சேக்கிழாரும் அவர் காலமும் - 1

சேக்கிழார் புராணம்

சேக்கிழார் வரலாறு, இப்போதுள்ள பெரிய புராணப் பதிப்புகளின் முதலில் அல்லது ஈற்றில் சேர்க்கப்பட்டுள்ள 'திருத்தொண்டர் புராண வரலாறு' அல்லது சேக்கிழார் புராணம் என்பதில் காணப்படுகிறது. இதுவே சேக்கிழார் வரலாற்றைக் கூறவந்த முதல் நூலாகும். இதனிற் கூறப்படும் சேக்கிழார் வரலாறு இதுவாகும்.

"தொண்டை நாட்டு 24 கோட்டங்களுள் ஒன்றாகிய புலியூர்க் கோட்டத்தில் குன்றை வளநாட்டுக் குன்றத்தூரில் வேளாளர் மரபில் சேக்கிழார் குடியில் அருள்மொழித்தேவர் என்பவர் பிறந்தார். அவர் தம்பி பெயர் பாலறாவாயர் என்பது. அருள்மொழித் தேவரது புலமைச் சிறப்பு மிகுதிப்பட, அவர் குடிப்பெயரான 'சேக்கிழார்' என்று குறிக்கப்பட்டார். அவரது பெரும்புலமையைக் கேள்வியுற்ற 'அநபாயச் சோழவேந்தன்'(1) அவரைத் தனது முதல் அமைச்சராகக் கொண்டான். அவருக்கு உத்தமச் சோழப் பல்லவராயன் என்ற பட்டம் கொடுத்தான்.

"சேக்கிழார் சோழநாட்டுத் திருநாகேச்சரத்தில் உள்ள சிவபிரானை வழிபட்டு, அக்கோவிலைப் போன்றதொரு கோயிலைத் தமது குன்றத்தூரில் கட்டி, அதற்குத் திருநாகேச்சரம் என்று பெயரிட்டு மகிழ்ந்தார்.

"அக்காலத்தில் அரசன் சமணப் பெருங்காவியமாகிய சீவகசிந்தாமணியைப் படிக்கக்கேட்டு மகிழ்ந்தான். அதனைப் பலபடப் பாராட்டினான். அதுகண்ட சேக்கிழார், இளவரசனை நோக்கி, "சமணர் செய்த அப்பொய்ந்நூல் இம்மைக்கும் பயனில்லை; மறுமைக்கும் பயனில்லை. சிவகதை ஒன்றே இம்மை மறுமைகட்குப் பயனளிக்க வல்லது' என்றார். அதுகேட்ட அரசன், 'அங்ஙனமாயின், அச்சிவகதை ஏது? அது கற்றவர் யார்? அது சீவகசிந்தாமணியைப் போல இடையில் வந்த நவகதையோ? புராணமோ? முன்னூல் உண்டோ? அதனை இவ்வுலகிற் சொன்னவர் யார்? கேட்டவர் யார்? முறையாகக் கூறுக.' என்றான். உடனே சேக்கிழார், 'தில்லைப்பிரான் அடியெடுத்துத் தரச் சுந்தரர் பதினொரு திருப்பாட்டாக அடியவரைப் பற்றித் தொகை பாடினார். அதனைத் திருநாரையூர்ப் பொல்லாப் பிள்ளையார் விளக்கிக் கூற, அவர் அருள் பெற்ற நம்பியாண்டார் நம்பி, 'திருத்தொண்டர் திருவந்தாதி' என்றொரு நூல் பாடினர். அந்நூலைத் திருமுறைகண்ட இராசராச தேவர் (2) முதலியோர் பாராட்டினார்' என்றார். அதுகேட்ட சோழன் மகிழ்ந்து, 'அவ்வடியார் வரலாற்றைக் கூறுக' என்றான். சேக்கிழார் அடியார் வரலாறுகளைத் தொகை, வகைகளைக் கொண்டு விளங்கவுரைத்தார். கேட்டு மகிழ்ந்த மன்னன், 'இவ்வரலாறுகளைப் பெரியதோர் காவியமாக நீரே பாடியருள்க' என்று அவருக்கு வேண்டிய ஆள் உதவி பொருளுதவி தந்து தில்லைக்கு அனுப்பினான்.

"தில்லையை அடைந்த சேக்கிழார் கூத்தப் பெருமான் திருமுன் நின்று, 'அடியேன், புகழ்பெற்ற உம் அடியார் சிறப்பை எங்ஙனம் உரைப்பேன்! எனக்கு அடியெடுத்து உதவி அருள்க' என்று வேண்டினார். அவ்வமையம் 'உலகெலாம்' என்ற சொல் சேக்கிழார் செவியிற்பட்டது. அவர் அதனையே புராணத்திற்கு முதலாகக் கொண்டு பாடி, புராணத்தை முடித்தார். அரசன் தில்லை அடைந்தான். தில்லை ஆயிரங்கால் மண்டபத்தில் பெருஞ்சைவர் கூட்டத்தில் சேக்கிழார் தமது புராணத்தை அரங்கேற்றம் செய்தார். இறுதியில் அரசனால் பெருஞ்சிறபுப் பெற்றார்; 'தொண்டர் சீர் பரவுவார்' என்ற பெயரும் பெற்றார்.

"அரசன், சிறந்த பக்திமானாகிய சேக்கிழாரைத் தன்கீழ் வேலையில் வைக்க விரும்பாமல், அவர் தம்பி பாலறாவாயரைத் 'தொண்டைமான்' என்ற பட்டத்துடன் தொண்டை நாட்டை ஆளும்படி விடுத்தான். அவர், 'தொண்டை மண்டலம் நின்று காத்த பெருமாள்' (3) எனப்பெயர் பெற்றார்.

"பின்னர்ச் சேக்கிழார் தில்லையில் தங்கிக் கூத்தப் பெருமானைச் சேவித்துக் கொண்டிருந்து முக்தி பெற்றார். சேக்கிழார் மரபினர் இன்றுவரை அரசியல் உயர் அலுவலாளராக இருந்து வருகின்றனர். இனியும் இருப்பர்".

இவ்வரலாறு பற்றிய ஆராய்ச்சி

இவ்வரலாற்றில் பெரும்பாலும் நம்பத்தக்க செய்திகளே கூறப்பட்டுள்ளன. ஆயின், சில ஆராய்ச்சிக்கு உரியனவாகவும் உள்ளன. ஆதலின், அவற்றை முறையே ஆராய்தல் நமது கடமையாகும்.

1. சிந்தாமணியைச் சோழன் படித்துச் சுவைத்ததைக் காணப்பொறாத சேக்கிழார் அதனைத் 'திருட்டுச் சமணர் பொய்ந்நூல்' எனக் கூறியதற்கும், சிந்தாமணிக்கு மாறாக இவர் பெரியபுராணம் செய்தார் என்று கூறியிருந்ததற்கும், சேக்கிழார் புராணச் செய்யுளைத் தவிர வேறு சான்றில்லை. சேக்கிழார் பாடிய பெரியபுராணத்திலும் இதற்கு அகச்சான்று இல்லை. ஆயின், இதற்கு மாறாகச் சேக்கிழார் சிந்தாமணியை நன்றாய்ப் படித்தவர் என்பதற்குப் பெரியபுராணத்திலிருந்து பல சான்றுகள் காட்டலாம். இங்ஙனம் அந்நூலை நன்றாய்ப் படித்து அனுபவித்த பெரும் புலவராய சேக்கிழார் அதனை வெறுத்தனர் என்றோ, அதற்கு மாறாக அரசனைத் தூண்டிப் பெரியபுராணம் செய்தார் என்றோ கோடல் பொருத்தமன்று. எனவே, சேக்கிழார் புராணக்கூற்று அதனைப் பாடிய ஆசிரியரது மனப்போக்கையும் சமணத்தில் வெறுப்பும் சைவத்தில் அளவு கடந்த பற்றும் கொண்ட மனப்பண்பையுமே உணர்த்துவதாகும் (4) எனக்கோடலே பொருத்தமாகும்.

