தமிழர் பாரம்பரியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழர் பாரம்பரியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 19 ஜனவரி, 2018

செல்வச் சந்நிதி ஆலயம்

ஈழவள நாட்டின் கண் காணப்படும் திருத்தலங்களில் வரலாற்றுச்சிறப்பு மிக்க ஆலயமாக செல்வச் சந்நிதி ஆலயம் விளங்குகின்றது. இவ்வாலயம் தொண்டைமானாறு என்னும் கிராமத்தில் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது .இதன் தோற்றம், அமைப்பு, நடைமுறை என்பன தனித்துவமானதும், வரலாற்றுச் சிறப்பும் மிக்கவுமாகவுள்ளது. உலகில் எவ்விடத்திலும் காணப்படாத தனித்துவம் இங்கே காணப்படுவதென்றால் இதன் புதுமைக்கும், பொலிவிற்கும், தெய்வத்தின் திருவருட் தன்மைக்கும் அளவே கூறமுடியாதுள்ளது. இங்கே குடிகொண்டுள்ள கந்தசுவாமியார் என்ற முருகன் திருவருளானது மிகுந்து பிரகாசித்துக் கொண்டிருக்கிறது.
 கந்தப் பெருமானது கருணை வெள்ளம் மடைதிறந்து பாய்கிறது. அவரை நாடி வரும் அடியார்கள் பக்தி வெள்ளத்திலும், கருணைக் கடலிலும் மூழ்கி திருவருளையும், திருவருள் பிரசாதத்தையும் தினந்தோறும் பெற்ற வண்ணம் இருக்கிறார்கள். இவ்வாலயமானது மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய தெய்வாம்சங்களை ஒருங்கே அமையப் பெற்றுள்ளது.
ஆகம விதிகட்கு அகப்படாத அதற்கு அப்பாற்பட்ட அன்பு, பக்தி ஞானம் ஆகிய அபரிதமான மார்க்க வணக்க தனித்தலமாகக் கொண்டுள்ள இங்கே கந்தப் பெருமானது அருளாட்சி நடைபெறுகிறது. இங்கே முருகன் ''பூரணம்'' என்று கூறும்படியாக பத்திரசக்தி முகூர்த்தத்தில் அமர்ந்திருக்கிறார் இதைக்கண்ணுற்ற வேதநாயகம்பிள்ளை என்ற பக்தி சிரோன்மணி 'செல்வச் சந்நிதி மேவிய பூரணனே' என்றும், 'செல்வச் சந்நிதி போற்றிய பூரணனே' என்றும், 'பூரணமாஞ் செல்வச் சந்நிதி மேனிப்புவனமுய்யும்' என்றும் வாய்விட்டு மனம் திறந்து கசிந்துருகிப் பாடியுள்ளார். சின்மயம் என்று கூறுவதும் கருணையே குறிக்கும்.
இவ்வாலயத்தின் வரலாற்றை நோக்கினால் இது அரசியலுக்குமேல் பொருளாதார, சமூகவரலாற்றுடன் மிகுந்த நெருங்கிய தொடர்புடையதாகவும் இதற்கு அப்பால் பக்தி வரலாற்றுடன் தொடர்புடையதாகவும் உள்ளது. இதைப்பற்றிய வரலாறுகள், சான்றுகள் இன்று கிடைக்காதபோதும் கர்ணபரம்பரை வரலாற்றுக்கதைகள் உண்டு. இங்கு ஓடும் ஆறும் இதன் அருகமைந்த ஆலயமும் வரலாற்றுடன் பக்தி இளையோடபட்ட தொன்மையான பெருமை வாய்ந்தது. தொண்டைமானாறு என்னும் இவ் ஆறானது முன்பு கடலுடன்சங்கமிக்காது 'வல்லிநதி' என்னும் பெயருடன் மிளிர்ந்தது.

ஆலயத்தின் ஆரம்பகால தோற்றம்.
வீரவாகுத்தேவர் காலடி பதித்த இடம்.
கந்தர்வரான ஐராவசு வழிபாடுசெய்த இடம் (பூவரசமரம்)
இதற்குச்சான்றாக வல்லிநதிக்கு மேலாகப் போடப்பட்ட பாலமானது வல்லைப் பாலம் என்று அழைக்கப்பட்டது அது இன்றும் இப் பெயரையே கொண்டுள்ளது. இதையொட்டியே வல்லை வெளி என்றும் இப் பாலத்தின் அருகில் உள்ள காணிகளை வல்லியப் பெருவெளி என்று இன்றும் கூறப்படுகிறது. இந்; நதியின் தொடு வாயிலை தொண்டைமான் என்ற ஓர் அரசன் வெட்டி கடலிடம் சங்கமிக்க விட்டான். அன்று முதல் இந் நதியின் பெயர் (ஆறு) தொண்டைமானாறு என்றும் அழைக்கப்பட்டது. இப் பெயரே இக் கிராமத்திற்கும் மருவி வந்துள்ளது அரசன் நதி வாயிலை வெட்டியதன் காரணமாக கடலின் உப்பு நீரானது உட்புகத் தொடங்கியது நன்நீராய் இருந்த வல்லிநதி நீர் மாற்றம் பெற்றது போல நன் நீரான வல்லிநதி உவர் நீராக மாறியது. இவ் உவர் நீர் உள் நாடு சென்றதன் காரணமாக கரணவாய் போன்ற பகுதிகளில் உப்பு பெரு வாரியாக இயற்கையாக விளையத் தொடங்கியது. இவ் உப்பானது பிற் காலங்களில் இவ் ஆற்றினுடாக கொண்டு வரப்பட்டு தொடுவாயிலில் அமைந்திருந்த சேகரிப்பு நிலையத்தில் நிரப்பப்பட்டது. ஆதன் காரணமாக அந்நிலையத்தை உள்ளடக்கிய நிலம் 'உப்பு மால்' என்று இன்றும் அழைக்கப்படுகிறது இலங்கையின் கரையோரத்தை ஆட்சி புரிந்த அந்நிய ஆட்சியரான போர்த்துக்கேயர் ஒல்லாந்தர் அதன் பின் ஆண்ட ஆங்கிலேயரும் இவற்றுடன் வணிக முறையில் தொடர்பு கொண்டிருந்தனர்.        

