தனது ஊரில் சரித்திரப் பின்னணியுடைய கோவில் ஒன்று இருப்பதையும், அதைக் காண நான் வந்திருப்பதையும் அறிந்து மிகவும் வியப்பிலாழ்ந்தார். கோவில் அர்ச்சகரை வரவழைத்து கோவிலைத் திறக்க ஏற்பாடு செய்து ஒவ்வொரு முறையும் சலிப்பின்றி அத்தனை உதவிகளையும் செய்து தந்தார். டாக்டர் அவர்கள் கையொப்பமிட்டுத் தந்த "மகேந்திரர் குடைவரைகள்" நூலை வாங்கிப் படித்து வந்தார்.

குடைவரை என்றால் என்னவென்றே தெரியாமல் முதன் முதலில் கோவில் வளாகத்தினுள் நுழைந்தேன். காலடியில் பச்சைக் கம்பளம் விரித்தாற் போல் புல்தரை, எதிரே நீலவான பின்னணியில் மரகத உடனுறை தூணாண்டார் திருக்கோவில் வளாகம். நான்கு நிலை கோபுரம் கடந்து சென்றால் கண்முன்னே விரிவது அவனிபாஜன பல்லவேஸ்வர வளாகம்!! 


தூணாண்டார் திருக்கோயில் வளாகம் - உட்புறம்


சற்றேறக்குறைய ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் இதோ நான் நின்று கொண்டிருக்கும் இடம் எத்தனை சீரும் சிறப்புடன் விளங்கியிருக்கும்? சமண, சாக்கிய சமயங்களின் பிடியிலிருந்து விடுதலை கிடைத்த மகிழ்ச்சி மனதில் விரவ, தங்களூரில் எடுப்பிக்கப்பட்டுள்ள புதிய சிவாலயம் நோக்கிச் செல்லும் ஆடவர்கள்; கலகலவென சிரிப்பொலி கட்டியம் கூற, மேனியில் பலவண்ண பட்டாடை மின்ன, வகிடெடுத்து இறுக்கிப் பின்னிய நெடுங்கூந்தலில் செருகி வைத்த மலர்களின் மணம் மெல்லிய காற்றில் மிதந்து வர, விடையேறும் பாகர் பூசனைக்கு தங்கத்தட்டில் தாமரை மலர்களையும், தமது நெஞ்சில் நம்பியின் நினைவையும் சுமந்து செல்லும் அழகு மங்கையர், தங்கள் தாய்மார்களின் கரம் பற்றி நடை பயிலும் சிறார்கள் என எத்தனை வண்ணமயமாய் இவ்வளாகம் ஜொலித்திருக்கும்!! 

அரண்மனை மாந்தரின் குதிரை பூட்டிய இரதங்களின் ஒலியும், விரைந்து செல்லும் குதிரைகளின் குளம்போசையும் அடிக்கடி பரபரப்பினை தெரிவிக்கும். பல்லவப் பேரரசர் மகேந்திரரும் தமது வெள்ளைப் புரவியில் கம்பீரமாய் ஆரோகணித்து வந்து இறங்கியிருப்பார் இல்லையா? அவருடன் நரசிம்ம பல்லவரும் உடன் வந்து தானிருப்பாரில்லையா? அந்நேரம் மக்கள் விண்ணை முட்டும்படி எழுப்பிய வாழ்த்தொலி இதோ என் காதில் ஒலிக்கிறது. நான் நிற்கும் இந்த பூமி மட்டுமல்ல... இந்த வளாகம் முழுக்க அப்பேரறிவாளரின் பாதம் பட்டிருக்கும் இல்லையா? 

சரி... மீண்டும் தற்காலத்திற்கே திரும்பி வருவோம்! இவ்வளாகம், வடமேற்கில் நுழைவாயில் கோபுரத்தையொட்டி ஒரு மண்டபம், வடபுறம் மேற்குப் பார்வையாய் இரண்டு சிறிய கோவில்கள், தென்புறம் பெரிய பாறையின் மீது அமைந்த சிறிய கோவில், மையப்பகுதியில் பலிமேடை, கொடித்தளம், மற்றும் நந்தி மண்டபத்தினை முன்னதாகக் கொண்டு மேற்குப் பார்வையாய் அவனிபாஜன பல்லவேஸ்வரம். தென்புறப் பாறை மீதேறினால் மேற்கில் ஒரு பேரேரி அமைந்திருப்பதைக் கண்டேன். 

வெளிமண்டபத்தைத் தாண்டி கோவிலுக்குள் சென்றால், அரை இருளினூடே திருநிலை அழகியின் மண்டபம். அதற்கு அடுத்து அடவி மண்டபம். குகைக்கோவில் என்றார்கள், இருள் இருக்கும். சரி... குகையைக் காணோமே என்ற வினாவுடன் வடபுறத்துப் படியேறி முக மண்டபத்தை அடைந்த பின்னர் தான் நான் ஒரு குகைக்கோவிலின் முன் நின்று கொண்டிருக்கிறேன் என்று புரிந்தது. தனியே நிற்கும் குன்றொன்றின் மேற்குப்புறச் சரிவின் கீழ்ப்பகுதியினைக் குடைவித்து அழகியதொரு கோவில் எடுப்பிக்கப்பட்டுள்ளது. குகைக்கோவிலின் முன்புறத்தில் மூன்று பக்கங்களிலும் மண்டபம் ஒன்று எழுப்பியுள்ளார்கள் என்று அறிந்து கொண்டேன். 


