பாரதியார் கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாரதியார் கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 15 மே, 2014

ஞானப் பாடல்கள்

பண்டாரப் பாட்டு

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளொரெலாம் எதிர்த்து நின்ற போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சை கொண்ட பொருளெலாம் இழந்த விட்ட போதிலும், 1
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
நச்சை வாயி லேகொணர்ந்து நண்ப ரூட்டு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
பச்சையூ னியைந்த வேற் படைகள் வந்த போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே. 2
2. ஜய பேரிகை
ஜய பேரிகை கொட்டடா!-கொட்டடா!
ஜய பேரிகை கொட்டடா!
1. பயமெனும பேய்தனை யடித்தோம்-பொய்மைக்
பாம்மைப் பிளந்துயிரைக் குடித்தோம்;
வியனுல கனைத்தையும் அமுதென நுகரும்
வேத வாழ்வினைக் கைப்பிடித்தோம்  (ஜய பேரிகை)
2. இரவியி னொளி யிடைக் குளித்தோம்-ஒளி
இன்னமு தினைக்கண்டு களித்தோம்;
கரவினில் வந்துயிர்க் குலத்தினை யழிக்கும்
காலன் நடுநடுங்க விழித்தோம்   (ஜய பேரிகை)
3. காக்கை,குருவி எங்கள் ஜாதி-நீள்
கடலும்,மலையும் எங்கள் கூட்டம்;
நோக்கும் திசையெலாம் நாமன்றி வேறில்லை
நோக்க நோக்கக்களி யாட்டம்.  (ஜய பேரிகை)
3. சிட்டுக் குருவியைப் போலே
பல்லவி
விட்டு விடுதலை யாகிநிற் பாயிந்தச்
சிட்டு குருவியைப் போலே
சரணங்கள்
1. எட்டு திசையும் பறந்து திரிகுவை
ஏறியக் காற்றில் விரைவொடு நீந்துவை
மட்டுப் படாதெங்கும் கொட்டிக் கிடக்குமிவ்
வானொளி யென்னும் மதுவின் சுவையுண்டு (விட்டு)
2. பெட்டையி னோடின்பம் பேசிக் களிப்புற்று
பீடையி லாததோர் கூடு கட்டிக்கொண்டு
முட்டைதருங் குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி
முந்த வுணவு கொடுத்தன்பு செய்திங்கு (விட்டு)
3. முற்றத்தி லேயுங் கழனி வெளியிலும்
முன்கண்ட தானியம் தன்னைக் கொணர்ந்துண்டு
மற்றப் பொழுது கதைசொல்லித் தூங்கிப்பின்
வைகறை யாகுமுன் பாடி விழிப்புற்று.  (விட்டு)
4. விடுதலை வேண்டும். ராகம்-நாட்டை
பல்லவி
வேண்டுமடி எப்போதும் விடுதலை அம்மா!
சரணங்கள்
தூண்டு மின்ப வாடை வீசு துய்ய தேன் கடல்
சூழ நின்ற தீவி லங்கு சோதி வானவர்
ஈண்டு நமது தோழ ராகி எம்மொ டமுத முண்டுகலவ
நீண்ட மகிழ்ச்சி மூண்டு விளைய நினைத்திடு மின்ப மனைத்தும் உதவ (வேண்டுமடி)
விருத்தி ராதி தானவர்க்கு மெலிவ தின்றியே,
விண்ணு மண்ணும் வந்து பணிய மேன்மை துன்றியே,
பொருத்த முறநல் வேத மோர்ந்து பொய்மை தீர மெய்மை நேர
வருத்த மழிய வறுமை யொழிய வையம் முழுதும வண்மை பொழிய (வேண்டுமடி)
பண்ணில் இனிய பாடலோடு பாயு மொளியெலாம்
பாரில் எம்மை உரிமை கொண்டு பற்றி நிற்கவே,
நண்ணி யமரர் வெற்றி கூற நமது பெண்கள் அமரர் கொள்ள
வண்ண மினிய தேவ மகளிர் மருவ நாமும் உவகை துள்ள (வேண்டுமடி)
5. மனத்தில் உறுதி வேண்டும்.

மனதி லுறுதி வேண்டும்.
வாக்கினி லேயினிமை வேண்டும்;
நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;
கனவு மெய்ப்பட வேண்டும்,
கைவசமாவது விரைவில் வேண்டும்;
தனமும் இன்பமும் வேண்டும்,
தரணியிலே பெருமை வேண்டும்  1
கண் திறந்திட வேண்டும்,
காரியத்தி லுறுதி வேண்டும்.
பெண் விடுதலை வேண்டும்.
பெரிய கடவுள் காக்க வேண்டும்;
மண்பயனுற வேண்டும்,
வாகனமிங்கு தென்பட வேண்டும்.
உண்மை நின்றிட வேண்டும்.
ஓம் ஓம் ஓம் ஓம்.  2
6. ஆத்ம ஜயம்

கண்ணில் தெரியும் பொருளினைக் கைகள்
கவர்ந்திட மாட்டாவோ?-அட
மண்ணில் தெரியுது வானம்,அதுநம்
வசப்பட லாகாதோ?
எண்ணி யெண்ணிப் பல நாளு முயன்றிங்
கிறுதியிற் சோர்வோமோ,
விண்ணிலும் மண்ணிலும் கண்ணிலும் எண்ணிலும்
மேவு பராசக்தியே!  1
என்ன வரங்கள்,பெருமைகள்,வெற்றிகள்
எத்தனை மேன்மைகளோ!
தன்னை வென்றா லவை யாவும் பெறுவது
சத்திய மாகுமென்றே
முன்னை முனிவர் உரைத்த மறைப் பொருள்
முற்றுமுணர்ந்த பின்னும்
தன்னை வென்றாளும் திறமை பெறாதிங்கு
தாழ்வுற்று நிற்போமோ?  2
7. காலனுக்கு உரைத்தல்