2. இப்புராண ஆசிரியர் பெரிய புராணத்தை நன்றாகப் படித்தவராகத் தெரியவில்லை. 'நாயன்மாருள் முடிமன்னர் அறுவர்' எனக்கூறி 'அவருள் இடங்கழியார் ஒருவர்' எனவும், 'குறுநில மன்னர் ஐவர்' எனக்கூறி, 'அவருள் காடவர்கோன் கழற்சிங்கன், ஐயடிகள் காடவர்கோன் என்பவர் இருவர்' எனவும் கூறியிருத்தல் பெருந்தவறு. (5) என்னை? இடங்கழியார் கொடும்பாளூரை ஆண்ட சிற்றரசர் (6) என்றும், பின்னவர் இருவரும் பல்லவப் பேரரசர் என்றும் சேக்கிழார் தமது புராணத்தில் தெளிவாகக் கூறியுள்ளார் (7) ஆதலின் என்க. சுந்தரர், தமது காலத்தவனான கழற்சிங்கனைத் தாம் பாடிய திருத்தொண்டத் தொகையில்,

"கடல்சூழ்ந்த உலகெல்லாம் காக்கின்ற பெருமான்
காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்"

என்று தெளிவாகக் கூறியுள்ளார். இதனையேனும் இத்திருத்தொண்டர் புராண ஆசிரியர் கவனித்தவராகத் தெரியவில்லை.

3. அறுபத்து மூன்று நாயன்மாருள்.

இயல், இசைத்தமிழ் வல்லோர் - அப்பர், சம்பந்தர், பேயார்
இசைத்தமிழ் வல்லோர் - நந்தனார், ஆனாயர், பாணர்
இயற்றமிழ் வல்லோர் - ஐயடிகள், திருமூலர், காரியார், சேரமான்பெருமாள்

என்று வகுத்துக்கூறும் இந்த ஆசிரியர் சுந்தரரை இப்பிரிவுகளிற் சேர்த்துக் கூறத் தவறிவிட்டார் (8). சுந்தரர், இயல், இசைத்தமிழ் வல்லோர் அல்லரா? நந்தனார் இசைத்தமிழில் வல்லார் என்பதற்குச் சான்று என்னை?

4. இங்ஙனமே, இந்த ஆசிரியர் பாடிய 'திருமுறை கண்ட புராணம்' என்ற நூலிலும் சில தவறுகள் உண்டு. அவற்றுள் குறிக்கத்தக்க பெருந்தவறு ஒன்றுண்டு. அஃதாவது, இராசராசன் (கி.பி 985-1014) காலத்துத் திருமுறை வகுத்த நம்பியாண்டார் நம்பி, அவன் மகனான இராசேந்திரன் (கி.பி. 1012-1044) புதிதாக உண்டாக்கிய கங்கைகொண்ட சோழபுரத்தில் கட்டப்பெற்ற கங்கைகொண்ட சோழீச்சுரம் பற்றிக் கருவூர்த் தேவர் பாடிய திருவிசைப்பாவை ஒன்பதாம் திருமுறையில் (இராசராசற்கு எதிரில்) சேர்த்தார் என்பது. மகன் தனது ஆட்சிக் காலத்திற் கட்டிய கோயிலைப் பற்றிய பாடல் ஒன்றை அம்மகனுடைய தந்தை காலத்துப் புலவர் அத்தந்தை முன்னிலையிலேயே மற்றத் திருமுறைகளை வகுத்தபொழுதே, தொகுத்தார் என்னன் எங்ஙனம் பொருந்தும்?

இங்ஙனம் இராசராசன் காலத்தவரும் பிற்பட்டவருமான புலவர் பாக்களை எல்லாம் இராசராசன் காலத்திலேயே நம்பி தொகுத்து முடித்தார் என்று திருமுறை கண்ட புராண ஆசிரியர் தவறாகக் கூறிவிட்டதால், (10) ஆராய்ச்சியாளர், 'திருமுறைகள் முதற் குலோத்துங்கன்' காலத்தில் தொகுக்கப்பட்டனவாதல் வேண்டும் (11) என்றும், நம்பி, 'திருவிசைப்பாவையும் தொகுத்தார்' என்று புராணம் கூறலால் அவர் இராசராசற்குப் பிற்பட்டவர் (12) என்றும் கருதலாயினர்.
இவற்றின் ஆசிரியர் உமாபதி சிவமா?

திருத்தொண்டர் புராண வரலாறும் திருமறை கண்ட புராணமும் இயற்றியவர் சந்தான ஆசாரியருள் ஒருவரும், சைவசித்தாந்த நூல்கள் பலவற்றின் ஆசிரியருமான கொற்றவன்குடி உமாபதி சிவாச்சாரியார் என்று சில பதிப்புகளிற் காண்கின்றன (13). அவர் பாடியனவாகத் திருத்தொண்டர் புராணசாரம், திருப்பதிக்கோவை என்பனவும் காணப்படுகின்றன. இவற்றுள் முன்னது பெரியபுராணத்தைத் தழுவிச் செய்யப்பட்டதாகும். அதனில் (1) 'இடங்கழியார் கொடும்பாளூர் வேளிர்குலத்தரசர்' என்றும், (2) கழற்சிங்கனும் ஐயடிகள் காடவர்கோனும் பேரரசர் என்றும் தெளிவாகக் குறிக்கப்பட்டுள்ளன' (14). இதனைப் பாடிய உமாபதிசிவமே இச்செய்திகளையே தவறாகக் கூறும் சேக்கிழார் புராண வரலாற்றையும் பாடினார் என்பது எங்ஙனம் பொருந்தும்?

'திருத்தொண்டர் புராண வரலாறும் திருமறை கண்ட புராணமும் உமாபதிசிவம் பாடினார் எனக்கூறுதல் மரபு' (15) என்று சமாஜப் பதிப்புக் குறித்துள்ளது. 'இவற்றை உமாபதிசிவம் பாடினார் என்று கூறும் தனிப்பாட்டு சில பிரதிகளில் இல்லை' (16) என்று திரு. வி.கலியாணசுந்தர முதலியார் பதிப்புக் குறித்துள்ளது.

இவற்றை நோக்க, உமாபதி சிவாச்சாரியார் திருத்தொண்டர் புராணசாரம் முதலிய மூன்று நூல்களைச் செய்தவராகலாம் எனக்கோடல் தவறாகாது. உமாபதிசிவனார் காலம் கி.பி. 14ம் நூற்றாண்டின் முற்பகுதியாகும் (17). ஆயின், திருத்தொண்டர் புராண வரலாறும், திருமுறை கண்ட புராணமும் செய்த ஆசிரியர் இன்னவர் என்பதோ, அவர் காலம் இன்னது என்பதோ திட்டமாகக் கூறுதற்கில்லை. ஆயினும், அவற்றுள் இராசராசன், அநபாயன் என்ற அரசர் பெயர்களும், கல்வெட்டுகளோடு ஒன்றுபடும் சேக்கிழார் பற்றிய குறிப்புகள் சிலவும் தவறின்றிக் கூறப்படலால், அவை சேக்கிழார்க்குப் பிற்பட்ட ஒன்றிரண்டு நூற்றாண்டுகளில் செய்யப்பட்டன ஆகலாம் எனக் கோடல் தவறாகாது. மேலும், புகழ்பெற்ற உமாபதிசிவனார் தவறின்றிப் பாடிய திருத்தொண்டர் புராண வரலாறு பெயர் தெரியாத ஒருவரால் பாடப்பட்டது என்பது பொருத்தமுடையதன்று. ஆதலால், திருத்தொண்டர் புராண வரலாறு, மிகுந்த சைவப்பற்றும் சமண சமய வெறுப்பும் கொண்ட ஒருவரால் உமாபதி சிவாச்சாரியாருக்கு முன்பே பாடப்பட்டது; அவராலேயே திருமுறை கண்ட புராணமும் பாடப்பெற்றது எனக்கோடல் பொருத்தமாகும். எனவே, இப்பெயர் தெரியாத ஆசிரியர் கி.பி. 13ம் நூற்றாண்டினர் எனக்கொள்ளலாம். இங்ஙனம் கொள்ளின், சிறந்த புலவரும் சைவசித்தாந்த ஆசிரியருமாகிய உமாபதிசிவனார்க்கு நிறையுண்டாகுமே அன்றிக் குறை உண்டாகாமை காண்க.