குடைவரைக் கோயில்


கருவறை, அர்த்தமண்டபம், முகமண்டம் என மூன்று பகுதிகளைக் கொண்டிருக்கும் குடைவரை முகப்பில் பெரிய அளவில் இரண்டு முழுத்தூண்களும், பக்கத்திற்கொன்றாக இரண்டு அரைத்தூண்களையும் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இவ்விரு அரைத்தூண்களின் இரு மருங்கிலும் உள்ள கோட்டங்களில் வீரர்களின் அழகிய சிற்பம் காணப்படுகிறது.


வாயிற்காவலர்


அர்த்தமண்டபத்திலிருந்து கருவறையை அடைய பக்கவாட்டு அணைவுடன் சிறிய படிக்கட்டுகள். கருவறையின் இரு புறத்திலும் வாயிற்காவலர்கள் நின்றிருக்க கருவறையில் லிங்கத் திருமேனி. வாயிற்காவலர்களின் உடல்மொழி அதிசயமானது. அவர்களின் முகபாவங்களில் உயிர் மின்னியதைக் காண முடிந்தது. மகேந்திரர் உண்மையிலேயே அனுபவித்துதான் இக்குடவரையை அகழ்ந்திருக்க வேண்டும். 


வாயிற்காவலர்


நெடுங்காலமாக என்னுள் தங்கியிருந்த ஒரு கேள்வி இது. ஆதியும் அந்தமும் இல்லாத சிவத்தின் ஆடலுக்கு ஆனந்த தாண்டவம் (நடராஜ வடிவம்) என்றழைக்கப்படும் அந்த அழகிய வடிவத்தினை முதன் முதலில் எவர் அளித்திருப்பார்கள்? 


ஆடல் அழகர்


இதற்குச் சரியான விடை அவனிபாஜனத்தில் கிடைத்தது. முகமண்டபத்தின் தென்புறத்து அரைத்தூணில் உள்ள சிறிய கோட்டத்தில் களி நடனம் புரியும் சிவபெருமானின் அற்புதமான சிற்பம் செதுக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் காணப்படும் அனைத்து ஆனந்த தாண்டவ வடிவங்களுக்கும் இந்தச் சிற்பம்தான் முன்னோடி. இங்குதான் அது சிற்ப வடிவில் முதன்முதலில் பதிவாகியிருக்கிறது என்று டாக்டர் கலைக்கோவன் மூலம் அறிந்து கொண்ட போது என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.


நந்தியணுக்கர்


மற்றொரு அரைத்தூணில் சிறிய கோட்டத்தில் இருக்கும் நந்தியணுக்கரின் (ரிஷபாந்திகர்) சிற்பமும் மிக அழகானதே. இதில் இறைவன் மற்றும் தேவியின் உடல்மொழி அலாதியானது. மஹேந்திர பல்லவருக்கு அளிக்கப்பட்டிருக்கும் விருதுப் பெயர்கள் அனைத்துமே அர்த்தமுள்ளவைதான்! 

ஊருக்கு வெளியே நிசப்தமாய் கோவில் வளாகம். மேற்குப் புறத்தில் அழகிய குன்றுகள். கோயிலின் அருகாமையில் பரந்து விரியும் ஏரி. இத்தகைய இனிமையான இடத்தினைத் தனது குடைவரைக்காகத் தேர்வு செய்த மாமன்னர் மகேந்திரர் சிறந்த வடிவமைப்பு, திட்டமிடல், திட்டமிட்டவற்றைச் செயல்படுத்தும் மனோதிடம், கடுமையான உழைப்பு ஆகிய சிறப்பியல்களால் காலம் கடந்து நிற்கின்றார். அவரது காலத்தில் வளர்ந்து கொண்டு வந்த பல்லவப் பேரரசினை பகைவரிடமிருந்து காப்பதோடன்றி விரிவாக்கம் செய்ய வேண்டிய சூழ்நிலையில் இத்தகைய கலைப்பணிகள் எப்படி சாத்தியமானது என்னும் பெருவியப்போடு கோயிலை விட்டு வெளி வந்தேன்.


திருக்கோயில் வெளிப்புறம்


திரும்பி வருகையில் போதிய வெளிச்சமின்றி மோசமாகப் பராமரிக்கப்பட்டு வரும் அழுக்கடைந்த ஆலய வளாகம் மனதில் ஒரு நெருடலாய் நிழலாடி மனது வலித்தது. முடிந்தவரை பராமரிப்புப் பணிகளைச் செய்து வரும் அர்ச்சகரும், இந்தியத் தொல்பொருள் அளவீட்டுத்துறையும், அரசும் மட்டிலும் என்ன செய்திட இயலும்? தமிழர் ஒரு காலத்தில் வாழ்ந்த வாழ்க்கையை அவர்தம் கலாச்சாரம் பேசும் சிற்பக் களஞ்சியங்களைக் கொண்டு விளங்கும் கோயில் வளாகங்களை விளைந்த நெல்லை உலர வைக்கும் களமாகவும், சேமிப்புக் கிடங்குகளாகவும், ஆடு, மாடுகளுக்கு மேய்ச்சல் நிலமாகவும் மாற்றிந் தானம் செய்து விட்டு, 

மெல்லப் பல தெய்வம் கூட்டி வளர்த்து
வெறுங்கதைகள் சேர்த்துப் – பல
கள்ள மதங்கள் பரப்புதற் கோர்மறை
காட்டவும் வல்ல.... 

மாக்கள் பின்னே மக்கள் செல்லத் துவங்கி விட்ட நிலை பெரும் கவலையளிக்கிறது. எங்கெங்கோ சுற்றியலைவதை விட்டுவிட்டுப் போற்றிப் புரக்கப்பட வேண்டிய சரித்திரப் பின்னணி பெற்ற கோயில்களை நோக்கி மக்கள் தங்களது உள்முகப் பயணத்தினை துவங்கினால் மட்டுமே இந்த அவல நிலையினை மாறும். 

