வெள்ளி, 19 ஜனவரி, 2018

செல்வச் சந்நிதி ஆலயம்

ஈழவள நாட்டின் கண் காணப்படும் திருத்தலங்களில் வரலாற்றுச்சிறப்பு மிக்க ஆலயமாக செல்வச் சந்நிதி ஆலயம் விளங்குகின்றது. இவ்வாலயம் தொண்டைமானாறு என்னும் கிராமத்தில் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது .இதன் தோற்றம், அமைப்பு, நடைமுறை என்பன தனித்துவமானதும், வரலாற்றுச் சிறப்பும் மிக்கவுமாகவுள்ளது. உலகில் எவ்விடத்திலும் காணப்படாத தனித்துவம் இங்கே காணப்படுவதென்றால் இதன் புதுமைக்கும், பொலிவிற்கும், தெய்வத்தின் திருவருட் தன்மைக்கும் அளவே கூறமுடியாதுள்ளது. இங்கே குடிகொண்டுள்ள கந்தசுவாமியார் என்ற முருகன் திருவருளானது மிகுந்து பிரகாசித்துக் கொண்டிருக்கிறது.
 கந்தப் பெருமானது கருணை வெள்ளம் மடைதிறந்து பாய்கிறது. அவரை நாடி வரும் அடியார்கள் பக்தி வெள்ளத்திலும், கருணைக் கடலிலும் மூழ்கி திருவருளையும், திருவருள் பிரசாதத்தையும் தினந்தோறும் பெற்ற வண்ணம் இருக்கிறார்கள். இவ்வாலயமானது மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய தெய்வாம்சங்களை ஒருங்கே அமையப் பெற்றுள்ளது.
ஆகம விதிகட்கு அகப்படாத அதற்கு அப்பாற்பட்ட அன்பு, பக்தி ஞானம் ஆகிய அபரிதமான மார்க்க வணக்க தனித்தலமாகக் கொண்டுள்ள இங்கே கந்தப் பெருமானது அருளாட்சி நடைபெறுகிறது. இங்கே முருகன் ''பூரணம்'' என்று கூறும்படியாக பத்திரசக்தி முகூர்த்தத்தில் அமர்ந்திருக்கிறார் இதைக்கண்ணுற்ற வேதநாயகம்பிள்ளை என்ற பக்தி சிரோன்மணி 'செல்வச் சந்நிதி மேவிய பூரணனே' என்றும், 'செல்வச் சந்நிதி போற்றிய பூரணனே' என்றும், 'பூரணமாஞ் செல்வச் சந்நிதி மேனிப்புவனமுய்யும்' என்றும் வாய்விட்டு மனம் திறந்து கசிந்துருகிப் பாடியுள்ளார். சின்மயம் என்று கூறுவதும் கருணையே குறிக்கும்.
இவ்வாலயத்தின் வரலாற்றை நோக்கினால் இது அரசியலுக்குமேல் பொருளாதார, சமூகவரலாற்றுடன் மிகுந்த நெருங்கிய தொடர்புடையதாகவும் இதற்கு அப்பால் பக்தி வரலாற்றுடன் தொடர்புடையதாகவும் உள்ளது. இதைப்பற்றிய வரலாறுகள், சான்றுகள் இன்று கிடைக்காதபோதும் கர்ணபரம்பரை வரலாற்றுக்கதைகள் உண்டு. இங்கு ஓடும் ஆறும் இதன் அருகமைந்த ஆலயமும் வரலாற்றுடன் பக்தி இளையோடபட்ட தொன்மையான பெருமை வாய்ந்தது. தொண்டைமானாறு என்னும் இவ் ஆறானது முன்பு கடலுடன்சங்கமிக்காது 'வல்லிநதி' என்னும் பெயருடன் மிளிர்ந்தது.