நல்லூர் கந்தசுவாமி கோவில்

யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகள் வம்சத்தின் முதலாவது அரசனான கூழங்கைச் சக்கரவர்த்தியின் அமைச்சனொருவனான புவனேகவாகு என்பவனால் இக் கோயில் கட்டுவிக்கப்பட்டதென யாழ்ப்பாண வைபவமாலை கூறுகிறது. இதற்கு ஆதாரமான பின்வரும் தனிப்பாடல், 16 அல்லது 17 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் கைலாய மாலை என்னும் நூலின் இறுதியில் காணப்படுகின்றது.
இலக்கிய சகாத்தமெண்ணூற் றெழுபதாமாண்டதெல்லை
யலர்பொலி மாலை மார்பனாம் புவனேகபாகு
நலமிகுந்திடு யாழ்ப்பாண நகரிகட்டுவித்து நல்லைக்
குலவிய கந்தவேட்குக் கோயிலும் புரிவித்தானே
ஆனால் இது 15 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றி 17 ஆண்டுகள் ஆண்ட கோட்டே சிங்கள அரசின் பிரதிநிதியான, பிற்காலத்தில் சிறீசங்கபோதி எனும் பட்டத்தைக்கொண்ட புவனேகபாகு அல்லது புவனேகபாகு எனப்பெயர் கொண்டு கோட்டே அரசனான, செண்பகப் பெருமாள் என்பவனால் கட்டப்பட்டதென வேறு சிலர் கூறுகிறார்கள். இதற்கு ஆதாரமாக நல்லூர்க் கந்தசுவாமி கோயிலில் இன்றும் கூறப்பட்டுவரும் கட்டியத்தை இவர்கள் காட்டுகிறார்கள். சமஸ்கிருதத்தில் உள்ள இக் கட்டியத்தின் பகுதி பின்வருமாறு உள்ளது:
சிறீமான் மஹாராஜாதி ராஜாய அகண்ட பூமண்டலப்ரதியதி கந்தர விஸ்வாந்த கீர்த்தி சிறீ கஜவல்லி மஹாவல்லி சமேத சுப்ரமண்ய பாதாரவிந்த ஜனாதிரூட சோடச மஹாதான சூர்யகுல வம்ஸோத்பவ சிறீ சங்கபோதி புவனேகபாகு ஸமுஹா
திருவருள் பொருந்திய தெய்வயானையுடனும்வள்ளியம்மனுடனும் சேர்ந்திருக்கின்ற சுப்பிரமணியரின்திருவடிகளை வணங்குபவனும், மன்னர்களுக்கு மன்னனும், மிகுந்த செல்வங்களுடையவனும், இப் பரந்த பூமண்டலத்தில் எல்லாத்திசைகளிலும் புகழப்படுபவனும், மக்கள் தலைவனும், பதினாறு பெருந்தானங்களைச் செய்பவனும், சூரிய குலத்தில் உதித்தவனுமாகிய சிறீசங்கபோதி புவனேகவாகு... என்பது இதன் பொருள்.
முன்னரே சிறியதாக இருந்த கோயிலைத் தனது ஆட்சிக்காலத்தில் புவனேகவாகு பெருப்பித்துக் கட்டியிருக்கக் கூடும் என்பதே பொருத்தம் என்பது வேறுசிலர் கருத்து.
யாழ்ப்பாண அரசின் இறுதிக்காலத்தில் நல்லூரிலிருந்த மிகப்பெரிய கோவில் இதுவேயென்பது போத்துக்கீசருடைய குறிப்புக்களிலிருந்து தெரியவருகிறது. யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போத்துக்கீசத் தளபதியான பிலிப்பே டி ஒலிவேரா1620ல் அரசின் தலை நகரத்தை யாழ்ப்பாணத்துக்கு மாற்றியபோது நல்லூர்க் கோயிலை இடித்துத் தரைமட்டமாக்கும்படி உத்தரவிட்டான். இதிலிருந்து பெறப்பட்ட கற்கள் யாழ்ப்பாணத்தில் புதிய கோட்டை கட்டுவதில் பயன்பட்டதாகத் தெரிகின்றது. இது இருந்த இடத்தில் போத்துக்கீசர் சிறிய கத்தோலிக்க தேவாலயமொன்றை அமைத்ததாகத் தெரிகிறது. பின்னர் ஒல்லாந்தர்இதனைத் தாங்கள் சார்ந்த புரட்டஸ்தாந்த கிறிஸ்தவ தேவாலயமாக மாற்றினார்கள். இன்றும் இவ்விடத்தில் பிற்காலத்தில் பெரிதாகத் திருத்தியமைக்கப்பட்ட கிறிஸ்தவ தேவாலயமே காணப்படுகின்றது.
ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தின் (1658–1798) இறுதி ஆண்டுகளில் இந்துக் கோயில்கள் அமைப்பது தொடர்பாக ஆட்சியாளர்களின் இறுக்கம் ஓரளவு தளர்ந்தபோது, நல்லூர் கந்தசுவாமி கோயில் மீள அமைக்கப்பட்டது. முன்னைய இடத்தில் கிறிஸ்தவ தேவாலயம் இருந்தபடியால் இன்னொரு இடத்தில் கோயிலை அமைத்தார்கள்.
மடாலயம் போல் காட்சியளித்துக் கொண்டிருந்த இவ்வாலயத்தை, ஆகமம் சார்ந்த கிரியை முறைக்கும், சிற்ப சாத்திர விதிக்கமைந்த கட்டட முறைக்கும் மாற்றியமைத்து, இன்றைய நிலைக்குக் கொண்டுவர வித்திட்டவர் ஆறுமுக நாவலர் ஆவார். அவரைத் தொடர்ந்து, அவரது மாணவர்கள் இவ்வாலய வளர்ச்சியில் மிகுந்த ஈடுபாடு காட்டினார்கள்.