மாறவேண்டும்.

மகேந்திரரின் மற்றொரு குடைவரைக் கோயிலான மகேந்திரவாடி செல்லலாமென்று ஒரு நாள் தோன்றவே அதற்காக ஆயத்தமானேன். மகேந்திரவாடி அரக்கோணம் அருகே உள்ளதென்பதை அறிந்தபோது மனதில் இலேசான கலக்கம் தொற்றிக் கொண்டது. காரணம், அரக்கோணம் பகுதி சாலைகளின் அருமை பெருமைகள் அப்படி!

அரக்கோணம் வட்டத்தில் இயங்கி வந்த பால் உற்பத்தியாளர் சங்கங்களின் தரும் பாலை பால்வண்டிகளில் ஏற்றி வேலூர் பால் பண்ணைக்கு கொண்டு வருவதற்குள் மோசமான சாலைகளால் பயண நேரம் அதிகரித்து பாலே திரிந்து போய்விடுமென்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!(ஹி..ஹி...அந்த சங்கங்களுக்கு நல்லபடியாக மூடுவிழா நடத்தி வெகு காலம் ஆகி விட்டது.) 

ஆனால், மகேந்திர விஷ்ணு கிருகத்தைக் காணும் ஆவல் எனது மலைப்பினைப் போக்கியது. மேக மூட்டம் உடன் வர எனது பயணம் காலை 7 மணிக்கு வேலூரிலிருந்து மகேந்திரவாடி நோக்கித் துவங்கியது. என்னுடன் நிகான் D90 கேமிராவும், அதற்குத் துணயாக நான் புதிதாய் வாங்கியிருந்த MANFROTTO TRIPODடும் பயணித்தன. வாகனம் “வெள்ளை கேட்”டிலிருந்து அரக்கோணம் செல்லும் சாலையில் திரும்பிய போது இலேசாகத் தூவானம் துவங்கியது. பயணித்த காரின் மிதமான வேகமும், குளிர்ந்த காற்றும் டாக்டர் கலைக்கோவன் அவர்களின் 'மகேந்திரர் குடைவரைகள்' நூலில் மகேந்திரவாடியைப் பற்றி விவரிக்கும் வரிகளை நினைவூட்டின. 

“சிறப்பு மிக்க மகேந்திரபுரத்தில், மகேந்திர தடாகக்கரையில் பாறையைப் பிளந்து முராரியின் திடமான பெரிய விஷ்ணு கிருகத்தினை எடுப்பித்தவர் குணபரன். மனிதக் கண்களை மகிழ்விக்கும் அழகிய இத்திருக்கோயில் நல்லவர்களால் மிகவும் போற்றப்படும் தலமாகும்”.

அந்த நூலில் “மகேந்திர விஷ்ணு கிருகம்” அத்தியாயத்தில் என்னைக் வெகுவாக சிந்திக்க வைத்த பகுதி இதுதான். குடைவரையில் அமைந்துள்ள பல்லவ கிரந்த கல்வெட்டின் சாரமான இப்பகுதி என்னை மிகவும் சிந்திக்க வைத்தது. 

என்ன சொல்ல விழைந்திருப்பார் மகேந்திரர்? 

மகேந்திபுரத்தில் ஏதோ ஒரு நிலப்பரப்பில் "சிவனே" என்றிருந்த பாறை ஒன்றை அகழ்ந்து விஷ்ணு கோயிலை எடுப்பித்து, கோயில் கைங்கர்யங்களின் தேவைக்கு குளிர் தடாகம் ஒன்றினையும் செய்வித்தவர், தன்னுடைய கலையார்வத்தால் உருவாக்கிய கோயிலுக்கு "மனிதக் கண்களை மகிழ்விக்கும் அழகிய இத்திருக்கோயில்" என்று உறுதிமொழி தருகிறார்; ரிசர்வ் வங்கி கவர்னர் ரூபாய் தாளுக்கு தருவது போல!! கவர்னர் தரும் உறுதிமொழி ஒரு லட்சத்தினை தாண்டாது. ஆனால் குணபரன்" என்று கல்லில் அழுத்தமாய் கையெழுத்து இட்டுச் சென்றிருக்கும் மகேந்தரின் உறுதிமொழி காலம் கடந்து இன்றும் நம்முடன் பேசிக்கொண்டிருக்கிறது. 

சரி....மனிதக் கண்களை மகிழ்விக்க வேண்டிய அவசியம் இவருக்கு ஏன் வந்தது? போர்க்களங்களில் மனித உயிர்களைப் பற்றிக் கவலைப்படாதவராயிற்றே இவர்? இந்த நான்கு வரிகள் காட்டும் அவரது மென்மையான மறுபக்கதான் எத்தனை வியப்பிற்குரியது? கல்லில் வடிக்கப்பட்டிருக்கும் இந்த வரிகளை எழுதும் போது அவர் மனதில் கடவுள் மீதும் குடிமக்கள் மீதும் எத்தனை காதலாய், எத்தனை கரிசனமாய் உணர்வுகள் ஓடியிருக்கும்? இன்று நினைத்தாலும் புல்லரிக்கிறது. 

காரின் சக்கரங்கள் வழு வழு பாதையிலிருந்து விலகி தட..தட வென்று ஓடுவதைக் கேட்டு திடுக்கிட்டு சுய நினைவிற்கு வந்தேன். ஆம்..கார், பாணாவரம் சாலையில் இறங்கி ஓடிக் கொண்டிருந்த்து. தூறல் நின்று வானம் மப்பும் மந்தாரமுமாய் இருந்தது. கடைத்தெருவில் குகைக் கோயிலுக்கு வழி கேட்டேன். புரியாமல் சிறிது நேரம் விழித்து விட்டு அருகிலிருந்தவர் துணையுடன் செல்லும் வழி சொன்னார். 

