காலைச் சூரியன் கொண்டு வந்த கதகதப்பில் என்
கண்விழிப்பு,
மெதுவாக என் இமைகளே மேலேற………….
எனது அன்புத் தோட்டத்தில் மறுபடியும் நான்……
நேற்றிரவே வந்தேன்,
போர்முனை வீரனின் வீடு திரும்பல் போன்ற பல
வருடப் போராட்ட ஓய்வு.
விழி முற்றும் திறந்தது..
உடல் இன்னும் ஓய்வில், தளர்வில்,
உறக்கத்தில்….
எடைப் போட யாருமில்லை, நிரூபிக்க
எதுவுமில்லை,
இந்த அன்பில் முழுதாய் தளர்த்திக் கொள்ளலாம் –
என்னை…
கண்களை மறுபடியும் மூடிக் கொள்கிறேன்,
கருப்பை குழந்தைபோல் சுருண்டு கொள்கிறேன்,
கை நீண்டு கனத்த போர்வையை போர்த்திக்
கொள்கிறது,
நான் அன்பின் கருப்பையில் மிதக்க
ஆரம்பிக்கிறேன்…
என்ன ஒரு ஆனந்தம்…
உடம்பு பொய் என்று யார் சொன்னது …..
எனது உடல் இப்போது இருப்பது பூரண ஆனந்தத்தில்,
மகிழ்ச்சியில், மிதப்பில், துடிப்பில், வளர்ச்சியில்…
அன்பின் சுரங்களை எழுப்புகிறது அது –
என்னைச்சுற்றி….
எல்லோரையும் எல்லாவற்றையும் தொட்டு மீட்டுகிறது அது…
எந்தப் பேச்சும் இல்லாமல்,
இந்த பூரண அமைதியில்,
நாங்கள் அனைவரும் ஒரே லயத்தில்…….
நான் இந்தத் தோட்டத்தின் முழுமையில் கரைந்து
இருக்கிறேன்,
நான் எனக்குப் பொருத்தமாகப் பொருந்தி
இருக்கிறேன்.
எனது மனைவியின், மகனின் பரபரப்புக்
குரல்கள்,
பக்கத்து நண்பனின் வீட்டில் கவனமெடுத்துப்
பேசும் மெல்லிய குரல்கள், ஆச்சரிய ஆனந்தத்தில் குதூகலிக்கும் நண்பனின் மகன்களின்
குரல்கள்,
இப்படி அன்பென்ற ஒரே பாடலை இசைக்கும்
பல்வேறுபட்ட வாத்தியங்கள், அப்படியொரு சந்தோஷ அன்பில் நிறைந்து வழியும் பல்வேறு
ஊடகங்கள்,
இதோ, இந்தக் குரல் எனதருமை மரங்களுடையது,
காற்றின் துணையோடு, காண அழைப்பு
அனுப்புகிறது.
ஊக்.. அகல விரிந்த கண்களுடன் எழுந்து நின்றேன் –
இல்லையில்லை,
துள்ளியெழுந்தேன்…….
என் குழந்தைகளை பார்க்க ஓடுகிறேன் -
இப்போது மரங்கள்….
ஓ..
என்ன ஒரு சீரும் சிறப்புமாக அவை..
வரிசை வரிசையாக, சாரி சாரியாக,
அவை வளர்ந்து, வரவேற்பு கொடிமரம் போல்
அணிவகுப்பில்,
ஆனால் ஒவ்வொன்றும் தன்போக்கில்
சாய்ந்துகொண்டு,
ஆனால் அனைத்தும் அன்பு நிரம்பிய தென்றலைப்
படைத்துக் கொண்டு……..