ராகம்-சக்ரவாகம் தாளம்-ஆதி
பல்லவி
காலா!உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்; என்தன்
காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கிறேன்-அட (காலா)
சரணங்கள்
1. வேலாயுத விருதினை மனதிற் பதிக்கிறேன்-நல்ல
வேதாந்த முரைத்த ஞானியர் தமை யெண்யித் துதிக்கிறேன்-ஆதி
மூலா வென்றுகதறிய யானையயைக் காக்கவே-நின்தன்
முதலைக்கு நேர்ந்ததை மறந்தாயோ,கெட்ட மூடனே? அட-(காலா)
2. ஆலால முண்டவனடி சரணென் றமார்க்கண்டன்-தன
தாவி கவரப்போய் நீ பட்ட பாட்டினை யறிகுவேன்-இங்கு
நாலாயிரம் காதம் விட்டகல்!உனை விதிக்கிறேன்-ஹரி
நாராயண னாகநின் முன்னே உதிக்கிறேன்-அட (காலா)
8. மாயையைப் பழித்தல்
ராகம்-காம்போதி  தாளம்-ஆதி
1. உண்மை யறிந்தவர் உன்னைக் கணிப்பாரோ?
மாயையே!-மனத்
திண்மையுள்ளாரை நீ செய்வது
மொன்றுண்டோ!-மாயையே!
2. எத்தனை கோடி படைகொண்டு வந்தாலும்
மாயையே! நீ
சித்தத் தெளிவெனுந் தீயின்முன்
நிற்பாயோ?-மாயையே!
3. என்னைக் கெடுப்பதற் கெண்ணமுற்றாய்
கெட்ட மாயையே!-நான்
உன்னைக் கெடுப்ப துறுதியென்
றேயுணர் மாயையே!
4. சாகத் துணியிற் சமுத்திர மெம்மட்டு
மாயையே!-இந்தத்
தேகம் பொய் யென்றுணர் துரரை யென்
செய்வாய் மாயையே!
5. இருமை யழிந்தபின் எங்கிருப்பாய்,அற்ப
மாயையே!-தெளிந்
தொருமை கண்டோர் முன்னம் ஓடாது
நிற்பையோ?-மாயையே!
6. நீதரும் இன்பத்தை நேரென்று கொள்வனோ
மாயையே-சிங்கம்
நாய்தரக் கொள்ளுமோ நல்லர
சாட்சியை-மாயையே!
7. என்னிச்சை கொண்டுனை யெற்றிவிட
வல்லேன் மாயையே!-இனி
உன்னிச்சை கொண்டெனக் கொன்றும்
வராது காண்-மாயையே!
8. யார்க்கும் குடியல்லேன் யானென்ப
தோர்ந்தனன் மாயையே!-உன்தன்
போர்க்கஞ்சு வேனோ பொடியாக்குவேன்
உன்னை-மாயையே!
9. சங்கு
செத்தபிறகு சிவலோகம் வைகுந்தம்
சேர்ந்திடலா மென்றே எண்ணி யிருப்பார்
பித்த மனிதர்,அவர் சொலுஞ் சாத்திரம்
பேயுரை யாமென்றிங் கூதேடா சங்கம்! 1
இத்தரை மீதினி லேயிந்த நாளினில்
இப்பொழு தேமுக்தி சேர்ந்திட நாடிச்
சுத்த அறிவு நிலையிற் களிப்பவர்
தூயவ ராமென்றிங் கூதேடா சங்கம்! 2
பொய்யுறு மாயையைப் பொய்யெனக் கொண்டு,
புலன்களை வெட்டிப் புறத்தில் எறிந்தே
ஐயுற லின்றிக் களித்திருப்பாரவர்
ஆரிய ராமென்றிங் கூதேடா சங்கம்! 3
மையுறு வாள்விழி யாரையும் பொன்னையும்
மண்ணெனக் கொண்டு மயக்கற்றிருந்தாரே,
செய்யுறு காரியம் தாமன்றிச் செய்வார்
சித்தர்க ளாமென்றிங் கூதேடா சங்கம்! 4
10. அறிவே தெய்வம்
கண்ணிகள்
ஆயிரந் தெய்வங்கள் உண்டென்று தேடி
அலையும் அறிவிலிகாள்!-பல்
லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண்
டாமெனல் கேளீரோ?  1
மாடனைக் காடனை வேடனைப் போற்றி
மயங்கும் மதியிலிகாள்!-எத
னூடும்நின் றோங்கும் அறிவொன்றே தெய்வமென்
றோதி யறியீரோ?  2
சுத்த அறிவே சிவமென்று கூறுஞ்
சுருதிகள் கேளீரோ?-பல
பித்த மதங்களி லேதடு மாறிப்
பெருமை யழிவீரோ?  3
வேடம்பல் போடியொர் உண்மைக் குளவென்று
வேதம் புகன்றிடுமே-ஆங்கோர்
வேடத்தை நீருண்மை யென்றுகொள் வீரென்றவ்
வேத மறியாதே.  4
நாமம்பல் கோடியொர் உண்மைக் குளவென்று
நான்மறை கூறிடுமே-ஆங்கோர்
நாமத்தை நீருண்மை யென்றுகொள் வீரென்றந்
நான்மறை கண்டிலதே.  5
போந்த நிலைகள் பலவும் பராசக்தி
பூணு நிலையாமே-உப
சாந்த நிலையேவேதாந்த நிலையென்று
சான்றவர் கண்டனரே.  6
கவலை துறந்திங்கு வாழ்வது வீடென்று
காட்டும் மறைகளெல்லாம்-நீவிர்
அவலை நினைந்துமி மெல்லுதல் போலிங்கு
அவங்கள் புரிவீரோ?  7
உள்ள தனைத்திலும் உள்ளொளி யாகி
ஒளிர்ந்திடும் ஆன்மாவே-இங்கு,
கொள்ளற் கரிய பிரமமென் றேமறை
கூவுதல் கேளீரோ?  8
மெள்ளப் பலதெய்வம் கூட்டி வளர்ந்து
வெறுங் கதைகள் சேர்த்துப்-பல
கள்ள மதங்கள் பரப்புதற் கோர்மறை
காட்டவும் வல்லீரோ?  9
ஒன்று பிரம முளதுண்மை யஃதுன்
உணர்வெனும் வேதமெலாம்-என்றும்
ஒன்று பிரம முளதுண்மை யஃதுன்
உணர்வெனக் கொள்வாயே.  10
11. பரசிவ வெள்ளம்
உள்ளும் புறமுமாய் உள்ளதெலாந் தானாகும்.
வெள்ளமொன்றுண் டாமதனைத் தெய்வமென்பார் வேதியரே 
காணுவன நெஞ்சிற் கருதுவன உட்கருத்தைப்
பேணுவன யாவும் பிறப்பதந்த வெள்ளத்தே
எல்லைபிரி வற்றதுவாய் யாதெனுமோர் பற்றிலதாய்
இல்லையுளதென் றறிஞர் என்றும்மய லெய்துவதாய்.
வெட்டவெளி யாயறிவாய் வேறு பல சக்திகளைக்
கொட்டுமுகி லாயணுக்கள் கூட்டிப் பிரிப்பதுவாய்.
தூல வணுக்களாய்ச் சூக்கு மமாய்ச சூக்குமத்திற்
சாலவுமே நண்ணிதாய்த் தன்மையெலாந் தானாகி
தன்மையொன் றிலாததுவாய்த் தானே ஒருபொருளாய்த்
தன்மைபல வுடைத்தாய்த் தான்பலவாய் நிற்பதுவே.
எங்குமுளான் யாவும்வலான் யாவுமறி வானெனவே
தங்குபல மதத்தோர் சாற்றுவதும் இங்கிதையே
வேண்டுவோர் வேட்கையாய் வேட்பாராய் வேட்பாருக்
கீண்டுபொரு ளாய்தனை யீட்டுவதாய் நிற்குமிதே.
காண்பார்தங் காட்சியாய்க் காண்பாராய்க் காண்பொருளாய்
மாண்பார்ந் திருக்கும்,வகுத்துரைக்க வொண்ணாதே.
எல்லாந் தானாகி யிருந்திடிலும் இஃதறிய
வல்லார் சிலரென்பர் வாய்மையெல்லாங் கண்டவரே.
மற்றிதனைக் கண்டார் மலமற்றார் துன்பமற்றார்;
பற்றிதனைக் கொண்டார் பயனனைத்துங் கண்டாரே.
இப்பொருளைக் கண்டார் இடருக்கோர் எல்லைகண்டார்
எப்பொருளுந் தாம் பெற்றிங் ன்பநிலை யெய்துவரே.
வேண்டுவ வெலாம் பெறுவார் வேண்டா ரெதனையுமற்
றீண்டுபுவி யோரவரை யீசரெனப் போற்றுவரே.
ஒன்றுமே வேண்டா துலகனைத்தும் ஆடுவர்காண்;
என்றுமே யிப்பொருளோ டேகாந்தத் துள்ளவரே.
வெள்ளமடா தம்பி விரும்பியபோ தெய்திநின
துள்ள மிசைத் தானமுத வூற்றாய்ப் பொழியுமடா!
யாண்டுமிந்த இன்பவெள்ளம் என்று நின்னுள் வீழ்வதற்கே
வேண்டு முபாயம் மிகவுமெளி தாகுமடா!
எண்ணமிட்டா லேபோதும் எண்ணுவதே இவ்வின்பத்
தண்ணமுதையுள்ளே ததும்பப் புரியுமடா!
எங்கும் நிறைந்திருந்த ஈசவெள்ள மென்னகத்தே
பொங்குகின்ற தென்றெண்ணிப் போற்றி நின்றாற் போதுமடா
யாதுமாம் ஈசவெள்ளம் என்னுள் நிரம்பியதென்
றோதுவதே போதுமதை உள்ளுவதே போதுமடா!
காவித் துணிவேண்டா,கற்றைச் சடை வேண்டா;
பாவித்தல் போதும் பரமநிலை யெய்துதற்கே.
சாத்திரங்கள் வேண்டா சதுமறைக ளேதுமில்லை;
தோத்திரங் ளில்லையுளந் தொட்டுநின்றாற் போதுமடா!
தவமொன்று மில்லையொரு சாதனையு மில்லையடா!
சிவமொன்றே யுள்ளதெனச் சிந்தை செய்தாற்போதுமடா!
சந்ததமு மெங்குமெல்லாந் தானாகி நின் றசிவம்,
வந்தெனுளே பாயுதென்று வாய்சொன்னாற் போதுமடா!
நித்தசிவ வெள்ள மென்னுள் வீழ்ந்து நிரம்புதென்றுள்
சித்தமிசைக் கொள்ளுஞ் சிரத்தை யொன்றே போதுமடா!
12. பொய்யோ?மெய்யோ? (உலகத்தை நோக்கி வினவுதல்)
நிற்பதுவே,நடப்பதுவே,பறப்பதுவே,நீங்களெல்லாம்
சொற்பனந் தானோ?-பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே,கேட்பதுவே,கருதுவதே,நீங்க ளெல்லாம்
அற்பமாயைகளோ?-உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ? 1
வானகமே,இளவெயிலே,மரச்செறிவே,நீங்களெல்லாம்
கானலின் நீரோ?-வெறுங் காட்சிப் பிழைதானோ?
போன தெல்லாம் கனவினைப்போற் புதைந்தழிந்தே போனதனால்
நானுமோர் கனவோ?-இந்த ஞாலமும் பொய்தானோ? 2
கால மென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பலநினைவும்
கோலமும் பொய்களோ?-அங்குக் குணங்களும் பொய்களோ?
சோலையிலே மரங்க ளெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால்,
சோலை பொய்யாமோ?-இதைச் சொல்லொடு சேர்ப்பாரோ? 3
காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்ப மன்றோ?
வீண்படு பொய்யிலே-நித்தம் விதிதொடர்ந் திடுமோ?
காண்பதுவே உறுதிகண்டோம் காண்பதல்லால் உறுதில்லை
காண்பது சக்தியாம்-இந்தக் காட்சி நித்தியமாம்.  4
13. நான்
இரட்டைக் குறள் வெண் செந்துறை

வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்,
மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்;
கானில் வளரும் மரமெலாம் நான்,
காற்றும் புனலும் கடலுமே நான்  1
விண்ணில் தெரிகின்ற மீனெலாம் நான்,
வெட்ட வெளியின் விரிவெலாம் நான்;
மண்ணில்கிடக்கும் புழுவெலாம் நான்,
வாரியினுள் உயிரெலாம் நான்,  2
கம்பனிசைத்த கவியெலாம் நான்,
காருகர் தீட்டும் உரவெலாம் நான்;
இம்பர் வியக்கின்ற மாட கூடம்
எழில்நகர் கோபுரம் யாவுமே நான், 3
இன்னிசை மாதரிசையுளேன் நான்,
இன்பத்திரள்கள் அனைத்துமே நான்;
புன்னிலை மாந்தர்தம் பொய்யெலாம் நான்,
பொறையருந் துன்பப் புணர்ப்பெலாம் நான். 4
மந்திரங்கோடி இயக்குவோன் நான்,
இயங்கு பொருளின் இயல்பெலாம் நான்;
தந்திரங் கோடி சமைத்துளோன் நான்.
சாத்திர வேதங்கள் சாற்றினோன் நான். 5
அண்டங்கள் யாவையும் ஆக்கினோன் நான்,
அவை பிழையாமே சுழற்றுவோன் நான்,
கண்டல் சக்திக் கணமெலாம் நான்
காரணமாகிக் கதித்துளோன் நான். 6
நானெனும் பொய்யை நடத்துவோன் நான்,
ஞானச் சுடர்வானில் செல்லுவோன் நான்;
ஆனபொருள்கள் அனைத்தினும் ஒன்றாய்
அறிவாய் விளங்குமுதற்சோதி நான். 7
14. சித்தாந்தச் சாமி கோயில்