வெள்ளி, 6 மார்ச், 2015

லெமூரியாவும் தமிழர்கள் இழந்தவைகளும்

எகிப்திய நாகரீகத்தினை பார்த்தால்…
மிகவும் பிந்தங்கிய நிலையிலிருந்து திடீரென ஒரு மேன்மையான நிலையை எட்டியுள்ளமை விளங்குகிறது.
அவர்களின் தொழில் நுட்ப அறிவு திடீரென இவளவு வீரியம்மிக்கதாக மாறியமை… அங்கு ஒரு புதிய சமூகம் குடியேறியிருக்கலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. இதைத்தான் அலெக்ஸ்ஸான்டர் கொஞ்தர்தேவ் எனும் பிரபல தொல்பொருளாராச்சியாலரும் சொல்லி இருக்கிறார். அவர் அந்த சமூகம் தென் பகுதியிலிருந்தே வந்திருக்க வேண்டும் என்றும்… அது லெமூரியா கண்டத்திலிருந்து வந்து குடியேறிய சமூகமாக இருக்க வேண்டும் என்றும் தனது குறிப்பில் கூறியுள்ளார்.
( கொந்த்ரதேவ்… லெமூரியா கண்டம் தொடர்பாக நீண்ட கால ஆராச்சியை மேற்கொண்டு சில உண்மைகளை உலகறியச்செய்தவர் என்பதை நான் ஏற்கனவே இந்த தொடரில் எழுதியுள்ளேன்… )
அத்தோடு… வேறு ஆய்வாலர்களும்… மொசபடேனியம்..(???) மற்ற இடங்கள் மறந்துவிட்டன… போன்ற பாதையூடாக எகிப்துக்கும்… இந்திய பகுதிக்கும்… வியாபாரம் நடந்து இருக்கிறதாம்… மேலும்… அரபிக் கடலோரங்களில் எகிப்துக்கு கொண்டுவரப்பட்ட சில பண்டங்கள் காண்டெடுக்கப்பட்டுள்ளன… ( இதில் தமிழ் சுமேரிய எழுத்துக்கள் இருக்கின்றன என இந்த தொடர் பதிவில் ஏற்கனவே குறிப்பிட்டேன்…)
அது இருக்கட்டும்… நாங்கள் எங்களது நூல்களில் இதுகள் சம்பந்தமாக ஏதாவது இருக்கா என்று பார்த்தா… சிலது இருக்கு…
மகாபாரத்தில் நகலனின் மகன்… சுக்ராச்சாரியாரின் ம‌களை திருமணம் முடிக்கிறார்.
ஆனால், நகுலனின் மகன்… விடபமன்னனின் மகளின் மூலம் 3 பிள்ளைகளை பெற்றான்.
இதனால், ஆத்திரமடைந்த சுக்ராச்சாரியார் நகுலனின் மகனை வயோதிபமடையச்செய்கிறார். ( இங்கு தவ வலிமை மூலம் முதுமையடைய செய்வதாக எழுதப்பட்டுள்ளது. ஆனால், அது தவ வலிமையாகவுமிருக்கலாம்… அதைவிட முன்னர் வாழ்ந்த அந்த மேம்பட்ட சமூகம்… விரைவில் முதுமையை ஏற்படுத்துவதற்காக ஏதாவது யுக்திகளை கையாண்டதாகவும் இருக்கலாம்… அந்த யுக்திகள் மறைக்கப்பட்டதுக்கு காரணம் நான் ஏற்கனவே போன பதிவில் சொன்னமாதிரி… அனைத்து மக்களுக்கும் அந்த ரெக்னிக் சென்றடையக்கூடாது என்ற உள்னோக்கமாகவே இருக்கும்.)
பின்னர்…
நகுலனின் மகன்… மீண்டும் இளமையை பெற வேண்டுமென்றால்… தனது மகன்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம் என பரிகாரம் கூறப்படுகிறது. சுக்ராச்சாரியாரின் மகள் மூலம் பிறந்த பிள்ளைகள் இதற்கு ஒப்புக்கொள்ள மறுக்கவே… விடபமன்னனின் மகளின் பிள்ளைகளில் ஒருவன் ஒப்பிக்கொள்கிறான். பிறகு… இளமையைப்பெற்ற நகுலனின் மகன்…
தனக்கு உதவ மறுத்த பிள்ளைகளை நாட்டைவிட்டு துரத்துகிறான்…
இவர்களிலிருந்தே யாதவர்களும்… துரியோத‌னின் வம்சமும் உருவாகி இருக்கிறதாம். ( யார்; யார் வழி வந்தவர்கள் என்பது எனக்கு நினைவில்லை/தெரியாது… தெரிந்தவர்கள் கொமென்டில் போடவும்.)
யூதர்களின்… நூலின் படியும்…
ஆபிரஹாம் என்பவருக்கு முதலில் பிள்ளைகள் இல்லை… பின்னர் சேவகி மூலம் பிள்ளைகள் பிறக்கின்றன… நீண்ட கால்த்துக்கு பிறகு… மூத்த மனைவி மூலம் பிள்ளை பிறக்கிறது. மூத்த மகன் வெளியேறுகிறான்… அவன் வழி வந்தவர்கள் அரேபியர்கள்… இளையவன் வழி வந்தவர்கள் யூதர்கள். என கூறப்பட்டுள்ளதாம். ( நன்றி : குமரி மைந்தன்.)
இந்த ரெண்டிலயுமே… ஒரு குழு நாட்டை விட்டு வெளியேறுகிறது…
இந்த யூதர்களின் “தோரா” நூல்…
எகிப்தில்…. அரசு உரிமை பிரச்சனை காரணமாக, ஒரு தொகை அடிமைகளுடன் நாட்டை விட்டு வெளியேறியதாக கருதப்படும் மோஷே (?) வினால் எகிப்திய அரன்மனை நூல்களைப்படித்து எழுதப்பட்டதாக கூறப்படுகிறது.
அதே நேரம்… மிசிரத்தானம் என்ற சொல்லிற்கு தமிழ் அகராதி… எகிப்து என்று அழைக்கப்படும் நாடு என கூறுகிறது.
அதற்கான விளக்கப்படியும்… நாட்டால் விரட்டப்பட்ட ஒருவன் மிலேச்சம் எனும் தேசத்துக்கு சென்று அம்மக்களுடன் கலந்து அரசனமையால் ஏற்பட்ட பெயர் என விளக்கப்படுகிறதாம்.
——————————————————————————————–
ஆகவே…
இதன் படி பார்க்கும் போது…
லெமூரியா கண்டத்தில் இருந்து அங்குபோய் குடியேறிய மக்கள் கூட்டத்தாலேயே… எகிப்திய நாகரீகம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது என்பது விளங்குகிறது.
(ஏற்கனவே… லெமூரியாவில் பண்டைய தமிழ் ( தற்போது வெகுவாக மாறி இருக்கிறது ) மொழியே பிரதான மொழியாக இருந்திருக்கலாம் என சில சான்றுகள் மூலம் இப்பதிவில் எழுதி இருந்தேன்… இது அதை மேலும் உறுதிப்படுத்துகிறது.)
ஆனால்… பின்னர் ஏற்பட்ட சுனாமி, கண்ட தாழ்வு, ( அல்லது அணு யுத்தம்(???) ) போன்ற காரணங்களால்… லெமூரியா திடீரென அழிய… எகிப்தியர்கள் முன்னெச்சரிக்கையாக வரலாற்றை திறமையாக பதிந்து வைத்தார்கள். ( அது விளங்கி கொள்ள முடியாத சித்திர எழுத்திலிருப்பது துரதிஸ்டம்.)
மேலே இருக்கும் வரலாற்று சம்பவங்களிலிருந்து இன்னொன்றும் உறுதியாகிறது…
அதாவது… யூதர்களின் தோரா… எகிப்திய நூலகத்திலிருந்து எழுதப்பட்டது என்றால்… எகிப்தை உருவாக்கிய நகுலனின் மக்களின் வம்சத்தினரால்… எகிப்தில் பதியப்பட்ட லெமூரிய (மகாபாரத) வரலாறே… தோராவிலிம் ( இதை கிறிஸ்தவர்கள் “பழைய ஏற்பாடு” என அழைப்பதும் இதைத்தான்.) சில திரிபுகளின் பின்னர் எழுதப்பட்டு இருக்கலாம்…

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015

திருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஏன்?


>>திருமணங்களில், அம்மி மிதித்து அருந்ததி காட்டும் வழக்கம் உண்டு. வசிஷ்டா என்ற பெயருக்கு உயிர்மூச்சுடன் உறுதியான மனம் கொண்டவன் என்ற பொருளும், அருந்ததி என்ற பெயருக்கு கணவனின் எண்ணம் அறிந்து கற்பு நெறியுடன் வாழ்பவள் என்ற பொருளும் புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
>> வஸ்து என்றால் பஞ்சபூதங்கள் என்றும், வசிஷ்தா என்றால் பஞ்சபூதங்களில் ஐக்கியமானவன் என்றும் பொருள் உண்டு. திருமண பந்தத்தில் இணையும் நாள்வரை, மணப்பெண்ணானவள் தன்னையும் தன் உடலையும் காமக்கண்ணுடன் பிறர் பார்த்ததால், திருமண நாளில் தனது உடலை அக்னிக்குள் சமர்ப்பித்து தன்னைப் பரிசுத்தப்படுத்திக் கொள்வதுடன், தன்னைத் திருமணம் செய்து கொள்பவளின் பாவங்களையும் அதே அக்னியில் சாட்சியாக நீக்கி, பரிசுத்தப்படுத்தி, தன் ஆற்றல் எனும் ஆக்ஞை சக்கரத்தை கணவனுக்கு முழுமையாகக் கொடுத்து புருவ மத்தியில் திலகமாக ஏற்றுக்கொள்கிறாள்; கணவனிடம் சரணாகதி அடைகிறாள்.
>> பெண்ணின் கழுத்தில் மங்கல நாண் சூடிய கணவன் மணப்பெண்ணைப் பார்த்து, இனி நான் உனது உயிர்மூச்சாகவும் கல்லைப் போல மன உறுதியுடனும் இருந்து உன் வாழ்க்கைக்கு வழிகாட்டுவேன் என்பதை, வசிஷ்ட மகரிஷியின் சாட்சியாக உன் காலை அம்மிமீது வைத்து அதன் சாட்சியாக உன் காலில் மெட்டியைச் சூட்டுகின்றேன் என்று கூறுகின்றான்.
>>மணப் பெண்ணானவள், தன் கழுத்தில் மங்கல நாண் சூடிய கணவனுக்கு அருந்ததி நட்சத்திரத்தைக் காட்டி அருந்ததியைப் போல் ஏழு ஜன்மங்களிலும் உமக்கு மட்டும் மனைவியாக இருப்பேன் என்று சத்யப்பிரமாணம் செய்கின்றாள்.
>>அக்னியில் பிறந்த பெண், அக்னியாலேயே பரிசுத்தப்படுத்திக்கொண்டு ஆணையும் பரிசுத்தப்படுத்தி திருமணம் எனும் தெய்வீக பந்தத்துக்குள் இணைந்து அர்த்தநாரீஸ்வரியாகத் திகழ்கின்றாள்.

புதன், 8 அக்டோபர், 2014

சங்கச் சிந்தனைகள் - 4

வெகுதூரத்தில் கிராமத்து நாய் ஒன்று ஊளையிட்டு ஓய்ந்தது.

அவன் அந்த வேலியின் ஓரமாக மெதுவாக நடந்து சற்றே முயன்றால் தாண்டிவிடக்கூடிய ஒரு இடத்தில் நின்றான். அதிகம் சப்தம் செய்யாமல் தாண்டியாக வேண்டும். தாண்டும்போது காலில் கல்லோ முள்ளோ குத்தாமல் இருக்க வேண்டும். கால் வைக்கும் இடத்தில் ஊர்வனவோ நெளிவனவோ இருந்து தொலைக்கக்கூடாது. நேற்றுத் தாண்டிய இடம் இதுதானா என்பது சரிவரத் தெரியவில்லை. அமாவாசைக்கு இரண்டு நாட்கள்தான் உள்ளன என்பதால் பொட்டு வெளிச்சம் கிடையாது. கொற்றவையை நேர்ந்துகொண்டு தாண்டிவிடவேண்டியதுதான் !