சில நிமிட ஓட்டத்திற்குப் பின் முள் கம்பி வேலி அடைத்த நிலபரப்பின் மையப் பகுதியில் பெரிய பாறை ஒன்றும், அதன் அருகே சிறியதாய் ஒன்றும் தெரிந்தது. இந்தியத் தொல்லியல் அளவீட்டுத்துறையினரால் பராமரிக்கப்பட்டு வரும் மகேந்திர விஷ்ணு கிருகத்தினைக் காண வந்த எங்களை முள்கம்பி வேலியும் பூட்டப்பட்டிருந்த இரும்புக் கதவுகளும் வரவேற்றன. 

வேலூரிலிருந்து புறப்பட்டு இத்தனை தூரம் வந்த நம்மால் இன்று பார்க்க முடியுமா என்றே லேசாக கிலி தட்டியது. வீதியில் சென்றவர்களிடம் இந்த கேட்டிற்கு சாவி யாரிடம் இருக்கும்? எப்போது அவர் வந்து திறப்பார்? என்று கேட்டேன் எனக்கு கிடைத்த விடை "தெரியாது" என்பது தான். 



யாரையும் எதிர்பார்த்தால் இன்று நமது நோக்கம் நிறைவேறாது என்று தெளிவாக புரிந்தது. வீதியில் நடமாட்டம் இல்லாதது மனதிற்கு தைரியம் அளித்தது. சுற்றும் முற்றும் ஒருமுறை பார்த்து விட்டு அந்த இரும்பு கேட்டின் மீது ஏறி உள் பக்கம் இறங்கினேன். சிறிய வயதில் மாங்காய் பறிக்க வேலி தாண்டியது இத்தருணத்தில் ரொம்பவும் கைகொடுத்தது. எனது கார் ஓட்டுனர் கேமிராவினையும், ட்ரைபாட் ஸ்டாண்டினையும் வெளிப்புறத்திலிருந்து கொடுத்தார். பின்னர் அவரும் தாண்டிக் குதித்து என்னைப் பின்பற்றினார். (ம்ம்ம்...அவர் வாங்கி வந்த வரத்தின் விசேஷம் போலும்!!) 
இரு மருங்கிலும் முள்வேலிக் கம்பியடைத்த பாதையினூடே நடந்தோம். நன்கு செப்பனிடப்பட்ட மண் தடத்தின் இரு பக்கத்திலும் மழைத்துளி தங்கிய புல் தரையும் மனதிற்கு இதம் அளித்தன. 



குறுகலான பாதை சரேரென்று விரிந்து பரந்த வெளியினைக் காட்டியது. சுமார் நூறு அடி கடந்து சென்றதும் எதிர் பட்டது கிழக்கு நோக்கி நிற்கும் மகேந்திரரின் மகேந்திர விஷ்ணு கிருகம். 
ஆஹா! பொட்டல் வெளியில் தான் கண்ட தனிப் பாறை ஒன்றிற்கு இப்படியொரு சாகா வரம் அளித்துள்ளாரா, மகேந்திரர்? சுமார் 20X20 அளவிலான பாறையில் இத்தனை அழகான கவிதையைப் படைத்த குணபரர் நிஜமாகவே விசித்திரசித்தர் தான் என்று வியப்பிலாழ்ந்தேன். 



குடைவரையின் நேர் எதிர்ப்புறத்தில் நிலக்கடலை வயல்களைத் தாண்டி அகன்ற பள்ளமான நிலப்பரப்பு தெரிந்தது. ஓ....! இது தான் "மகேந்திர தடாகமா? ஆஹா! இந்த கோயிலையும், இந்த தடாகத்தினையும் உருவாக்கியவர் மஹா ரசிகராகத்தான் இருக்க வேண்டும் இல்லையா!! 


குடைவரையின் அமைப்பு


பாறையின் இரு மருங்கிலும் சமமாக இடைவெளி விட்டு இடைப்பட்ட பகுதியை கச்சிதமாய் செவ்வக வடிவில் அகழ்ந்து இக்குடைவரை உருவாக்கப்பட்டிருக்கிறது. முகப்பில் கிழக்கு நோக்கிய நிலையில் இரண்டு முழுத் தூண்களும், இவ்விரு தூண்களுக்கு வடக்கில் ஓர் அரைத் தூணும், தெற்கில் மற்றொரு அரைத் தூணும் அமைந்துள்ளன. தரை மட்டத்திலிருந்து சற்றே உயர்ந்து அமைந்துள்ள குடைவரையை அடைய கருங்கல்லினாலான படியொன்று பின்னாளில் அமைக்கப் பெற்றுள்ளது.



முழுத்தூண்கள் சதுரம், கட்டு, சதுர அமைப்பில் உள்ளன. தூண்களின் கீழ்ச் சதுரம் மேற்சதுரத்தை விட அளவில் பெரிதாக அமைக்கப் பெற்றுள்ளன. கீழ்ச் சதுரங்களிலும், மேற்சதுரங்களிலும் சித்திர வேலைப்பாடமைந்த சதுர வடிவத்திற்குள்ளாக மிகவும் அற்புதமான வேலைப்பாட்டுடன் தாமரைப்பதக்கங்கள் செதுக்கப்பட்டுள்ளது. 

அரைத்தூண்கள் சதுரம், கட்டு, சதுரம் போன்ற எவ்வித அமைப்புகளுமின்றி எளிமையாக அமைக்கப் பெற்றுள்ளன. இவ்விரு அரைத்தூண்களின் மேற்பகுதியில் சதுர கட்டங்களுக்கு நடுவே தாமரைப் பதக்கங்கள் வடிக்கப்பட்டுள்ளன. அரைத்தூண்களின் கிழக்கு முகங்களில் இப்பதக்கங்கள் பாதியளவே காட்டப் பட்டுள்ளன. 