சித்தாந்தச் சாமி திருக்கோயில் வாயிலில்
தீப வொளி யுண்டாம்;-பெண்ணே
முத்தாந்த வீதி முழுதையுங் காட்டிட
மூண்ட திருச் சுடராம்;-பெண்ணே! 1
உள்ளத் தழுக்கும் உடலிற் குறைகளும்
ஓட்ட வருஞ் சுடராம்;-பெண்ணே!
கள்ளத் தனங்கள் அனைத்தும் வெளிப்படக்
காட்ட வருஞ் சுடராம்;-பெண்ணே! 2
தோன்று முயிர்கள் அனைத்தும்நன் றென்பது
தோற்றமுறுஞ் சுடராம்;-பெண்ணே
மூன்று வகைப்படும் கால நன்றென்பதை
முன்னரிடுஞ் சுடராம்;-பெண்ணே! 3
பட்டினந் தன்னிலும் பார்க்க நன்றென்பதைப்
பார்க்க வொளிச் சுடராம்;-பெண்ணே!
கட்டு மனையிலுங் கோயில் நன்றென்பதைக்
காண வொளிர்சுடராம்;-பெண்ணே! 4
15. பக்தி்

ராகம்-பிலஹரி
பல்லவி
பக்தியினாலே-தெய்வ-பக்தியினாலே
சரணங்கள்
1. பக்தியினாலே-இந்தப்
பாரினிலெய்திடும் மேன்மைகள் கேளடி!
சித்தந் தெளியும்,-இங்கு
செய்கை யனைத்திலும் செம்மை பிறந்திடும்,
வித்தைகள் சேரும்,-நல்ல
வீர ருறவு கிடைக்கும்-மனத்திடைத்
தத்துவ முண்டாம்,-நெஞ்சிற்
சஞ்சலம் நீங்கி உறுதி விளங்கும். (பக்தி)
2. காமப் பிசாசைக் -குதிக்
கால்கொண் டடித்து விழுத்திட லாகும்;இத்
தாமசப் பேயைக்-கண்டு
தாக்கி மடித்திட லாகும்;எந் நேரமும்
தீமையை எண்ணி-அஞ்சுந்
தேம்பற் பிசாசைத் திருகியெறிந்து பொய்ந்
நாம மில்லாத-உண்மை
நாமத்தினாலிங்கு நன்மை விளைந்திடும், (பக்தி)
3. ஆசையைக் கொல்வோம்,-புலை
அச்சத்தைக் கொன்று பொசுக்கிடுவோம்,கெட்டட
பாச மறுப்போம்,-இங்கு
பார்வதி சக்தி விளங்குதல் கண்டதை
மோசஞ் செய்யாமல்-உண்மை
முற்றிலுங் கண்டு வணங்கி வணங்கி யோர்
ஈசனைப் போற்றி-இன்பம்
யாவையு முண்டு புகழ்கொண்டு வாழ்குவம், (பக்தி)
4. சோர்வுகள் போகும்,-பொய்ச்
சுகத்தினைத் தள்ளிச் சுகம்பெற லாகும்,நற்
பார்வைகள் தோன்றும்,-மிடிப்
பாம்பு கடித்த விஷமகன் றேநல்ல
சேர்வைகள் சேரும்,-பல
செல்வங்கள் வந்து மகிழ்ச்சி விளைந்திடும்
தீர்வைகள் தீரும்,பலபல இன்பங்கள் சேர்ந்திடும், (பக்தி)
5. கல்வி வளரும்,-பல
காரியுங் கையுறும்,வீரிய மோங்கிடும்,
அல்ல லொழியும்-நல்ல
ஆண்மை யுண்டாகும்,அறிவு தெளிந்திடும்,
சொல்லுவதெல்லாம்-மறைச்
சொல்லினைப் போலப் பயனுள தாகும் மெய்
வல்லமை தோன்றும்,-தெய்வ
வாழ்க்கையுற்றே யிங்கு வாழ்ந்திடலாம்,உண்மைப் (பக்தி)
6. சோம்ப லழியும்-உடல்
சொன்ன படிக்கு நடக்கும்,முடி சற்றுங்
கூம்புத லின்றி-நல்ல
கோபுரம் போல நிமிர்ந்த நிலைபெறும்
வீம்புகள் போகும்-நல்ல
மேன்மையுண்டாகிப் புயங்கள் பருக்கும்,பொய்ப்
பாம்பு மடியும்-மெய்ப்
பரம் வென்று நல்ல நெறிகளுண்டாய் விடும்.  (பக்தி)
7. சந்ததி வாழும்,-வெறுஞ்
சஞ்சலங் கெட்டு வலிமைகள் சேர்ந்திடும்
இந்தப் புவிக்கே-இங்கொர்
ஈசனுண்டாயின் அறிக்கையிட் டேனுன்தன்
கந்த மலர்த்தாள்-துணை;
காதல் மகவு வளர்ந்திட வேண்டும்,என்
சிந்தை யறிந்தே-அருள்
செய்திட வேண்டும்’ என்றால் அருளெய்திடும் (பக்தி)
16.அம்மாக்கண்ணு பாட்டு

பூட்டைத் திறப்பது கையாலே-நல்ல
மனந்திறப்பது மதியாலே
பாட்டைத் திறப்பது பண்ணாலே-இன்ப
வீட்டைத் திறப்பது பெண்ணாலே.
ஏட்டைத் துடைப்பது கையாலே மன
வீட்டைத் துடைப்பது மெய்யாலே,
வேட்டை யடிப்பது வில்லாலே-அன்புக்
கோட்டை பிடிப்பது சொல்லாலே.
காற்றை யடைப்பது மனதாலே-இந்தக்
காயத்தைக் காப்பது செய்கையாலே,
சோற்றைப் புசிப்பது வாயாலே-உயிர்
துணி வுறுவது தாயோலே.  (பூட்டைத்)
17. வண்டிக்காரன் பாட்டு

அண்ணனுக்கும் தம்பிக்கும் சம்பாஷணை
காட்டு வழிதனிலே-அண்ணே!
கள்ளர் பயமிருந்தால்?-எங்கள்
வீட்டுக் குலதெய்வம்-தம்பி
வீரம்மை காக்குமடா!  1
நிறுத்து வண்டி யென்றே-கள்ளர்
நெருக்கிக் கேட்கையிலே?-எங்கள்
கறுத்த மாரியின் பேர்-சொன்னால்
காலனும் அஞ்சுமடா!.  2
18. கடமை அறிவோம்

கடமை புரிவா ரின்புறுவார்
என்னும் பண்டைக் கதை பேணோம்;
கடமை யறியோம் தொழிலறி யோம்;
கட்டென் பதனை வெட்டென் போம்;
மடமை சிறுமை துன்பம் பொய்
வருத்தம் நோவு மற்றிவை போல்
கடமை நினைவுந் தொலைத் திங்கு
களியுற் றென்றும் வாழ்குவமே.
19. அன்பு செய்தல்

இந்தப் புவிதனில் வாழு மரங்களும்
இன்ப நறுமலர்ப் பூஞ்செடிக் கூட்டமும்
அந்த மரங்களைச் சூழ்ந்த கொடிகளும்
ஔடத மூலிகை பூண்டுபுல் யாவையும்
எந்தத் தொழில் செய்து வாழ்வன வோ? 1
வேறு
மானுடர் உழாவிடினும் வித்து நடாவிடினும்
வரம்புகட்டாவிடினும் அன்றிநீர் பாய்ச்சாவிடினும்
வானுலகு நீர்தருமேல் மண்மீது மரங்கள்
வகைவகையா நெற்கள்புற்கள் மலிந்திருக்கு மன்றோ?
யானெ தற்கும் அஞ்சுகிலேன்,மானுடரே,நீவிர்
என்மதத்தைக் கைக்கொண்மின்,பாடுபடல் வேண்டா;
ஊனுடலை வருத்தாதீர்; உணவியற்கை கொடுக்கும்;
உங்களுக்குத் தொழிலிங்கே அன்பு செய்தல் கண்டீர்!  2
20. சென்றது மீளாது!

