வெள்ளி, 1 ஜனவரி, 2016

அபிஷேக நேரத்தில் வழிபாடு செய்யலாமா?


ஆலயங்களில் இவ்வாறுதான் பூஜை செய்யவேண்டும்; அந்தந்த தெய்வங்களுக்குரிய மந்திரங்களை உச்சரிக்கவேண்டும்; அபிஷேக ஆராதனை செய்யவேண்டுமென்று ஆகமங்கள் வரையறுத்துக் கூறியுள்ளன. அதனால் தெய்வங்களுக்குப் பயனுண்டா என்றால், அவர்களுக்கு எதுவுமில்லை. முறையாகச் செய்யவில்லையென்றால் நமக்குதான் வளர்ச்சி தடைப்படும். இறைவன் நம்மிடம் எதையும் எதிர்பார்ப்பதில்லை. அவன் படைத்த உயிர்களாகிய நாம்தான் அவனிடம் நிறைய எதிர்பார்க்கிறோம். அதற்கான பிரபஞ்ச சக்தி ரகசியங்களை உணர்ந்த முனிவர்களும் ஞானிகளும்தான், நம் தேவைகளை நிறைவேற்றிக்கொள் வதற்கான வழிமுறைகளை ஆகமங்களாக எழுதிவைத்தனர். அவற்றை சந்தேகத்திற் கிடமின்றி பின்பற்றவேண்டியது நமது கடமை.
"பூர்யந்தே சர்வ கர்மான்; ஜாயந்தே ஞானம் ஆத்மனே' என்பார்கள். அதாவது நாம் முறைப்படி செய்யும் வழிபாட்டால், அனைத்து தேவைகளும் நிறைவாக்கப்படுகின்றன. நம் ஆத்மாவுக்கு கடவுளைப் பற்றிய அறிவு, நம்மை சுற்றியிருப்பவர்களைப் பற்றிய அறிவு, நம்மைப்பற்றிய அறிவு உண்டாகின்றது. இதில் தன்னைப் பற்றிய அறிவு கண்டிப்பாகத் தேவை. நம் அறிவு தெளிவாக இருந்தால் எதிலும் குழப்பமில்லை.
சிலர் பூஜையெல்லாம் எதற்கு? தியானம் செய்தால் போதுமென்று சொல்வார்கள். ஒரு கிராமத்தில் ஐந்தாம் வகுப்புவரை பள்ளிக்கூடம் இருக்கிறது. அங்கு படித்துமுடித்த ஒருவன் அதுவே பெரிய கல்வியென்று நினைத்துக்கொள்வதுபோலதான் இதுவும். அதற்குமேலும் பல உயர்நிலைக் கல்விகள் உள்ளன. பலர் தாங்கள் அறிந்தவற்றையே பிரதானமாகக் கருதி மற்றவற்றை நிராகரிக்கிறார்கள்.
பூஜை செய்வதில் அர்ச்சகர்களுடைய பொறுப்பு மிக முக்கியமானது. "கடவுளுக்கும் மனிதர்களுக்குமிடையில் இவர்கள் எதற்கு' என்ற விமர்சனங்களும் உண்டு. ஆனால் உண்மை அதுவல்ல. அர்ச்சகர்களின் கடமை மிக உயர்வானது. பொருளாதாரத்துக்காக செய்யப்படுவதல்ல இது. பணம் சம்பாதிக்க வேண்டுமென்றால் வேறு எந்தத் தொழிலாவது செய்யலாம். இறைசேவை அப்படியல்ல. அர்ச்சகர்களுக்கு மரியாதை செய்வதற்கு- பக்தர்கள் பொருள் கொடுப்பதற்கு சம்பாவனா என்று பெயர். பாவனை என்றால் எண்ணம்; சம் என்றால் நல்லது. நல்ல எண்ணத்துடன் கொடுப்பது சம்பாவனை. "இவர் எனக் காகவும் என் குடும்பத்திற்காகவும் பூஜை செய்கிறார்; அனைவரது நலனுக்காகவும் பூஜை செய்கிறார்' என்னும் நல்ல எண்ணத் துடன் சம்பாவனை தரவேண்டும். தர்ப்பணம் செய்தாலும்கூட அனைவருக்காகவும் செய்கிறார்கள். எனவே அவர்களைப் பாதுகாக்கவேண்டியது சமுதாயத்தின் கடமை. அனைவரின் நன்மைக்காக பூஜை செய்வதால்தான் இவர்களுக்கு அர்ச்சகர்கள் என்று பெயர்.
