சிவ ஆகமகுறிப்புகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிவ ஆகமகுறிப்புகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 1 ஜனவரி, 2016

அபிஷேக நேரத்தில் வழிபாடு செய்யலாமா?


ஆலயங்களில் இவ்வாறுதான் பூஜை செய்யவேண்டும்; அந்தந்த தெய்வங்களுக்குரிய மந்திரங்களை உச்சரிக்கவேண்டும்; அபிஷேக ஆராதனை செய்யவேண்டுமென்று ஆகமங்கள் வரையறுத்துக் கூறியுள்ளன. அதனால் தெய்வங்களுக்குப் பயனுண்டா என்றால், அவர்களுக்கு எதுவுமில்லை. முறையாகச் செய்யவில்லையென்றால் நமக்குதான் வளர்ச்சி தடைப்படும். இறைவன் நம்மிடம் எதையும் எதிர்பார்ப்பதில்லை. அவன் படைத்த உயிர்களாகிய நாம்தான் அவனிடம் நிறைய எதிர்பார்க்கிறோம். அதற்கான பிரபஞ்ச சக்தி ரகசியங்களை உணர்ந்த முனிவர்களும் ஞானிகளும்தான், நம் தேவைகளை நிறைவேற்றிக்கொள் வதற்கான வழிமுறைகளை ஆகமங்களாக எழுதிவைத்தனர். அவற்றை சந்தேகத்திற் கிடமின்றி பின்பற்றவேண்டியது நமது கடமை.
"பூர்யந்தே சர்வ கர்மான்; ஜாயந்தே ஞானம் ஆத்மனே' என்பார்கள். அதாவது நாம் முறைப்படி செய்யும் வழிபாட்டால், அனைத்து தேவைகளும் நிறைவாக்கப்படுகின்றன. நம் ஆத்மாவுக்கு கடவுளைப் பற்றிய அறிவு, நம்மை சுற்றியிருப்பவர்களைப் பற்றிய அறிவு, நம்மைப்பற்றிய அறிவு உண்டாகின்றது. இதில் தன்னைப் பற்றிய அறிவு கண்டிப்பாகத் தேவை. நம் அறிவு தெளிவாக இருந்தால் எதிலும் குழப்பமில்லை.
சிலர் பூஜையெல்லாம் எதற்கு? தியானம் செய்தால் போதுமென்று சொல்வார்கள். ஒரு கிராமத்தில் ஐந்தாம் வகுப்புவரை பள்ளிக்கூடம் இருக்கிறது. அங்கு படித்துமுடித்த ஒருவன் அதுவே பெரிய கல்வியென்று நினைத்துக்கொள்வதுபோலதான் இதுவும். அதற்குமேலும் பல உயர்நிலைக் கல்விகள் உள்ளன. பலர் தாங்கள் அறிந்தவற்றையே பிரதானமாகக் கருதி மற்றவற்றை நிராகரிக்கிறார்கள்.
பூஜை செய்வதில் அர்ச்சகர்களுடைய பொறுப்பு மிக முக்கியமானது. "கடவுளுக்கும் மனிதர்களுக்குமிடையில் இவர்கள் எதற்கு' என்ற விமர்சனங்களும் உண்டு. ஆனால் உண்மை அதுவல்ல. அர்ச்சகர்களின் கடமை மிக உயர்வானது. பொருளாதாரத்துக்காக செய்யப்படுவதல்ல இது. பணம் சம்பாதிக்க வேண்டுமென்றால் வேறு எந்தத் தொழிலாவது செய்யலாம். இறைசேவை அப்படியல்ல. அர்ச்சகர்களுக்கு மரியாதை செய்வதற்கு- பக்தர்கள் பொருள் கொடுப்பதற்கு சம்பாவனா என்று பெயர். பாவனை என்றால் எண்ணம்; சம் என்றால் நல்லது. நல்ல எண்ணத்துடன் கொடுப்பது சம்பாவனை. "இவர் எனக் காகவும் என் குடும்பத்திற்காகவும் பூஜை செய்கிறார்; அனைவரது நலனுக்காகவும் பூஜை செய்கிறார்' என்னும் நல்ல எண்ணத் துடன் சம்பாவனை தரவேண்டும். தர்ப்பணம் செய்தாலும்கூட அனைவருக்காகவும் செய்கிறார்கள். எனவே அவர்களைப் பாதுகாக்கவேண்டியது சமுதாயத்தின் கடமை. அனைவரின் நன்மைக்காக பூஜை செய்வதால்தான் இவர்களுக்கு அர்ச்சகர்கள் என்று பெயர்.
ஓதுவா மூர்த்திகள் என்று சொல்கிறோம்.
தமிழில் மிக அற்புதமாக இறைவனைப் பாடுவார்கள். அவர்கள் இப்போது பெருமளவில் இல்லை. குறிப்பிட்ட தினங்களில் வந்து பாடிச்செல்கிறார்கள். ஒருசில ஆலயங்களைத் தவிர பல ஆலயங்களில் ஓதுவா மூர்த்திகள் நிரந்தரமாக இல்லை. ஏன்? அவர்களை முறையாகப் பாதுகாக்கத் தவறிவிட்டோம். அவர்களையெல்லாம் ஊக்குவிக்கவேண்டியது சமுதாயத்தின் கடமையாகிறது. ஆலயம் சார்ந்தவர்கள் குறைந்துகொண்டே வருகிறார்கள்.
அது குறைந்துவிட்டால் அவர்களுக்கோ அவர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர் களுக்கோ பாதிப்பில்லை. அவர்கள் வேறு தொழில்களுக்குச் சென்று விடுவார்கள். அப்படி ஆலயப் பணி செய்பவர்கள் இல்லாது போனால் சமுதாயத்திற்குதான் பாதிப்பு.