சென்றதினி மீளாது,மூட ரே!நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்!சென்றதனைக் குறித்தல் வேண்டாம்
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
தீமையெலாம் அழிந்துபோம்,திரும்பி வாரா.
21. மனத்திற்குக் கட்டளை
பேயா யுழலுஞ் சிறுமனமே!
பேணா யென்சொல் இன் றுமுதல்
நீயா ஒன்றும் நாடாதே
நினது தலைவன் யானேகாண்;
தாயாம் சக்தி தாளினிலும்
தரும மெனயான் குறிப்பதிலும்
ஓயா தேநின் றுழைத்திடு வாய்
உரைத்தேன் அடங்கி உய்யுதியால்.
22. மனப் பெண்

மனமெனும் பெண்ணே!வாழி நீ கேளாய்!
ஒன்றையே பற்றி யூச லாடுவாய்
அடுத்ததை நோக்கி யடுத்தடுத் துலவுவாய்
நன்றையே கொள்ளெனிற் சோர்ந்துகை நழுவுவாய்
விட்டுவி டென்றதை விடாது போய் விழுவாய்
தொட்டதை மீள மீளவுந் தொடுவாய்
புதியது காணிற் புலனழிந் திடுவாய்
புதியது விரும்புவாய் புதியதை அஞ்சுவாய்;
அடிக்கடி மதுவினை மணுகிடும் வண்டுபோல்
பழமையாம் பொருளிற் பரிந்துபோய் வீழ்வாய்
பழமையே யன்றிப் பார்மிசை யேதும்
புதுமை காணோமெனப் பொருமுவாய்,சீச்சீ!
பிணத்தினை விரும்புங் காக்கையே போல
அழுகுதல்,சாதல்,அஞ்சுதல் முதலிய
இழிபொருள் காணில் விரைந்ததில் இசைவாய்
அங்ஙனே,
என்னிடத் தென்றும் மாறுத லில்லா
அன்புகொண் டிருப்பாய், ஆவிகாத் திடுவாய்,
கண்ணினோர் கண்ணாய், காதின் காதாய்ப்
புலன்புலப் படுத்தும் புலனா மென்னை
உலக உருளையில் ஒட்டுற வகுப்பாய்
இன்பெலாந் தருவாய் இன்பத்து மயங்குவாய்,
இன்பமே நாடியெண் ணிலாப்பிழை செய்வாய்,
இன்பங் காத்துத் துன்பமே யழிப்பாய்
இன்பமென் றெண்ணித் துன்பத்து வீழ்வாய்,
தன்னை யறியாய், சகத்தெலாந் தொலைப்பாய்,
தன்பின் னிற்குந் தனிப்பபரம் பொருளைக்
காணவே வருந்துவாய் காணெனிற் காணாய்,
சகத்தின் விதிகளைத் தனித்தனி அறிவாய்,
பொதுநிலை அறியாய் பொருளையும் காணாய்.
மனமெனும் பெண்ணே! வாழிநீ கேளாய்!
நின்னொடு வாழும் நெறியுநன் கறிந்திடேன்;
இத்தனை நாட்போல் இனியுநின் னின்பமே
விரும்புவன்;நின்னை மேம்படுத் திடவே
முயற்சிகள் புரிவேன்;முத்தியுந் தேடுவேன்;
உன்விழிப் படாமல் என் விழிப் பட்ட
சிவமெனும் பொருளைத் தினமும் போற்றி
உன்தனக் கின்பம் ஓங்கிடச் செய்வேன்.
23. பகைவனுக்கருள்வாய்
பகைவனுக் கருள்வாய்-நன்னெஞ்சே!
பகைவனுக் கருள்வாய்!
புகை நடுவினில் தீயிருப்பதைப்
பூமியிற் கண்டோமே-நன்னெஞ்சே!
பூமியிற் கண்டோமே.
பகைநடுவினில் அன்புரு வானநம்
பரமன் வாழ்கின்றான்-நன்னெஞ்சே!
பரமன் வாழ்கின்றான்.  (பகைவ)
சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடுஞ்
செய்தியறியாயோ?-நன்னெஞ்சே!
குப்பையிலேமலர் கொஞ்சுங் குரக்கத்திக்
கொடி வளராதோ?-நன்னெஞ்சே!  (பகைவ)
உள்ள நிறைவிலோர் கள்ளம் புகுந்திடில்
உள்ளம் நிறைவாமோ?-நன்னெஞ்சே
தெள்ளிய தேனிலோர் சிறிது நஞ்சையும்
சேர்த்தபின் தேனாமோ?-நன்னெஞ்சே!   (பகைவ)
வாழ்வை நினைத்தபின் தாழ்வை நினைப்பது
வாழ்வுக்கு நேராமோ?-நன்னெஞ்சே!
தாழ்வு பிறர்க்கெண்ணத் தானழிவா னென்ற
சாதிரங் கேளாயோ?-நன்னெஞ்சே! (பகைவ)
போருக்கு வந்தங் கெதிர்த்த கவுரவர்
போலவந் தானுமவன்-நன்னெஞ்சே!
நேருக் கருச்சுனன் தேரிற் கசைகொண்டு
நின்றதுங் கண்ணனன்றோ?-நன்னெஞ்சே! (பகைவ)
தின்ன வரும்புலி தன்னையும அன்பொடு
சிந்தையிற் போற்றிடுவாய்-நன்னெஞ்சே!
அன்னை பராசக்தி யவ்வுரு வாயினள்
அவளைக் கும்பிடுவாய்-நன்னெஞ்சே!  (பகைவ)
24. தெளிவு
எல்லா மாகிக் கலந்து நிறைந்தபின்
ஏழைமை யுண்டோடா?-மனமே!
பொல்லாப் புழுவினிக் கொல்ல நினைத்தபின்
புத்தி மயக்க முண்டோ?  1
உள்ள தெலாமோர் உயிரென்று தேர்ந்தபின்
உள்ளங் குலைவ துண்டோ?-மனமே!
வெள்ள மெனப்பொழி தண்ணரு ளாழ்ந்தபின்
வேதனை யுண்டோடா?  2
சித்தி னியல்பு மதன்பெருஞ் சக்தியின்
செய்கையுந் தேர்ந்துவிட்டால்,-மனமே!
எத்தனை கோடி இடர்வந்து சூழினும்
எண்ணஞ் சிறிது முண்டோ?  3
செய்க செயல்கள் சிவத்திடை நின்றெனத்
தே னுரைத் தனனே;-மனமே!
பொய்கரு தாம லதன்வழி நிற்பவர்
பூதல மஞ்சுவரோ?  4
ஆன்ம வொளிக்கடல் மூழ்கித் திளைப்பவர்க
கச்ச முண்டோடா-மனமே?
தேன்மடை யிங்கு திறந்தது கண்டு
தேக்கித் திரிவமடா!  5
25. கற்பனையூர்
கற்பனை யூரென்ற நகருண்டாம்-அங்கு
கந்தர்வா விளையாடு வராம்
சொப்பன நாடென்ற சுடர்நாடு-அங்கு
சூழ்நதவர் யாவர்க்கும் பேருவகை. 1
திருமனை யிதுகொள்ளைப் போர்க்கப்பல்-இது
ஸ்பானியக் கடலில் யாத்திரை போம்
வெருவுற மாய்வார் பலார்கடலில்-நாம்
மீளவும் நம்மூர் திரும்புமுன்னே.  2
அந்நகர் தனிலோர் இளவரசன்-நம்மை
அன்பொடு கண்டுரை செய்திடுவான்;
மன்னவன் முத்தமிட் டெழுப்பிடவே-அவன்
மனைவியும் எழுந்தங்கு வந்திடுவாள். 3
எக்கால மும்பெரு மகிழ்ச்சி-யங்கே
எவ்வகைக் கவலையும் போரு மில்லை,
பக்குவத் தயிலை நீர்குடிபோம்-அங்குப்
பதுமைகைக் கிண்ணத்தில் அளித்திடவே. 4
இன்னமு திற்கது நேராகும்-நம்மை
யோவான் விடுவிக்க வருமளவும்,
நன்னக ரதனிடை வாழ்ந்திடுவோம்-நம்னை
நலித்திடும்பே யங்கு வாராதே.  5
குழந்தைகள் வாழ்ந்திடும் பட்டணங்காண்-அங்கு
கோல்பந்து யாவிற்கு முயிருண்டாம்
அழகிய பொமுடி யரசிகளாம்-அன்றி
அரசிளங் குமரிகள் பொம்மையெலாம். 6
செந்தோ லசுரனைக் கொன்றிடவே-அங்கு
சிறுவிற கெல்லாம் சுடர்மணிவாள்.
சந்தோஷத்துடன் செங்கலையும்-அட்டைத்
தாளையுங் கொண்டங்கு மனைகட்டுவோம். 7
கள்ளரவ் வீட்டினுட் புகுந்திடவே-வழி
காண்ப திலாவகை செய்திடுவோம்-ஓ
பிள்ளைப் பிராயத்தை இழந்தீரே!-நீர்
பின்னுமந் நிலைபெற வேண்டீரோ? 8
குழந்தைக ளாட்டத்தின் கனவையெல்லாம்-அந்தக்
கோலநன் னாட்டிடைக் காண்பீரே!
இழந்தநல் லின்பங்கள் மீட்குறலாம்-நீர்
ஏகுதிர் கற்பனை நகரினுக்கே.  9

நல்லதோர் வீணை

நல்லதோர் வீணைசெய்தே-அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி, சிவசக்தி;-எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்,
வல்லமை தாராயோ,-இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி,சிவசக்தி!-நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ? 1
விசையுறு பந்தினைப்போல்-உள்ளம்
வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்,
நசையுறு மனங்கேட்டேன்-நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,
தசையினைத் தீசுடினும்-சிவ
சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்,
அசைவறு மதிகேட்டேன்;-இவை
அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ? 2

காணி நிலம் வேண்டும்

காணி நிலம் வேண்டும்-பராசக்தி
காணி நிலம் வேண்டும்;-அங்கு,
தூணில் அழகியதாய்-நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய்-அந்தக்
காணி நிலத்திடையே-ஓர் மாளிகை
கட்டித் தரவேணும்;-அங்கு,
கேணி யருகினிலே-தென்னைமரம்
கீற்று மிளநீரும்   1
பத்துப் பன்னிரண்டு-தென்னைமரம்
பக்கத்திலே வேணும்;-நல்ல
முத்துச் சுடர்போலே-நிலாவொளி
முன்புவர வேணும்?அங்கு
கத்துங் குயிலோசை-சற்றே வந்து
காதிற்பட வேணும்;-என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே-நன்றாயிளந்
தென்றல்வர வேணும்.  2
பாட்டுக் கலந்திடவே-அங்கேயொரு
பத்தினிப் பெண்வேணும்;-எங்கள்
கூட்டுக் களியினிலே-கவிதைகள்
கொண்டுதர வேணும்;-அந்தக்
காட்டு வெளியினிலே,-அம்மா!நின்தன்
காவலுற வேணும்;என்தன்
பாட்டுத் திறத்தாலே-இவ்வையத்தைப்
பாலித்திட வேணும்.  3