உமாபதிசிவத்தின் மூன்று சிறு நூல்களையும் அவற்றின் தொடர்பான சேக்கிழார் புராண வரலாற்றையும் திருமுறை கண்ட புராணத்தையும் கண்ட பிற்காலத்தார், பின்னவையும் உமாபதிசிவமே பாடினார் எனக் கொண்டிருத்தல் இயல்பே (18).

பொருந்தும் செய்திகள்

இவ்வாறு பொருந்தாச் செய்திகள் சில இருப்பினும், சேக்கிழார் புராணம் சேக்கிழார் வரலாற்றை அறிய உறுகருவி என்பதை மறுத்தற்கில்லை. ஆதலின், அதன்கண் காணப்படும் பெரும்பாலும் நம்பத்தக்க செய்திகளாவன:

1. சேக்கிழார் குன்றை நாட்டுக் குன்றத்தூரினர்; வேளாளர் மரபினர்; அவர் தம்பி பாலறாவாயர். குன்றத்தூரில் சேக்கிழார் கோயில் இன்றும் இருக்கின்றது. அதற்கு அண்மையில் பாலறாவாயர் குளம் இருக்கின்றது. சேக்கிழார் மரபினர் அங்கு வாழ்கின்றனர்.

2. சேக்கிழாரை ஆதரித்த அரசன் 'அநபாயன்' என்பதைச் சிறப்புப் பெயராகக் கொண்டவன்.

3. சேக்கிழார் சோழ அரசியலில் தலைமை அமைச்சராக இருந்தவர். அங்ஙனம் இருந்து, உத்தம சோழப் பல்லவராயன் என்ற பட்டம் பெற்றனர். அங்ஙனம் அரசற்கு அடுத்த உத்தியோகத்தில் இருந்தமையாற்றான் அவருடைய சைவப்பற்றும் அவர் அறிந்த நாயன்மார் வரலாற்றுச் செய்திகளும் நிறைந்த தமிழ்ப்புலமையும் அரசனும் இளவரசனும் அறிய வாய்ப்புண்டானது எனக்கோடல் பெரிதும் பொருத்தமே ஆகும்.

4. அவர் சோணாட்டுத் திருநாகேச்சரத்தில் ஈடுபட்டவர். அந்நினைவு கொண்டு தமதூரில் அப்பெயரால் கோயில் கட்டினவராகலாம். குன்றத்தூரில் இப்பெயரால் ஒரு கோயில் இருக்கின்றது.

5. சேக்கிழார் பெரியபுராணம் பாடியவர்.

இனி, 'அநபாயன்' யாவன் என்பதைக் காண்போம். பின்னர்க் கல்வெட்டுச் செய்திகளையும் மேற்சொன்ன சேக்கிழார் வரலாற்றுச் செய்திகளையும் ஆராய்ந்து பொருந்துவன காண்போம்.

அநபாயன் யாவன்?

சேக்கிழார் காலத்தைத் தத்தமக்குக் கிடைத்த சான்றுகளைக் கொண்டு ஆராய்ந்து முடிபுகட்டிக் கூறினோர் பலராவர். அவர் முடிவுகளைக் கீழே காண்க.

1. சேக்கிழார் - இராசேந்திரன் 1 (கி.பி. 1012-1044) காலத்தவர் (19)
2. சேக்கிழார் - முதற் குலோத்துங்கன் (கி.பி. 1070 - 1120) காலத்தவர் (20)
3. சேக்கிழார் - இரண்டாம் குலோத்துங்கன் (கி.பி. 1113 - 1150) காலத்தவர் (21)
4. சேக்கிழார் - மூன்றாம் குலோத்துங்கன் (கி.பி. 1178 - 1218) காலத்தவர் (22)

இவற்றுள் முன் இரண்டு முடிபுகளும் பொருந்துவன அல்லவென்று முன்பே அறிஞர் விளக்கிவிட்டனர் (23). ஆதலின், அவைபற்றி நாம் பேசவேண்டுவதில்லை. சேக்கிழார் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தவர் என்பார் கூற்று புதியது. ஆதலின், அவர் கூறும் காரணங்களை ஆராய்ந்து முடிபு காணல் நமது கடமையாகும். அவர் கூறும் காரணங்களாவன:

1. "இரண்டாம் குலோத்துங்கனை உலாவிற் பாடிய அவனது ஆசிரியரான ஒட்டக்கூத்தர், அவ்வுலாவில் (வரிகள் 76-116) அவன் பேரம்பலம் பொன் வேய்ந்ததைக் குறிக்கவில்லை. ஆதலின், அவன் பேரம்பலம் பொன் வேய்ந்தவன் ஆகான்.

2. "இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் சேக்கிழார் பெரியபுராணம் பாடியிருப்பின், ஒட்டக்கூத்தர் அதனை உலாவிற் கூறாதிறார்.

3. "இரண்டாம் குலோத்துங்கற்கு ஆசிரியர் ஒட்டக்கூத்தர். அவர் சிறந்த சிவபக்தர். அரசன் அவரைக்கொண்டு பெரியபுராணம் பாடச்செய்யாது, சேக்கிழாரைக் கொண்டு பாடச் செய்தான் என்பது பொருத்தமற்றது.

4. "திருப்புறம்பயத்துக் கல்வெட்டுகளில் 'பேரம்பலம் பொன் வேய்ந்த சோழன்' என்பதைக் குறிப்பிடும் கல்வெட்டுக்கு மேல் உள்ள கல்வெட்டு மூன்றாம் இராசராசனுடையது எனக் கல்வெட்டாளர் கொண்டனர். இரண்டாம் குலோத்துங்கற்கு மூன்று தலைமுறைக்குப் பிந்தியவன், மூன்றாம் இராசராசன். எனவே, மூன்று தலைமுறைக்குப் பிந்தியவன் கல்வெட்டு மேலும், முந்தியவன் கல்வெட்டுக் கீழும் அமையுமாறு எங்ஙனம்? முந்தியவனது மேலும், பிந்தியவனது கீழும் அமைவதன்றோ இயலும்? ஆகவே, கல்வெட்டுத் துறையாளர் கொண்ட கருத்துத் தவறுடையதாகும். உண்மையாதெனில், மேற்கூறிய கல்வெட்டுகளிற் கண்ட இராசராசன் இரண்டாம் இராசராசனே, குலோத்துங்கன் மூன்றாம் குலோத்துங்கனே. இவ்வாறு கொள்ளின், யாம் மேலே கிளப்பிய ஐயத்திற்கு இடமிராது.

இக்காரணங்கள் பொருந்துவனவா?

1. இரண்டாம் குலோத்துங்கன் உலாவில் (வரிகள் 71-116) 'பேரம்பலம்' என்ற சொல் காணப்படுகின்றது. ஆனால், அதற்கடுத்த இராசராசன் உலாவில், இராசராசன் இன்னவன் மகன் என்று குறிப்பிடும் இடத்தில் அவன் பேரம்பலம் முதலியவற்றைத் தூய செம்பொன்னிற் குயிற்றினாற்கு மகன் என்பது தெளிவாக உள்ளது (24). ஆதலின், 'இரண்டாம் குலோத்துங்கன் பேரம்பலம் பொன் வேய்ந்ததைக் கூத்தர் குறிக்கவில்லை' என்ற முதற்காரணம் பொருந்தாமை காண்க.

2. இஃது ஒரு சிறந்த காரணமாகாது. முதல் இராசராசன் நம்பியாண்டார் நம்பியைக் கொண்டு திருமுறைகளை வகுத்தான் என்பதும், உலகம் போற்றும் இராசராசேச்சரத்தைக் கட்டினான் என்பதும், சைவத்தைப் பெரிதும் வளர்த்தான் என்பதும் பாராட்டத்தக்க - குறிக்கத்தக்க செயல்கள் அல்லவா? அவன் மகன் புதிதாக நியமித்த கங்கைகொண்ட சோழபுரம், அதன்கண் எடுப்பித்த பெரிய கற்றளி, அவன் செய்த சைவ சமயத் தொண்டு இவை குறிக்கத்தக்க செயல்கள் அல்லவா? இவற்றுள் ஒன்றையேனும் அவர்களைப் பற்றிக் கூறிய இடங்களிற் கூத்தர் குறித்தாரில்லை. கூத்தர் விக்கிரமசோழன் காலத்தவர்; அவன் செய்த திருப்பணிகள் யாவும் நேரிற் கண்டவர். அவன் சிதம்பரம் கோயிலிற் பல திருப்பணிகள் செய்தான் என்று கல்வெட்டுகள் குறிக்கின்றன (25). இவற்றுள் ஒன்றையேனும் கூத்தர் குறிப்பிட்டார் இல்லை. ஏன் குறிக்கவில்லை என்று யார்தான் காரணம் கூறக்கூடும்? இவற்றையெல்லாம் நோக்க, இவ்விரண்டாம் காரணம் வலியுடைத்தாகாமை கண்டு கொள்க.

