ஈழவள நாட்டின் கண் காணப்படும் திருத்தலங்களில் வரலாற்றுச்சிறப்பு மிக்க ஆலயமாக செல்வச் சந்நிதி ஆலயம் விளங்குகின்றது. இவ்வாலயம் தொண்டைமானாறு என்னும் கிராமத்தில் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது .இதன் தோற்றம், அமைப்பு, நடைமுறை என்பன தனித்துவமானதும், வரலாற்றுச் சிறப்பும் மிக்கவுமாகவுள்ளது. உலகில் எவ்விடத்திலும் காணப்படாத தனித்துவம் இங்கே காணப்படுவதென்றால் இதன் புதுமைக்கும், பொலிவிற்கும், தெய்வத்தின் திருவருட் தன்மைக்கும் அளவே கூறமுடியாதுள்ளது. இங்கே குடிகொண்டுள்ள கந்தசுவாமியார் என்ற முருகன் திருவருளானது மிகுந்து பிரகாசித்துக் கொண்டிருக்கிறது.
கந்தப் பெருமானது கருணை வெள்ளம் மடைதிறந்து பாய்கிறது. அவரை நாடி வரும் அடியார்கள் பக்தி வெள்ளத்திலும், கருணைக் கடலிலும் மூழ்கி திருவருளையும், திருவருள் பிரசாதத்தையும் தினந்தோறும் பெற்ற வண்ணம் இருக்கிறார்கள். இவ்வாலயமானது மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய தெய்வாம்சங்களை ஒருங்கே அமையப் பெற்றுள்ளது.
ஆகம விதிகட்கு அகப்படாத அதற்கு அப்பாற்பட்ட அன்பு, பக்தி ஞானம் ஆகிய அபரிதமான மார்க்க வணக்க தனித்தலமாகக் கொண்டுள்ள இங்கே கந்தப் பெருமானது அருளாட்சி நடைபெறுகிறது. இங்கே முருகன் ''பூரணம்'' என்று கூறும்படியாக பத்திரசக்தி முகூர்த்தத்தில் அமர்ந்திருக்கிறார் இதைக்கண்ணுற்ற வேதநாயகம்பிள்ளை என்ற பக்தி சிரோன்மணி 'செல்வச் சந்நிதி மேவிய பூரணனே' என்றும், 'செல்வச் சந்நிதி போற்றிய பூரணனே' என்றும், 'பூரணமாஞ் செல்வச் சந்நிதி மேனிப்புவனமுய்யும்' என்றும் வாய்விட்டு மனம் திறந்து கசிந்துருகிப் பாடியுள்ளார். சின்மயம் என்று கூறுவதும் கருணையே குறிக்கும்.
இவ்வாலயத்தின் வரலாற்றை நோக்கினால் இது அரசியலுக்குமேல் பொருளாதார, சமூகவரலாற்றுடன் மிகுந்த நெருங்கிய தொடர்புடையதாகவும் இதற்கு அப்பால் பக்தி வரலாற்றுடன் தொடர்புடையதாகவும் உள்ளது. இதைப்பற்றிய வரலாறுகள், சான்றுகள் இன்று கிடைக்காதபோதும் கர்ணபரம்பரை வரலாற்றுக்கதைகள் உண்டு. இங்கு ஓடும் ஆறும் இதன் அருகமைந்த ஆலயமும் வரலாற்றுடன் பக்தி இளையோடபட்ட தொன்மையான பெருமை வாய்ந்தது. தொண்டைமானாறு என்னும் இவ் ஆறானது முன்பு கடலுடன்சங்கமிக்காது 'வல்லிநதி' என்னும் பெயருடன் மிளிர்ந்தது.
|
| ||||||||||||||||
இதற்குச்சான்றாக வல்லிநதிக்கு மேலாகப் போடப்பட்ட பாலமானது வல்லைப் பாலம் என்று அழைக்கப்பட்டது அது இன்றும் இப் பெயரையே கொண்டுள்ளது. இதையொட்டியே வல்லை வெளி என்றும் இப் பாலத்தின் அருகில் உள்ள காணிகளை வல்லியப் பெருவெளி என்று இன்றும் கூறப்படுகிறது. இந்; நதியின் தொடு வாயிலை தொண்டைமான் என்ற ஓர் அரசன் வெட்டி கடலிடம் சங்கமிக்க விட்டான். அன்று முதல் இந் நதியின் பெயர் (ஆறு) தொண்டைமானாறு என்றும் அழைக்கப்பட்டது. இப் பெயரே இக் கிராமத்திற்கும் மருவி வந்துள்ளது அரசன் நதி வாயிலை வெட்டியதன் காரணமாக கடலின் உப்பு நீரானது உட்புகத் தொடங்கியது நன்நீராய் இருந்த வல்லிநதி நீர் மாற்றம் பெற்றது போல நன் நீரான வல்லிநதி உவர் நீராக மாறியது. இவ் உவர் நீர் உள் நாடு சென்றதன் காரணமாக கரணவாய் போன்ற பகுதிகளில் உப்பு பெரு வாரியாக இயற்கையாக விளையத் தொடங்கியது. இவ் உப்பானது பிற் காலங்களில் இவ் ஆற்றினுடாக கொண்டு வரப்பட்டு தொடுவாயிலில் அமைந்திருந்த சேகரிப்பு நிலையத்தில் நிரப்பப்பட்டது. ஆதன் காரணமாக அந்நிலையத்தை உள்ளடக்கிய நிலம் 'உப்பு மால்' என்று இன்றும் அழைக்கப்படுகிறது இலங்கையின் கரையோரத்தை ஆட்சி புரிந்த அந்நிய ஆட்சியரான போர்த்துக்கேயர் ஒல்லாந்தர் அதன் பின் ஆண்ட ஆங்கிலேயரும் இவற்றுடன் வணிக முறையில் தொடர்பு கொண்டிருந்தனர்.
|