சோறு, குழம்பு, சாறு (ரசம்), தயிர் அல்லது மோர், ஊறுகாய், அப்பளம், பொரியல்,கூட்டு, தொகையல்,, தொக்கு என அமையும் இயல்பான தமிழர் உணவு முறையில், இவை ஒவ்வொன்றிலும் சேர்க்கப்பெறும் பொருள்கள் நோய் வராமல் தடுக்கும் - வந்தால் போக்கும் - மருத்துவக்குணம் உள்ளவை.
குழம்பில் சேர்க்கப்படும் புளி/ புளிப்பு செரிமான சக்தி தரும்; காய்கறி,பருப்பு ஆகியவற்றில் ஏதேனும் நச்சுப் பொருள், கிருமி இருப்பின் அகற்றும். மிளகாயில் உள்ள உறைப்பு பசி ஏற்படுத்தும்; கால்சியம் எலும்புகளுக்கு வலிமை தரும். துவரம்பருப்பு புரதச்சத்து மிகுந்தது. பருப்பால் ஏற்படும் வளி (வாயு) பெருங்காயத்தால் நீங்கும். பெருங்காயம் எலும்புகளுக்கு நோய் வராமல் தடுக்கும்.
புளிக்குழம்பு, காரக் குழம்பு, பருப்புக்குழம்பு, பருப்பு உருண்டைக்குழம்பு, கீரைக்குழம்பு, பொரிச்சக் குழம்பு, பூண்டுக்குழம்பு, மோர்க்குழம்பு எனப் பலவகைகள் உண்டு; ஒவ்வொன்றும் ஒவ்வொருவகையில் மருத்துவப் பயன் நல்கும்.சாப்பிட்ட்தும் வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் நல்லது. புகையிலை சேர்த்துப் போடுவதும் சுண்ணாம்பைக் கண்ட இடங்களில் தடவுவதும் துப்புவதும் செய்து இதை அருவெறுப்பாக்கிவிட்டனர். வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு அளவாகச் சேர்த்து கால் மணி நேரம் நன்றாக மென்று உமிழ்நீருடன் விழுங்க வேண்டும் ; துப்பக் கூடாது. பின்னர் நல்ல தண்ணீரில் வாயை நன்றாகக் கொப்புளித்துவிட வேண்டும்; அப்போதுதான் பற்களில் காறை படியாது.வெற்றிலை சளி போக்கும்; செரிமானம் தரும். சுண்ணாம்பு கால்சியம் சத்து தரும்; கொழுப்பு உணவுகளைச் செரிக்கச் செய்யும், எலும்பும் வலிமை பெறும், பல்லும் தூய்மையாகும். பாக்கு மெல்லுவதால் இரத்தம் அதிகரிக்கும்; கொழுப்பு கரைக்கப் படுவதால் இரத்தம் தடிமானாகாது, அதனால் இரத்த அழுத்தம் இதய அடைப்பு வருவதில்லை. “கீரை தயிர் இரண்டும் கேடு செய்யும் இரவில்” – பாவேந்தர் பாரதிதாசன். பகலில் நாள்தோறும் கீரை சேர்ப்பதால் பற்கள், எலும்புகள் வலிமை அடையும்; மலச்சிக்கல் வராது