புதன், 8 அக்டோபர், 2014

சங்கச் சிந்தனைகள் - 4

வெகுதூரத்தில் கிராமத்து நாய் ஒன்று ஊளையிட்டு ஓய்ந்தது.

அவன் அந்த வேலியின் ஓரமாக மெதுவாக நடந்து சற்றே முயன்றால் தாண்டிவிடக்கூடிய ஒரு இடத்தில் நின்றான். அதிகம் சப்தம் செய்யாமல் தாண்டியாக வேண்டும். தாண்டும்போது காலில் கல்லோ முள்ளோ குத்தாமல் இருக்க வேண்டும். கால் வைக்கும் இடத்தில் ஊர்வனவோ நெளிவனவோ இருந்து தொலைக்கக்கூடாது. நேற்றுத் தாண்டிய இடம் இதுதானா என்பது சரிவரத் தெரியவில்லை. அமாவாசைக்கு இரண்டு நாட்கள்தான் உள்ளன என்பதால் பொட்டு வெளிச்சம் கிடையாது. கொற்றவையை நேர்ந்துகொண்டு தாண்டிவிடவேண்டியதுதான் !

ஹா!

தாண்டும்போது இருளில் சரியாகப் புலப்படாத பெருங்கல்லொன்று தடுக்க ஏறக்குறைய விழுந்துவிட்டான் ! நாசமாய்ப்போக ! நேற்று தாண்டிய அதே இடம் - அதே இடத்தில் மீண்டும் அடி... விண் விண்ணென்று தெரிக்க... மண்டையில் கோபம் பரபரவென்று ஏறியது.

முடியாது - இப்படி ஒவ்வொரு நாளும் திருட்டுத்தனமாக வந்து போய்க்கொண்டிருக்க முடியாது. நேன்றே ஜாடை காண்பித்தாகிவிட்டது. இன்று பகிரங்கமாகவே அவளிடம் கேட்டுவிட வேண்டியதுதான். என்னுடன் வாழ்வதற்கு விருப்பமா இல்லையா ? உன் அன்னை தந்தை அல்லது செவிலித்தாய் ஒருவேளை எதிர்த்தால் - ஒருவேளை என்ன, உன் அப்பன் நிச்சயம் எதிர்க்கத்தான் போகிறான் ! - அவர்களைப் பிரிந்து கட்டிய துணியோடு என்பின்னே வர சம்மதமா இல்லையா ? 

இரண்டில் ஒன்று எனக்கு இன்று தெரிந்தாக வேண்டும்.

இப்படி நாய்போல தினம் தினம் வேலிதாண்டி குதிக்க முடியாது என்னால். இவள் இல்லாவிட்டால் இன்னொருத்தி ! போனால் போகிறதென்று விட்டுத் தொலைக்க வேண்டியதுதான்.

அவன் புழக்கடை தாண்டி முற்றத்தின் கதவை மெதுவாக தட்டப்போகும்போது சரியாக அந்தக் கதவு திறந்தது. ஒரு கையில் தாங்கிய சிறு அகல் விளக்கோடு - அந்த அகலின் வெளிச்சம் அணைந்துவிடக்கூடாதே என்று சுடர் அரவணைத்த மற்றொரு கையொடு - குனிந்த தலையோடு - 

ஒரு நிலவு தெரிந்தது.

அவன் நெஞ்சில் பந்தாக ஒரு பரவசம் மேலெழும்பி மேலண்ணத்தை அடைத்தது. சிறிது நேரத்திற்கு முன் காலில் பட்ட அடி மறந்து போனது. சட்டென்று அந்த ஊர், நாய், வேலி, இரவு, கல், அடி, அவள் வீடு - எல்லாமே சில நொடிகள் காணாமல் போயின. அந்த முகம் மட்டும் நின்றது. அல்ல, அந்த முகம் கூட அல்ல - முகத்தில் கவிந்திருந்த அந்தக் கண்களும் அவற்றை தடவிச்சென்ற கருவிழிகளும் மட்டும் நின்றன.

இருவரும் மாட்டுக் கொட்டிலுக்கருகில் அமைந்திருந்த சிறு அறையில் ஒடுங்கினார்கள். சிறிது நேரத்திற்கு எவரும் புழக்கடைப் பக்கம் ஒதுங்காமலிருந்தால் பிழைக்கலாம் !

அவன் தைரியசாலிதான் - வீரன்தான் - ஆனால் எதிலும் நிதானமில்லை. நிதானம் கொடுக்கும் கம்பீரமில்லை.