3. ஒட்டக்கூத்தர் குலோத்துங்கன் ஆசிரியர் என்பதும், அவர் சிறந்த சிவபக்தர் என்பதும் உண்மையே. ஆயின், அவர் சேக்கிழாரைப் போலத் திருத்தொண்டர் புராணச் செய்திகளில் நிறைந்த புலமையுடையர் என்பதற்குச் சான்றென்னை? சான்றின்மையின் திருத்தொண்டர் புராணச் செய்திகளை முற்றுமுணர்ந்த சேக்கிழாருடைய உணர்ச்சியையும், தகுதியையும் நன்குணர்ந்த அரசன் அவரைப் பெரியபுராணம் பாடச் செய்தான் என்று கோடலில் எவ்விதத் தவறும் இல்லை. அரசன் சேக்கிழாரைக் கொண்டு பெரியபுராணம் பாடுவித்தமையால் ஒட்டக்கூத்தர் பெருமை குறைந்துவிடாதன்றோ?

4. இக்காரணமும் பொருத்தமுடையதாகாது. என்னை? எல்லாக் கோயில்களும் அரசர் காலமுறைப்படி அவரவர் காலத்துக் கல்வெட்டுகளை மேலிருந்து கீழ்நோக்கி வெட்டி வந்தனர் என்பது கூறக்கூடவில்லை. அங்ஙனம் வெட்டவும் முடியாது; கல்வெட்டுச் செய்தியின் அளவு, அது வெட்டத்தக்க வசதியான இடம் இவற்றை நோக்கி வெட்டலே இயல்பாதலின் என்க. மேலும், திருப்புறம்பயத்துக் கோயில் சோழர்காலம் முதல் இன்றுவரை புதுப்பிக்கப்படவில்லை என்று திட்டமாகக் கூறத்தக்க சான்றில்லை. திருவொற்றியூர், எண்கண், திருக்கடம்பூர், கானாட்டு முள்ளூர் முதலாய கோயிற் கல்வெட்டுகளில் முறை பிறழ்ந்தும் தலை தடுமாறியும் உள்ள கல்வெட்டுகள் பலவுண்டு. சிறப்பாக எண்கண் என்ற இடத்தில் உள்ள பழுதுபட்ட சிவன் கோயிற் கல்வெட்டுகளும் கானாட்டு முள்ளூர்ச் சிவன் கோயிற் கல்வெட்டுகளும் காணத்தக்கவை (26).

மூன்றாம் குலோத்துங்கன் பேரம்பலம் பொன்வேய்ந்தவன் அல்லன்

மூன்றாம் குலோத்துங்கன் கட்டிய திரிபுவன வீரேச்சுரம் என்ற சிறப்புடைக் கோயிலில் உள்ள வடமொழிச் சுலோகங்கள் அம்மன்னன் செய்தனவாகக் கூறுவன காண்க:

1. அவனுடைய சோழ-ஈழ-சேர நாட்டு வெற்றிகள்
2. அவன் தில்லையில் முகமண்டபம், கோபுரம், அம்மன் திருச்சுற்று இவற்றைப் பொன்மயமாக்கினான்.
3. ஈடும் எடுப்பும் அற்ற சிவபக்தன்.
4. காஞ்சி ஏகாம்பரர் கோயில், மதுரைச் சிவன் கோயில், திருவிடைமருதூர்க் கோவில், தாராசுரத்தில் உள்ள இராசராசேச்சுரம், திருஆரூர்ப் பெருங்கோயில் இவற்றைப் பொன்மயமாக்கினான்.

இக்கல்வெட்டில் மூன்றாம் குலோத்துங்கனான திருபுவன வீரதேவன் பேரம்பலம் பொன்வேய்ந்தான் என்பது குறிக்கப்படாமை காண்க. அவன் தில்லையில் முகமண்டபம், கோபுரம், அம்மன் திருச்சுற்று இவற்றையே சிறப்புறச் செய்தான் என்று இக்கல்வெட்டு கூறுகின்றது. மூன்றாம் குலோத்துங்கன் பேரம்பலம் பொன் வேய்ந்தவன் அல்லன் என்பது பெறப்பட்டதன்றோ?

மேலும், சேக்கிழார் காலத்தரசன் அநபாயன் என்ற சிறப்புப் பெயர் பெற்றவன் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அச்சிறப்புப் பெயர் மூன்றாம் குலோத்துங்கற்கு உண்டு என்று கூறச் சான்றின்மை காண்க. இன்னபிற காரணங்களால் மூன்றாம் குலோத்துங்கன் சேக்கிழார் காலத்தவன் ஆகான் என்பது அறியப்படும்.

'அநபாயன்' இரண்டாம் குலோத்துங்கனே

சேக்கிழார் புராண ஆசிரியர், சேக்கிழார் காலத்து அரசனை 'அபயன்'28 எனவும் 'அநபாயன்'29 எனவும் குறித்துள்ளார் என்பதை முன்பே கூறினோம் அல்லவா? சேக்கிழார் பத்து இடங்களில் தம் காலத்தரசனைக் குறித்துள்ளார்; அப்பத்து இடங்களிலும் 'அநபாயன்' என்பதையே சிறப்பாகக் குறிக்கின்றார்; இரண்டு இடங்களில் 'அபயன்' என்பதைக் குறித்துள்ளார். இனி இம்மன்னனைப் பற்றிப் பெரிய புராணம் கூறுவனவும் கூத்தர் பாடிய உலா, பிள்ளைத்தமிழ், தக்கயாகப்பரணி ஆகிய மூன்றும் கூறுவனவும் முறையே காண்போம்.

அநபாயனைப் பற்றிப் பெரியபுராணம் கூறுவன:
1. பேரம்பலம் பொன்வேய்ந்தமை
2. சிறந்த சிவபக்தன்
3. செங்கோல் அரசன்
4. தில்லைத்திரு எல்லைப் பொன்னின் மயமாக்கினான்
5. தில்லைநகர் மணிவீதி அணிவிளக்கும் சென்னி நீடு அநபாயன்
6. அம்புயமலராள் மார்பன்
7. சிறந்த கொடையாளி

அநபாயனைப் பெரியபுராணம் குறிக்கும் சொற்கள்
1. அநபாயன் - 10 இடங்களில் வருகின்றன
2. அபயன் - 2 இடங்களில் வருகின்றன
3. சென்னி - 3 இடங்களில் வருகின்றன
4. செம்பியன் - 1 இடத்தில் வருகின்றது
5. குலோத்துங்கன் - 1 இடத்தில் வருகின்றது

உலாவும் பிள்ளைத்தமிழும் தக்கயாகப்பரணியும் கூறுவன
1. பேரம்பலம் பொன் வேய்ந்தமை
2. சிறந்த சிவபக்தன்
3. பட்டம் பெற்றவுடன் பகைவேந்தரை விடுதலை செய்தான்; செங்கோல் அரசன்
4. சிற்றம்பலம், பல பல மண்டபம், அம்மன் கோயில், எழுநிலைக் கோபுரம், திருச்சுற்று மாளிகை, தெரு இவற்றைப் பொன்மயம் ஆக்கினான்
5. நான்கு திருவீதிகளையும் அமராவதியில் உள்ள பெருவீதிகள் நாணப் பெருக்கினான்
6. இலக்குமியை மார்பில் தரித்தவன்
7. மறையவர்க்குத் தானம் செய்தான்

இவனைக் குறிக்கும் சொற்கள்
1. அநபாயன் - 3 இடங்களில் வருகின்றன
2. அபயன் - 2 இடங்களில் வருகின்றன
3. சென்னி - 2 இடங்களில் வருகின்றன
4. குலோத்துங்கன் - 4 இடங்களில் வருகின்றன