எனவே அர்ச்சகர்கள், ஓதுவா மூர்த்திகள், நாதஸ்வரம் உள்ளிட்ட இசைக்கலைஞர்களை நாம் பாதுகாக்க வேண்டும். "ஒரு மணி நேரம் ஊதுவதற்கு ஐந்தாயிரமா' என்று கேட்கிறவர்களைப் பார்க்கிறோம். கல்யாண மண்டப வாடகையே ஐந்து லட்சம் கொடுக்கிறார்
களல்லவா? சிவனுடைய லீலை என்கிறோமே- அதுபோல, அவனருளால் இவையெல்லாம் மாறி நல்ல நிலைக்கு வருமென்ற நம்பிக்கை எனக்குண்டு.
சுவாமிக்கு பாலாபிஷேகம், தயிரா பிஷேகம் போன்றவை செய்கிறோம். பல ஆலயங்களில் அவை கோமுகி வழியே சென்று வீணாவதைக் காண வேதனையாக உள்ளது. இறைவனுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட அவை புனிதமானவை. நிர்மால்யம் என்று சொல்வோம். மலம் என்றால் அழுக்கு; நிர்மால்யம் என்றால் அழுக்கற்றது; தூய்மை செய்யப்பட்டதென்று பொருள். பொதுவாக சிவார்ப்பணம் என்று சொன்னாலே ஒரு பொருள் நிர்மால்யமாகிவிடுகிறது. எனவே அவற்றை வீணாக்காமல் பக்தர்களுக்கும் ஏழைகளுக்கும் கொடுக்கும் கடமையை ஆலய அறங்காவலர்கள் மேற்கொள்ளவேண்டும்.
இவ்வாறு நிர்மால்யத்தை ஏழைகளுக்கோ பக்தர்களுக்கோ கொடுப்பது தவறல்ல. சாஸ்திரப்படி இதை சிவாச்சாரியார்களே செய்யவேண்டும். குருக்கள், சிவாச்சார்யார்களையெல்லாம் ஆதிசைவர் என்பார்கள். அனாதி சைவன் என்பவர் சிவபெருமான். அவர் ஆதியும் அந்தமும் அற்றவர். அதுபோல பாரசைவர் என்றும் உண்டு. இவர்களைப் பண்டாரம், லிங்காயதர் என்று சொல்வார்கள். கிராமப்புறங்களில் பார்க்கலாம். அதுபோல பட்டாச்சார்யார்கள், குலதெய்வ- சிறுதெய்வ பூசாரிகள் என்று இறைவனுக்குப் பூஜை செய்வோர் பலருண்டு. அவரவர் மரபுப்படி அவர்கள் பூஜைகள் மேற்கொள்வார்கள். அவர்களெல்லாம் நலிவடைந்துவிடாமல்- வேறு தொழிலுக்கு மாறிச் சென்றுவிடாமல் காப்பாற்ற நாம் முயலவேண்டும்.
ஆலயம் என்பது சமுதாயத்துக்கானது. சமுதாயத்தை ஒன்றிணைப்பது. எவரும் பசியின்றி வாழவேண்டுமென்பதே நமது ஆன்மிகத்தின் அடிப்படை. பசியின்றி வாழ்பவனே உறுதியுள்ளவனாக
வும் தன்னம்பிக்கையுள்ளவனாகவும் இருப்பான். அப்படிப்பட்டவர்களைக் கொண்ட சமுதாயத்தில் நல்லறம் தழைத்தோங்கும். பசியோடு யாரொருவர் இருந்தாலும் அது அந்த நாட்டுக்கு சாபம்தான். ஆங்கிலேயர் இந்தியாவுக்கு வந்த காலத்தில் ஒரு பிச்சைக்காரனைக்கூட அவர்கள் பார்க்கவில்லை. அப்போது அவர்கள் இந்தியர்களிடையே தாழ்வு மனப்பான்மையை உருவாக்கவேண்டுமென்று முடிவெடுத்தார் கள். நமது தாய்மொழியைவிட ஆங்கில மொழியே உயர்ந்ததென்று நாம் கருதச் செய்வதற்கான முயற்சியை மேற்கொண்டார்கள். அதில் பெருமளவில் வெற்றியும் பெற்றார்கள். நம்மிடையே ஏற்பட்ட தாழ்வு மனப்பான்மையாலும், ஆங்கிலேயர்கள் கையாண்ட பிரித்தாளும் சூழ்ச்சிக்கு இரையானதாலும் மூன்று நூற்றாண்டுகளுக்குமேல் நாம் அவர்களுக்கு அடிமையானோம். நமது கலாச்சாரத்தை தவறவிட்டதும் அதற்கொரு காரணம்.
வேட்டி கட்டிச் செல்வதைக்கூட பரிகசிக்கும் நிலையும் இருந்தது. தற்போதுகூட சில இடங்களில் அந்த நிலை உள்ளது. ஆனால் வெளிப்படையாக செய்யமுடியாத அளவுக்கு சட்டமியற்றப்பட்டிருப்பது ஆறுதலான விஷயம். நாம் ஆலயத்துக்குச் செல்லும்போது வேட்டி கட்டிச்செல்லும் பழக்கத்தைக் கடைப்பிடிக்கவேண்டும். "வேஷ்டம்' என்றால் சுற்றிக்கொள்வது. அதிலிருந்து உருவான சொல்லே வேட்டி.
சிலர் அபிஷேகத்துக்கு பால் வாங்கித் தருவார்கள். கூடுமானவரை தூய்மையான பசும்பாலை வழங்குவது நல்லது. அபிஷேக சமயத்தில் திரை மூடியிருக்கும் நேரத்தில் எட்டிப்பார்ப்பது கூடாது. பிரார்த்தனையும் செய்யக்கூடாது. அவசியம் மணி ஒலிக்கவேண்டும். அபிஷேக நேரத்தில் பிரதட்சிணம் செய்யக்கூடாதென்பதும் சாஸ்திரம் விதித்திருக்கும் கட்டுப்பாடு. இவற்றையெல்லாம் கடைப்பிடித்து பக்திசெய்தால், இறைவனின் அனுக்கிரகத்தைப் பெறுவது உறுதி.