சிவசக்தி


இயற்கையென் றுனைரைப்பார்-சிலர்
இணங்கும்ஐம் தங்கள் என்றிசைப்பார்:
செயற்கையின் சக்தியென்பார்-உயித்
தீயென்பார் அறிவென்பார் ஈசனென்பார்;
வியப்புறு தாய்நினக்கே-இங்கு
வேள்விசெய் திடுமெங்கள்ஓம்என்னும்
நயப்படு மதுவுண்டே?-சிவ
நாட்டியங் காட்டிநல் லருள்புரிவாய் 1
அன்புறு சோதியென்பார்-சிலர்
ஆரிருட் பாளின் றுனைப்புகழ்வார்:
இன்பமென் றுரைத்திடுவார்-சிலர்
எண்ணருந் துன்பமென் றுனைஇசைப்பார்;
புன்பலி கொண்டுவந்தோம்-அருள்
பூண்டெமைத் தேவர்தங் குலத்திடுவாய்
மின்படு சிவசக்தி எங்கள்
வீரைநின் திருவடி சரண்புகுந்தோம். 2
உண்மையில அமுதாவாய்;-புண்கள்
ஒழித்திடு வாய்களி, உதவிடுவாய்!
வண்மைகொள் உயிர்ச்சுடராய்-இங்கு
வளர்ந்திடு வாய்என்றும் மாய்வதிலாய்;
ஒண்மையும் ஊக்கமுந்தான்-என்றும்
ஊறிடுந் திருவருட் சுனையாவாய்;
அண்மையில் என்றும் நின்றே-எம்மை
ஆதரித் தருள்செய்யும் விரதமுற்றாய் 3
தெளிவுறும் அறிவினைநாம்-கொண்டுங
சேர்த்தனம்,நினக்கது சோமரசம்;
ஒளியுறும் உயிர்ச்செடியில்-இதை
ஓங்கிடு மதிவலி தனிற்பிழிந்தோம்;
களியுறக் குடித்திடுவாய்-நின்றன்
களிநடங் காண்பதற் குளங்கனிந்தோம்;
குளிர்சுவைப் பாட்டிசைத்தே-சுரர்
குலத்தினிற் சேர்ந்திடல் விரும்புகின்றோம் 4
அச்சமும் துயரும் என்றே-இரண்டு
அசுரர்வந் தெமையிங்கு சூழ்ந்துநின்றார்.
துச்சமிங் கிவர்படைகள்-பல
தொல்லைகள் கவலைகள் சாவுகளாம்;
இச்சையுற் றிவரடைந்தார்-எங்கள்
இன்னமு தைக்கவர்ந் தேகிடவே,
பிச்சையிங் கெமக்களித்தாய்-ஒரு
பெருநகர் உடலெனும் பெயரின தாம் 5
கோடி மண் டபந்திகழும்-திறற்
கோட்டையிங் கிதையவர் பொழுதனைத்தும்
நாடிநின் றிடர்புரிவார்-உயிர்
நதியினைத் தடுத்தெமை நலித்திடுவார்.
சாடுபல் குண்டுகளால்-ஒளி
சார்மதிக் கூடங்கள் தகர்த்திடுவார்;
பாடிநின் றுனைப்புகழ்வோம்-எங்கள்
பகைவரை அரித்தெமைக் காத்திடுவாய்! 6
நின்னருள் வேண்டுகின்றோம்-எங்கள்
நீதியுந் தர்மமும் நிலைப்பதற்கே
பொன்னவிர் கோயில்களும்-எங்கள்
பொற்புடை மாதரும் மதலையரும்
அன்னநல் லணிவயல்கள்-எங்கள்
ஆடுகள் மாடுகள் குதிரைகளும்,
இன்னவை காத்திடவே அன்னை
இணைமலர்த் திருவடி துணைபுகந்தோம். 7
எம்முயி ராசைகளும்-எங்கள்
இசைகளும் செயல்களும் துணிவுகளும்,
செம்மையுற் றிடஅருள்வாய் நின்தன்
சேவடி அடைக்கலம் புகுந்துவிட்டோம்
மும்மையின் உடைமைகளும்-திரு
முன்னரிட் டஞ்சலி செய்துநிற்போம்;
அம்மைநற் சிவசக்தி-எமை
அமரர்தம் நிலையினில் ஆக்கிடுவாய் 8

5. முருகன் பாட்டு

வீரத் திருவிழிப் பார்வையும்-வெற்றி
வேலும் மயிலும்என் முன்னின்றே-
எந்த நேரத் திலும்என்னைக் காக்குமே;-அன்னை
நீலி பராசக்தி தண்ணருட்-கரை
ஓரத்திலே புணை கூடுதே;-கந்தன்
ஊக்கத்தை என்னுளம் நாடுதே;-மலை
வாரத் திலேவிளை யாடுவான்-என்றும்
வானவர் துன்பத்தைச் சாடுவான்.  1
வேடர் கனியை விரும்பியே-தவ
வேடம் புனைந்து திரிகுவான்;-தமிழ்
நாடு பெரும்புகழ் சேரவே முனி
நாதனுக் கிம்மொழி கூறுவான்;-சுரர்
பாடு விடிந்து மகிழ்ந்திட-இருட்
பார மலைகளைச் சீறுவான்;-மறை
யேடு தரித்த முதல்வனும்-குரு
என்றிட மெய்ப்புகழ் ஏறுவான்.   2
தேவர் மகளை மணந்திடத்-தெற்குத்
தீவி லசுரனை மாய்த்திட்டான்;மக்கள்
யாவருக் குந்தலை யாயினான்;மறை
அர்த்த முணர்த்துநல் வாயினான்;தமிழ்ப்
பாவலர்க் கின்னருள் செய்குவான்;-இந்தப்
பாரிவ்ல அறமழை பெய்குவான்;-நெஞ்சின்
ஆவ லறிந்தருள் கூட்டுவான்;-நித்தம்
ஆண்மையும் வீரமும் ஊட்டுவான்.  3
தீவளர்த் தேபழ வேதியர்-நின்தன்
சேவகத் தின்புகழ் காட்டினார்;-ஒளி
மீவள ருஞ்செம்பொன் நாட்டினார்-நின்றன்
மேன்மையி னாலறம் நாட்டினார்!;-ஐய!
நீவள ருங்குரு வெற்பிலே-வந்து
நின்றுநின் சேவகம் பாடுவோம்-வரம்
ஈவள் பராசக்தி யன்னைதான்-உங்கள்
இன்னருளே யென்று நாடுவோம்-நின்றன்  4

4. கிளி விடு தூது

பல்லவி
சொல்ல வல்லாயோ?-கிளியே!
சொல்லநீ வல்லாயோ?-
அனுபல்லவி
வல்ல வேல்முரு கன்தனை-இங்கு
வந்து கலந்து மகிழ்ந்து குலாவென்று (சொல்ல)
சரணங்கள்
1. தில்லை யம்பலத்தே-நடனம்
செய்யும் அமரர்பிரான்-அவன்
செல்வத் திருமகனை இங்கு வந்து
சேர்ந்து கலந்து மகிழ்ந்திடு வாயென்று (சொல்ல)
2. அல்லிக் குளத்தருகே-ஒரு நாள்
அந்திப் பொழுதினிலே-அங்கோர்
முல்லைச் செடியதன்ப்ற்-செய்த வினை
முற்றும் மறந்திடக் கற்றதென் னேயென்று (சொல்ல)
3. பாலை வனத்திடைடே-தனைக் கைப்
பற்றி நடக்கையிலே-தன் கை
வேலின் மிசையாணை-வைத்துச் சொன்ன
விந்தை மொழிகளைச் சிந்தைசெய் வாயென்று (சொல்ல)

3. வேலன் பாட்டு

ராகம்-புன்னாகவராளி   தாளம்-திஸ்ர ஏகம்
வில்லினை யொத்த புருவம் வளைத்தனை;
வேலவா!-அங்கொர்
வெற்பு நொறுங்கிப் பொடிப்பொடி
யானது, வேலவா!
சொல்லினைத் தேனிற் குழைத்துரைப் பாள்சிறு
வள்ளியைக்-கண்டு
சொக்கி மரமென நின்றனை
தென்மலைக் காட்டிலே
கல்லினை யொத்த வலிய மனங்கொண்ட
பாதகன்-சிங்கன்
கண்ணிரண் டாயிரங் காக்கைக்
கிரையிட்ட வேலவா!
பல்லினைக் காட்டிவெண் முத்தைப் பழித்திடும்
வள்ளியை-ஒரு
பார்ப்பனக் கோலந் தரித்துக்
கரந்தொட்ட வேலவா!   1
வெள்ளலைக் கைகளைக் கொட்டி முழங்குங்
கடலினை-உடல்
வெம்பி மறுகிக் கருகிப்
புகைய வெருட்டினாய்.
கிள்ளை மொழிச்சிறு வள்ளி யெனும்பெயர்ச்
செல்வத்தை-என்றும்
கேடற்ற வாழ்வினை-இன்ப
விளக்கை மருவினாய்.
கொள்ளை கொண்டே அமராவதி வாழ்வு
குலைத்தவன்-பானு
கோபன் தலைபத்துக் கோடி
துணுக்குறக் கோபித்தாய்.
துள்ளிக் குலாவித் திரியுஞ் சிறுவன
மானைப்போல்-தினைத்
தோட்டத்திலேயொரு பெண்ணை
மணங்கொண்ட வேலவா!   2
ஆறு சுடர்முகங் கண்டுவிழிக்கின்ப
மாகுதே;-கையில்
அஞ்ச லெனுங்குறி கண்டு
மகிழ்ச்சியுண் டாகுதே,
நீறு படக்கொடும் பாவம் பிணிபசி
யாவையும்-இங்கு
நீக்கி அடியரை நித்தமுங்
காத்திடும் வேலவா!
கூறு படப்பல கோடி யவுணரின்
கூட்டத்தைக்-கண்டு
கொக்கரித் தண்டங் குலுங்க
நகைத்திடுஞ் சேவலாய்!
மாறு படப்பல வேறு வடிவொடு
தோன்றுவாள்-எங்கள்
வைரனிவ பெற்ற பெருங்கன
லே.வடி வேலவா!   3

2. முருகா! முருகா!