ஓதுவா மூர்த்திகள் என்று சொல்கிறோம்.
தமிழில் மிக அற்புதமாக இறைவனைப் பாடுவார்கள். அவர்கள் இப்போது பெருமளவில் இல்லை. குறிப்பிட்ட தினங்களில் வந்து பாடிச்செல்கிறார்கள். ஒருசில ஆலயங்களைத் தவிர பல ஆலயங்களில் ஓதுவா மூர்த்திகள் நிரந்தரமாக இல்லை. ஏன்? அவர்களை முறையாகப் பாதுகாக்கத் தவறிவிட்டோம். அவர்களையெல்லாம் ஊக்குவிக்கவேண்டியது சமுதாயத்தின் கடமையாகிறது. ஆலயம் சார்ந்தவர்கள் குறைந்துகொண்டே வருகிறார்கள்.
அது குறைந்துவிட்டால் அவர்களுக்கோ அவர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர் களுக்கோ பாதிப்பில்லை. அவர்கள் வேறு தொழில்களுக்குச் சென்று விடுவார்கள். அப்படி ஆலயப் பணி செய்பவர்கள் இல்லாது போனால் சமுதாயத்திற்குதான் பாதிப்பு.
எனவே அர்ச்சகர்கள், ஓதுவா மூர்த்திகள், நாதஸ்வரம் உள்ளிட்ட இசைக்கலைஞர்களை நாம் பாதுகாக்க வேண்டும். "ஒரு மணி நேரம் ஊதுவதற்கு ஐந்தாயிரமா' என்று கேட்கிறவர்களைப் பார்க்கிறோம். கல்யாண மண்டப வாடகையே ஐந்து லட்சம் கொடுக்கிறார்
களல்லவா? சிவனுடைய லீலை என்கிறோமே- அதுபோல, அவனருளால் இவையெல்லாம் மாறி நல்ல நிலைக்கு வருமென்ற நம்பிக்கை எனக்குண்டு.
சுவாமிக்கு பாலாபிஷேகம், தயிரா பிஷேகம் போன்றவை செய்கிறோம். பல ஆலயங்களில் அவை கோமுகி வழியே சென்று வீணாவதைக் காண வேதனையாக உள்ளது. இறைவனுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட அவை புனிதமானவை. நிர்மால்யம் என்று சொல்வோம். மலம் என்றால் அழுக்கு; நிர்மால்யம் என்றால் அழுக்கற்றது; தூய்மை செய்யப்பட்டதென்று பொருள். பொதுவாக சிவார்ப்பணம் என்று சொன்னாலே ஒரு பொருள் நிர்மால்யமாகிவிடுகிறது. எனவே அவற்றை வீணாக்காமல் பக்தர்களுக்கும் ஏழைகளுக்கும் கொடுக்கும் கடமையை ஆலய அறங்காவலர்கள் மேற்கொள்ளவேண்டும்.