வியாழன், 15 மே, 2014

உபசாரங்கள்

10.1 உபசாரங்கள் மூன்று விதம் : ஸாங்கம், உபாங்கம், ப்ரத்யங்கம். (1) ஸாங்கம் : ஸ்நானம் (அபிஷேகம்), பாத்யம், ஆசமனம், வஸ்திரம், ஆபரணம், வாஸனை, சந்தணம் பூசுதல், அர்க்யம், புஷ்பம் சாத்துதல் (2) உபாங்கம் : தூப-தீபம், ஸாயரøக்ஷகளில் விபூதி சாத்துவது, கொடை, சாமரம், கண்ணாடி, நிருத்தம், கீதம் ஆகியவற்றை தெரிவிப்பது (3) ப்ரத்யங்கம் : நைவேத்யம் செய்தல், ஸ்ரீபலி, ஹோமம் செய்தல், நித்யோத்ஸவம், சுருகோதகம், ஸ்வஸ்திவாசனம்.
10.2 ÷ஷாடச உபசாரங்கள் : உபசாரம் செய்யும் முறை : 1. ஆவாஹனம், 2. ஸ்தாபனம் 3. பாத்யம் 4. ஆசமநீயம் 5. அர்க்யம் 6 அபிஷேகம் 7 வஸ்த்ரம் சாத்துதல் 8 ஆபரண, புஷ்ப அலங்காரம் 9. தூபம் - தீபம் 10. நிவேதனம் 11. பலி இடுதல் 12. ஹோமம் செய்தல் 13. இசை, கீதம் 14. ஸ்ரீபலி நாயகர் எழுந்தருளல் (உலா) 15. நர்த்தனம் 16. உத்வாஸனம் (தோத்திரப் பாடல்கள் ஓதுதல்), நித்யோத்ஸவம்.
10.3 ஆவாஹநம் : அலங்காரத்திற்குப் பிறகு, சிவபெருமானை ஸத்யோஜாத மந்திரத்தினால் ஆவாஹநம் பண்ண வேண்டும்; பிறகு வாமதேவ மந்திரத்தினால் ஸ்தாபநம்; அகோர மந்திரத்தினால் ஸந்நிதாநம்; தத்புருஷ மந்திரத்தால் ஸந்நிரோதநம்; ஈசான மந்திரத்தினால் ஸம்முகீகரணம் (நன்முகத்தைக் காட்டியருள வேண்டுதல்) பண்ணவேண்டும்.
10.4 ஆவாஹனம் : அன்புடன் தனக்கு எதிர்முகமாக இருக்கச் செய்தல். பூஜை முடியும் வரை, தயை கூர்ந்த இலிங்கத்தில் அல்லது கலசத்தில் எழுந்தருளி இருக்க வேண்டும் என்று ப்ரார்த்திப்பதே ஆவாஹனம்.
10.5 ஸ்தாபனம் : பக்தியினால் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இறைவனை நிலைகொள்ளச் செய்யும் கிரியை.
10.6 ஸந்நிதானம் : இறைவா ! நான் என்றும் உன்னுடையவன்; என்னை ஆட்கொண்டு அருள் செய்து, என் கிரியைகளுக்கு ஆசி வழங்கு எனக் கோருவது.
10.7 நிரோதம் : தான் செய்யும் கிரியையின் முடிவு வரை தகைந்து இருக்குமாறு இறைவனைக் கோருவது.
10.8 ஆவாஹனத்தின் போது பாத்யம், ஆசமனீயம், அர்க்யம் இவைகளைக் கொடுக்க வேண்டும்.
10.9 எவை, எங்கே? : பாத்யத்தை பாதத்திலும், ஆசமனத்தைக் கையிலும், அர்க்யத்தை சிரஸ்ஸிலும் கொடுக்க வேண்டும். சந்தணப்பூச்சை சரீரத்திலும், சிரஸ்ஸில் கிரீடத்தை வைத்து அதன்மேல் புஷ்பத்தையும் வைக்க வேண்டும். மூக்குக்கு அருகில் தூபத்தையும், நேத்திரத்துக்கு அருகில் தீபத்தையும் காட்ட வேண்டும். அந்நத்தையும், தாம்பூலத்தையும் கையில் கொடுக்க வேண்டும்.
10.10 விளாமிச்சம்வேர், சந்தணம், அறுகு, வெண்கடுகு - இவை நான்கும் பாத்ய நீரில் சேர்ப்பதற்கு உரியவை. ஏலக்காய், கிராம்பு, பச்சைக் கற்பூரம், நாவற்பழம், ஜாதிக்ககாய், இவை ஆறும் ஆசமனீய நீரில் சேர்க்கக்கூடிய திரவியங்கள். எள், நெல், தருப்பை நுனி, ஜலம், பால், அக்ஷதை, வெண்கடுகு, யவம் இவை எட்டும் அர்க்ய நீரோடு சேர்க்ககூடிய திரவியங்கள்.
10.11 பாத்யம், அர்க்யம், ஆசமனீயம் கொடுக்க வேண்டிய காலங்கள் : அபிஷேக ஆரம்பம், அபிஷேக முடிவு, நைவேத்ய ஆரம்பம், நைவேத்ய முடிவு, தூவ-தீபங்கள் காட்டும் நேரம் - இந்த 5 சமயங்களின் முடிவு, பூஜையின் முடிவு - இந்த 3 காலங்களில் அர்க்யமும் கொடுக்க வேண்டும். அர்க்யம் கொடுக்கும் காலம், பூச்சுப் பூசம் காலம், அபிஷேக காலம் - இந்த மூன்று கால்ஙகளிலும் சந்தணமும் கொடுக்க வேண்டும்.