ராகம்-நாட்டைக்குறிஞ்சி)  தாளம்-ஆதி
பல்லவி
முருகா!-முருகா!-முருகா!
சரணங்கள்
1. வருவாய் மயில்மீ தினிலே
வடிவே லுடனே வருவாய்!
தருவாய் நலமும் தகவும் புகழும்
தவமும் திறமும் தனமும் கனமும் (முருகா)
2. அடியார் பலரிங் குளரே
அவரை விடுவித் தருள்வாய்!
முடியா மறையின் முடிவே!அசுரர்
முடிவே கருதும் வடிவே லவனே! (முருகா)
3. சுருதிப் பொருளே,வருக!
துணிவே,கனலே,வருக!
கருதிக் கருதிக் கவலைப் படுவார்
கவலைக் கடலைக் கடியும் வடிவேல். (முருகா)
4. அமரா வதிவாழ் வுறவே
அருள்வாய்!சரணம்,சரணம்
குமரா,பிணியா வையுமே சிதறக்
குமுறும் சுடர்வே லவனே,சரணம்! (முருகா)
5. அறிவா கியகோ யிலிலே
அருளா கியதாய் மடிமேல்
பொறிவே லுடனே வளர்வாய்!அடியார்
புதுவாழ் வுறவே புவிமீ தருள்வாய் (முருகா)
6. குருவே!பரமன் மகனே!
குகையில் வளருங் கனலே!
தருவாய் தொழிலும் பயனும் அமரர்
சமரா திபனே! சரணம்!சரணம்! (முருகா)