ஹா!

தாண்டும்போது இருளில் சரியாகப் புலப்படாத பெருங்கல்லொன்று தடுக்க ஏறக்குறைய விழுந்துவிட்டான் ! நாசமாய்ப்போக ! நேற்று தாண்டிய அதே இடம் - அதே இடத்தில் மீண்டும் அடி... விண் விண்ணென்று தெரிக்க... மண்டையில் கோபம் பரபரவென்று ஏறியது.

முடியாது - இப்படி ஒவ்வொரு நாளும் திருட்டுத்தனமாக வந்து போய்க்கொண்டிருக்க முடியாது. நேன்றே ஜாடை காண்பித்தாகிவிட்டது. இன்று பகிரங்கமாகவே அவளிடம் கேட்டுவிட வேண்டியதுதான். என்னுடன் வாழ்வதற்கு விருப்பமா இல்லையா ? உன் அன்னை தந்தை அல்லது செவிலித்தாய் ஒருவேளை எதிர்த்தால் - ஒருவேளை என்ன, உன் அப்பன் நிச்சயம் எதிர்க்கத்தான் போகிறான் ! - அவர்களைப் பிரிந்து கட்டிய துணியோடு என்பின்னே வர சம்மதமா இல்லையா ? 

இரண்டில் ஒன்று எனக்கு இன்று தெரிந்தாக வேண்டும்.

இப்படி நாய்போல தினம் தினம் வேலிதாண்டி குதிக்க முடியாது என்னால். இவள் இல்லாவிட்டால் இன்னொருத்தி ! போனால் போகிறதென்று விட்டுத் தொலைக்க வேண்டியதுதான்.

அவன் புழக்கடை தாண்டி முற்றத்தின் கதவை மெதுவாக தட்டப்போகும்போது சரியாக அந்தக் கதவு திறந்தது. ஒரு கையில் தாங்கிய சிறு அகல் விளக்கோடு - அந்த அகலின் வெளிச்சம் அணைந்துவிடக்கூடாதே என்று சுடர் அரவணைத்த மற்றொரு கையொடு - குனிந்த தலையோடு - 

ஒரு நிலவு தெரிந்தது.

அவன் நெஞ்சில் பந்தாக ஒரு பரவசம் மேலெழும்பி மேலண்ணத்தை அடைத்தது. சிறிது நேரத்திற்கு முன் காலில் பட்ட அடி மறந்து போனது. சட்டென்று அந்த ஊர், நாய், வேலி, இரவு, கல், அடி, அவள் வீடு - எல்லாமே சில நொடிகள் காணாமல் போயின. அந்த முகம் மட்டும் நின்றது. அல்ல, அந்த முகம் கூட அல்ல - முகத்தில் கவிந்திருந்த அந்தக் கண்களும் அவற்றை தடவிச்சென்ற கருவிழிகளும் மட்டும் நின்றன.

இருவரும் மாட்டுக் கொட்டிலுக்கருகில் அமைந்திருந்த சிறு அறையில் ஒடுங்கினார்கள். சிறிது நேரத்திற்கு எவரும் புழக்கடைப் பக்கம் ஒதுங்காமலிருந்தால் பிழைக்கலாம் !

அவன் தைரியசாலிதான் - வீரன்தான் - ஆனால் எதிலும் நிதானமில்லை. நிதானம் கொடுக்கும் கம்பீரமில்லை.

அவசர அவசரமாக அவளிடம் சொல்ல வந்ததை - கடந்த ஒரு ஜாம நேரமாக ஒத்திகை பார்த்த வாசகங்களை - பரபரப்பாகச் சொல்லி முடித்தான்.
"இதோ பார் ! நேரடியாகவே கேட்டு விடுகிறேன் - என்னைத் திருமணம் செய்து கொள்ளச் சம்மதமா இல்லையா ? எதற்கும் நான் சித்தமாகிவிட்டேன் - தினந்தோறும் ஊர்தாண்டி ஊர் வந்து நாய் நரிகளுக்கு பயந்து - வேலிதாண்டிக் குதித்து - என்னால் ஆகாது ! உனக்கு விருப்பமெனில் இப்போதே என்னிடம் சொல்லிவிடு - மற்ற ஏற்பாடுகளை நான் கவனித்துக் கொள்கிறேன் !"

ஓ தலைவ ! நீ நல்லவன் - ஆனால் பெண்மை புரிதாதவன். பெண்ணின் நுண்மை புரிதாதவன். அதன் தன்மை அறியாதவன். என்ன சொல்லச் சொல்கிறாய் அவளை ? எப்படிச் சொல்லச் சொல்கிறாய் ? நீ கேள்வி கேட்கும் முன்னரே அவள் பதில் சொல்லி விட்டாள் - உனக்குத்தான் அந்த பதிலைப் படிக்கத் தெரியவில்லை.

வார்த்தைகளால் சொன்னால்தான் புரிந்துகொள்வாயா ? மெளனத்தின் மொழி வார்த்தைகளைவிட அர்த்தமானது - ஆழமானது என்பதை அறிவாயா ?

முற்றக் கதவு நீ நெருங்கும்போது சொல்லி வைத்தாற்போலத் திறந்ததே - அதற்கு என்ன அர்த்தம் ? எத்தனை நாழிகைகளாக அவள் உனக்காக வழி மேல் தன் செவி வைத்து - இதயம் வைத்துக் காத்துக்கொண்டிருக்கிறாள் என்பதை அறிவாயா ? உன் மென்மையான - குறடு தரிக்காத - பாதச் சுவடுகளின் சப்தத்திற்காக நேற்று இரவு முழுவதும் அவள் ஏங்கி இருந்ததை அறிவாயா ?

உன் தரிசனம் கிடைத்ததும் அவளது மேனி மெல்ல நடுங்கிற்றே - அந்த மெல்லிய அகல் வெளிச்சத்தில் அது உன் கண்களுக்குத் தெரியவில்லை ? மாட்டுக் கொட்டிலை அடைவதற்குள் அவள் மேனி முழுவதிலும் முத்து முத்தாக வியர்வை திரண்டுவிட்டதே என்ன அர்த்தம் அதற்கு ? 

இதோ ! கடுமை பொருந்திய உன் மொழிகள் அவளது இதயத்தைக் கலக்கி விட்டன. 

விழியோரம் ததும்பி நிற்கும் நீர் - அவளின் காதலுக்கு சாட்சி. 
உன்னை இழந்துவிடுவோமா என்று அவள் கண்களில் விரியும் மருட்சி - அவளின் காதலுக்குச் சாட்சி.
பசலை படர்ந்து நிற்கும் அவளது மேனி - நடுங்கும் அவளின் கரங்கள் - இந்த பூமி, ஆகாயம், நட்சத்திரங்கள் - எல்லாம், எல்லாம்... அவளின் காதலுக்குச் சாட்சி.

காதல் உன் மனதை இன்னும் நுட்பமாக்கிவிடவில்லையா ? விழிகளின் பாஷையைப் படிக்கும் வித்தை நீ இன்னும் பழகவில்லையா ?
வாய்விட்டுச் சொல்லும் சொல் எச்சில் பட்டு அசுத்தமாகிவிடுகிறது. இதயத்தின் மொழி இரவில் திரளும் பனிநீரைப்போல பவித்திரமானது அல்லவா ?

தலைவா - உடனடியாக அவளைத் தழுவு ! அவள் தாபம் தணி ! அவள் சாய்ந்துகொள்ளத் தோள்கொடு ! அணையும் நிலையில் தவிக்கும் அவளின் உயிர்ச் சுடருக்கு உன் அணைப்பே மருந்து !

களவியல் ஒழுக்கத்தைச் சொல்லி பலரின் கூற்று நிகழும் இயல்புகளையும் விளக்கி முடிக்கும் தொல்காப்பியர், தலைவன் தலைவி இருவருக்கிடையில் பொங்கும் வேட்கையைச் சொல்லத் துணிகையில்...