இங்ஙனம் சேக்கிழாரும் ஒட்டக்கூத்தரும் குறிப்பிட்ட கருத்துக்கள் ஒன்றுபடுதலைக் காணின், சேக்கிழார் குறித்த அநபாயன் இரண்டாம் குலோத்துங்கனே என்பது ஐயமற விளங்குகின்றதன்றோ? தண்டியலங்கார மேற்கோள் பாக்களில் எட்டுப் பாடல்கள் அநபாயனைப் பற்றியே வருகின்றன30. அவை அவனுடைய வள்ளற்றன்மை, செங்கோண்மை, பேரரசுத்தன்மை ஆகிய மூன்றையும் பெரியபுராணத்தைப் போலவும் உலா, பிள்ளைத்தமிழ், பரணி போலவும் விளக்கமாகக் கூறுகின்றன. அப்பாடல்களுள் இறுதிப்பாடல் அநபாயனை வாழ்த்துவதாக முடிவதால், தண்டியலங்கார மூலமும் உரையுமோ அல்லது உரை மட்டுமோ இவ்விரண்டாம் குலோத்துங்கன் காலத்தது எனக் கூறலாம். இங்குப் பெரிய புராணம் குறிக்கும் பத்து இடங்களிலும் சிறப்புச் சொல்லாக 'அநபாயன்' என்பதே ஆளப்பட்டிருத்தலும், தண்டியலங்காரம் குறிக்கும் மேற்கோட்செய்யுட்கள் எட்டிலும் 'அநபாயன்' என்ற சொல் ஒன்றே ஆளப்பட்டிருத்தலும் காணச் 'சேக்கிழார் காலத்தரசன்' 'அநபாயன்' என்ற பெயர் ஒன்றையே தனது சிறப்புப் பெயராகக் கொண்டவன் என்பது நன்கு தெரிகின்றது. இங்ஙனம் கொண்டவன் கூத்தரால் புகழப்பெற்ற இரண்டாம் குலோத்துங்கனே என்பது மேற்காட்டிய ஒற்றுமையால் நன்கு விளக்கமாதல் காண்க.

இனி, இவ்விரு புலவரும் குறித்த செய்திகள் அனைத்திற்கும் இக்குலோத்துங்கன் கல்வெட்டுக்கள் சான்று பகர்ந்து நிற்கும் அருமைப்பாட்டைக் கீழே காண்க:

அநபாயனைப் பற்றிய இலக்கியச் செய்திகள்
1. பேரம்பலம் பொன்வேய்ந்தமை
2. இவன் ஆட்சியில் போரைப் பற்றிய குறிப்பே இல்லை
3. இவன் கோப்பெருந்தேவி புவனமுழுதுடையாள்
4. இவன் சிறந்த சிவபக்தன்
5. இவன் தில்லை-கோவிந்தராசர் சிலையை அப்புறப்படுத்தியவன்
6. இவனது சிறப்புப்பெயர் அநபாயன்

அநபாயனைப் பற்றிய கல்வெட்டுச் சான்றுகள்
1. திருமாணிக்குழி, திருப்புறம்பயம், திருக்கோகர்ணம் கல்வெட்டுகள் இவன் பொன்வேய்ந்தமையைக் குறிக்கின்றன
2. இவன் கல்வெட்டுகளிலும் போர் பற்றிய பேச்சில்லை; அமைதியான அரசாட்சி நடந்தது
3. இவன் கோப்பெருந்தேவி புவனமுழுதுடையாளையே திருமழபாடிக் கல்வெட்டும் கூறுகின்றது
4. 'அநபாயன் தில்லை நடராசர் திருவடித் தாமரையில் ஈப்போன்றவன்' என்று திருவாரூர் வடமொழிக் கல்வெட்டு கூறுகிறது
5. இவன் தில்லை கோவிந்தராசர் சிலையை அப்புறப்படுத்தியதைத் திருவாவடுதுறைக் கல்வெட்டு கூறுகின்றது
6. இவனை அநபாயன் என்றே திருவாரூர் வடமொழிக் கல்வெட்டு கூறுகிறது.
7. இவனது அரசியல் செயலாளர், அநபாய மூவேந்த வேளான் எனப்பட்டான்
8. இவன் காலத்தில் கோயில்கட்கு விடப்பட்ட நிலங்கள் அநபாய நல்லூர், அநபாயமங்கலம் எனப் பெயர் பெற்றன
9. சிற்றரசன் ஒருவன் அநபாயக் காடவராயன் எனப்பட்டான்.

பிற சான்றுகள்

திரு ஆனைக்காக் கல்வெட்டு


இதுகாறும் கூறிப்போந்த இலக்கியச் சான்றுகளாலும் கல்வெட்டுச் சான்றுகளாலும் அநபாயன் இரண்டாம் குலோத்துங்கனே என்பது ஐயமற விளங்கும். அம்முடிபை நன்கு வலியுறுத்தும் மற்றொரு கல்வெட்டுச் செய்தியை இங்குக் காண்க. இரண்டாம் இராசராசன் காலத்துத் திருவானைக்காக் கல்வெட்டில், விக்கிரம சோழ நல்லூரிலும் அநபாய மங்கலத்திலும் இருந்த சில நிலங்கள் ஆனைக்காவுடைய மகாதேவர்க்கு விற்கப்பட்டன என்ற சொல் காணப்படுகிறது(31). விக்கிரம சோழற்கு மகன், இரண்டாம் குலோத்துங்கன்; இக்குலோத்துங்கற்கு மகன் இரண்டாம் இராசராசன். எனவே, கல்வெட்டுக் குறித்த 'விக்கிர சோழ நல்லூர்' என்பது விக்கிரம சோழன் பெயர் கொண்டது; அதற்குப் பிற்கூறப்பட்ட 'அநபாய மங்கலம்' என்பது, அவ்விக்கிரமற்குப் பின் பட்டம் பெற்ற இரண்டாம் குலோத்துங்கன் பெயர் கொண்டது என்பன மிகவும் தெளிவாகத் தெரிகின்றன. தெரியவே, 'அநபாயன்' என்பது இரண்டாம் குலோத்துங்கனது சிறப்புப் பெயரே என்பது அங்கைக் கனியென விளங்குதல் காண்க.

இராசராசேசுவரத்துச் சிற்பங்கள்

மேற்சொன்ன இரண்டாம் இராசராசன் (கி.பி. 1146-1173) இராசராசபுரத்தில் (தாராசுரத்தில்) சிவன் கோயில் ஒன்றைக் கட்டினான். அங்கு அவன், அவன் கோப்பெருந்தேவி ஆகிய இருவர் உருவச் சிலைகளும் இருக்கின்றன(32). அக்கோவில் சிவனார் இறை அகத்தைச் சுற்றி உள்ள வெளிப்புறப் பட்டியற் பகுதிகளில் பெரிய புராண நாயன்மார் வாழ்க்கையிற் சிறப்புடைய ஒவ்வொரு நிகழ்ச்சி குறித்த உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன; அவற்றின்மேல் அந்நிகழ்ச்சியை விளக்கும் சொற்கள் காண்கின்றன(33). நாயன்மார் அனைவர் வரலாற்றுக் குறிப்புக்களும் இவ்வளவு தெளிவாக இவ்வரசற்கு முன் காட்டப்பட்டன என்றுகொள்ள எவ்விதச் சான்றும் இல்லை. ஆதலின், இவன் காலத்தில் நாயன்மார் வரலாற்று விவரங்கள் மக்கள் எல்லோருக்கும் விளங்கக்கூடிய முறையில் வெளிப்பட்டிருத்தல் வேண்டும் என்பது தெளிவாகிறது. அங்ஙனம் வெளியாதற்கு உறுதுணையாக இருந்திருக்கக்கூடிய நூல், இவன் தந்தை காலத்தில் பாடப்பெற்ற சேக்கிழார் திருத்தொண்டர் புராணமே ஆதல் வேண்டும் என்பது பொருத்தமன்றோ?