கண்களில் துளிர் விடுகிறது கண்ணீர்,
கன்னங்களில் வழிந்து கடைவாயில் கரிக்கிறது உப்பு,
அருகே சென்று ஒவ்வொன்றையும் தட்டிக் கொடுத்து
சேதி பரிமாறிக் கொள்கிறேன்,
ஹேய்,.. உங்கள் வளர்ச்சியின் அழகான கணங்களை
அருகிருந்து ரசிக்காமல் இழந்து விட்டேன்,
ஹேய்,… நீங்கள் சிறுவனிலிருந்து சிறகு முளைத்த
வாலிபனாய்
வளர்ந்த விந்தை மாற்றத்தை நான் பார்க்க
வில்லை,
நீங்கள் எல்லோரும் மிக வித்தியாசமாய்த்
தெரிகிறீர்கள்,
எவ்வளவு உறுதியாய் வளர்ந்து
நிற்கிறீர்கள்…..
எப்போதும் என்னை நிமிர்ந்து பார்த்து கவனம்
கேட்டு
நச்சரிக்கும் குழந்தைகளா நீங்கள்….
நன்றி
கடவுளே நன்றி…..
சந்தோஷமாயிருக்கிறது.
சந்தோஷம் தாங்காமல் நான் அழ
ஆரம்பிக்கிறேன்,
நீங்களும் சந்தோஷமாயிருக்கிறீர்கள்,
உங்களுக்கு இன்னும் என்னை
நினைவிருக்கிறதே….
வணக்கம்டா…. உங்களை வணங்கனும்டா…..
சுற்றிலும் பார்க்கிறேன்…..எல்லோரும் வளர்ந்து
விட்டனர்.
எனது நண்பனின் மகன்கள் -
வெட்கத்துடனும் நேசத்துடனுமான பார்வையோடு,
எனது மகன் ஒவ்வொரு செடியாக
இதைப்பார்…….இதைப்பார்……….
இதைப்பார் என்கிறான்,
அவர்கள் பகிர்ந்து கொட்டும் நேசத்தை உணர்கிறேன் நான்,
அவர்கள் வளர்ந்து காட்டும் நட்பை அறிகிறேன்
நான்,
அவர்கள் தோட்டமாய் துணை நிற்கும் ஆதரவு
புரிகிறது எனக்கு.
ஓ… என் முழுத் தோட்டமும் அன்பில்
மிதக்கிறது
கொண்டாட்டத்தின் குதூகலம்….
எங்கே இந்த மரங்களும் செடிகளும், மனிதர்களும்
பருவம் மாறி
பூத்து விடுவார்களோ என்று பயமாக இருக்கிறது
எனக்கு….
இது ரொம்ப அதிகம்…. ஹேய், காப்பாற்றிக்
கொள்ளுங்கள்……
உங்கள் நேசத்தை, சந்தோஷத்தை, கொண்டாட்டத்தை,
தக்க வைத்துக் கொள்வீர்
இதயத்தின் ஆழத்தில் இவைகளைப் புதைத்துக்
கொள்ளுங்கள்,
இதுதான் இயற்கை உரம் இன்பமான மனிதன் வளரவும்
மலரவும்…..
இதை இவ்வளவு எளிதில் கடந்து போகும் காற்றில்
வீசிவிடக் கூடாது.
வாருங்கள் அருகில்,
நான் காட்டித் தருகிறேன் – இந்த அன்பில்
தழைக்கும் செயல்களை, படைப்புகளை, பரிமாறல்களை, கருணையை, அமரத்துவத்தை,
இது மிக எளிதாகக் கைகூடக் கூடியது,
அதனாலேயே மட்டும் அகங்காரத்திற்கு கடிது.
இது…… இந்த ரகசியம்……..
நேசத்தை வெளித் தொடர்பாய் காட்டக் கூடாது
ஆம்,…. அன்பை நேசியுங்கள், ஆனந்தத்தை
நேசியுங்கள், அழகை நேசியுங்கள், நேசியுங்கள்……..நேசியுங்கள்……..
நேசிப்பின் சுவைக்காக நேசியுங்கள்….
இதுதான் பூரணம்., இதுதான் அமரத்தன்மை.