செவ்வாய், 13 மே, 2014

தமிழ் மருந்துகள்

நல்லெண்ணெயில் காலையில் எழுந்தவுடனும் இரவு படுக்கச் செல்லும் முன்னும் வாய் கொப்புளிக்க வேண்டும். நல்லெண்ணெய் ஒரு தேக்கரண்டி வாயில் ஊற்றி 10 மணித்துளி கொப்புளித்துத் துப்பிவிட வேண்டும்; விழுங்கக் கூடாது; பின் வெந்நீரில் வாயைக் கழுவவேண்டும். இவாறு செய்வதால் வாய் நாற்றம், பல்வலி, பல்சொத்தை நீங்குவதுடன் வாய்வழியே குடலுக்கு – உடலுக்குச்- சேரும் நோய்க் கிருமிகள் தவிர்க்கப் பெறுவதால் பிற நோய்கள் பலவும் தாக்குவதில்லை.தலைவலி, மூக்கடைப்பு, இழுப்பு (ஆசுமா), நுரையீரல் கல்லீரல் கோளாறுகள், வயிற்றுக் கோளாறுகள், குறிப்பாக வாதவலிகள் மூட்டு வலிகள் நீங்குகின்றன.


கனிந்த கொய்யாப் பழம் சாப்பிட இரைப்பை வலிமை பெறும்; விக்கல் வராது. தொடர்ந்து விக்கல் ஏற்பட்டால் தண்ணீர் குடிக்கவும்; சீனி வாயிலிட்டு மெல்ல விழுங்கவும். அப்படியும் நிற்கவில்லை என்றால் மயிலிறகைச் சுட்டு அச்சாம்பலைத் தேனில் குழைத்துத் தருக. திப்பிலி இரசாயனம் ஒரு சிட்டிகையைத் தேனில் குழைத்தும் தரலாம். எதற்கும் நிற்காத விக்கலை ஒல்லியலில் (ஓமியோபதியில்) மேக் பாஸ் 6 நிறுத்தும். இது தாதுப்பு (பயோ கெமிக்கல்) மருந்தாகும். வெந்நீரில் 10 மாத்திரை இட்டு, 5 மணித்துளிக்கு ஒரு முறை கொடுக்க உடனே நிற்கும்.


முருங்கை இலையைப் பிழிந்து ஒரு தேக்கரண்டிச் சாற்றைச் சூடுகாட்டிக் குழந்தைகளுக்குத் தரலாம். இரத்தத்தைப் பெருக்கி நலம் தரும்.
குப்பைமேனி மூன்று இலை, உப்புடன் கசக்கிச் சாற்றில் சில துளி கொடுக்கச் சளி நீங்கும். 
குழந்தைகளுக்கு காய்ந்த திராட்சையை இரவில் ஊறவைத்துக் காலையில்சாறு பிழிந்து தருவதால் மலச் சிக்கல் நீங்கும்.
குடலேற்றம் ஏற்பட்டுக் கதறி அழுதால், (வயிற்றுப் போக்கும் போகும்), குழந்தையைத் தூங்க வைக்கும் தூளியில் / ஏனையில்/ தூக்கில் அல்லது புடவையில் குழந்தையை இட்டு நன்கு உருட்டினால் போதும்.

கடுஞ்சளி, இருமல், மாலையில் சுரம், உடல் இளைப்பு இருந்தால் முற்காச (பிரைமரி காம்பிளக்சு) நோயாக இருக்கலாம். காதின் கீழ் (பின்பக்கம்) தொட்டுப் பார்த்தால் சிறு வீக்கமாகத் தெரியும். திப்பிலி சூரணம் ஒரு சிட்டிகை தேனில் குழைத்துத் தருக. வாச கண்டகாரி இளகியம் (இலேகியம்) காலை மாலை இருவேளை சுண்டைக்காய் அளவு தரலாம். ஒல்லியலில் (ஓமியோபதியில்) ஆர்சனிக் அயோடேட்டம் 6 மருந்தில் 4 மாத்திரை மூன்றுவேளை தொடர்ந்து முன்னேற்றம் காணும் வரை தர வேண்டும்.

தொண்டைச் சதை, உள்நாக்கு வீக்கம் ( டான்சில்), இருமல், அடிக்கடி சுரம் இருந்தால், ஒல்லியலில் (ஓமியோபதியில்) காலையில் பாரிடா கார்ப் 30 , இரவு ஆர்சனிக் அயோடேட்டம் 6 மருந்துகளை 4 மாத்திரை தொடர்ந்து முன்னேற்றம் காணும் வரை தர வேண்டும்.