தெற்கு அரைத்தூணின் தாமரைப் பதக்கத்தின் கீழே அதனை ஒட்டியவாறு மகேந்திரரின் நான்கு வரி கொண்ட பல்லவ கிரந்தக் கல்வெட்டு காணப்படுகிறது. என்னை மிகவும் கவர்ந்த இந்த வரிகளை கட்டுரையின் துவக்கத்தில் கண்டோம்.


மகேந்திரர் கல்வெட்டு


முகப்பில் உள்ள முழுத்தூண்களும், அரைத்தூண்களும் மேற்புறத்தில் அமைந்திருக்கும் தமது வளைந்த போதிகைக் கைகளால் உத்திரப் பகுதியைத் தாங்குமாறு காட்டப் பெற்றுள்ளது.
முகப்பினைத் தாண்டி உள்ளே சென்றால் நம்மை முக மண்டபம் வரவேற்கிறது. முக மண்டபத்தின் கூரையும், தரையும் கச்சிதமாக மேடு பள்ளங்களின்றி அமைக்கப் பட்டுள்ளன. இரு பக்கச் சுவர்களிலும் எவ்வித சிற்ப வேலைப்பாடுகளும் காணப்படவில்லை.

இரண்டாம் வரிசைத்தூண்களுக்கும் கருவறைக்கும் இடையே அர்த்த மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. முக மண்டபத்தினைப் போலவே அர்த்த மண்டபத்தின் தரை மற்றும் கூரை சமன் படுத்தி அமைக்கப்பட்டுள்ளன. 



அர்த்தமண்டபத்தின் பின் சுவரில் கருவறை அமைந்திருக்கிறது. கருவறைக்கு செல்ல மூன்று படிக்கட்டுக்கள் உள்ளன. தரையில் துவங்கும் கீழ்ப்படி அரைவட்ட வடிவமாய் மற்றிரு படிகளிலிருந்து மாறுபட்டுள்ளது. கருவறை வாயிலின் இருபுறங்களிலும் பக்கத்திற்கு இரண்டாக நான்கு அரைத்தூண்கள் காட்டப்பட்டு இரண்டு அரைத்தூண்களுக்கு இடைப்பட்ட பகுதி கோட்டமாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இருபக்க கோட்டங்களில் ஆளுயர ஆண் வாயிற்காவலர்கள் சிற்பங்கள் அகழப்பெற்றுள்ளன. கருவறையில் பின்னாளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட நரசிம்மரின் மூர்த்தம் ஒன்று உள்ளது.

மகேந்திர போத்தரையர் எடுப்பித்த ஏழு குடைவரைகளுள் சிறிய குடைவரை இதுவாகும். ஆறு குடைவரைகளை சிவபெருமானாருக்கு எடுப்பித்த மகேந்திரர் விஷ்ணுவிற்காக எடுப்பித்த குகைக்கோயில் இது ஒன்றே ஆகும். மனதார பாராட்டுமாறு இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையினர் இவ்விடத்தை அழகுற பராமரித்து வருகின்றனர். 

போதிய நேரமும், வாய்ப்பும் இருப்பின் ஒருமுறை நீங்களும் சென்று வாருங்கள். 

ஒருவேளை அப்படி நேரம் கிடைக்கவில்லையென்றாலும் பரவாயில்லை. வாய்ப்பினை நீங்களே உருவாக்கிக்கொண்டு சென்று வாருங்கள்!

மகேந்திரவர்மர் செய்வித்த குடைவரைகளுள் சிறியதும், மிகச் சிறந்த கற்பனை வளத்துடன் உருவாக்கப்பட்டது மகேந்திரவாடி குடைவரை என்றால் அது மிகையாகாது தான்! அதே சமயம் ஒரே இடத்தில் அதிக எண்ணிக்கையில் குடைவரைகளைக் கொண்டு விளங்குவது மாமண்டூர் நரசமங்கலக் குடைவரைகள் ஆகும். மன்னரின் பிரம்மாண்டம் படைக்கும் மனோபாவத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்குவது மாமண்டூர் நரசமங்கலக் குடைவரைகள் எனலாம். ஆம், மாமண்டூர் நரசமங்கல வளாகத்தில் மட்டும் நான்கு குடைவரைகள் அமையப் பெற்றுள்ளன. 



இக்குடைவரைகள் அமைந்துள்ள மாமண்டூர், காஞ்சிபுரம்-வந்தவாசி நெடுஞ்சாலையில் காஞ்சிபுரத்திலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இவ்வூர் தூசி மாமண்டூர் என்று வருவாய்த் துறையினர் பதிவுகளில் அழைக்கப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டத்தில் அமைந்திருக்கும் தூசி மாமண்டூருக்கு கிளம்பி அதற்கு பதிலாக செங்கற்பட்டு மாமண்டூர் செல்ல நேர்ந்தால் தயவு செய்து வருத்தப்பட வேண்டாம்...! அப்படியே திருக்கழுக்குன்றம், மாமல்லபுரக் குடைவரைகளின் அழகினைப் பருகி விட்டு அப்படியே ஒரு “U” turn எடுத்து வந்தால் இக்குடைவரைகளை அடையலாம்.