10.12 ஆவாஹனம், அர்க்யம், அபிஷேகம், தூபம், பூசும் காலம், நைவேத்யம், விசர்ஜனம் இந்த ஏழு காலங்களில் அஷ்ட புஷ்பம் சாத்த வேண்டும்.
10.13 தீப ÷ஷாடசோபசாரம் : 1. தூபம் 2. ஏகதீபம் (உருக்களி) 3. அலங்கார தீபம் (1,3,5,7,9 அல்லது 11 அடுக்குகள் கொண்ட தீபம். புஷ்ப தீபம், மஹா தீபம் என்றும் அழைக்கப் படுவதுண்டு ) 4. நாக தீபம், 5. வ்ருஷப தீபம் (நந்தி தீபம்) 6. புருஷா ம்ருக தீபம் 7. சூல தீபம் 8. கூர்ம (ஆமை) தீபம் 9. கஜ (யானை) தீபம் 10. ஸிம்ஹ தீபம் 11. வ்யாக்ர (புலி) தீபம் 12. கொடி தீபம் 13. மயூர தீபம் 14. பஞ்ச தட்டுடன் பூர்ண கும்ப தீபம் 15. நக்ஷத்ர தீபம் 16. மேரு தீபம். (இவற்றுள் சிலவற்றை விடுத்து, ஸூர்யன், சந்திரன், வ்ருக்ஷம் (மரம்) ஆகிய தீபங்களாலும் உபசரிப்பதுண்டு)
10.14 சுளுகேதகம் : மூ மந்த்ர ஜபம் எவ்வளவு செய்ய முடியுமோ அவ்வளவு செய்து, ப்ரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்து, பிறகு ஹே பரசேம்வரா ! என்னுடைய பக்தியை, பூஜையை ஏற்றுக் கொள்வீராக ! என்று ப்ரார்த்தனை செய்து, எல்லா பூஜையின் பலனையும் தீர்த்தத்துடன் ஸ்ரீ சிவ பெருமான் கையில் கொடுக்க வேண்டும். தக்ஷிண ஹஸ்தத்தை நான்கு அங்குலமாகக் குறுக்கி, அந்தக் கையிலே புஷ்பம், தீர்த்தம் எவைகளை எடுத்து,  ஸ்ரீ சிவபெருமான் திருவடியினடியில் விடவேண்டும். இது சுளுகோதகம். பிறகு சந்தணம் புஷ்பம் இவைகளைக் கையில் வைத்துக், ஸம்ஹிதா மந்திரம் ஜபித்து, அதை சிவபெருமானுக்குச் சாத்தவேண்டும். (காரண ஆகமம் - பூஜாவிதி படலம் - ச்லோகம் 439-442). ÷ஷாடச உபசாரங்களுக்குப் பிறகு தேங்காய் பழம் தாம்பூலம் நிவேதனம் செய்து, கற்பூர ஹாரத்தி செய்தபின், சிவாச்சாரியார் சுளுகோதக சமர்ப்பணம் செய்து ப்ரார்த்திக்க வேண்டும். மூல மந்திரத்தை இயன்ற அளவு ஜபம் செய்து, அம்மந்திரத்தை கையில் புஷ்பத்துடன் சேர்த்து கவச மந்திரத்தினால்  அவகுண்டனம் செய்து, தீர்த்தத்தைக் கீழே விட்டு, சுவாமியின் வரத ஹஸ்தத்தில் புஷ்பத்தைச் சேர்த்து ஜப சமர்ப்பணம் செய்வதே சுளுகோதகம் என்பது. இவ்வாறு செய்யாத பூஜை பயனற்றதாகும்.
10.15 பூஜையின் ஆரம்பம், அபிஷேகத்தின் முடிவு, அர்ச்சனையின் முடிவு - இக்காலங்களில் தூபம், நெய்கலந்த தீபம் காண்பிக்கவேண்டும்.
10.16 தூபம் - பாபத்தைப் போக்கும்; தீபம் - பகைவரை அழிக்கும்; கடதீபம் - சாந்தி அளிக்கும்; நீராஜனம் - மேலுலகப் பலன் அளிக்கும்; விபூதி - மூவுலகிற்கும் ரøக்ஷ; கண்ணாடி - லோக விருத்தி; குடை - நீண்ட ஆயுள்; சாமரம் - பாக்கியம்; சுருட்டி, விசிறி - மங்களம்.
10.17 தீபாராதனை செய்யும் முறை : தீபத்தின்மேல் புஷ்பத்தை வைத்து நீரீக்ஷணம், ப்ரோக்ஷணம் செய்ய வேண்டும்; பின்னர், பஞ்ச ப்ரம்மத்தை நியாஸித்து, திக்பந்தனம், அவகுண்டனம் செய்து, திரிசூல முத்திரை காட்டி, மந்திர நிவர்த்தியின் பொருட்டு நேத்திரத்தின் நேரில் தீபத்தையும், நாசிக்கு நேரில் தூபத்தையும் கொடுக்க வேண்டும்.
10.18 சுவாமியின் முகத்திற்கு நேராகவும், மூக்கிற்கு நேராகவும், மார்புக்கு நேராகவும், வயிற்றுக்கு நேராகவும், கால்களுக்கு நேராகவும் - ஒவ்வொரு இடத்திலும் ஓம் (படத்தினைப் பார்க்க) உருவம் போல மூன்றுமுறை காண்பிக்க வேண்டும்.