அவசர அவசரமாக அவளிடம் சொல்ல வந்ததை - கடந்த ஒரு ஜாம நேரமாக ஒத்திகை பார்த்த வாசகங்களை - பரபரப்பாகச் சொல்லி முடித்தான்.
"இதோ பார் ! நேரடியாகவே கேட்டு விடுகிறேன் - என்னைத் திருமணம் செய்து கொள்ளச் சம்மதமா இல்லையா ? எதற்கும் நான் சித்தமாகிவிட்டேன் - தினந்தோறும் ஊர்தாண்டி ஊர் வந்து நாய் நரிகளுக்கு பயந்து - வேலிதாண்டிக் குதித்து - என்னால் ஆகாது ! உனக்கு விருப்பமெனில் இப்போதே என்னிடம் சொல்லிவிடு - மற்ற ஏற்பாடுகளை நான் கவனித்துக் கொள்கிறேன் !"

ஓ தலைவ ! நீ நல்லவன் - ஆனால் பெண்மை புரிதாதவன். பெண்ணின் நுண்மை புரிதாதவன். அதன் தன்மை அறியாதவன். என்ன சொல்லச் சொல்கிறாய் அவளை ? எப்படிச் சொல்லச் சொல்கிறாய் ? நீ கேள்வி கேட்கும் முன்னரே அவள் பதில் சொல்லி விட்டாள் - உனக்குத்தான் அந்த பதிலைப் படிக்கத் தெரியவில்லை.

வார்த்தைகளால் சொன்னால்தான் புரிந்துகொள்வாயா ? மெளனத்தின் மொழி வார்த்தைகளைவிட அர்த்தமானது - ஆழமானது என்பதை அறிவாயா ?

முற்றக் கதவு நீ நெருங்கும்போது சொல்லி வைத்தாற்போலத் திறந்ததே - அதற்கு என்ன அர்த்தம் ? எத்தனை நாழிகைகளாக அவள் உனக்காக வழி மேல் தன் செவி வைத்து - இதயம் வைத்துக் காத்துக்கொண்டிருக்கிறாள் என்பதை அறிவாயா ? உன் மென்மையான - குறடு தரிக்காத - பாதச் சுவடுகளின் சப்தத்திற்காக நேற்று இரவு முழுவதும் அவள் ஏங்கி இருந்ததை அறிவாயா ?

உன் தரிசனம் கிடைத்ததும் அவளது மேனி மெல்ல நடுங்கிற்றே - அந்த மெல்லிய அகல் வெளிச்சத்தில் அது உன் கண்களுக்குத் தெரியவில்லை ? மாட்டுக் கொட்டிலை அடைவதற்குள் அவள் மேனி முழுவதிலும் முத்து முத்தாக வியர்வை திரண்டுவிட்டதே என்ன அர்த்தம் அதற்கு ? 

இதோ ! கடுமை பொருந்திய உன் மொழிகள் அவளது இதயத்தைக் கலக்கி விட்டன. 

விழியோரம் ததும்பி நிற்கும் நீர் - அவளின் காதலுக்கு சாட்சி. 
உன்னை இழந்துவிடுவோமா என்று அவள் கண்களில் விரியும் மருட்சி - அவளின் காதலுக்குச் சாட்சி.
பசலை படர்ந்து நிற்கும் அவளது மேனி - நடுங்கும் அவளின் கரங்கள் - இந்த பூமி, ஆகாயம், நட்சத்திரங்கள் - எல்லாம், எல்லாம்... அவளின் காதலுக்குச் சாட்சி.

காதல் உன் மனதை இன்னும் நுட்பமாக்கிவிடவில்லையா ? விழிகளின் பாஷையைப் படிக்கும் வித்தை நீ இன்னும் பழகவில்லையா ?
வாய்விட்டுச் சொல்லும் சொல் எச்சில் பட்டு அசுத்தமாகிவிடுகிறது. இதயத்தின் மொழி இரவில் திரளும் பனிநீரைப்போல பவித்திரமானது அல்லவா ?

தலைவா - உடனடியாக அவளைத் தழுவு ! அவள் தாபம் தணி ! அவள் சாய்ந்துகொள்ளத் தோள்கொடு ! அணையும் நிலையில் தவிக்கும் அவளின் உயிர்ச் சுடருக்கு உன் அணைப்பே மருந்து !