தன் உறு வேட்கை கிழவன் முன் கிளத்தல்
எண்ணும் காலை, கிழத்திற்கு இல்லை;
"பிற நீர் மாக்களின் அறிய, ஆயிடைப்
பெய்ந் நீர் போலும் உணர்விற்று" என்ப.

(தொல்காப்பியம் / பொருளதிகாரம் - களவியல் - எண் 1062)


என்கிறார்.

மிக மிக நுட்பமானதொரு விஷயத்தை எதிர்பார்க்கமுடியாததொரு உதாரணம் மூலம் பளிச்சென்று காண்பித்துவிடும் வித்தை தொல்காப்பியருக்கே உரியது.

"தன்னுடைய வேட்கை மிகுதியைத் தலைவன் முன்னே நின்று சொல்லுதல், ஆராயுமிடத்துத் தலைவிக்கு இல்லை. அவ்வாறு கூறாத இடத்து புதுமட்கலத்துள் ஊற்றப்பட்ட நீர் புறத்தே பொசிந்து தன்னுடைய இருப்பபைக் காட்டுவதைப்போல அவளின் உணர்வு வெளிப்படும்"

என்ன அற்புதமான சிந்தனை !

இதில் "எண்ணும் காலை" - அதாவது "ஆராயுமிடத்து" என்று ஒரு வார்த்தை சேர்க்கிறார் பாருங்கள் - அதுதான் தொல்காப்பியர் ! அதாவது காதலன் முன்பு எந்த நிலையிலாவது தலைவி தன்னுடைய வேட்கை மிகுதியைத் தெரிவிக்காறாளா என்று கொஞ்ச நேரம் யோசிக்கிறாராம்... எப்படி யோசித்துப் பார்த்தாலும் தலைவி தன் உணர்வுகளை வாய்விட்டுச் சொல்வது இல்லையாம் !

பின் எப்படிச் சொல்கிறாள் ?

புதிதாக வனையப்பட்ட மட்பாண்டத்தில் ஊற்றப்பட்ட நீர் மெது மெதுவாகக் கசிந்து (புறத்தே பொசிந்து) தன் இருப்பைக் காட்டுவதைப் போல அவளும் தன் உணர்வுகளை மெளனமாக வெளிப்படுத்துகிறாளாம். அதாவது தலைவி - அல்லது அவளது இதயம் - காதல் வயப்பட்ட நிலையில் புதிதாகப் புனையப்பட்ட மட்பாண்டம்போல ஆகிவிடுகிறது என்று கொள்ளலாம். புதிதாகப் புனையப்பட்ட மட்பாண்டத்தில் எவராவது சிறிதளவு கையை வைத்தாலே குழைந்து விடும். அது போல இருக்கிறது தலைவியின் இதயம். அவளது இதயத்தின் தாபமும் அன்பும் அவளுக்கு ஈரம் கொடுக்கின்றன.

ஆனால் சமூகம் என்ன செய்கிறது ? அந்த மட்பாண்டத்தை நன்கு வெய்யிலில் வைத்து உலர்த்தி, செங்கல் சூளையில் இட்டு அதன் ஈரத்தை ஒட்டுமொத்தமாகத் துடைத்தெடுத்துவிடுகிறது. இனி அந்த இதயத்தில் குழைவு இல்லை. குழைவு இல்லாத இதயம் சுட்ட மட்பாண்டம்போல தன் உணர்வுகளை இரகசியமாக பிறர் அறியாத வண்ணம் பாதுகாக்கும் பலத்தைப் பெற்றுவிடுமல்லவா ? குழைவாகக் கிடந்த நமது பலரின் மனத்தையும் சமூகம் இவ்வாறு வறண்டதாக்கிவிட்டதுதானே உண்மை ?

காதல் - அந்தக் காதல் எழுப்பும் தாபம் - நீராகச் சொல்லப்பட்டிருக்கிறது. சரியான உதாரணம்தான். நீர் இண்டு இடுக்குகளிலெல்லாம் புகுந்து புறப்பட்டுவிடும். காதலும் அதேபோலத்தான் - இதயத்தில் சிறிது இடம் கிடைத்தாலும் ஆசனமிட்டு அமர்ந்துவிடும். நீரைப்போலவே காதலும் நமது இதயத்திற்கடியில் எவராவது தன்னைக் கண்டுபிக்கவேண்டும் என்பதற்காக ஒளிந்துகொண்டிருக்கிறது. நீர் சாதாரணமாக மிக அமைதியாகத் தெரியும். ஆனால் ஊழிக்காலங்களில் எல்லாத் தடைகளையும் உடைத்துக் கொண்டு வெளிப்படும் வேகத்தைப் பெற்றுவிடும். 

காதலும் அதைப்போலத்தான் !

இந்த மட்பாண்டம் - பொசியும் நீர் உதாரணத்தில் என்னால் வாய்விட்டுச் சொல்லமுடியாத வேறு சில நுட்பமான விஷயங்கள்கூட இருக்கின்றன. "சொல்லாத சொற்களை"ப் படிக்கத்தெரிந்த வாசகர்கள் அதனையும் சிந்தித்துப் புரிந்துகொள்வார்களாக.

சங்கச் சிந்தனைகள் - 3

வழக்கம்போல அவன் ஆற்றங்கரையில் தோழர்களுடன் ஆடிப்பாடி சாவகாசமாகக் குளித்துவிட்டு வீட்டிற்குத் திரும்பினான்.

"உணவுண்டவுடன் வெளியில் ஓடிப்போய்விடாதே ! உன் தந்தையின் தோழர் எருமியூர் நாடரும் அவர் குடும்பமும் நம்மூர் விழாக்காண்பதற்காக வந்துகொண்டிருக்கிறார்கள். இன்னும் சிறிது நேரத்தில் அவர்களை எதிர்பார்க்கிறேம் - அவர்கள் வரும்வேளையில் நீ வீட்டில் இல்லையென்றால் நன்றாயிராது !" என்றாள் அன்னை.

"ஹ!" என்றான் அலட்சியத்துடன். என்றாலும் வயிற்றில் ஒரு பந்து உருண்டது. நாடரின் குடும்பமென்றால்.... பொன்னங்கையும் வருகிறாளா என்ன ? மூன்று நான்கு வருடங்களுக்கு முன் அவள் குடும்பத்துடன் வீட்டிற்கு வந்ததும் இருவரும் இடைவிடாமல் தட்டாமாலை, சில்லு, புளியாமர விளையாட்டு என்று கூத்தடித்தது நினைவுக்கு வந்தது. இப்போது அப்படியெல்லாம் விளையாட முடியுமா என்ன ? அவன் இளவட்டமாக வளர்ந்து நிற்கிறானே... மீசைவேறு லேசாக அரும்பத்தொடங்கிவிட்டது ! 

முடிந்தவரை நன்றாக ஆடையுடுத்திக்கொண்டு குடுமியை இறுக்க முடிந்து கொண்டை போட்டுக்கொண்டான்(1). இருப்பதில் நல்ல வேட்டியாக பார்த்துக் கட்டிக்கொண்டான். அவளைப் பற்றிய எண்ணங்களைப் புறக்கணித்துவிட்டு உணவில் மனதைச் செலுத்த முயன்றான்.

(1) அந்நாளில் குடுமி - கொண்டை போட்டுக்கொள்வது பரவலான வழக்கத்திலிருந்தது

ஏறக்குறைய ஒரு நாழிகை கழித்து வாயிலில் அந்த வில்வண்டி வந்து நின்றது. நாடர்தான் ! வாயிலுக்கு அவனுடைய தந்தையார் ஆவலுடன் ஓடிச் சென்று வரவேற்றார். இருவருக்கும் முப்பது வருட நட்பு. 

"உள்ளேயே நின்றுகொண்டிருக்கிறாயே - வாயிலுக்குப் போய் அவர்கள் சாமான்களை வாங்கி உள்ளே வைக்க வேண்டியதுதானே !" என்று அதட்டினாள் அன்னை. அவன் மறுத்துவிட்டான். ஏனோ பொன்னங்கையைப் வாயிலுக்குச் சென்று எதிர்கொண்டு பார்ப்பதற்கு சங்கடமாக இருந்தது - வெட்கப்படுகிறோமா என்ன ? சை ! அவர்கள் குடும்பத்தோடு வீட்டினுள் நுழைந்து ஆசுவாசப்படுத்திக்கொண்டு பானகமும்கூட அருந்தியாகிவிட்டது. அவன் இன்னமும் புழக்கடைப் பக்கம் ஏதோ வேலையிருப்பதாகச் சொல்லிக்கொண்டு ஒளிந்துகொண்டிருந்தான்.