நைவேத்யம்

11.1 வண்டு மலரை முகர்ந்து தேனைப் பருகி, அந்தத் தேனை திருப்பித் தருகிறது;  மலரின் மணமோ சுவையோ தண்மையோ நீரோட்டமோ கெடுவதில்தல. அதுபோல இறைவர்க்கு நிவேதித்த பிரசாதங்களின் ரஸம் போவதில்லை. மேகம் சூர்ய கிரகணங்களைக் கொண்டு நீரைக் குடித்து, அதையே பிறகு மழையாகப் பொழிகின்றது, அவ்வாறே, இறைவன் நிவேதனத்தைத் தன் பார்வையால் ஏற்றுக் கொண்டு, கருணை மழை பொழிந்து, நம்மைக் காக்கிறான்.
11.2 அபிஷேகத்தில் நிறைவு, அர்ச்சனையின் முடிவு ஆகிய இரண்டு சமயங்களில் நைவேத்யம் செய்ய வேண்டும்
11.3 மந்த்ராந்நம், நைவேத்யம் : மந்த்ரம் என்பது ரஹஸ்யம். பல்லிலும், உதட்டிலும், முகவாய்க்கட்டிலும் உற்பத்தி ஆவதால் மந்த்ரங்கள் ரஹஸ்யம் எனப்படுகின்றன. எந்த அந்தமானது ரஹஸ்யமாக நிவேதிக்கப்படுகிறதோ அதற்கு மந்த்ராந்நம் என்று பெயர். அத்தகைய மந்த்ராந்தமாகிய மஹாநிவேதனத்தை ஒரு பாத்திரத்தில் முக்காலியின் மேல் வைத்து, அதைச் சுற்றி, பாகம் பண்ணப்பட்ட (சமைக்கப்பட்ட) பதார்த்தங்களைத் தனித் தனிப் பாத்திரங்களில் வரிசையாக வைத்து, அவற்றை ஒன்றொன்றாகச் சோதனை செய்து, ஹ்ருதய மந்திரத்தினால் ப்ரோக்ஷிக்க வேண்டும். அந்த நிவேதனத்தை அம்ருதமயமாகப் பாவித்து, தேனு முத்திரை காட்டி, புஷ்பத்தை வைத்து, நைவேத்யத்தை ஸ்வாமியினுடைய தக்ஷிண ஹஸ்தத்திலே கொடுத்து, தீர்த்த பானத்தையும் கொடுக்க வேண்டும்.
11.4 மயிர், புழு, மணல், உமி இவை கலந்துள்ள அரிசிச்சோறு (அன்னம்) நைவேத்யத்திற்கு ஆகாது ; அரை அரிசிச் சோறு, குழைந்த அன்னம், துர்நாற்றம் உள்ள அன்னம் ஆகியவையும் கூடாது; மிகச் சூடாக நிவேதனம் செய்யக்கூடாது.
11.5 ஈசான முகத்திற்கு சுத்த அன்னமும், தத்புருஷ முகத்திற்கு சர்க்கரைப் பொங்கலும், அகோர முகத்திற்கு எள் அன்னமும், வாமதேவ முகத்திற்கு தயிர் அன்னமும், ஸத்யோஜாத முகத்திற்கு வெண்பொங்கலும் படைப்பது சிறந்தது.
11.6 தாம்பூலத்தின் நுனியில் லக்ஷ்மி, மத்தியில் ஸரஸ்வதீ, பின்பகுதியில் மூதேவி ஆகியோர் உள்ளதாக ஐதீகம். எனவே, பின்பாகத்தை நீக்கிவிட்டு தான் வெற்றியையை நிவேதனம் செய்ய வேண்டும்.
11.7 ஜலம் உள்ள தேங்காயைத்தான் உடைத்து நிவேதனம் செய்ய வேண்டும்; சமமாக இரு பாதியாக உடைப்பதே சிறந்தது; குடுமி இல்லாமல் உடைத்தால் அரசுக்கு கேடு; முழுக் குடுமியும் உள்ளதாக உடைத்தால் நாட்டுக்கு கேடு; எனவே, கொஞ்சம் குடுமி உள்ளதாகச் செய்துகொண்டு உடைக்க வேண்டும்; உடைத்த பின்னர், அந்தச் சிறிதளவு குடுமியையும் நீக்கி விட்டு நிவேதனம் செய்ய வேண்டும்.
11.8 நந்திக்கு நிவேதனம் : அரிசியையும், பயத்தம் பருப்பையும், வெல்லத்தையும், திருகின தேங்காயையும் ஒன்றாகக் கலந்து ப்ரதோஷ காலத்தில் நந்தி தேவருக்கு விசேஷமாக நைவேத்யம் செய்திடல் வேண்டும்
11.9 திரை இடுதல் : பூஜையின் போது, நிவேதன காலத்தில் திரை இடாவிட்டால், பாபிகள் அதைப் பார்க்க நேரிட்டு, அதனால் அந்த நிவேதனமும், அது அங்கமாக உள்ள பூஜையும் பலனற்றதாகப் போய்விடும்

மணி அடித்தல்

12.1 அபிஷேகத்தில் ஆரம்பம், அபிஷேகத்தில் முடிவு, அர்ச்சனையின் முடிவு, நைவேத்யத்தின் ஆரம்பம், உத்ஸவத்தில் ஆரம்பம், உத்ஸவத்தின் முடிவு, நர்த்தனத்தின் முடிவு - இக்காலங்களில் மட்டுமே பெரிய மணி அடிக்க வேண்டும்,
12.2 கர்ஷணம் முதலான கிரியைகளின் ஆரம்பம், விக்னேச்வர பூஜை, புண்யாஹவாசன ஆரம்பம் ஆகிய காலங்களில் கை மணி அடிக்க வேண்டும்; தூப - தீபம் காட்டும்போதும், பலி காலத்திலும் இடைவிடாமல் கைமணி ஒலிக்க வேண்டும்.
12.3 மணி நாத கிரமம் : 1 அடி; மோக்ஷம் 2-அடி: போகம், 3-அடி : சகல ஸித்தி, புண்யாஹவாசனம், தூப-தீபம் நைவேத்யம், பலி ஆகிய காலங்களில் 2-அடி அடிக்கலாம்; தீபாரதனையின்போது (விரைவாக) 1-அடி அடிக்க வேண்டும்; மற்ற தேவைக்கு 3-அடி அடித்து பெரிய மணி நாதம் எழுப்ப வேண்டும்.

