வியாழன், 15 மே, 2014

வள்ளிப் பாட்டு

வள்ளிப்பாட்டு -1
பல்லவி
எந்த நேரமும்நின் மையல் ஏறுதடீ!
குற வள்ளீ!சிறு வள்ளீ!
சரணங்கள்
(இந்த)நேரத்தி லேமலை வாரத்தி லேநதி
யோரத்தி லேயுனைக் கூடி-நின்றன்
வீரத் தமிழ்ச்சொல்லின் சாரத்தி லேமனம்
மிக்க மகிழ்ச்சிகொண் டாடி-குழல்
பாரத்தி லேஇத ழீரத்தி லேமுலை
யோரத்திலே அன்பு சூடி-நெஞ்சம்
ஆரத் தழுவி அமரநிலை பெற்று
அதன்பயனை யின்று காண்பேன். (எந்தநேரமும்)
வெள்ளை நிலாவிங்கு வானத்தை மூடி
விரிந்து பொழிவது கண்டாய்-ஒளிக்
கொள்ளை யிலேயுனைக் கூடி முயங்கிக்
குறிப்பினி லேயொன்று பட்டு-நின்தன்
பிள்ளைக் கிளிமென் குதலையி லேமனம்
பின்ன மறச்செல்ல விட்டு அடி
தெள்ளி ஞானப் பெருஞ்செல்வ மே!நினைச்
சேர விரும்பினன்,கண்டாய்! (எந்தநேரமும்)
வட்டங்க ளிட்டுக் குளமக லாத
மணிப்பெருந் தெப்பத்தைப் போலே-நினை
விட்டு விட்டுப்பல லீலைகள் செய்துநின்
மேனி தனைவிட லின்றி-அடி
எட்டுத் திசையும் ஒளிர்ந்திடுங் காலை
யிரவினைப் போன்ற முகத்தாய்! முத்தம்
இட்டுப் பலமுத்த மிட்டுப் பலமுத்தம்
இட்டுனைச் சேர்ந்திட வந்தேன். (எந்தநேரமும்)
வள்ளிப் பாட்டு-2
ராகம்-கரஹரப்பிரியை தாளம்-ஆதி
பல்லவி
உனையே மையல் கொண்டேன், வள்ளீ!
உவமையில் அரியாய்,உயிரினும் இனியாய்! (உனையே)
சரணங்கள்
எனை யாள்வாய், வள்ளீ!வள்ளீ!
இளமயி லே!என் இதயமலர் வாழ்வே!
கனியே!சுவையுறு தேனே!
கலவியி லேஅமு தனையாய்!-(கலவியிலே)
தனியே,ஞான விழியாய்!நிலவினில்
நினைமருவி, வள்ளீ!வள்ளீ!
நீயா கிடவே வந்தேன். (உனையே)