நாடர்தான் "எங்கே திதியன் ?" என்று முதலில் வினவினார். அது அவன் காதுகளிலும் விழுந்தது. நாடரின் தலையில் இடிவிழ ! நண்பர் எள் என்பதற்குமுன் எண்ணையாக நிற்பதுதான் தன் தந்தையின் வழக்கமாயிற்றே.. "ஏங்கேயடி - திதியனை வரச்சொல் !" என்று சொல்லிவிட்டார். வேறு வழியின்றி முற்றத்தை நோக்கி வளைந்து நெளிந்து நடந்தான். முடிந்தவரை தான் வெட்கப்படுவது ஒருவருக்கும் தெரியக்கூடாது என்று நினைத்தாலும் அதை செயப்படுத்துவது எளிதானதாக இல்லை. ஒரு விதமாகக் கோணிக்கொண்டு தூணைப் பிடித்துக்கொண்டு நின்றான்.

"அட, இத்தனை உயரமா வளர்ந்துவிட்டான் !" என்று வியந்தார் நாடர். அவருடைய அகமுடையாள்(2) ஒருபடி மேலே போய் கையைச் சுற்றி நெற்றியில் முஷ்டியை மடக்கி திருஷ்டி கழித்தாள் !

(2) மனையாள்

அவனுக்கு சற்றே தைரியம் வந்து நிமிர்ந்து பார்த்தான். உடனடியாகத் தென்பட்ட நாடரை - நாடரின் மனைவியை - அவர்களுடைய மகனை - வேளக்காரனை - சடுதியில் புறக்கணித்து அதற்குப்பின் கண்களையோட்டினான்.

நாடரின் மனைவியின் தோள்பட்டைக்கருகில் மெதுவாக அந்த முகம் உயர்ந்தது.

முதலில் கருகருவென்று அடர்ந்த கூந்தல் தெரிந்தது. அடுத்து அந்தக் கருங்கூந்தலைப் பிளந்துகொண்டு தகதகவென்று நெற்றியில் வழியும் அழகான நெற்றிச்சுட்டி புலனாயிற்று. அப்புறம் தந்த நிறத்தில் நெற்றியும் அதன் நடுவில் இடப்பட்ட கருஞ்சாந்துப் பொட்டும்..... கண்களைப்பார்க்க தைரியமில்லாமல் நேராக மூக்கு பவளவாய் கழுத்து அதில் மணியாரம் என்று இறங்கிவிட்டு சற்றே நிமிர்ந்து அந்தக் கருவரியோடிய கண்களை சந்தித்த அந்தக் கணத்தில் - சொல்லி வைத்தாற்போல் அவளும் அவனை நோக்கினாள்.

அந்தக் கணத்தில்.... அதற்கடுத்த ஓரிரு கணங்களில்...

ஒரு மாயாஜாலம்போல அது நிகழ்ந்தது. அவனுக்கும் அவளுக்கும் அடுத்த அறுபது எழுபது வருடங்களுக்குத் தொடரப்போகின்ற அந்த இறுக்கமான பிணைப்பின் முதல் முடிச்சு அப்போது விழுந்தது.

அவன் அவளைக் கண்டுகொண்டான். அவளும் அவனைக் கண்டுகொண்டாள். அவர்கள் அப்போதுதான் முதன்முதலில் சந்திக்கிறார்களா ? அல்லது ஜென்ம ஜென்மங்களுக்கு முன்னர் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு காலங்களில் - மரங்களாக, பறவைகளாக, ஊர்வனவாக, நடப்பனவாக - அவர்கள் முன்பே சந்தித்திருக்கிறார்களா ? அந்த ஆழமான அன்பின் பிணைப்பு அந்த ஒரு கணத்தில் விழுந்து விட்டதை வேறு எவ்வாறு விளக்க முடியும் ?

அந்தக் கணத்தில் அவள் தன்னிலை மறந்தாள் - தன் நாமம் கெட்டாள் - அகன்றாள் தன் அகம்விட்டு.

அவனும் அவளைத் தன் சிந்தையில் நிரப்பிக்கொண்டான். காதலானான். கசிந்தான்.

காலம் அவர்கள் காதலைக் கனியவைக்கும். இருட்டை - பிரிவை - அது நீராகக் கொண்டு மரமாகி வளரும். அவர்கள் காலம் முழுவதும் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தி மகிழ்வார்கள். மீண்டும் அவர்கள் இந்தப் பூமியிலோ பிரபஞ்சத்தின் வேறு ஏதாவது மூலையிலோ பிறக்கலாம். அப்போதும் அவர்கள் ஒருவரையொருவர் எவ்வாறேனும் அடைவார்கள். 

இணைவார்கள்.

காதலாகிய களவொழுக்கத்தின் இயல்பை உரைத்து களவியலைத் துவங்கும் தொல்காப்பியர், அடுத்ததாக தலைவன் தலைவியை எதனால் சந்திக்க நேர்கிறது - காதல் அவர்களுக்குள் என்ன காரணத்தினால் முகிழ்க்கிறது என்று விளக்க முற்படுகிறார்.



"ஒன்றே வேறே என்று இரு பால் வயின்
ஒன்றி உயர்ந்த பாலது ஆணையின்,
ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப.
மிக்கோன் ஆயினும், கடி வரை இன்றே.

(தொல்காப்பியம் / பொருளதிகாரம் - களவியல் - எண் 1036)


என்ன சொல்கிறார் தெரியுமா ?

"கூடியிருக்கும்படியும் பிரிந்திருக்கும்படியும் செய்யும் இருவகைப்பட்ட ஊழ்வினையிடத்து, இருவருடைய உள்ளமும் ஒன்றியிருக்கும்படி செய்து அதனால் அன்பு உயர்வதற்குக் காரணமான நல்லூழின் ஆணையினால், ஒத்த தலைவனும் தலைவியும் எதிர்படுவர். தலைவன் தலைவியைக் காட்டிலும் உயர்ந்த நிலைமையில் இருக்கும்படியாக நேரிடினும் தலைவியை நீக்கும் நிலைமை ஏற்படாது"

இதில் பால் என்பதை ஊழ்வினை என்கிற அர்த்தத்தில் புரிந்துகொள்ளவேண்டும். ஊழ் என்பதற்கு பழைய கன்மம், விதி, தம்மை மீறிய சக்தி என்றெல்லாம் பொருள். பண்டைய தமிழரின் பலமான நம்பிக்கைகளுள் இதுவும் ஒன்று. வள்ளுவரே ஊழைப் பாடியிருக்கிறார்.

ஊழ்வினையின் ஆணையினால்தான் தலைவனும் தலைவனும் சந்திக்க நேர்கிறது என்கிறார். வேறு எவ்வாறு இதை விளக்குவது ? வாழ்வில் எத்தனையோ பேரை சந்திக்கிறோம். அத்தனை பேருமா நம்மிடம் மகரந்தப் புணர்ச்சி செய்கிறார்கள் ?

இதில் "ஒத்த" என்கிற வார்த்தை மிக மிக அழகானது. ஒத்தவர் சந்திக்கிறார்கள். அதாவது ஒருவரை ஒருவர் முன்பே அறிந்தவர்கள், உறவு கொண்டவர்கள், பிரபஞ்சச் சங்கிலியில் இரு அடுத்தடுத்த கண்ணிகளாக இணைந்தவர்கள் - சந்திக்கிறார்கள். அந்த முந்தைய உறவின் பலத்தால்தான் "கண்டதும் காதல்" அவர்களுக்கு ஏற்பட்டுவிடுகிறது. இந்த நிலையில் அவர்களுடைய தனிப்பட்ட உலகத் தகுதிகள் - உயர்ந்தவர் / தாழ்ந்தவரென்ற பாகுபாடுகள் - பொருளாதார / சமூக வேறுபாடுகள் - அர்த்தமிழந்து விடுகின்றன.