மறை ஓதுதல்

13.1 அபிஷேகம், நைவேத்யம், தூப-தீபம் ஆகிய காலங்களில் வேத கோஷம் செய்யவேண்டும்.
13.2 அபிஷேகம், நைவேத்யம், தூப-தீபம் பூஜையின் முடிவு ஆகிய காலங்களில் பக்தர்கள் ஸ்தோத்ரங்கள் பாடலாம்.
13.3 வேதங்கள் ஓதிய பின் (அல்லது வேதங்கள் ஒதிக் கொண்டிருக்கும்போதே, மண்டபத்தின் மற்றோர் பகுதியிலிருந்து) தமிழ் மறைகளாம் பன்னிரு திருமுறைப் பாடல்களையும் மற்ற தோத்திரப் பாடல்களையும் ஓத வேண்டும்.
13.4 ஓதுவார்கள் : திருமுறைகளைப் பண்ணோடு ஓதுபவர்கள் ஓதுவார்கள் அல்லது ஓதுவார் மூர்த்திகள் என்று பெயர் பெறுவர்.
13.5 பண்; திருஞான சம்பந்தப் பெருமானுக்கு யாழ் வாசித்த திருநீலகண்ட யாழ்ப்பாணரின் வழி வந்த, இசை வல்ல ஒரு பெண்மணியார் திருமுறைகளுக்கு ஏற்ப பண்கள் அமைத்ததாக வரலாறு. முன்னர் இருந்த 103 பண்களில் இக்காலம் பயிலப் பெறுபவை ஏறத்தாழ 23 பண்களே.
13.6 இசை மரபு ஒப்புமை : தமிழிசைப் பண்களில் வரும் ஏழு இசைகளுக்கு இணையான ஸ்வரங்கள் - 1 இளி - ஸ - ஷட்ஜம் 2 விளரி - ரி - ரிஷபம் 3. தாரம் - க - காந்தாரம் 4. குரல் - ம - மத்திமம் 5. துத்தம் - ப - பஞ்சமம் 6. கைக்கிளை - த - தைவதம் 7. உழை - நி - நிஷாதம்.
13.7 பாடலுக்குரிய இராகங்கள் - திருவாசகப் பாடல்கள் அனைத்தையும் மோஹந ராகத்திலும், திருவிசைப்பா - திருப்பல்லாண்டு பாடல்கள் அனைத்தையும் ஆநந்தபைரவி ராகத்திலும், பெரியபுராணப் பாடல்கள் அனைத்தையும் மத்தியமாவதி ராகத்திலும் பாடுவதே மரபு. மாற்றிப் பாடுவது முறையல்ல.
13.8 பண்களுக்குரிய இராகங்கள் : பண்கள் குறிப்பிடப்பட்டுள்ள திருமுறைப்பாடல்களை, அப்பண்களைக் கற்றுணர்ந்தவர் அவ்வாறே இசைப்பதே முறை. தமிழிசை கற்றியாதார், தமிழிசைப் பண்களுக்கு ஒத்த கருநாடக மரபு இராகங்களிலும் இசைக்கலாம்.
தமிழிசைப் பண்   அதற்கொத்த இராகம்
1. நட்டபாடை (நைவளம்)  நாட்டை, கம்பீர நாட்டை
2. தக்கராகம்   காம்போதி
3. தக்கேசி   காம்போதி
4. பழந்தக்கராகம்   சுத்தசாவேரி
5. குறிஞ்சி   ஹரிகாம்போதி
6. வியாழக்குறிஞ்சி  ஸெளராஷ்ட்ரம்
7. அந்தாளிக்குறிஞ்சி  சாமா
8. மேகராகக் குறிஞ்சி  நீலாம்பரி
9. யாழ்மூரி   அடாணா
10. காந்தாரம்   நவரோஸ்
11. பியந்தைக் காந்தாரம்  நவரோஸ்
12. கொல்லி   நவரோஸ்
13. கொல்லிக் கௌவாணம்  நவரோஸ்
14. இந்தளம்   மாயாமாளவகொளளை
15. சீகாமரம்   நாதநாமக்ரியா
16. நட்டராகம்    பந்துவராளி
17. சாதாரி   பந்துவராளி
18. செவ்வழி   யதுகுலகாம்போதி
19. காந்தார பஞ்சமம்   கேதார கொளை
20. பஞ்சமம்   ஆகிரி
21. பழம்பஞ்சரம்  சங்கராபரணம்
22. கௌசிகம்   பைரவி
23. புறநீர்மை (நேர்திறம்)  பூபாளம், பௌளை
24. செந்துருத்தி (செந்திறம்)  மத்யமாவதி
25. திருக்குறுந்தொகை  மாயாமாளவகொளை
26. திருத்தாண்டகம்  ஹரிகாம்போதி
27. திருநேரிசை   நவரோஸ் (ஸாமகான இசை போல)
28. திருவிருத்தம்   பைரவி, சங்கராபரணம், அல்லது ஒத்த ராகங்கள்.

பூஜை இல்லாவிடில்.

15.1. பூஜை செய்ய வகுக்கப்பட்டுள்ள முறைகளே ஐயனின் ஐந்தொழில் திறனைப் போற்றும் வகையில் அமைந்துள்ளன; 1. படைத்தல் - அபிஷேகம். 2. காத்தல் - நைவேத்யம் 3. ஸம்ஹாரம் - பலி போதல் 4. திரோபாவம் - தீபாராதனை 5. அனுக்ரஹம் - ஹோமம், பூஜைகளைச் செவ்வனே செய்யவிடின் ஐயன் ஐந்தொழில் புரிந்து நமக்கேன் அருள வேண்டும் ?
15.2. பூஜை இல்லாவிடில் ரோகமும், புஷ்பம் இல்லாவிடில் குல நாசமும், சந்தனம் இல்லாவிடில் குஷ்டிரோகமும், ஜலம் இல்லாவிடில் துக்கமும், தூபம் இல்லாவிடில் சுகத்தின் நாசமும், தீபம் இல்லாவிடில் பொருள் நாசமும், நைவேத்யம் இல்லாவிடில் பஞ்சமும், மந்திரம் இல்லாவிடில் தரித்திரமும், வஸ்திரம் இல்லாவிடில் மகா ரோகமும், ஹோமம் இல்லாவிடில் குல நாசமும், பலி இல்லாவிடில் கிராம நாசமும், நெய் இல்லாவிடில் மரணமும், வில்வம்-அறுகு-அக்ஷதை இல்லாவிடில் பகைவர் பயமும், மணி இல்லாவிடில் செவிட்டுத்தன்மையும், முத்திரை இல்லாவிடில் அசுர பயமும், நித்திய அக்கினி இல்லாவிடில் அரசர்க்கும் நாட்டுக்கும் தீங்கும், மற்ற திரவியங்கள் இல்லாவிடில் தேவதைகளுக்குக் கோபம் ஏற்பட்டு அதனால் ஒவ்வா விளைவுகளும் உண்டாகும்.
15.3. 1. சந்தனம் இல்லையென்றால் பயம் உண்டாகும். 2. ஆபரணம் இல்லையென்றால் தரித்ரம் உண்டாகும். 3. புஷ்பம், தூபம் இல்லையென்றால் ராஜ்யம் க்ஷீணிக்கும். 4. தீபம் இல்லையென்றால் தனம் இல்லாதொழியும். 5. நைவேத்தியம் இல்லையென்றால் க்ஷõமம் (பஞ்சம்) உண்டாகும். 6. அக்நிகார்யம் இல்லையென்றால் சங்கடங்கள் உண்டாகும். 7. பலி இல்லையென்றால் ஆள்பவர்களுக்குக் கெடுதல் உண்டாகும். 8. ந்ருத்தம் (கலை நிகழ்ச்சிகள்) இல்லையென்றால் துக்கம் உண்டாகும். 9. மந்திரங்கள் இல்லையென்றால் மரணபயம் உண்டாகும். 10. கிரியைகள் இல்லையென்றால் வியாதிகள் உண்டாகும்.