சேக்கிழார் பெரிய புராணம் பாடுவதற்கு முன் இவனிடமே நாயன்மார் வரலாற்றைக் கூறியுள்ளார்; அதன் பிறகே அரசன் அதனை அறிந்து அவரைப் புராணம் பாடச் செய்தான் என்று திருத்தொண்டர் புராண வரலாறு கூறல் முன்னரே கண்டோம் அன்றோ? அது கொள்ளத்தக்கதாயின், இரண்டாம் இராசராசன் தன் இளவரசுக் காலத்திலிருந்தே சேக்கிழாரை நன்கு அறிந்தவன்; நெருங்கிப் பழகியவன்; நாயன்மார் வரலாறுகளை அவர் வாயிலாகவும் பின்னர் அவர் செய்த பெரியபுராண வாயிலாகவும் தெளிவாக அறிந்தவன் என்பன உணரலாம். அவன் அரசனான பின்னர்த் தன் பெயர் கொண்டு கட்டிய பெருங்கோவிலில் சிவபிரான் இறையிடத்துப் புறச்சுவரில், அவ்விறைவனையே பாடித் தொழுது முக்தி அடைந்த நாயன்மார் வரலாற்றுக் குறிப்புகளைச் சிற்பங்கள் வாயிலாக உலகத்திற்கு உணர்த்தினான் என்பது பெரிதும் பாராட்டத் தக்கதாகும். இச்சிறப்புடைய செயலை நோக்கப் பெரியபுராணம் இரண்டாம் இராசராசன் காலத்திற்றானே மக்களிடம் பரவத் தொடங்கியதென்று ஒருவாறு நம்பலாம்(34).

ஒற்றியூர்க் கல்வெட்டு

மேற்சொன்ன முடிபை அரண் செய்வதுபோலத் திருவொற்றியூர்க் கல்வெட்டு ஒன்று காண்கிறது. அஃது இரண்டாம் இராசராசற்குப் பின்வந்த இரண்டாம் இராசாதிராசனது (கி.பி. 1164-1182) ஒன்பதாம் ஆட்சியாண்டில் (ஏறத்தாழக் கி.பி. 1174இல்) வெளியிடப்பெற்றதாகும். அதனில், "திருப்பங்குனி உத்தரத்து ஆறாந்திருநாளான புதன்கிழமையும் ஏகாதசியும் கூடிய ஆயில்யத்தினன்று மடத்துத் தலைவரான சதுரானன பண்டிதர், காபாலிகரது சோமசித்தாந்தத்தை விரித்த வாகீசப் பண்டிதர், இரண்டாம் இராசாதிராசன் முதலியவர்கட்குமுன் படம்பக்க நாயக தேவர் திருமகிழின் கீழ்த் திருவோலக்கம் செய்து எழுந்தருளியிருந்தது ஆளுடைய நம்பி ஸ்ரீபுராணம் கேட்டருளா நிற்க......"(35) என்னும் அரிய செய்தி காணப்படுகிறது.

'ஆளுடை நம்பி' என்பது சுந்தரர் பெயர். எனவே, அவரைப்பற்றிய புராணமே கோயிலில் படிக்கப்பட்டது என்பது தெரிகிறது. மக்கள் கேட்கத்தக்க நிலையிலும் கோயிலில் விளக்கமாக வாசிக்கத்தக்க முறையிலும் சுந்தரர் வரலாற்றைக் கூறுவது பெரியபுராணம் ஒன்றேயாகும். மேலும், சுந்தரர் வரலாறு கூறும் வடமொழி நூலோ, வேறு தமிழ் நூலோ சேக்கிழார்க்கு முன் இருந்தது என்று கூறச் சான்றில்லை யாதலின், திருவொற்றியூர்க் கோயிலில் படிக்கப்பட்டது சேக்கிழார் செய்த பெரிய புராணத்துள் அடங்கிய சுந்தரர் புராணமாகவே இருத்தல் வேண்டுமெனக் கோடல் பொருத்தமாகும்.

கல்வெட்டுக்களில் கண்ட 'சேக்கிழார்' என்போர்

இனிப் பெரியபுராணம் பாடிய சேக்கிழார் கல்வெட்டுக்களில் இடம் பெற்றுள்ளனரா என்பதைக் காண்போம். இதுகாறும் கிடைத்துள்ள கல்வெட்டுக்களை ஆராயின் 'சேக்கிழார்' என்ற குடிப்பெயருடன் பலர் இருந்தமை வெளியாகும். அவர்களைப் பற்றிய விவரங்களைக் காலமுறைப்படி கீழே காண்க:
அரசன் பெயரும் ஆட்சிக் காலமும்கல்வெட்டுள்ள இடம்கல்வெட்டின் காலம்செயல்
1. கண்டராதித்தர் (கி.பி. 949-957)உடையார்குடிகி.பி. 954சேக்கிழான் அரையன் சங்கரநாராயணன் என்ற மணவிற்கோட்டத்து மேலப் பழுவூர்ச் சோழ முத்தரையன் நிலதானம் செய்தான்
2. பரகேசரி வர்மன்திருச்சோற்றுத்துறைமூன்றாம் ஆண்டுசேக்கிழான் சக்தி மலையன் என்ற மேலூர்க் கோட்டத்துக் காவனூர் சோழ முத்தரையன் விளக்குத் தானம் செய்தான் (183 of 1931)
3. குலோத்துங்கன் - 1 (கி.பி. 1070-1120)திருக்கழுக்குன்றம்கி.பி. 1092புரவுவரித் திணைக்களம் சேக்கிழார் ஆணைப்படி திருக்கழுக்குன்றத்திற்கு எல்லைகள் வகுக்கப்பட்டன (180 of 1894)
4. இராசராசன் - 2 (கி.பி. 1146-1173)திருமழபாடிகி.பி. 1162சயங்கொண்ட சோழமண்டலத்துக் குலோத்துங்கச் சோழவள நாடான புலியூர்க் கோட்டத்துக் குன்றத்தூர் நாட்டுக் குன்றத்தூர்ச் சேக்கிழான் மாதேவடிகள் ராமதேவனான உத்தம சோழப் பல்லவராயன் திருமழபாடி மகாதேவர்க்கு விளக்கு வைக்க 90 ஆடுகள் தந்தான் (95 of 1920)
5. குலோத்துங்கன் - 3திருஅரத்துறைகி.பி. 1164திருவரத்துறையிலிருந்து மாசி, வைகாசி காலங்களில் ஆளுடையபிள்ளையார் திருமேனியைத் திருமாறன்பாடிக்கு எடுத்துச் செல்கையில் பூசை முதலியவற்றுக்காகச் சேக்கிழான் பாலறாவாயன் களப்பாளராயன் வரியிலியாக நிலதானம் செய்தான் (221 of 1929)
6. குலோத்துங்கன் - 3கோட்டூர்கி.பி. 1179குன்றத்தூர்ச் சேக்கிழான் பாலறாவாயன் களப்பாளராயன் விளக்கு எரிக்கப் பணம் தந்தான் (445 of 1912)
7. குலோத்துங்கன் - 3திருக்கடையூர்கி.பி. 1181குன்றத்தூர்ச் சேக்கிழான் அம்மையப்பன் பராந்தகன் தேவனான கரிகால சோழப் பல்லவராயன் நிலதானம் செய்தான் (39 of 1906)
8. குலோத்துங்கன் - 3குன்றத்தூர்கி.பி. 1181சேக்கிழான் புவனப் பெருமான் என்ற துண்டக நாடு உடையான் மனைவி திருநாகேச்சரம் கோவில் சபையாரிடம் விளக்கெரிக்கப் பணம் தந்தாள் (230 of 1930)
9. இராசராசன் - 3 (கி.பி. 1216-1246)திருப்பாலைவனம்கி.பி. 1225குன்றத்தூர்ச் சேக்கிழான் பட்டிய தேவன் ஆட்கொண்டான் விளக்கு எரிக்க ஆடுகள் தானம் செய்தான் (314 of 1929)
10. இராசராசன் - 3திருப்பாசூர்கி.பி. 1226குன்றத்தூர்ச் சேக்கிழான் அரையன் ஆட்கொண்டதேவன் என்ற முனையதரையன் விளக்கு எரிக்கப் பசுக்கள் அளித்தான் (136 of 1930)
11. இராசராசன் - 3குன்றத்தூர்கி.பி. 1140குன்றத்தூர்ச் சேக்கிழான் வரந்தருபெருமாள் என்ற திருவூரகப் பெருமாள் திருநாகேச்சரம் கோவிலில் விளக்கு வைக்கப் பணம் தந்தான் (218 of 1930)
12. மாறவர்மன் குலசேகர பாண்டியன் (கி.பி. 1270-1305)குன்றத்தூர்கி.பி. 1300குன்றத்தூர்ச் சேக்கிழான் ஆடவல்லான் என்பவன் திருநாகேச்சரர்க்கு நிலதானம் செய்தான் (208 of 1930)