1. விநாயகர் நான்மணி மாலை

வெண்பா
1. (சக்தி பெறும்) பாவாணர் சாற்றுபொருள் யாதெனினம்
சித்திபெறச் செய்வாக்கு வல்லமைக்கா-அத்தனே!
(நின்)தனக்குக் காப்புரைப்பார்;நின்மீது செய்யும் நூல்
இன்றிதற்கும் காப்புநீ யே.
கலித்துறை
2. நீயே சரணம் நினதரு ளேசர ணஞ்சரணம்
நாயேன் பலபிழை செய்து களைத்துனை நாடிவந்தேன்;
வாயே திறவாத மெனத் திருந்துன் மலரடிக்குத்
தீயே நிகர்த்தொளி வீசுந் தமிழ்க்கவி செய்குவனே.
விருத்தம்
3. செய்யுந் தொழிலுன் தொழிலேகாண்
சீர்பெற் றிடநீ அருள்செய் வாய்.
வையந் தனையும் வெளியினையும்
வானத்தையும்முன் படைத்தவனே!
ஐயா!நான்மு கப்பிரமா!
யானை முகனே!வாணிதனைக்
கையா லணைத்துக் காப்பவனே!
கமலா சனத்துக் கற்பகமே!
அகவல்
4. கற்பக விநாயகக் கடவுளே,போற்றி!
சிற்பர மோனத் தேவன் வாழ்க!
வாரண முகத்தான் மலர்த்தாள் வெல்க!
ஆரண முகத்தான் அருட்பதம் வெல்க!
படைப்புக் கிறையவன், பண்ணவர் நாயகன்  5
இந்திர குரு,எனதுஇதயத் தொளிர்வான்
சந்திர மவுலித் தலைவன் மைந்தன்
கணபதி தாளைக் கருத்திடை வைப்போம்;
குணமதிற் பலவாம்;கூறக் கேளீர்!
உட்செவி திறக்கும்;அகக்கண் ஒளிதரும்;  10
அக்கினி தோன்றும்;ஆண்மை வலியுறும்;
திக்கெலாம் வென்று ஜெயக்கொடி நாட்டலாம்.
கட்செவி தன்னைக் கையிலே யெடுக்கலாம்
விடத்தையும் நோவையும் வெம்பகை யதனையும்
துக்கமென் றென்ணித் துயரிலா திங்கு  15
நிச்சலும் வாழ்ந்து நிலைபெற் றோங்கலாம்;
அச்சந் தீரும்,அமுதம் விளையும்;
வித்தை வளரும்;வேள்வி ஓங்கும்;
அமரத் தன்மை எய்தவும்
இங்கு நாம் பெறலாம்;இஃதுணர் வீரே.  20
வெண்பா
5. (உண)ர்வீர், உணர்வீர்,உலகத்தீர்!இங்குப்
(புண)ர்வீர்,அமரருறும் போக(ம்)-கண(ப)தியைப்
(போத வடிவாகப் போற்றிப் பணிந்திடுமின்!
காதலுடன் கஞ்சமலர்க் கால்).
கலித்துறை
6. காலைப் பிடித்தேன் கணபதி!நின்பதங் கண்ணி லொற்றி
நூலைப் பலபல வாகச் சமைத்து நொடிப்பொழு(தும்)
வேலைத் தவறு நிகழாது நல்ல விகைள் செய்துன்
கோலை மனமெனும் நாட்டின் நிறுத்தல் குறியெனக்கே.
விருத்தம்
7. எனக்கு வேண்டும் வரங்களை
இசைபேன் கேளாய் கணபதி!
மனத்திற் சலன மில்லாமல்,
மதியில் இருளே தோன்றாமல்,
நினைக்கும் பொழுது நின்மவுன
நிலைவந் திடநீ செயல்வேண்டும்.
கனகுஞ் செல்வம்,நூறுவயது:
இவையும் தரநீ கடவாயே. 20
அகவல்
8. கடமை யாவன; தன்னைக் கட்டுதல்
பிறர்துயர் தீர்த்தல்,பிறர் நலம் வேண்டுதல்
வீநாயக தேவனாய், வேலுடைக் குமரனாய்,
நாரா யணனாய், நதிச்சடை முடியனாய்
பிறநாட் டிருப்போர் பெயர்பல கூறி,  5
அல்லா!யெஹோவா!எனத்தொழு தன்புறும்
தேவருந் தானாய்,திருமகள்,பாரதி,
உமையெனுந் தேவியர் உகந்தவான் பொருளாய்,
உலகெலாங் காக்கும் ஒருவனைப் போற்றுதல், 10
இந்நான் கேயிப் பூமி லெவாக்கும்
கடமை யெனப்படும்;பயனிதில் நான்காம்;
அறம்;பொருள்,இன்பம்,வீடெனு முறையே,
தன்னை யாளுஞ் சமர்த்தெனக் கருள்வாய்,
மணக்குள விநாயகா!வான்மறைத் தலைவா!
தனைத்தான் ஆளுந் தன்மைநான் பெற்றிடில். 15
எல்லாப் பயன்களும் தாமே எய்தும்,
அசையா நெஞ்சம் அருள்வாய்; உயிரெலாம்
இன்புற் றிருக்க வேண்டிநி இருதாள்
பணிவதே தொழிலெனக் கொண்டு
கணபதி தேவா! வாழ்வேன் களித்தே.  20
வெண்பா
9. களியுற்று நின்று கடவுளே!இங்குப்
பழியற்று வாழ்ந்திடக்கண் பார்ப்பாய்-ஒளிபெற்றுக்
கல்வி பலதேர்ந்து கடமையெலாம் நன்காற்றித்
தொல்விக்கட் டெல்லாம் துறந்து.
கலித்துறை
10. துறந்தார் திறமை பெரிததி னும்பெரி தாகுமிங்குக்
குறைந்தா ரைக்காத் தெளியார்க் குணவீந்து குலமகளும்
அறந்தாங்கு மக்களும் நீடூழி வாழ்கென அண்ட மெலாம்
சிறந்தாளும் நாதனைப் போற்றிடுந் தொண்டர் செயுந்தவமே.
விருந்தம்
11. தவமே புரியும் வகைய றியேன்,
சலியா துறநெஞ் சறியாது,
சிவமே நாடிப் பொழுதனைத்துந்
தியங்கித் தியங்கி நிற்பேனை
நவமா மணிகள் புனைந்தமுடி
நாதா!கருணா லயனே!தத்
துவமா கியதோர் பிரணவமே!
அஞ்செல் என்று சொல்லதியே   5
அகவல்
12. சொல்லினுக் கரியனாய்ச் சூழ்ச்சிக் கரியனாய்ப்
பல்லுரு வாகிப் படர்ந்தவான் பொருளை,
உள்ளுயி ராகி உலகங் காக்கும்
சக்தியே தானாந் தனிச்சுடர்ப் பொருளை,
சக்தி குமாரனைச் சந்திர மவுலியைப்  5
பணிந்தவ னுருவிலே பாவனை நாட்டி,
ஓமெனும் பொருளை உளத்திலே நிறுத்தி,
சக்தியைக் காக்குந் தந்திரம் பயின்று
யார்க்கும் எளியனாய், யார்க்கும் வலியனாய்,
யார்க்கும் அன்பனாய்,யார்க்கும் இனியனாய்,  10
வாழ்ந்திடட விரும்பினேன்;மனமே!நீயதை
ஆழ்ந்து கருதிஆய்ந் தாய்ந்து பலமுறை
சூழ்ந்து, தெளிந்து, பின் சூழ்ந்தார்க் கெல்லாம்
கூறிக் கூறிக் குறைவறத் தேர்ந்து,
தேறித் தேறிநான் சித்திபெற் றிடவே.  15
நின்னா லியன்ற துணைபுரி வாயேல்,
பொன்னால் உனக்கொரு கோயில் புனைவேன்;
மனமே!எனைநீ வாழ்வித் திடுவாய்!
வீணே யுழலுதல் வேண்டா,
சக்தி குமாரன் சரண்புகழ் வாயே!  20
வெண்பா
13. புகழ்வோம் கணபதிநின் பொற்கழலை நாளும்
திகழ்வோம் பெருங்கீர்த்தி சேர்ந்தே-இகழ்வோமே
புல்லரக்கப் பாதகரின் பொய்யெலாம்;ஈங்கிதுகாண்
வல்லபைகோன் தந்த வரம்.
கலித்துறை
14. வரமே நமக்கிது கண்டீர் கவலையும் வஞ்சனையும்
கரவும் புலைமை விருப்பமும் ஐயமும காய்ந்தெறிந்து,
சிரமீது எங்கள் கணபதி தாள்மலர் சேர்த்தெமக்குத்
தரமேகொல் வானவர்எனறுளத் தேகளி சார்ந்ததுவே
விருத்தம்
15. சார்ந்து நிற்பாய் எனதுளமே,
சலமும் கரவும் சஞ்சலமும்
பேர்ந்து பரம சிவாநந்தப்
பேற்றை நாடி நாள்தோறும்
ஆர்ந்த வேதப் பொருள்காட்டும்
ஐயன்,சக்தி தலைப்பிள்ளை,
கூர்ந்த இடர்கள் போக்கிடுநங்
கோமான் பாதக் குளிர்நிழலே
அகவல்
16. நிழலினும் வெயிலினும் நேர்ந்தநற் றுணையாய்த்
தழலினும் புனலினும் அபாயந் தவிர்த்து
மண்ணினும் காற்றினும் பானினும் எனக்குப்
பகைமை யொன்றின்றிப் பயந்தவிர்த் தாள்வான், 5
மெளன வாயும் வரந்தரு கையும்,
உடையநம் பெருமான் உணர்விலே நிற்பான்,
ஓமெனும் நிலையில் ஒளியாத் திகழ்வான்,
வேத முனிவர் விரிவாப் புகழ்ந்த
பிருஹஸ் பதியும் பிரமனும் யாவும்  10
தானே யாகிய தனிமுதற் கடவுள்,
யானென தற்றார் ஞானமே தானாய்
ுக்தி நிலைக்க மலவித் தாவான்,
சத்தெனத் தத்தெனச் சதுர்மறை யாளர்
நித்தமும் போற்றும் நிர்மலக் கடவுள்,  15
ஏழையர்க் கெல்லாம் இரங்கும் பிள்ளை,
வாழும் பிள்ளை, மணக்குளப் பிள்ளை,
வெள்ளாடை தரித்த விட்டுணு வென்று
செப்பிய மந்திரத் தேவனை
முப்பொழு தேத்திப் பணிவது முறையே.  20
வெண்பா
17. முறையே நடப்பாய், முழுமூட நெஞ்சே!
இறையேனும் வாடாய் இனிமேல்-கறையுண்ட
கண்டன் மகன்வேத காரணன் சக்திமகன்
தொண்டருக் குண்டு துணை.
கலித்துறை
18. துணையே! எனதுயிருள்ளே யிருந்து கடர்விடுக்கும்
மணியே! எனதுயிர் மன்னவனே! என் றன் வாழ்வினுக்கோர்
அணியே! எனுள்ளத்தி லாரமு தே! என தற்புதமே!
இணையே துனக்குரைபேன், கடைவானில் எழுஞ்சுடரே!
விருத்தம்
19. சுடரே போற்றி! கணத்ததேவர்
துரையே போற்றி! எனக்கென்றும்
இடரே யின்றிக் காத்திடுவாய்,
எண்ணாயிரங்கால் முறையிட்டேன்!
படர்வான் வெளியிற் பலகோடி
கோடி கோடிப் பல்கோடி
இடறா தோடும் அண்டங்கள்
இசைத்தாய், வாழி இறையவனே!
அகவல்
20. இறைவி இறைவன் இரண்டும்ஒன் றாகித்
தாயாய்த் தந்தையாய், சக்தியும் சிவனுமாய்
உள்ளொளி யாகி உலகெலாந் திகழும்
பரம்பொரு ளேயோ! பரம்பொரு ளேயோ!
ஆதி மூலமே! அனைத்தையும் காக்கும்  5
தேவா தேவா! சிவனே! கண்ணா
வேலா! சாத்தா! விநாயகா! மாடா!
இருளா! சூரியா! இந்துவே! சக்தியே!
வாணீ! காளீ! மாமக ளேயோ!
ஆணாய்ப் பெண்ணாய் அலியாய், உள்ளது  10
யாதுமாய் விளங்கும் இயற்கை தெய்வமே!
வேதச் சுடரே, மெய்யாங் கடவுளே!
அபயம் அபயம் அபயம் நான் கேட்டேன்;
நோவு வேண்டேன், நூற் றாண்டு வேண்டினேன்,
அச்சம் வேண்டேன், அமைதி வேண்டினேன்;  15
உடைமை வேண்டேன், உன்துணை வேண்டினேன்;
வேண்டா தனைத்தையும் நீக்கி
வேண்டிய தனைத்தையும் அருள்வதுன் கடனே.
வெண்பா