சிவாலய வழிபாட்டின் முக்கியத்துவம்

1.1 ஒரு சிறு புல்லைக்கூட சிருஷ்டிக்கத் திறனற்ற மனிதனுக்கு இத்தனை உணவும், உடையும், மற்ற உபகரணங்களும் வழங்கும் ஆண்டவனுக்கு நன்றி கூறும் அடையாளமாகவே நாம் நிவேதனம் செய்கிறோம்; ஆபரணங்களையும் வஸ்திரங்களையும் சமர்ப்பிக்கிறோம். எல்லாருமே வீட்டில் இவ்வாறு பூஜை செய்து, திரவியங்களை ஈசுவரார்ப்பணம் செய்ய இயலாது. எனவே, சமுதாயம் முழுவதும் சேர்ந்து இப்படி சமர்ப்பணம் பண்ணும்படியான பொது வழிபாட்டு நிலையங்களாக ஆலயங்கள் எழுந்துள்ளன. இறைவனுக்கு நன்றி செலுத்துவதைத்தான் பரார்த்த பூஜையாக, நிஷ்காம்ய வழிபாடாக, ஆலயங்களில் செய்கிறோம்.

1.2 அரணிக்கட்டையுள் நெருப்பு மறைந்துள்ளது போல, மலரில் மணம் மறைந்துள்ளது போல ஈச்வரன் பிம்பத்தில் (லிங்கத்தில்) உள்ளார். பாலை விட, தயிரிலிருக்கும் நெய்யைக் கண்டெடுப்பது எளிது. உலகெங்கிலும் பாலில் மறைந்துள்ள நெய் போல் உறையும் இறைவன், ஆலயத்தில் தயிரினுள் மறைந்திருக்கும் நெய் போல எளிதில் நமக்கு முன் வந்து அருளக் காத்திருக்கிறான்.
1.3 ஆகமங்களில் விதித்துள்ள சிற்ப சாஸ்திரங்களுக்கொப்ப அமைந்துள்ள திருக்கோவில்களே பரம்பொருள் வீற்றிருக்கும் தேவாலயங்கள். ஆகம விதிப்படி அமையாத ஆலயங்கள் மடாலயங்கள் எனப்படும்.

1.4 சிவலிங்கம் இருக்கும் இடத்திலிருந்து நான்கு புறமும் 150 முழ தூரம் சிவ÷க்ஷத்ரம் ஆகும். இங்கு வசிப்பதுமச் சிவலோகவாசத்திற்கு காரணமாகும் என்று சுப்ரபேத ஆகமம் கூறுகிறது

1.5 முன் ஜன்மாவில் சிவ கைங்கர்ய உபகாரிகளாக வாழ்ந்தவர்கள், இந்த ஜன்மாவில், நல்ல உருவமும், தன ப்ராப்தியும் உடையவர்களாக காணப்படுவார்கள். சிவ தர்மத்தில் - பக்தியுடன், தன் சொத்துக்குத் தகுந்தபடி, ஆலயங்களை ஒவ்வொருவரும் செய்விக்க வேண்டும். அப்படிச் செய்தால், சிறிதாக அல்லது பெரிதாக செய்தாலும், தனவானுக்கும் ஏழ்மையானவர்களுக்கும், சமமான புண்யமே. பணக்காரராயினும், லோபமான மனஸுடன் பணத்தைக் குறைத்து சிவதர்மங்களைச் செய்பவர், அப்புண்ய பலனை அடைய மாட்டார். வாழ்வு நிலையற்றது; எனவே, ஒவ்வொருவரும் தன் சொத்தில் இரு பங்கு தர்மத்திற்கும், தனது வாழ்விற்கு ஒரு பங்குமாக ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும் என்கிறது ஜீர்ணோத்தார தசகம்.