இவ்வாறு நிர்மால்யத்தை ஏழைகளுக்கோ பக்தர்களுக்கோ கொடுப்பது தவறல்ல. சாஸ்திரப்படி இதை சிவாச்சாரியார்களே செய்யவேண்டும். குருக்கள், சிவாச்சார்யார்களையெல்லாம் ஆதிசைவர் என்பார்கள். அனாதி சைவன் என்பவர் சிவபெருமான். அவர் ஆதியும் அந்தமும் அற்றவர். அதுபோல பாரசைவர் என்றும் உண்டு. இவர்களைப் பண்டாரம், லிங்காயதர் என்று சொல்வார்கள். கிராமப்புறங்களில் பார்க்கலாம். அதுபோல பட்டாச்சார்யார்கள், குலதெய்வ- சிறுதெய்வ பூசாரிகள் என்று இறைவனுக்குப் பூஜை செய்வோர் பலருண்டு. அவரவர் மரபுப்படி அவர்கள் பூஜைகள் மேற்கொள்வார்கள். அவர்களெல்லாம் நலிவடைந்துவிடாமல்- வேறு தொழிலுக்கு மாறிச் சென்றுவிடாமல் காப்பாற்ற நாம் முயலவேண்டும்.
ஆலயம் என்பது சமுதாயத்துக்கானது. சமுதாயத்தை ஒன்றிணைப்பது. எவரும் பசியின்றி வாழவேண்டுமென்பதே நமது ஆன்மிகத்தின் அடிப்படை. பசியின்றி வாழ்பவனே உறுதியுள்ளவனாக
வும் தன்னம்பிக்கையுள்ளவனாகவும் இருப்பான். அப்படிப்பட்டவர்களைக் கொண்ட சமுதாயத்தில் நல்லறம் தழைத்தோங்கும். பசியோடு யாரொருவர் இருந்தாலும் அது அந்த நாட்டுக்கு சாபம்தான். ஆங்கிலேயர் இந்தியாவுக்கு வந்த காலத்தில் ஒரு பிச்சைக்காரனைக்கூட அவர்கள் பார்க்கவில்லை. அப்போது அவர்கள் இந்தியர்களிடையே தாழ்வு மனப்பான்மையை உருவாக்கவேண்டுமென்று முடிவெடுத்தார் கள். நமது தாய்மொழியைவிட ஆங்கில மொழியே உயர்ந்ததென்று நாம் கருதச் செய்வதற்கான முயற்சியை மேற்கொண்டார்கள். அதில் பெருமளவில் வெற்றியும் பெற்றார்கள். நம்மிடையே ஏற்பட்ட தாழ்வு மனப்பான்மையாலும், ஆங்கிலேயர்கள் கையாண்ட பிரித்தாளும் சூழ்ச்சிக்கு இரையானதாலும் மூன்று நூற்றாண்டுகளுக்குமேல் நாம் அவர்களுக்கு அடிமையானோம். நமது கலாச்சாரத்தை தவறவிட்டதும் அதற்கொரு காரணம்.
வேட்டி கட்டிச் செல்வதைக்கூட பரிகசிக்கும் நிலையும் இருந்தது. தற்போதுகூட சில இடங்களில் அந்த நிலை உள்ளது. ஆனால் வெளிப்படையாக செய்யமுடியாத அளவுக்கு சட்டமியற்றப்பட்டிருப்பது ஆறுதலான விஷயம். நாம் ஆலயத்துக்குச் செல்லும்போது வேட்டி கட்டிச்செல்லும் பழக்கத்தைக் கடைப்பிடிக்கவேண்டும். "வேஷ்டம்' என்றால் சுற்றிக்கொள்வது. அதிலிருந்து உருவான சொல்லே வேட்டி.
சிலர் அபிஷேகத்துக்கு பால் வாங்கித் தருவார்கள். கூடுமானவரை தூய்மையான பசும்பாலை வழங்குவது நல்லது. அபிஷேக சமயத்தில் திரை மூடியிருக்கும் நேரத்தில் எட்டிப்பார்ப்பது கூடாது. பிரார்த்தனையும் செய்யக்கூடாது. அவசியம் மணி ஒலிக்கவேண்டும். அபிஷேக நேரத்தில் பிரதட்சிணம் செய்யக்கூடாதென்பதும் சாஸ்திரம் விதித்திருக்கும் கட்டுப்பாடு. இவற்றையெல்லாம் கடைப்பிடித்து பக்திசெய்தால், இறைவனின் அனுக்கிரகத்தைப் பெறுவது உறுதி.