ஆலயத்தின் ஆரம்பகால தோற்றம்.
வீரவாகுத்தேவர் காலடி பதித்த இடம்.
கந்தர்வரான ஐராவசு வழிபாடுசெய்த இடம் (பூவரசமரம்)
இதற்குச்சான்றாக வல்லிநதிக்கு மேலாகப் போடப்பட்ட பாலமானது வல்லைப் பாலம் என்று அழைக்கப்பட்டது அது இன்றும் இப் பெயரையே கொண்டுள்ளது. இதையொட்டியே வல்லை வெளி என்றும் இப் பாலத்தின் அருகில் உள்ள காணிகளை வல்லியப் பெருவெளி என்று இன்றும் கூறப்படுகிறது. இந்; நதியின் தொடு வாயிலை தொண்டைமான் என்ற ஓர் அரசன் வெட்டி கடலிடம் சங்கமிக்க விட்டான். அன்று முதல் இந் நதியின் பெயர் (ஆறு) தொண்டைமானாறு என்றும் அழைக்கப்பட்டது. இப் பெயரே இக் கிராமத்திற்கும் மருவி வந்துள்ளது அரசன் நதி வாயிலை வெட்டியதன் காரணமாக கடலின் உப்பு நீரானது உட்புகத் தொடங்கியது நன்நீராய் இருந்த வல்லிநதி நீர் மாற்றம் பெற்றது போல நன் நீரான வல்லிநதி உவர் நீராக மாறியது. இவ் உவர் நீர் உள் நாடு சென்றதன் காரணமாக கரணவாய் போன்ற பகுதிகளில் உப்பு பெரு வாரியாக இயற்கையாக விளையத் தொடங்கியது. இவ் உப்பானது பிற் காலங்களில் இவ் ஆற்றினுடாக கொண்டு வரப்பட்டு தொடுவாயிலில் அமைந்திருந்த சேகரிப்பு நிலையத்தில் நிரப்பப்பட்டது. ஆதன் காரணமாக அந்நிலையத்தை உள்ளடக்கிய நிலம் 'உப்பு மால்' என்று இன்றும் அழைக்கப்படுகிறது இலங்கையின் கரையோரத்தை ஆட்சி புரிந்த அந்நிய ஆட்சியரான போர்த்துக்கேயர் ஒல்லாந்தர் அதன் பின் ஆண்ட ஆங்கிலேயரும் இவற்றுடன் வணிக முறையில் தொடர்பு கொண்டிருந்தனர்.        