இக்குடைவரைகளை நோக்கி 23.5.2010, 16.10.2010, 23.10.2010 மற்றும் 30.102.10 ஆகிய தேதிகளில் எனது பயணத்தினை மேற்கொண்டிருக்கிறேன். மனதிற்கு பிடித்து விட்டால் மறுபடி மறுபடி செல்லத் தோன்றுவது இயற்கை தானே! 23.5.2010 அன்று காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலை இரசித்து விட்டு முதன்முறையாக மாமண்டூரை நான் அடையும் போது மாலை 5 மணி. வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. மாமண்டூரிலிருந்து 1 கி.மீ. தொலைவு சென்று நரசமங்கலம் பிரிவு சாலையிருந்து மேற்கு முகமாக சென்றால் நரசமங்கலம் என்று விசாரித்து அறிந்து கொண்டேன். 

மழை வருவதற்கான அறிகுறிகள் இருந்ததால் சாலை மனித நடமாட்டமின்றிக் காணப்பட்டது. ஒருவழியாக பிரிவு சாலையை அடைந்து குடைவரை செல்லும் மண் சாலையை அடைந்தேன். மண்சாலை நரசமங்கலம் ஊருக்குள் நுழைந்ததும், வலமும் இடமுமாகப் பிரிந்து செல்வதைக் காணலாம்.

இந்த இடத்திலிருந்து எதிரே நோக்கினால் நீண்ட மலைத்தொடரின் மடியில் முகிழ்த்து பொன்னிடை முத்துக்களைப் பதித்தாற்போல் காட்சியளிக்கும் இந்நான்கு குடைவரைகளின் கம்பீரமான அழகினை குடைவரைகளின் மஞ்சரி (Cluster) என்று நாம் அழைப்பது மிகையாகாது தானே! (இவ்வழகு தான் என்னை 16.10.2010, 23.10.2010, 30.102.10 தேதிகளில் திரும்பத் திரும்பச் செல்லத் தூண்டியது.) 



இடப்புறம் பிரியும் தடத்தில் இரு மருங்கிலும் அழகிய பச்சை வயல்களைத் தாண்டிச் சென்றால் குடைவரைகள் அமைந்துள்ள தொடர் குன்றுகளை அடையலாம். இக்குடைவரைகளை படமெடுக்க உடனிருந்து உதவியவை நிகான் D90, நிகான் D5000 மற்றும் கெனான் 7D காமிராக்கள்.

குடைவரைகள் அமையப் பெற்றுள்ள இக்குன்றுத்தொடரிடையே ஓடும் ஓடையினை எல்லையாகக் கொண்டு இத்தொடர், மாமண்டூர் மற்றும் நரசமங்கலம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஓடையின் வடப்புறத்தே மாமண்டூர் வருவாய்க் கிராம எல்லையில் பெரும்பகுதி நிறைவடைந்த இரண்டு குடைவரைகளும், தென்புறத்தே நரசமங்கலம் வருவாய்க் கிராம எல்லையில் சிறியதும், பெரியதுமாக இரண்டு நிறைவடையா குடைவரைகளும் அமைந்துள்ளன. தென்வடலாக உயர்ந்து விரியும் இக்குன்றுத் தொடரின் பின்புறம் முதலாம் மகேந்திரவர்மரால் உருவாக்கப்பட்ட “சித்ரமேகத் தடாகம்” பரந்து விரிந்து காணக் கிடைக்கும். ஆனால் தற்போது மகேந்திரர் காலத்தைய சிறப்பின்றி வறண்டு கிடக்கிறது. 

இக்குடைவரைகளை அவை அமைந்துள்ள வருவாய்க் கிராமங்களையொட்டி இரண்டு பிரிவுகளாக பிரிக்கலாம்:

I. நரசமங்கல குடைவரைகள்:
a. முற்றுப் பெறாத சிறிய குடைவரை
b. முற்றுப் பெறாத பெரிய குடைவரை

II. மாமண்டூர் குடைவரைகள்:
a. ருத்ர வாலீஸ்வரம்
b. வடக்கு குடைவரை

இனி இவற்றை ஒவ்வொன்றாகக் காண்போம்

I.a நரசமங்கல குடைவரைகள் - முற்றுப் பெறாத சிறிய குடைவரை

குன்றுத்தொடரின் தெற்கு மூலையில் கிழக்கு திசைப் பார்வையில் இக்குடைவரை குடையப் பெற்றுள்ளது. மிக எளிமையான கட்டடக்கூறுகளைக் கொண்ட இக்குடைவரையை அணுக ஏதுவாக படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குடைவரைப்பணிகள் தொடங்கி முழுமை பெறாமல் இடையிலேயே கைவிடப்பட்டுள்ளன. 



இக்குடைவரையின் முகப்பில் இரண்டு முழுத்தூண்களும், தென்,வட புறங்களில் பக்கத்திற்கொன்றாக இரண்டு அரைத்தூண்களும் உள்ளன. முழுத்தூண்களுள் முதல் தூணில் சதுரம், கட்டு, சதுரமெனப் பிரிக்கும் பணி நிறைவுறாமல் கைவிடப்பட்டுள்ளது. கீழ்ச் சதுரம் மேற்சதுரத்தை விட அதிக உயரத்துடன் காணப்படுகிறது. இரண்டாம் முழுத்தூண், சதுரம், கட்டு, சதுரம் போன்ற எவ்வித அமைப்பும் துவங்கப் பெறாமல் எளிமையாக விடப்பட்டுள்ளது.




அரைத்தூண்களும் எவ்வித அமைப்புமின்றி எளிமையாக, நான்முகமாகவே உள்ளன. வளைந்த போதிகைகள் உத்திரத்தை தாங்குவது போல அமைக்கப்பட்டுள்ளன. முகப்புத் தூண்களையடுத்த முகமண்டபத்தின் கூரை, தரை மற்றும் பக்க்ச் சுவர்கள் வெறுமையாகவும், சமன் செய்யப்படாமலும் உள்ளன. 