அந்தந்த அரசரையே சிறப்பாகக் குறிக்கும் தொடக்கத் தொடர்கள் மேற்காட்டிய கல்வெட்டுக்கள் பலவற்றில் இன்மை வருந்தற்குரியது. குலோத்துங்கர் திரிபுவன சக்கரவர்த்திகள் என்ற விருதுடன் மூவர் இருந்தனர். அங்ஙனம் அதே விருதுடன் இராசராசர் இருவர் இருந்தனர். இன்ன கல்வெட்டு இன்ன குலோத்துங்கரைத்தான் குறிக்கின்றது என்று சிறப்புத் தொடர்கள் இல்லாத கல்வெட்டுகள் கொண்டு திட்டமாகக் கூறற்கில்லை. ஆதலின், ஐயப்படத்தக்கவற்றுள், 1,2,3 இராவ்சாகிப் மு. இராகவையங்கார் கொண்ட முடிபை ஏற்றுக் குறிக்கப்பெற்றன - Vide his 'Sasana Tamil Kavi Charitam', pp. 71-77. மற்றவை பேராசிரியர் க. அ. நீலகண்ட சாத்திரியார் கொண்ட முடிபின்படி குறிக்கப்பெற்ற - Vide his 'Cholas', Vol II, Part II.

சேக்கிழார் மரபினர்

இக்கல்வெட்டுச் செய்திகளால் அறியப்படுவன :

1. சேக்கிழார் குடியினர் தொண்டை மண்டலத்து மணவிற் கோட்டம், மேலூர்க் கோட்டம், புலியூர்க் கோட்டங்களில் வாழ்ந்து வந்தனர்.
2. அக்குடியினர் 'சோழ முத்தரையன், உத்தம சோழப் பல்லவராயன், காளப்பாளராயன், கரிகால சோழப் பல்லவராயன், முனையதரையன்' என்ற பட்டங்கள் பெற்றுச் சோழர் அரசியலில் சிறந்த பங்கு கொண்டிருந்தனர்.
3. அங்ஙனம் அரசியலிற் பங்கு கொண்டவருள் குன்றத்தூர்ச் சேக்கிழார் மரபினரே பலர் ஆவர்.
4. இம்மரபினர், திருத்தொண்டர் புராண வரலாறுடையார் குறித்தபடி, சோழராட்சி முடியுமளவும் அதற்குப் பிறகும் அரசியற் பதவிகள் தாங்கியிருந்தனர்.
5. இம்மரபினர் சைவப்பற்றுடையவராய்ப் பல தளிகட்குத் தானம் செய்த பெருமக்களாவர்.

இவருட் பெரியபுராணம் பாடியவர் யாவர்?

மேற்காட்டிய பட்டியலில் குன்றத்தூர்ச் சேக்கிழார் மரபினர் இரண்டாம் குலோத்துங்கன் கால முதற்றான் சோழர் அரசியலில் சிறப்புப் பெறலாயினர் என்பது தெளிவாகத் தெரிகிறது. இரண்டாம் இராசாதிராசனது 19ஆம் ஆட்சி ஆண்டுக் கல்வெட்டிற் காணப்பெறும் சேக்கிழார் பாலறாவாயரும் மூன்றாம் குலோத்துங்கனது 2ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டிற் காணப்படும் சேக்கிழார் பாலறாவாயரும் ஒருவரே எனக்கோடல் தவறாகாது. இரண்டாம் இராசராசனது 17ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டில் காணப்பெறும் சேக்கிழான் மாதேவடிகள் ராமதேவனான உத்தம சோழப் பல்லவராயன் (36) என்பாவர் மேற்சொன்ன பாலறாவாயர் தமையனாரும் பெரிய புராணம் பாடியவருமாகிய சேக்கிழாராக இருக்கலாம் எனக் கோடலும் தவறாகாது. என்னை? சேக்கிழார் இரண்டாம் குலோத்துங்கன் காலத்தவரே என்பது மேலே பல சான்றுகள் கொண்டு விளக்கப்பட்டதாலும் இப்படியற்படி இரண்டாம் குலோத்துங்கன் காலடத்திலும் அவன் மகனான இருண்டாம் இராசராசன் காலத்திலும் வெளிப்பட்ட கல்வெட்டுக்களில் சேக்கிழார் புராண ஆசிரியர் குறித்த சேக்கிழார் உத்தம சோழப் பல்லவராயர், சேக்கிழார் பாலறாவாயர் என்பவர் பெயர்களிலும் காணப்படலாலும் என்க.

சேக்கிழான் மாதேவடிகள்

மாதேவடிகள் என்பது சேக்கிழாரது பக்திச் சிறப்பு நோக்கி வந்த பெயராகலாம். இதற்கேற்பச் சேக்கிழார் புராண ஆசிரியர் அவரைக் குன்றைமுனி சேக்கிழார்(37) எனவும் அண்டவாணர் அடியார்கள் தம்முடன் அருந்தவந்தனில் இருந்தவர் (38) எனவும் கூறியிருத்தல் கருதற்பாலது. ஆதலின் சேக்கிழார்க்கு மாதேவடிகள் என்ற பெயர் அவர் பெரியபுராணம் பாடியபிறகு உண்டானதென்று கோடல் பொருந்தும்(39).

இராமதேவன்

இப்பெயர் சேக்கிழார் புராண ஆசிரியர் கூற்றாகும். இது சேக்கிழாரது இயற்பெயர் என்னலாம். சிறந்த சைவ மரபிலே பிறந்த சேக்கிழார்க்கு இராமதேவன் என்ற வைணவப் பெயர் அமையுமோ? எனில் அமையும் என்னலாம். 63 நாயன்மார்களுள் ஒருவரான முனையதரையர் நரசிங்கர் என்ற வைணவப் பெயரையும் ஒன்பதாம் திருமுறையில் இரண்டு பதிகங்கள் பாடியுள்ள சிவனடியார் ஒருவர் புருடோத்தம நம்பி என்ற வைணவப் பெயரையும் கொண்டிருந்தனர் என்பது அறியத்தக்கது. சிறந்த சிவபக்தனான முதற்குலோத்துங்கன் மனைவியருள் ஒருத்தி பெயர் நம்பிராட்டியார் சீராமன் அருள்மொழி நங்கை என்ற ஏழுலகம் உடையார் (40) என்பதையும் நோக்க பெரிய புராண ஆசிரியரும் சிறந்த சிவனடியாருமான சேக்கிழார் இராமதேவன் என்று பெயர் பெற்றிருத்தல் வியப்பில்லை. மேலும் இச்சேக்கிழார் மரபில் வந்த ஒருவன் குன்றத்தூர்ச் சேக்கிழான் வரந்தரு பெருமாள் என்கிற திருவூரகப் பெருமாள் (41) என்ற பெயர் கொண்டு மூன்றாம் இராசராசன் காலத்தில் இருந்தான் என்பதும் நோக்கத்தக்கது. திருவூரகப் பெருமாள் என்ற பெயர் குன்றத்தூரில் கோயில் கொண்டுள்ள விஷ்ணுவின் பெயராகும் (42). இத்துடன் குன்பத்தூர்ச் சேக்கிழார் மரபினருள் சிலர் இன்றும் வைணவர்களாக இருப்பது கருதத்தக்கது (43).

அருள்மொழித் தேவர்

இப்பெயர் சேக்கிழார் இயற்பெயர் என்று கொள்ளத்தக்க முறையில் சேக்கிழார் புராண ஆசிரியர் குறித்துள்ளார். இப்பெயர் சோர் காலத்தில் பெருவழக்குடையது. முதல் இராஜராஜ சோழனுக்கு இப்பெயர் இருந்த்து (44). அருள்முழி நங்கை என்று சோழமாதேவியர்க்குப் பெயர் இருந்தது. குடிமக்களும் இப்பெயர் பெற்றிருந்தனர்(48) என்பது பல கல்வெட்டுக்களைக் கொண்டு அறியலாம். ஆதலின் இப்பெயர் சேக்கிழாரது இயற்பெயராகக் கொள்ளலாம். இன்றேல் பெரிய புராண பாடற்சிறப்பு நோக்கி இவரை இங்ஙனம் அறிஞர் அழைப்பாராயினர் எனக்கோடல் பொருந்தும்.