நல்லூர் கந்தசுவாமி கோவில்

யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகள் வம்சத்தின் முதலாவது அரசனான கூழங்கைச் சக்கரவர்த்தியின் அமைச்சனொருவனான புவனேகவாகு என்பவனால் இக் கோயில் கட்டுவிக்கப்பட்டதென யாழ்ப்பாண வைபவமாலை கூறுகிறது. இதற்கு ஆதாரமான பின்வரும் தனிப்பாடல், 16 அல்லது 17 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் கைலாய மாலை என்னும் நூலின் இறுதியில் காணப்படுகின்றது.
இலக்கிய சகாத்தமெண்ணூற் றெழுபதாமாண்டதெல்லை
யலர்பொலி மாலை மார்பனாம் புவனேகபாகு
நலமிகுந்திடு யாழ்ப்பாண நகரிகட்டுவித்து நல்லைக்
குலவிய கந்தவேட்குக் கோயிலும் புரிவித்தானே
ஆனால் இது 15 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றி 17 ஆண்டுகள் ஆண்ட கோட்டே சிங்கள அரசின் பிரதிநிதியான, பிற்காலத்தில் சிறீசங்கபோதி எனும் பட்டத்தைக்கொண்ட புவனேகபாகு அல்லது புவனேகபாகு எனப்பெயர் கொண்டு கோட்டே அரசனான, செண்பகப் பெருமாள் என்பவனால் கட்டப்பட்டதென வேறு சிலர் கூறுகிறார்கள். இதற்கு ஆதாரமாக நல்லூர்க் கந்தசுவாமி கோயிலில் இன்றும் கூறப்பட்டுவரும் கட்டியத்தை இவர்கள் காட்டுகிறார்கள். சமஸ்கிருதத்தில் உள்ள இக் கட்டியத்தின் பகுதி பின்வருமாறு உள்ளது:
சிறீமான் மஹாராஜாதி ராஜாய அகண்ட பூமண்டலப்ரதியதி கந்தர விஸ்வாந்த கீர்த்தி சிறீ கஜவல்லி மஹாவல்லி சமேத சுப்ரமண்ய பாதாரவிந்த ஜனாதிரூட சோடச மஹாதான சூர்யகுல வம்ஸோத்பவ சிறீ சங்கபோதி புவனேகபாகு ஸமுஹா
திருவருள் பொருந்திய தெய்வயானையுடனும்வள்ளியம்மனுடனும் சேர்ந்திருக்கின்ற சுப்பிரமணியரின்திருவடிகளை வணங்குபவனும், மன்னர்களுக்கு மன்னனும், மிகுந்த செல்வங்களுடையவனும், இப் பரந்த பூமண்டலத்தில் எல்லாத்திசைகளிலும் புகழப்படுபவனும், மக்கள் தலைவனும், பதினாறு பெருந்தானங்களைச் செய்பவனும், சூரிய குலத்தில் உதித்தவனுமாகிய சிறீசங்கபோதி புவனேகவாகு... என்பது இதன் பொருள்.
முன்னரே சிறியதாக இருந்த கோயிலைத் தனது ஆட்சிக்காலத்தில் புவனேகவாகு பெருப்பித்துக் கட்டியிருக்கக் கூடும் என்பதே பொருத்தம் என்பது வேறுசிலர் கருத்து.
யாழ்ப்பாண அரசின் இறுதிக்காலத்தில் நல்லூரிலிருந்த மிகப்பெரிய கோவில் இதுவேயென்பது போத்துக்கீசருடைய குறிப்புக்களிலிருந்து தெரியவருகிறது. யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போத்துக்கீசத் தளபதியான பிலிப்பே டி ஒலிவேரா1620ல் அரசின் தலை நகரத்தை யாழ்ப்பாணத்துக்கு மாற்றியபோது நல்லூர்க் கோயிலை இடித்துத் தரைமட்டமாக்கும்படி உத்தரவிட்டான். இதிலிருந்து பெறப்பட்ட கற்கள் யாழ்ப்பாணத்தில் புதிய கோட்டை கட்டுவதில் பயன்பட்டதாகத் தெரிகின்றது. இது இருந்த இடத்தில் போத்துக்கீசர் சிறிய கத்தோலிக்க தேவாலயமொன்றை அமைத்ததாகத் தெரிகிறது. பின்னர் ஒல்லாந்தர்இதனைத் தாங்கள் சார்ந்த புரட்டஸ்தாந்த கிறிஸ்தவ தேவாலயமாக மாற்றினார்கள். இன்றும் இவ்விடத்தில் பிற்காலத்தில் பெரிதாகத் திருத்தியமைக்கப்பட்ட கிறிஸ்தவ தேவாலயமே காணப்படுகின்றது.
ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தின் (1658–1798) இறுதி ஆண்டுகளில் இந்துக் கோயில்கள் அமைப்பது தொடர்பாக ஆட்சியாளர்களின் இறுக்கம் ஓரளவு தளர்ந்தபோது, நல்லூர் கந்தசுவாமி கோயில் மீள அமைக்கப்பட்டது. முன்னைய இடத்தில் கிறிஸ்தவ தேவாலயம் இருந்தபடியால் இன்னொரு இடத்தில் கோயிலை அமைத்தார்கள்.
மடாலயம் போல் காட்சியளித்துக் கொண்டிருந்த இவ்வாலயத்தை, ஆகமம் சார்ந்த கிரியை முறைக்கும், சிற்ப சாத்திர விதிக்கமைந்த கட்டட முறைக்கும் மாற்றியமைத்து, இன்றைய நிலைக்குக் கொண்டுவர வித்திட்டவர் ஆறுமுக நாவலர் ஆவார். அவரைத் தொடர்ந்து, அவரது மாணவர்கள் இவ்வாலய வளர்ச்சியில் மிகுந்த ஈடுபாடு காட்டினார்கள்.