"காண்ப" - அவர்கள் சந்திப்பார்கள். சந்தித்தாக வேண்டும். உலகத்தின் இருவேறு மூலைகளில் இருந்தாலும் அவர்கள் சந்தித்துத்தான் ஆகவேண்டும்.
ஏனெனில் அதுவே விதி. இயற்கை இட்ட ஆணை.

தலைவன் தலைவியின் முதல் சந்திப்பை இதனைவிட அழகாக விளக்கிவிட முடியுமா என்ன ?

சங்கச் சிந்தனைகள் - 2

அதோ ! போர்முரசம் ஒலிக்கிறது....
கூடவே பறை, கொட்டு முதலான கருவிகள் எழுப்பும் ஓசைகளும் கேட்கின்றன. கொம்பு "பூ.....ம் ! பூ....ம் !" என்று அதிர "ஓ.....ம் !" எனும் சங்கநாதம் கம்பீரமாய் கிழக்கு வாசல் அமைந்துள்ள திசையிலிருந்து எழுகிறது.

அது அழைப்பொலி. "பகைவன் படையெடுத்திருக்கிறான் - நாட்டில் உள்ள ஆண்கள் யாவரும் நாட்டைக் காக்க வருக !" என்று வேந்தன் எழுப்பும் வரவேற்பொலி.

அவன் மெய்ப்பையை சரிசெய்து கொண்டான். இடைக்கச்சை சற்றே இறுக்க உள்ளே அணிந்திருந்த ஐம்படைத்தாலி உறுத்தியது. வில்லை வலக்கையில் மாட்டி அம்பறாத்துணியை இடமுதுகில் படியவிட்டு நெஞ்சின் குறுக்கே கட்டிக்கொண்டான்.

வேல் பூசையறையில் ஒரு ஓரத்தில் மஞ்சள் குங்குமமெல்லாம் தடவி தயாராக இருந்தது. அதனைத் தீண்டுகையில் சுரீரென்று ஏதோ கணுக்கால்களில் பாய்ந்தது. 

அது அவன் தந்தையின் வேல். போர்க்களத்தில் மார்பில் ஈட்டியும் அம்புகளும் துளைத்தெடுத்திருக்க உயிர் எப்போதோ பிரிந்துவிட்டபோதும் அவருடைய கைகள் இந்த வேலினை விடவேயில்லையாம் ! சிரமப்பட்டுத்தான் பிரித்தார்கள் என்று அன்னை சொல்வாள்.

அவன் தன் தந்தையை கண்களால் கண்டதில்லை. ஆனால் அவ்வப்போது இந்த வேலினை தொடும்போதெல்லாம் அவரைத் தீண்டுவது போலிருக்கும் - அதிலும் இன்று சற்று அதிகமாகவே....

அன்னை சற்று தள்ளாடியபடியே எழுந்து வருகிறாள்... "கிளம்பும் நேரம் வந்துவிட்டதா என்ன ?"

"சங்கொலி எழும்பிவிட்டதே அம்மா ! இப்போது கிளம்பினால்தான் கிழக்கு வாசலை இன்னும் அரை நாழிகை நேரத்தில் அடையலாம் !"

அவளுக்கு இப்போதெல்லாம் பார்வை அடிக்கடி மங்குகிறது. சற்றே கண்களைக் கசக்கிக்கொண்டு நிமிர்ந்து பார்க்கிறாள். அவன் சிரித்த முகத்தோடு நின்றுகொண்டிருக்கிறான். 

அடடா ! இந்தக் கோலத்தில் அவரே மீண்டும் மறுபிறவியெடுத்து நம்முன் நிற்பதாகவல்லவா தோன்றுகிறது ! "ஐயா ! நீ ஜெயிக்க வேண்டும் ஐயா !" நான் கொற்றவைக்கு நேர்ந்து கொள்கிறேன் !" - அவள் தன் மடியிலிருந்த ஒரு சில எளிய கழஞ்சுகளை ஒரு மஞ்சள் துணியில் அவசர அவசரமாக முடிந்து வைக்கிறாள்.

இருபது வருடங்களுக்கு முன்புகூட அவள் இப்படித்தான் நேர்ந்து கொண்டாள். ஆனால் கொற்றவைக்குக் கண்ணில்லை. நெஞ்சு நிறைய அம்புகளாக வாயிலில் அவருடைய உடல் வந்து இறங்கியபோது.... கண்களில் சரசரவென்று நீர் கோர்த்துக் கொள்கிறது. 

இல்லை ! இப்போது அவள் அழக்கூடாது. இவள் அழுதால் பிள்ளை தளர்ந்துவிடுவான். இவள் கண்களின் கண்ணீரை அவனால் தாங்க முடியாது. அவன் பார்க்காத கணத்தில் இரகசியமாக அவள் கண்களைத் துடைத்துக் கொள்கிறாள்.

அவனுடைய மனையாளும் குழந்தையையும் உக்கிராண அறையிலிருந்து வெளிப்படுகிறார்கள். அழுதிருக்கிறாளா என்ன - கண்களெல்லாம் சிவந்ததுபோல் தெரிகின்றனவே....

குழந்தை அவனைப் பார்த்த மாத்திரத்தில் சிரித்துக்கொண்டே அவனிடம் தாவுகிறது. அவன் அதனைக் கட்டியணைத்து உச்சி முகர்கிறான். பால்மணம் நாசியை நிறைக்கிறது.

குழந்தையை தூக்கியபடி வாயிலுக்கு வருகிறான். கால்களில் கழல்களை அணிந்துகொள்கையில் குழந்தை கழல்களை ஏதோ விளையாட்டுப்பொருள் என்று நினைத்துக் கைகளால் அளைகிறது.

அவனுடைய தாயும் மனையாளும் அவனுக்கு ஆரத்தி எடுத்து நெற்றியில் பொட்டிடுகின்றனர்.

அவனுடைய தாய் அவனை மீண்டும் ஒருமுறை நன்றாகப் பார்த்துக்கொள்கிறாள்.... முகத்தைக் கட்டிக்கொண்டு உச்சி முகர்கிறாள்... ஏனோ திடீரென்று அவனைப் பிரசவிக்கையில் ஏற்பட்ட தவிப்பு மீண்டும் அவளுக்கு ஏற்படுகிறது.... 

அவனுடைய மனையாளும் அவனை விழுங்கிவிடுவதைப் போல் ஒருமுறை நன்றாகப் பார்த்துக் கொள்கிறாள்... இரவில் வலிந்து வலிந்து காதலோடு தழுவிய உடல்.... முத்தங்களால் நனைத்த மார்பு.... ஒரு வேளை இப்போது பார்க்கும் இந்தக் கோலத்தை மட்டுமே மனதில் தாங்கிக்கொண்டு மீதிவாழ்நாளை அவள் கழிக்க நேரலாம்... அதனால்தானோ என்னவோ கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருக்கிறாள்... இரவெல்லாம் அழுது அழுது கண்கள் சிவந்திருந்தாலும் ஒரு சொட்டு நீர்கூட அவன் முன்னால் வீட்டுவிடக்கூடாது என்ற முனைப்புடன் நிற்கிறாள்...

அவனும் அவர்களை நன்றாகப் பார்த்துக்கொள்கிறான். ஏனோ தந்தையின் ஆன்மா அவனை ஆக்கிரமிப்பதைப்போன்றதொரு உணர்வு அந்த வேலினைக் கையிலேந்திய கணத்திலிருந்து அவனுக்கு ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது....

"வெற்றிவேல் ! வீரவேல் !" என்று வானத்தைப் பார்த்து முழங்குகிறான். மறுகணம் திரும்பிப்பாராமல் கிழக்கு வாசலை நோக்கி வீறு நடைபோட்டுச் செல்கிறான்.

அவனுடைய முகத்தில் சூரியனைப்போல ஒரு வீரக்களை சுடர்விட்டுப் பிரகாசிக்கிறது.