குடைவரையின் பின்புறச்சுவரில் மூன்று கருவறைகள் அமைக்கும் பணி துவங்கப்பட்டு அது நிறைவுறாமல் கைவிடப்பட்டுள்ளது. இப்பணி துவங்கியமைக்கு அத்தாட்சியாக பின்சுவற்றில் உளிகளால் பொளியப்பட்டுள்ள சுவடுகள் பாறைகளில் வெளிப்படுகிறது.



இக்குடைவரையிலிருந்து மீள வரும் போது மனதில் தோன்றிய வினாக்கள்:

1. குடைவரை முற்றுப் பெறாமைக்குக் காரணம் என்னவாயிருக்கும்? இடைவிடாத போர்களா? அல்லது தெரிவு செய்யப்பட்ட பாறையின் தரக் குறைவா?

2. மூன்று கருவறைகள் எந்ததெந்தக் கடவுளருக்காக அமைக்கவிருந்தனர்?

விடைகளைத் தேடி நம் பயணத்தைத் தொடர்வோம்!!

மாமண்டூர் நரசமங்கலக் குடைவரை மஞ்சரியில் உள்ள நான்கு குடைவரைகளுள் என்னை மிகவும் ஈர்த்தது இக்குடைவரை எனலாம். காண்போரை ஒரு பார்வையிலேயே கவர்ந்து விடும் இக்குடைவரை வழக்கமான குடைவரையின் அமைப்பிலிருந்து மாறுபட்டுள்ளது. அதன் அழகிய முப்பரிமாணத் தோற்றத்திற்கு இப்புதுமையான அமைப்பும் ஒரு காரணமாகலாம். தமிழகத்தில் அமைந்துள்ள பெரிய குடைவரைகளுள் இதுவும் ஒன்று! 



குன்றின் அடிவாரத்திலிருந்து குடைவரையைச் சென்றடைய அமைக்கப்பட்டுள்ள படிகளினூடே கடந்து செல்கையில் இருமருங்கிலும் பச்சைப்பசேலென்று செழித்திருந்த மஞ்சம்புல்லின் இயற்கையான மணம் மனதை அள்ளியது. (வேலூர் மாவட்டத்தில் இப்புல்லினைக் கொண்டு வீட்டிற்கு கூரை அமைத்திருப்பதைக் காணலாம்.) படிகள் முடிவடையும் இடத்தில் குடைவரை நம் கண் முன்னே விரிகிறது. குடைவரையின் முகப்பிற்கு முன்னால் பரந்த பாறையினாலான தரைப்பகுதி தென்படுகிறது. 



குடைவரையின் அமைப்பு

உயர்ந்த குன்று அல்லது மலையின் சரிவு தரைப்பகுதியைத் தொடும் இடத்தில் குடைவரையை அகழ்வது வழக்கமாக நாம் காணக் கிடைப்பது. அகழ்ந்தெடுக்கப்பட்ட பாறையின் ஒருபுறத்தில் மட்டிலுமே செதுக்கப்பட்ட வடிவங்களை நாம் காண இயலும். இதிலிருந்து மாறுபட்டு இக்குடைவரையின் கிழக்கு மற்றும் தெற்கு ஆகிய இரண்டு முகங்களிலும் குடையப்பட்டுள்ளது. கிழக்கு முகத்தில் குடைவுப்பணி முடிவடைந்த நிலையில் தென்முகப்பணி முழுமையடையாமல் உள்ளது. 



இக்குடைவரை அமைந்துள்ள குன்றின் உச்சிக்குச் செல்லும் படிக்கட்டுகள் முடிவடையும் இடத்தில் ஒரு கற்றளியும், அதன் தென்புறத்தே சிறிது மேலே மற்றொரு கற்றளியும் அமைந்துள்ளன. மலையுச்சியிலுள்ள கோயில் பாதபந்த தாங்குதளத்துடன் முக மண்டபமும், கருவரையும் கொண்டு கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோயிலின் முன்னால் கொடித்தளம், பலித்தளம் மற்றும் நந்தி காணக் கிடைக்கின்றன. சம்புவராயர் கல்வெட்டொன்று இக்கோயிலை மாந்தீசுவரர் கோயிலென்று அழைக்கிறது. இக்கோயிலின் தென்புறத்தே தாழ்வான பகுதியிலுள்ள கற்றளி முகமண்டபம், அர்த்தமண்டபம், கருவறையுடன் பாதபந்த தாங்குதளத்துடன் கிழக்குப் பார்வையாய் அமைந்துள்ளது.



கிழக்கு நோக்கி அமைந்துள்ள இக்குடைவரை, முகப்பில் ஐந்து முழுத்தூண்களையும், முகப்பின் வட,தென் மூலைகளில் அரைத்தூண்களையும் கொண்டமைந்துள்ளது. வடபுறத்திலுள்ள அரைதூண் நான்முகமாகக் காட்டப்பட்டுள்ளது. இவ்வரைத்தூணையடுத்து அமைந்துள்ள முழுத்தூண் சதுரம், கட்டு, சதுரம் அமைப்பைக் கொண்டுள்ளது. இதனையடுத்து ஒரு முழுத்தூண் சதுரம், கட்டு, சதுரம் அமைப்புகள் முழுமையடையாத நிலையில் உள்ளது. இதனையடுத்து அமைந்துள்ள மூன்று முழுத்தூண்களுள் இரண்டு நன்கு முழுமை பெற்றும், மற்றொன்று சதுரம், கட்டு, சதுரம் அமைப்புகளின்றி நான்முகமாக விடப்பட்டுள்ளது. தென்புறத்திலுள்ள நான்முக அரைத்தூண் இக்குடைவரையின் கிழக்கு முகத்திற்கு தென் எல்லையாகவும், தெற்கு முகத்திற்கு கிழக்கு எல்லையாகவும் செதுக்கப்பட்டுள்ளது. முகப்புத்தூண்கள் உத்திரத்தைத் தாங்கி நிற்கின்றன. உத்திரத்தின் மேல் வாஜனம் வட மூலையில் தொடங்கி தென்புற இரண்டாவது தூண் வரை நீள்கின்றது. 