யாழ்ப்பாணம்






சைவநெறி தழைக்கவும், தமிழ் மொழி செழிக்கவும் பாடுபட்ட ஆறுமுக நாவலர்

இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள நல்லூரில் (1822) பிறந்தார். குடும்பத்தில் பலரும் தமிழ் அறிஞர்கள். ஆரம்பக் கல்வி வீட்டிலேயே தொடங்கியது. நல்லூர் சுப்பிரமணிய உபாத்தியாயரிடம் நீதிநூல்களைக் கற்றார். 9 வயதில் தந்தை இறந்தார்.
l சரவணமுத்து புலவர், சேனாதிராச முதலியாரிடம் குருகுல முறையில் உயர் கல்வி பயின்றார். தமிழ் இலக்கியம், இலக்கணம், சாஸ்திரங்கள், சிவாகமங்களைக் கற்றார். சிறு வயதிலேயே தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலத்தில் புலமை பெற்றார். தலைசிறந்த எழுத்தாளர். நல்ல பேச்சாற்றல் கொண்டவர்.
l யாழ்ப்பாணம் மெதடிஸ்த ஆங்கில பாடசாலையில் (மத்திய கல்லூரி) 20-வது வயதில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். அதன் நிறுவனர் பேர்சிவல் பாதிரியாருக்கு பைபிளைத் தமிழாக்கம் செய்வதில் உறுதுணையாக இருந்தார்.
l வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோயிலில் 1847 முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சொற்பொழிவு ஆற்றினார். இதனால் பலரும் சிவதீட்சை பெற்றனர். அசைவ உணவைத் தவிர்த்தனர். இவரது முயற்சியால் பல கோயில்கள் புதுப்பிக்கப்பட்டு, பூஜைகள் நடைபெறத் தொடங்கின.
l சமயக்குரவர்களின் பாடல்களை சுவடியில் இருந்து தொகுத்துப் புத்தகமாக அச்சிட்டார். தன் வீட்டுத் திண்ணையில் பல மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தார். சைவப் பிரகாச வித்யாசாலை என்ற பாடசாலையைத் தொடங்கினார்.
l சைவ சமய வளர்ச்சியில் கவனம் செலுத்துவதற்காக, ஆசிரியர் பணியை 1848-ல் துறந்தார். அச்சு இயந்திரம் வாங்க 1849-ல் சென்னை வந்தார். திருவாவடுதுறை ஆதீனத்தில் சைவப் பிரசங்கம் செய்து நாவலர் பட்டம் பெற்றார். சூடாமணி, நிகண்டுரை, சவுந்தர்ய லஹரியை பதிப்பித்தார்.
l தன் வீட்டிலேயே அச்சுக்கூடம் நிறுவி, பாலபாடம், ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன் உரை, சிவாலய தரிசன விதி, சைவ சமய சாரம், நன்னூல் விருத்தியுரை உள்ளிட்ட பல நூல்களை அச்சிட்டார். பெரிய புராணத்தை வசன நடையில் எழுதி அச்சிட்டார். ஏடுகளாக இருந்த பல நூல்களை அச்சிலேற்றினார். பரிமேலழகர் உரையை முதலில் பதிப்பித்தவர்.
l ஒருமுறை சென்னை கடற்கரையில் இவர் நடந்து சென்றபோது, அருகே உள்ள குடிசையில் தீப்பிடித்துவிட்டது. இதுசம்பந்தமாக நீதிமன்றத்தில் சாட்சி அளிக்கவேண்டி இருந்தது. ஆங்கிலத்தில் பேச முற்பட்ட இவரை நீதிபதி தடுத்து, தமிழிலேயே பேசுமாறும், அதை நீதிமன்ற அதிகாரிதான் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து கூறவேண்டும் என்றும் கூறினார்.
l உடனே நாவலர், ‘‘அஞ்ஞான்று எல்லிஎழ நானாழிப் போதின்வாய் ஆழிவரம் பனைத்தே காலேற்று காலோட்டப்புக்குழி’’ என்றார். மொழிபெயர்ப்பாளர் திணறிவிட்டார். ‘சரி சரி, ஆங்கிலத்திலேயே கூறுங்கள்’ என்று நீதிபதி சொல்ல, மறுத்த நாவலர், ‘சூரியன் உதிப்பதற்கு நான்கு நாழிகை முன்னர் கடற்கரை ஓரம் காற்று வாங்கச் சிறுநடைக்குப் புறப்பட்டபோது’ என்று தெரிவித்தாராம்.
l 20-க்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ளார். 8 நூல்களுக்கு உரை எழுதியுள்ளார். ஏழைகளுக்கு இலவச நூல்களோடு இலவசக் கல்வியும் வழங்கி தாய்மொழியில் கல்வி கற்கச் செய்த நாவலர் பெருமான் 57-வது வயதில் (1879) மறைந்தார்.