உத்தமச் சோழப் பல்லவராயர்

இப்பட்டம் சேக்கிழார்க்கு அரசன் தந்தான் என்று சேக்கிழார் புராண ஆசிரியர்கள் குறித்தனர்.

சோழர் அரசியலில் பலவகைத் துறைகளிலும் தலைவர்களாக இருந்தவர் - படைத்தலைவர் நாட்டுடைத் தலைவர், நாட்டை அளக்கும் தலைவர், திருமந்திர ஓலை நாயகம், உடன் கூட்டத்து அதிகாரிகள் முதலியவர் 'மூவேந்த வேளான், காலிங்கராயன், கேரளராசன், தொண்டையன், வாணகோவரையன், பல்லவராயன், இளங்கோவேள், காடவராயன், கச்சிராயன், சேதிராயன், விழுப்பரையன்' முதலிய பட்டங்கள் அரசரால் வழங்கப் பெற்றனர் (47). எனவே சேக்கிழார் அமைச்சுத் துறையில் முதன்மையாக இருந்தமையால் 'உத்தமச் சோழப் பல்லவராயர்' என்ற பட்டத்தைப் பெற்றனர் எனக்கோடல் பொருந்தும்.

சோழ நாட்டுத் திருநாகேச்சரம்

சோழநாட்டுத் திருநாகேச்சுரத்தில் சேக்கிழார், அவர் தம்பி பாலறாவாயர், அவர் தாயார் ஆகிய மூவர் உருவச் சிலைகள் இன்றும் இருக்கின்றன. அவை சேக்கிழார் அமைச்சராக இருந்தபொழுது அத்திருநாகேச்சரத்தில் பேரன்பு கொண்டிருந்தார் என்று சேக்கிழார் புராணம் செப்புகின்றதை உறுதிப்படுத்துகின்றன எனக்கோடல் தவறாகாது.

குன்றத்தூர்த் திருநாகேச்சரம்

சேக்கிழார், சோழ நாட்டுத் திருநாகேச்சரத்தைப் போன்றதொரு கோவிலைத் தம் குன்றத்தூரில் கட்டி அதற்கு அப்பெயரிட்டார் என்று சேக்கிழார் புராணம் கூறுகின்றது. குன்றத்தூர்த் திருநாகேச்சரம் என்ற கோவிலில் உள்ள 44 கல்வெட்டுக்களைக் காணின் (48) அவற்றில் பழமையானவை இரண்டாம் குலோத்துங்கன் காலத்தனவேயாகும் என்பதை அறியலாம். அக்கோவிலில் சேக்கிழார்க்குத் தனிக்கோவில் இருக்கின்றது.சேக்கிழார் விழா ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அக்கோவிலுக்குச் சிறப்பாகச் சேக்கிழார் மரபினரே தானங்கள் செய்தனர் என்று கல்வெட்டுக்கள் கூறுகின்றன. இவை அனைத்தையும் நோக்கச் சேக்கிழார் சோழ நாட்டுத் திருநாகேச்சரத்தை நினைவிற்கொண்டு தம் ஊரில் இக்கோயிலைக் கட்டியிருக்கலாம் என்று கோடல் பொருத்தமே ஆகும்.

சேக்கிழார் மரபினர்

சேக்கிழார் புராண ஆசிரியர் சேக்கிழார் காலம் முதல் இன்றுவரை அம்மரபினர் அரசர்பால் சிறப்புற்று வருகின்றனர் என்று கூறியுள்ளார்(49). அவர் கூற்று மெய் என்பதை நாம் முன்று காட்டிய சேக்கிழார் பெயர்ப் பட்டியல் உறுதிப்படுத்தலைக் காணலாம்(1). இதுகாறும் கிடைத்துள்ள கல்வெட்டுக்களில் குன்றத்தூர்ச் சேக்கிழார் மரபினரைக் குறிக்கும் கல்வெட்டுக்கள் சேக்கிழார் காலத்தவனான இரண்டாம் குலோத்துங்கன் காலம் முதலே காணக்கிடைக்கின்றன(2). அவருக்குப் பின்னும் அம்மரபினர் சோழப்பேர ரசில் சிறப்புற்றிருந்தனர் என்பது மேற்சொன்ன பட்டியலைக் கொண்டே பாங்குற உணரலாம்.

முடிவுரை

இதுகாறும் நடத்திய ஆராய்ச்சியில் போந்த செய்திகளாவன;

1.சேக்கிழார் தொண்டை மண்டலம் - புலியூர்க் கோட்டம் - குன்றத்தூர் வளநாட்டுக் குன்றத்தூரினர். வேளாளர். சேக்கிழார் குடியினர். அவரது இயற்பெயர் இராமதேவன் என்பதாகலாம். அவர் தம்பி பாலறாவாயர்.

2. சேக்கிழார் காலத்து அரசன் அநபாயன் என்ற சிறப்புப் பெயர்கொண்ட இரண்டாம் குலோத்துங்கன். சேக்கிழார் அவனுடைய முதல் அமைச்சர் ஆகலாம். அவர் தம்பி உத்தமச் சோழப் பல்லவராயர் என்ற பட்டம் பெற்றவர். இளவரசன் இரண்டாம் இராசராசனிடம் நெருங்கிப் பழகியவர் ஆகலாம். (50)

3. சேக்கிழார் சோழநாட்டுத் திருநாகேச்சரத்தில் மிகுந்த பக்தி பூண்டவர். ஆதலால் அவர் அதற்கு அறிகுறியாகத் தமது ஊரில் திருநாகேச்சரம் என்ற பெயரால் கோயில் எடுப்பித்திருக்கலாம்.

4. சேக்கிழாருடைய சைவ சமயப் பற்றும் நாயன்மார் வரலாறு அறியவும் சிறந்த தமிழ்ப் புலமையுடைய அநபாயன் அவரைப் பெரிய புராணம் பாடச் செய்திருக்கலாம். அல்லது, இவற்றை இளவரசனான இரண்டாம் இராசராசன் வாயிலாக உணர்ந்து அநபாயன் சேக்கிழாரைப் பெரிய புராணம் பாடச் செய்து சிறப்பளித்திருக்கலாம். சீவக சிந்தாமணி பற்றி எழுந்த்து பெரிய புராணம் என்ற கூற்று பொருத்தமற்றது.

5. சேக்கிழாருக்குப் பின் அவர் தம்பி பாலறாவாயர் சோழர் அரசியலில் உய்வடைந்திருக்கலாம். சேக்கிழார் இரண்டாம் இராசராசன் காலத்திலும் (கி.பி.1152) உயிருடன் இருந்தவர்.

6. பெரிய புராணத்தில் பற்றுக்கொண்ட இரண்டாம் இராசராசன் தான் கட்டிய இராசராசேச்சரம் முலத்தானப் புறச்சுவர்களில் ஆயன்மார் வரலாற்று நிகழ்ச்சிகளைச் சிற்பங்களாகச் செதுக்குவித்தான் போலும்.

7. சேக்கிழார் பாடிய திருத்தொண்டர் புராணமே இரண்டாம் இராசராசன் காலத்தில் (ஏறத்தாழக் கி.பி.1174ல்) திருவொற்றியூர்க்க கோவிலில் நடந்த பங்குனி உத்திரத்திருவிழாவில் படிக்கப்பட்டதாகலாம்.

8.சேக்கிழார் புராண ஆசிரியர் சைவ சமய ஆசாரியராகிய புகழ்பெற்ற உமாபதி சிவாச்சாரியார் என்னல் பொருந்தாது. அதனை எழுதியவர் இவரின் வேறானவர். ஆயினும் அவர் கூறும் சேக்கிழார் பற்றிய செய்திகள் பெரும்பாலும் கல்வெட்டாராய்ச்சிக்குப் பொருந்துவனவாக இருந்த தால் அவர் சேக்கிழார் வரலாறு நாட்டில் நன்றாகப் பரவியிருந்த காலத்தவர். உமாபதி சிவத்திற்கு முற்பட்டவர் எனலாம்.