முகமண்டபம்

குடைவரையின் முகப்பிற்கும், முகப்பின் உட்புறத்தில் அமைந்துள்ள தூண் வரிசைக்கும் இடையே முகமண்டபம் காணப்படுகிறது. கூரையை ஒட்டி மண்டபத்தின் முழு நீளத்திற்கும் கிழக்கு மேற்காக வாஜனம் அமைந்துள்ளது. முகமண்டபத்தின் தரைப்பகுதி நன்றாக சமன் செய்யப்பட்டுள்ளது. முகமண்டபத்தின் தெற்கு, வடக்கு சுவர்களில் குடையப்பட்டுள்ள கருவறைகள் கடவுள் உருவங்கள் ஏதுமின்றி வெறுமையாக உள்ளன. வடபுறக் கருவறை, முகமண்டப, அர்த்தமண்டப அரைத்தூண்களுக்கிடையே குடையப்பட்டுள்ளது. கருவறையின் முகப்பில் கபோதக வளைவு செதுக்கப்பட்டுள்ளது. வெறுமையான சுவர்களும், கூரையுடன் காணப்படும் இக்கருவறையின் பின்சுவரையொட்டி கடவுள் சிலைக்கான குழியொன்று வெட்டப்பட்டுள்ளது. 



தென்புறக்கருவறையின் முன் சந்திரக்கல் காணப்படுகிறது. கருவறையின் சுவர்ப்பகுதியை ஒட்டி கடவுள் சிலையினை பொருத்த ஏதுவாக குழி வெட்டப்பட்டுள்ளது. கபோதம் முழுமையான அமைப்பைப் பெறவில்லை. 

அர்த்தமண்டபம்

அர்த்தமண்டபம், கருவறை பகுதிக்கும், முகமண்டபத்தை அடுத்த வரிசைத் தூண்களுக்குமிடையே அமைந்துள்ளது. தூண்வரிசையின் மையப்பகுதியில் நான்கு முழுத்தூண்களும், பக்கவாட்டில் பக்கத்திற்கொன்றாக இரண்டு அரைதூண்களும் உள்ளன. அர்த்தமண்டபத்தின் தரைப்பகுதி செவ்வனே சமன் செய்யப்பட்டுள்ளது.

அர்த்தமண்டபத்தின் பின்சுவரில் ஐந்து கருவறைகளும், பக்கச்சுவர்களில் இரண்டு கருவறைகளும் குடையப்பட்டுள்ளன. மையப்பகுதியிலுள்ள நான்கு தூண்களும் சதுரம், கட்டு, சதுரம் என்னும் அமைப்பில் உள்ளன. இத்தூண்களின் போதிகைகள் வளைந்து உயர்ந்து உத்திரம் தாங்குகின்றன. உத்திரத்தின் மேல் கிழக்கு, மேற்காக வாஜனம் செல்கிறது. 

கருவறைகள்

அர்த்தமண்டபத்தின் வடசுவர்க் கருவறை வாயிலின் இருபக்கத்திலும் நிலைகள் காட்டப்பட்டுள்ளன. கருவறையின் கூரை சிறு உத்திரம் போன்று இழுக்கப்பட்டுள்ளது. இதற்கு மேல் கபோதக வளைவு வடிக்கப்பட்டுள்ளது. சுவர்களும், கூரையும் வெறுமையாக அமைந்திருக்கும் இக் கருவறையில் கடவுள் சிலையமைக்க ஏதுவாக ஆழமான குழியொன்று வெட்டப்பட்டுள்ளது. தென்சுவர்க் கருவறையின் முன் ஒரு படி காட்டப்பட்டுள்ளது. 

பின்புறச்சுவர்க் கருவறைகள் பாதபந்த தங்குதளம் கொண்டமைந்துள்ளன. கருவறை வாயில்களுக்கு இடைப்பட்ட சுவரின் கீழ் மட்டும் இத்தாங்குதளம் காட்டப்பட்டுள்ளது. உத்திரம் தெற்கு வடக்காக கருவறையின் முகப்புகளை அலங்கரித்துச் செல்கிறது. உத்திரத்தின் மேலே கபோதம் நன்கு வளைக்கப்பட்டு கீழிறக்கப்பட்டுள்ளது. 

முதல் மற்றும் மூன்றாம் கருவறை வாயில்களின் முன்னால் சந்திரக்கல்லும், மேலே ஒரு படியும் அமைக்கப்பட்டுள்ளன. மற்ற மூன்று கருவறை வாயில்களுக்கும் சந்திரக்கல்லும், மேலே இரண்டு படிகளும் அமைக்கப்பட்டுள்ளன. படிக்கட்டுகளின் இருபுறங்களையும் அணைத்தவாறு யானையின் துதிக்கை போன்ற சுருட்டலுடன் சந்திரக்கல்லின் இருபுறமும் அமைந்துள்ளது. இக்கருவறைகள் ஐந்தும் உட்புறத்தில் வெறுமையாக காணப்படுகிறது. கருவறைகளின் பின்சுவருக்கு அருகில் நீளமான குழியொன்று வெட்டப்பட்டுள்ளது.

இக்குடைவரையின் மேற்பரப்பு முழுவதும் சுதையெழுதி வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டிருக்க வேண்டும். காலப்போக்கில் அவை மறைந்து போனதால் ஆங்காங்கே அதன் எச்சங்கள் குடைவரையில் காணப்படுகின்றது.