அவன் வீரனாகவே பிறந்தவன். வீரனாகவே வளர்ந்தவன். எப்போதும் அவன் தன்னை வீரனாகத்தான் உணர்ந்திருக்கிறான் - ஒருவேளை அவன் தந்தையும் அதற்குக் காரணமாக இருக்கலாம்...

தன்னுடைய படையின் பலம் எத்தனை ? எதிரிகள் படையின் பலம் எத்தனை ? நாம் இன்று தோற்போமா ? ஜெயிப்போமா ? என்பதான எந்தக் கேள்விகளும் அவன் மனதில் எழவில்லை. போர் ! அந்தப் போரில் அவன் வாள்சுழற்றியாக வேண்டும் ! அவ்வளவுதான்....

அவனுடைய தாய் தாரமொடு நாமும் நின்றுகொண்டு அவன் விலகி விலகிச் செல்வதைப் பார்க்கிறோம்.

போரில் அவன் ஒருவேளை வெற்றி பெற்று பெருவீரனாகத் திரும்பி வரலாம்..... அவனுடைய மகனை அவனினும் சிறந்த வீரனாகப் பயிற்றுவிக்கலாம்...

அல்லது மார்பில் வேலோ அம்புகளே தாங்கி விழுப்புண்களோடு குற்றுயிரும் குலையுயிருமாய்க்கூடத் திரும்பலாம்....

அல்லது அவனும் தன் தந்தையைப் போலவே வீழ்ந்து பட்டும் கைகளில் வேலினை விடாமல் பற்றியபடியே உயிர்துறக்கலாம்... ஏதாவது ஒரு புலவன் அவன் புகழைப் பாடலாம்... போர் பூமியில் அவனுடைய உற்றார் அவனுக்கு நடுகல் வைத்து வழிபடலாம்... அவன் குலத்திற்கு அவன் வீரம் நல்கும் குலதெய்வமாக ஆகலாம்.... 

அவன் அப்பழுக்கில்லாத சுத்த வீரன் ! அதுதான் இப்போது முக்கியம்.

அன்றைய தமிழ்ச் சமூகத்தில் இரு உணர்வுகள் - இயல்புகள் - மற்றவற்றினும் மதித்துக் கொண்டாடப்பட்டன. அவை காதலும் வீரமும். காதலின் உச்சத்தையும் வீரத்தின் உச்சத்தையும் பல்வேறு விதமாகப் படம்பிடிக்கும் பாடல்கள் சங்க இலக்கியங்களில் பல உண்டு. அவை காலக் கண்ணாடிகளாக நின்று அந்த மனிதர்களின் மனப்போக்கை இன்றும் விளக்குகின்றன..

சங்க நூல்களுள் மிகத் தொன்மையான தொல்காப்பியம் இலக்கண நூல் மட்டுமல்ல - இலக்கியமும் கூட.

புறத்திணையியல் வகைகளை விளக்கப்புகும் தொல்காப்பியர் வெட்சி, கரந்தை, வஞ்சி, உழிஞை என்று விளக்கிக்கொண்டே வரும்போது தும்பைத்திணையின் இயல்பைக் கூற முற்படுகிறார். எதிர்த்து வரும் பகைவேந்தரை வீரம் பொருதப் போரிட்டு அழிப்பது தும்பைத்திணையாகும். மற்ற திணைகளுக்கெல்லாம் அவ்வத் திணைகளின் இயல்பையும் இலக்கணத்தையும் மட்டும் கூறிவிட்டுச் செல்பவர் தும்பைக்கு மட்டும் சற்றே நிதானித்து - நான்கு வரிகள் எடுத்துக்கொண்டு - அந்தத்திணையின் பெருமையை விரித்துரைக்கிறார்.

இந்தக் கட்டத்தில் திணையின் சிறப்பியல்பான வீரத்தின் உச்சத்தை விளக்க ஒரு உதாரணம் அவருக்குத் தேவைப்படுகிறது. தாம் பார்த்தவற்றுள் கேட்டவற்றுள் உச்சக்கட்ட வீரக் காட்சியாக எது அவரது மனதில் நின்றதோ அதையே பதிவாக்கியிருக்கிறார் அவர் என்று நம்பலாம்.



"கணையும் வேலும் துணையுற மொய்த்தலின்
சென்ற உயிரின் நின்ற யாக்கை
இரு நிலம் தீண்டா அரு நிலை வகையொடு
இருபாற்பட்ட ஒரு சிறப்பின்றே..."

(தொல்காப்பியம் / பொருளதிகாரம் - புறத்திணையியல் - எண் 1017)


தொல்காப்பியர் காட்டும் இந்தக் காட்சியும் இந்தக் காட்சியின் பதிவிற்கு உபயோகப்படுத்தப்பட்டுள்ள சொற்களும் நீடித்த அதிர்வுகளை ஏற்படுத்தக்கூடியவை.

"பகைவரால் எறியப்பட்ட அம்பும் வேலும் மேன்மேலும் வந்து பாய்தலால் உயிர்நீங்கிய வீரனின் உடல் இருகூறுபட்ட போதும் நிலத்தில் சாய்ந்துவிடாமல் போர்முகம் காட்டும் சிறப்பினை உடையது இத்திணை !" என்கிறார்.

சற்று விரித்துக் கூறின் :

அந்த வீரனுடைய உடலை அம்புகளும் வேலும் விடாமல் தாக்கின. ஒரு கட்டத்தில் உயிர் பிரிந்துவிட்டது. உயிரைப் பிரிந்த உடல் தாக்கப்பட்ட அம்புகள் மற்றும் வேல்களினால் ஏறக்குறைய இரண்டாகப் பிளந்தது. அப்படிப் பிளந்த பிறகும்கூட அந்த உடல் தாங்கியிருந்த உயிர் ஒரு சுத்த வீரனுடைய உயிர் என்பதால் அது நிலத்தில் சடேலென மரம்போல விழுந்துவிடாமல் மெதுவாக ஆடியபடி நிற்கும் வீரப்புகழை விரித்துரைக்கும் சிறப்புக்களை உடையது தும்பைத் திணையாகும் !

புறநானூற்றுப் பாடல்களில் வீரத்தைப் பாடும் பாடல்கள் பல உண்டு. ஆனால் தொல்காப்பியம் காட்டும் இந்தக் காட்சி அவற்றிலிருந்து தனித்து நின்று அந்நாளைய நிலத்தில் விளைந்த வீர விளைச்சலை ஒரு அதிர்ச்சி மிக்க உதாரணம் மூலம் பளிச்சென்று வெளிச்சம்போட்டுக் காட்டிவிடுகிது.

உடலெங்கும் அம்புகளாலும் வேலாலும் துளைக்கப்பட்டு லேசாகத் தள்ளாடியபடி முன்னேறும் அந்த வீர உடலை கற்பனை செய்து பாருங்கள் - அதிர்ந்துபோய் விடுவீர்கள் !

"கணையும் வேலும் துணையுற மொய்த்தலின்.." - அந்த உடலில் அம்புகள் பாயவில்லை, ஈ மொய்ப்பதுபோல் மொய்த்திருக்கின்றன... அப்பப்பா ! ஒரே வரியில் சாட்டையடியாக அந்தக் காட்சி நமது மனக்கண்களில் சட்டென்று உருப்பெற்று விடுகிறது.

இப்படி உடல் இருகூறான பின்பும் மெதுவாக உடல் ஆடுதல் அட்டை என்னும் உயிரினத்தின் இயல்பென்பதால் இந்த வகை வீரத்திற்கு "அட்டையாடுதல்" என்றும் பெயராம் !

இதெல்லாம் ஒரு காலம்.

இந்நாளைய தமிழ் வீரத்தைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. ஏனெனல் பேனாக்கத்தியை நீட்டி ஒரே ஒரு குப்பத்து ரெளடி முரட்டுத்தனம் செய்தால் ஒரு கூட்டமே கைகட்டி வாய்பொத்தி நிற்கிறது.

இன்றைய கவிஞர்களால் வீரத்தைப் பாட முடிவதில்லை. பாடுபொருளாகக்கூடிய வீரம் அவர்களுக்குத் தென்படுவதில்லை.

காதலோடு அவர்கள் நின்றுவிடுகிறார்கள். நிறைவடைந்துவிடுகிறார்கள்.