1.6 மனத்தை ஒருவழிப் படுத்தவும், கீழ்ப்படிவு, நீதி வழி நிற்றல், தன்னலம் மறுப்பு, பணிவு, இரக்கம் ஆகிய பல சிறந்த பண்படுகளை உண்டாக்கி வளர்க்கவும், இறுதியாக மோக்ஷ ஸாம்ராஜ்யம் அடைந்திட வழி வகுக்கவும் திருக்கோயில் வழிபாட்டைத் தவிர வேறு மார்க்கம் இல்லை.
1.7 சாதாரணமாக, நம் கைகள் இரண்டு விரிந்து, வளைந்து, பற்பல செய்கைகளைச் செய்கின்றன. இறைவனுடைய ஸந்நிதானத்தில் கும்பிடும்போது, அத்தகைய செய்கைகள் எல்லாம் ஒழிந்து, கைகள் ஒன்று சேர்ந்து குவிகின்றன. அவ்வாறு குவிந்திடும் கைகள் ஆண்டவனே ! இனி என் செயல் என்று ஏதும் இல்லை என்பதை உணர்ந்துவிட்டேன். எல்லாம் உன் அருட் செயலே என்ற சரணாகதி தத்துவத்தை உணர்த்துகின்றது.
1.8 ஆலயங்களில் விக்ரஹ ஆராதனை முக்கியத்துவம் பெறுகிறது. உலகத்தில் சக்திகள் யாவும் உறையும் இடம் என்று பொருள் தருவது விக்ரஹம் என்ற சொல் (விஸேஷேண க்ருஹ்யதே ஸக்திஸமூஹ: அஸ்மின் இதி விக்ரஹ:) வி என்றால் விசேஷமான, சிறப்பான, இறைத்தன்மையுள்ள என்று பொருள். க்ரஹிப்பது என்றால் ஈர்த்துக்கொள்வது. பல்வேறு மந்த்ர தந்த்ர யந்த்ர வழிபாட்டு முறைகளினால் ஆராதிக்கப்படும்போது, இறையருளை முன்வைத்து, இறைத்தன்மையை ஈர்த்துத் தன்னுள் தேக்கி வைத்துக்கொண்டு, தன்னை வணங்குவோருக்கு அருள் புரியும் வல்லமை உள்ள பொருள்தான் விக்ரஹம்.
1.9 விக்ரஹங்கள் பல திறத்தன: பொருள் பொதிந்து விளங்குவன. எடுத்துக்காட்டாக, இறைவன் உருவமற்றவன்: அருவமானவன். அவனுக்கு அருவுருவமாகிய லிங்க ப்ரதிஷ்டை கருவறையிலே. அவனுக்கே, மாகேச்வர மூர்த்தங்கள் என்று அழைக்கப்படும் 25 உருவங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. (அவையாவன: 1. லிங்கோத்பவர் 2. சுகாசனர் 3. சந்திதர மூர்த்தி 4. கல்யாண சுந்தரர் 5. அர்த்த நாரீச்வரர் 6. ஸோமாஸ்கந்தர் 7. சக்ரவரதர் 8. திரிமூர்த்தி 9. ஹரிமர்த்தனம் 10. சலந்தராரி 16. திரிபுராரி 17. சரப மூர்த்தி 18. நீலகண்டர் 19. திரிபாதர் 20. ஏகபாதர் 21. பைரவர் 22. இடபாரூடர் 23. சந்திரசேகரர் 24. நடராஜர் 25. கங்காதரர்). இவை 25 விக்ரஹங்களுள் ஒவ்வொன்றும், பற்பல தத்துவங்களை உள்ளடக்கியவை. மீண்டும் எடுத்துக்காட்டாக, சோமாஸ்கந்த மூர்த்தியை எடுத்துக் கொண்டால், ஸச்சிதானந்தமே சோமாஸ்கந்தம் என்கிறார் காஞ்சிப் பரமாச்சாரியார். அவர் கூற்றுவது: ஸத்-சித்-ஆனந்தம் என்று சொல்வார்களே அதுதான் பரம்பொருள். இதிலே ஸத் (இருப்பு) பரமேச்வரன்; இருக்கிறோம் என்பதை உணர்ந்து சக்தியைக் காட்டுகிறது சித் அம்பாள்: இப்படி உணர்ந்ததில் பேரானந்தம் பிறக்கிறது. இந்த ஆனந்தமே சுப்ரமண்யர். சிவம் என்கிற மங்களமும், அம்பாள் என்கிற காருண்யமும் கலந்த மரம் பரம உத்க்ருஷ்டமான (உயர்வான) ஸ்தானம் அவர் (ஸுப்ரஹ்மண்யர்); ஸச்சிதானந்தத்தையே சோமாஸ்கந்தர் என்று தமிழ்நாட்டுச் சிவாலயங்களில் எல்லாம் வைத்து உற்சவம் நடத்துகிறோம்.
1.10 இறைவனை அடையும் வழிகள் ஒன்பது என்பர்: (1) ச்ரவணம் - கேட்டல், இறைவன் புகழ் கேட்டல் - உதாரணம்: ஹனுமான், (2) கீர்த்தனம் - பாடுதல், நாதோபாஸனை - உதாரணம்: வால்மீகி, தியாகராஜ ஸ்வாமிகள். (3) ஸ்மரணம் - நினைத்தல், நின்றும் இருந்தும் கிடந்தும் அவனையே நினைப்பது - உதாரணம்; ஸீதாதேவி, (4) பாதசேவனம் - சேவித்தல் - உதாரணம்: பரதன், (5) அர்ச்சனம் - பூஜித்தல் - உதாரணம்: சபரி, கண்ணப்ப நாயனார், சாக்கிய நாயனார், (6) வந்தனம் - நமஸ்கரித்தல், வந்தித்தல் - உதாரணம்: விபீஷணன். (7) தாஸ்யம் - தொண்டு புரிதல் - உதாரணம்: லக்ஷ்மணன், திருநாவுக்கரசர். (8) ஸக்யம் - சிநேக பாவம் - உதாரணம்: சுக்ரீவன், அர்ஜுனன், சுந்தரர். (9) ஆத்ம நிவேதநம் - தன்னையே அர்ப்பணித்தல் - உதாரணம்: ஜடாயு. இந்த ஒன்பது வழிகளுள் ஏதாவது ஒன்றை உறுதியாகப் பற்றுவதே இறைவனை அடைவதற்கு  போதுமானது. இவற்றுள் கடைசி இரண்டைத் தவிர, ஏழு முறைகளில் வழிபட ஆலயங்களே வகை செய்வது குறிப்பிடத்தக்கது.

1.11 இவ்வாறு ஆலய வழிபாட்டை மையமாக வைத்து அமைக்கப்பட்ட வாழ்க்கை முறையே சிவதன்மம் ஆகிறது. சிவதன்மம் என்றால் சைவ ஒழுக்கம் என்று பொருள். சிதம்பரம் மறைஞானதேசிகர் (கி.பி.1560) சிவாகம பரிபாஷா மஞ்சரி என்ற வடமொழி நூலில் சிவதன்மம் பத்துக் கோட்காடுகளைக் கொண்ட நெறி என்கிறார்: 1. அஹிம்சை. 2. தயை, 3. சத்யம், 4. அடக்கம் 5. வளம், 6. புலனடக்கம் 7. எளியோர்க்கு வழங்குதல், 8. தியாகம், 9. ஜபம், 10. தியானம் - அல்லது 1. அஹிம்சை, 2. சத்யம், 3. பிறர் பொருள் விழையாமை, 4. சிற்றின்பம் துறத்தல், 5. அவா ஒழித்தல், 6. க்ரோதம் தவிர்த்தல், 7. பெரியோரைப் போற்றுதல், 8. தூய்மை, 9. துயறுற்றலும் மகிழ்வுடன் இருத்தல், 10. நேர்மை என்றபடி. இக்கோட்பாடுகள் அனைத்தும் ஆலய வழிபாட்டு நெறிக்கும் இன்றியமையாததாக இருப்பது கவனிக்கத் தக்கது.
1.12 எனவே, ஆலயத்தை மையமாகக் கொண்ட வாழ்க்கையில், நீறு இல்லா நெற்றி பாழ்; சிவாலயம் இல்லா ஊர் பாழ்; சிவபூஜை இல்லா ஜன்மம் பாழ்; சிவனை அடையா வித்யை பாழ் என்று ஆகமங்கள் வலியுறுத்துகின்றன.