21. கடமைதா னேது!கரிமுகனே! வையத்
திடம்நு யருள்செய்தாய், எங்கள்-உடைமைகளும்
இன்பங் களுமெல்லாம் ஈந்தாய்நீ யாங்களுனக்கு
என் புரிவோம் கைம்மா றியம்பு?
கலித்துறை
22. இயம்பு மொழிகள் புகழ்மறை யாகும்;எடுத்தவினை
பயன்படும்; தேவர் இருபோதும் வந்து பதந்தருவார்;
அயன்பதி முன்னோன் கணபதி சூரியன் ஆனைமுகன்
வியன்புகழ் பாடிப் பணிவார் தமக்குறும் மேன்மைகளே.
விருத்தம்
23. மேமைப் படுவாய் மனமே! கேள்
விண்ணின் இடிமுன் விழுந்தாலும்,
பான்மை தவறி நடுங்காதே,
பயத் தாலேதும் பயனில்லை;
யான்முன் னுரைத்தேன் கோடிமுறை,
இன்னுங் கோடி மறைசொல்வேன்,
ஆன்மா வான கணபதியின்
அருளுண்டு அச்சம் இல்லையே.
அகவல்
24. அச்ச மில்லை அமுங்குத லில்லை.
நடுங்குத லில்லை நாணுத லில்லை,
பாவ மில்லை பதுங்குத லில்லை
ஏது நேரினும் இடர்பட மாட்டோம்;
அண்டஞ் சிதறினால் அஞ்ச மாட்டோம்; 5
கடல்பொங்கி எழுந்தாற் கலங்கமாட்டோம்;
யார்க்கும் அஞ்சோம் எதற்கும் அஞ்சோம்;
எங்கும் அஞ்சோம் எதற்கும் அஞ்சோம்;
வான முண்டு, மாரி யுண்டு;
ஞாயிறும் காற்றும் நல்ல நீரும்   10
தீயும் மண்ணும் திங்களும் மீன்களும்
உடலும் அறிவும் உயிரும் உளவே;
தின்னப் பொருளும் சேர்ந்திடப் பெண்டும்,
கேட்கப் பாட்டும், காணநல் லுலகும்,
களிதுரை செய்யக் கணபதி பெயரும்  15
என்றுமிங் குளவாம்; சலித்திடாய்;ஏழை
நெஞ்சே!வாழி!நேர்மையுடன் வாழி!
வஞ்சகக் கவலைக் கிடங்கொடேல் மன்னோ!
தஞ்ச முண்டு கொன்னேன்
செஞ்சுடர்த் தேவன் சேவடி நமக்கே.  20
வெண்பா
25. நமக்குத் தொழில்கவிதை, நாட்டிற் குழைத்தல்
இமைக்பொழுதுஞ் சோராதிருத்தல்-உமைக்கினிய
மைந்தன் கணநாதன் நங்குடியை வாழ்விப்பான்;
சிந்தையே! இன்மூன்றும் செய்.
கலித்துறை
26. செய்யுங் கவிதை பராசக்தி யாலே செயப்படுங்காண்,
வையத்தைக் காப்பவள் அன்னை சிவசக்தி வண்மையெலாம்
ஐயத்தி லுந்துரி தத்திலுஞ் சிந்தி யழிவதென்னே!
பையத் தொழில் புரி நெஞ்சே!கணாதிபன் பக்திகொண்டே.
விருத்தம்
27. பக்தி யுடையார் காரியத்திற்
பதறார் மிகுந்த பொறுமையுடன்
வித்து முளைக்குந் தன்மைபோல்
பெல்லச் செய்து பயனடைவார்
சக்தி தொழிலே அனைத்துமெனிற்
சார்ந்த நமக்குச் சஞ்சலமேன்?
வித்தைக் கிறவா!கணநாதா!
மேன்மைத் தொழிலிற் பணியெனையே.
அகவல்
28. எனைநீ காப்பாய், யாவுமாந் தெய்வமே!
பொறுத்தா ரன்றோ பூமி யாள்வார்?
யாவும்நீ யாயின் அனைத்தையும் பொறுத்தல்
செவ்விய நெறி, அதில் சிவநிலை பெறலாம்;
பொங்குதல் போக்கிப் பொறையெனக் கீவாய்;  5
மங்கள குணபதி;மணக்குளக் கணபதி!
நெஞ்சக் கமலத்து நிறைந்தருள் புரிவாய்;
அகல்விழி உமையாள் ஆசை மகனே!
நாட்டினைத் துயரின்றி நன்கமைத் திடுவதும்,
உளமெனும் நாட்டை ஒருபிழை யின்றி  10
ஆள்வதும்,பேரொளி ஞாயிறே யனைய
சுடர்தரு மதியொடு துயரின்றி வாழ்தலும்
நோக்கமாக் கொண்டு நின்பதம் நோக்கினேன்
காத்தருள் புரிக, கற்பக விநாயகா!  15
கோத்தருள் புரிந்த குறிப்பரும் பொருளே!
அஞ்குச பாசமும கொம்பும் தரித்தாய்
எங்குல தேவா போற்றி!
சங்கரன் மகனே! தாளிணை போற்றி!  20
வெண்பா
29. போற்றி! கலியாணி புதல்வனே! பாட்டினிலே
ஆற்ற லருளி அடியேனைத்-தேற்றமுடன்
வாணிபதம் போற்றுவித்து வாழ்விப்பாய்! வாணியருள்
வீணையொலி என்நாவில் விண்டு
கலித்துறை
30. விண்டுரை செங்குவள் கேளாய் புதுவை விநாயகரே!
தொண்டுள தன்னை பராசக்திக் கென்றுந் தொடர்ந்திடுவேன்;
பண்டைச் சிறுமைகள் போக்கி என்னாவிற் பழுத்தகவைத்
தெண்தமிழ்ப் பாடல் ஒருகோடி மேலிடச் செய்குவையே.
விருத்தம்
31. செய்யாள் இனியாள் ஸ்ரீதேவி
செந்தா மரையிற் சேர்ந்திருப்பாள்,
கையா ளெனநின் றடியேன்செய்
தொழில்கள் யாவும் கைகலந்து
செய்வாள்;புகழ்சேர் வாணியுமென்
னுன்ளே நின்று தீங்கவிதை
பெய்வாள்,சக்தி துணைபுரிவாள்;
பிள்ளாய்!நின்னைப் பேசிடிலே.
அகவல்
32. பேசாப் பொருளைப் பேசநான் துணிந்தேன்;
கேட்கா வரத்தைக் கேட்கநான் துணிந்தேன்;
மண்மீ துள்ள மக்கள், பறவைகள்,
விலங்குகள், பூச்சிகள்,புற்பூண்டு,மரங்கள்;
யாவுமென் வினையால் இடும்பை தீர்ந்தே,  5
இன்பமுற் றன்புடன் இணங்கி வாழ்ந்திடவே
செய்தல் வேண்டும், தேவ தேவா!
ஞானா காசத்து நடுவே நின்றுநான்
பூமண்ட லத்தில் அன்பும் பொறையும்
விளங்குக!துன்பமும்,மிடிமையம்,நோவும்.  10
சாவும் நீங்கிச் சார்ந்தபல் லுயிசெலாம்
இன்புற்று வாழ்கஎன்பேன்!இதனை நீ
திருச்செவி கொண்டு திருவுளம் இரங்கி,
அங்ஙனே யாகுக என்பாய்,ஐயனே!
இந்நாள், இப்பொழு தெனக்கிவ் வரத்தினை 15
அருள்வாய்;ஆதி மூலமே! அநந்த
சக்தி குமாரனே! சந்திர மவுலீ!
நித்தியப் பொருளே! சரணம்
சரணம் சரணம் சரணமிங் குனக்கே.
வெண்பா
33. உனக்கேஎன் ஆவியும் உள்ளமும் தந்தேன்;
மனக்கேதம் யாவினைம் மாற்றி-எனக்கேநீ,
நீண்டபுகழ் வாணாள் நிறைசெல்வம் பேரழகு
வேண்டுமட்டும் ஈவாய் விரைந்து. 33
கலித்துறை
34. விரைந்துன் திருவுள மென்மீ திரங்கிட வேண்டுமையா!
குரங்கை விடுத்துப் பகைவரின் தீவைக்கொழுத்தியவன்
அரங்கத் திலே திரு மாதுடன் பள்ளிகொண்டான்மருகா!
வரங்கள் பொழியும் முகிலே!என் னுள்ளத்து வாழ்பவனே!
விருத்தம்
35. வாழ்க புதுவை மணக்குடத்து
வள்ளல் பாத மணிமலரே!
ஆழ்க உள்ளம் சலனமிலாது!
அகண்ட வெளிக்கண் அன்பினையே
சூழ்க! துயர்கள் தொலைந்திடுக
தொலையா இன்பம் விளைந்திடுக!
வீழ்க கலியின் வலியெல்லாம்!
கிருத யுகந்தான் மேவுகவே.
அகவல்
36. மேவி மேவித் துயரில் வீழ்வாய்,
எத்தனை கூறியும் விடுதலைக் கிசையாய்;
பாவி நெஞ்சே! பார்மிசை நின்னை
இன்புறச் செய்வேன்;எதற்குமினி அஞ்சேல்;
ஐயன் பிள்ளை(யார்)அருளாள்ல உனக்குநான்  5
அபயமிங் களித்தேன்....நெஞ்(சே)
நினக்குநான் உரைத்தன நிலைநிறுத்தி(டவே)
தீயடைக் குதிப்பேன்,கடலுள் வீழ்வேன்,
வென்விட முண்பேன்;மேதினி யழிப்பேன்;
ஏதுஞ் செய்துனை இடரின் றிக் காப்பேன்;  10
மூட நெஞ்சே! முப்பது கோடி
முறையுனக் குரைத்தேன்,இன்னும் மொழிவேன்;
தலையிலிடி விழுந்தால் சஞ்சலப் படாதே;
ஏது நிகழினும்நமக்கென்? என்றிரு;
பராசக்தி யுளத்தின் படியுலகம் நிகழும்  15
நமக்கேன் பொறுப்பு? நான் என்றோர் தனிப்பொருள்
இல்லை;நானெனும் எண்ணமே வெறும்பொய்
என்றான் புத்தன்;இறைஞ்சுவோம் அவன்பதம்,
இனியெப் பொழுதும் உரைத்திடேன்,இதை நீ
மறவா திருப்பாய், மடமை நெஞ்சே!  20
கவலைப் படுதலே கருநரகு, அம்மா!
கவலையற் றிருத்தலே முக்தி;
சினொரு மகனிதை நினக்கருள் செய்கேவே!
வெண்பா
37. செய்கதவம்!செய்கதவம்!நெஞ்சே!தவம் செய்தால்,
எய்த விரும்பியதை எய்தலாம்;-வையகத்ல்
அன்பிற் சிறந்த தவமில்லை;அன்புடையார்
இன்புற்று வாழ்தல் இயல்பு.
கலித்துறை
38. இயல்பு தவறி விருப்பம் விளைதல் இயல்வதன்றாம்
செயலிங்கு சித்த விருப்பிப் பின்பற்றும்;சீர்மிகவே
பயிலு நல்லன்பை இயல்பெனக் கொள்ளுதிர்பாரிலுள்ளீர்!
முயலும் விகைள் செழிக்கும் விநாயகன் மொய்ம்பினிலே.
விருத்தம்
39. மொய்க்குங் கவலைப் பகைபோக்கி,
முன்னோன் ருளைத் துணையாக்கி,
எய்க்கும் நெஞ்சை வலியுறுத்தி,
உடலை இரும்புக் கிணையாக்கிப்
பொய்க்குங் கலியை நான்கொன்று
பூலோ கத்தார் கண்முன்னே,
மெய்க்குங் கிருத யுகத்தினையே
கொணர்வேன், தெய்வ விதியிஃதே
அகவல்
40. விதியே வாழி!விநாயகா வாழி!
பதியே வாழி! பரமா வாழி!
சிதைவினை நீக்கும் தெய்வமே, போற்றி!
புதுவினை காட்டும் புண்ணியா,போற்றி!
மதியினை வளர்க்கும் மன்னே,போற்றி! 5
இச்சையும் கிரியையும் ஞானமும் என்றாக்கும்
மூல சக்தியின் முதல்வா போற்றி!
பிறைமதி சூடிய பெருமான் வாழி!
நிறைவினைச் சேர்க்கம் நிர்மலன் வாழி!
காலம் மன்றையும் கடந்தான் வாழி! 10
சக்தி தேவி சரணம் வாழி!
வெற்றி வாழி! வீரம் வாழி!
பக்தி வாழி! பலபல காலமும்
உண்மை வாழி! ஊக்கம் வாழி!
நல்ல குணங்களே நம்மிடை யமரர் 15
பதங்களாம்,கண்டீர்!பாரிடை மக்களே!
கிருத யுகத்தினைக் கேடின்றி நிறுத்த
விரதம்நான் கொண்டனன்;வெற்றி
தருஞ்சுடர் விநாயகன் தாளிணை வாழியே!