களவியல் ஒழுக்கத்தைச் சொல்லி பலரின் கூற்று நிகழும் இயல்புகளையும் விளக்கி முடிக்கும் தொல்காப்பியர், தலைவன் தலைவி இருவருக்கிடையில் பொங்கும் வேட்கையைச் சொல்லத் துணிகையில்...தன் உறு வேட்கை கிழவன் முன் கிளத்தல்
எண்ணும் காலை, கிழத்திற்கு இல்லை;
"பிற நீர் மாக்களின் அறிய, ஆயிடைப்
பெய்ந் நீர் போலும் உணர்விற்று" என்ப.

(தொல்காப்பியம் / பொருளதிகாரம் - களவியல் - எண் 1062)


என்கிறார்.

மிக மிக நுட்பமானதொரு விஷயத்தை எதிர்பார்க்கமுடியாததொரு உதாரணம் மூலம் பளிச்சென்று காண்பித்துவிடும் வித்தை தொல்காப்பியருக்கே உரியது.

"தன்னுடைய வேட்கை மிகுதியைத் தலைவன் முன்னே நின்று சொல்லுதல், ஆராயுமிடத்துத் தலைவிக்கு இல்லை. அவ்வாறு கூறாத இடத்து புதுமட்கலத்துள் ஊற்றப்பட்ட நீர் புறத்தே பொசிந்து தன்னுடைய இருப்பபைக் காட்டுவதைப்போல அவளின் உணர்வு வெளிப்படும்"

என்ன அற்புதமான சிந்தனை !

இதில் "எண்ணும் காலை" - அதாவது "ஆராயுமிடத்து" என்று ஒரு வார்த்தை சேர்க்கிறார் பாருங்கள் - அதுதான் தொல்காப்பியர் ! அதாவது காதலன் முன்பு எந்த நிலையிலாவது தலைவி தன்னுடைய வேட்கை மிகுதியைத் தெரிவிக்காறாளா என்று கொஞ்ச நேரம் யோசிக்கிறாராம்... எப்படி யோசித்துப் பார்த்தாலும் தலைவி தன் உணர்வுகளை வாய்விட்டுச் சொல்வது இல்லையாம் !

பின் எப்படிச் சொல்கிறாள் ?

புதிதாக வனையப்பட்ட மட்பாண்டத்தில் ஊற்றப்பட்ட நீர் மெது மெதுவாகக் கசிந்து (புறத்தே பொசிந்து) தன் இருப்பைக் காட்டுவதைப் போல அவளும் தன் உணர்வுகளை மெளனமாக வெளிப்படுத்துகிறாளாம். அதாவது தலைவி - அல்லது அவளது இதயம் - காதல் வயப்பட்ட நிலையில் புதிதாகப் புனையப்பட்ட மட்பாண்டம்போல ஆகிவிடுகிறது என்று கொள்ளலாம். புதிதாகப் புனையப்பட்ட மட்பாண்டத்தில் எவராவது சிறிதளவு கையை வைத்தாலே குழைந்து விடும். அது போல இருக்கிறது தலைவியின் இதயம். அவளது இதயத்தின் தாபமும் அன்பும் அவளுக்கு ஈரம் கொடுக்கின்றன.

ஆனால் சமூகம் என்ன செய்கிறது ? அந்த மட்பாண்டத்தை நன்கு வெய்யிலில் வைத்து உலர்த்தி, செங்கல் சூளையில் இட்டு அதன் ஈரத்தை ஒட்டுமொத்தமாகத் துடைத்தெடுத்துவிடுகிறது. இனி அந்த இதயத்தில் குழைவு இல்லை. குழைவு இல்லாத இதயம் சுட்ட மட்பாண்டம்போல தன் உணர்வுகளை இரகசியமாக பிறர் அறியாத வண்ணம் பாதுகாக்கும் பலத்தைப் பெற்றுவிடுமல்லவா ? குழைவாகக் கிடந்த நமது பலரின் மனத்தையும் சமூகம் இவ்வாறு வறண்டதாக்கிவிட்டதுதானே உண்மை ?

காதல் - அந்தக் காதல் எழுப்பும் தாபம் - நீராகச் சொல்லப்பட்டிருக்கிறது. சரியான உதாரணம்தான். நீர் இண்டு இடுக்குகளிலெல்லாம் புகுந்து புறப்பட்டுவிடும். காதலும் அதேபோலத்தான் - இதயத்தில் சிறிது இடம் கிடைத்தாலும் ஆசனமிட்டு அமர்ந்துவிடும். நீரைப்போலவே காதலும் நமது இதயத்திற்கடியில் எவராவது தன்னைக் கண்டுபிக்கவேண்டும் என்பதற்காக ஒளிந்துகொண்டிருக்கிறது. நீர் சாதாரணமாக மிக அமைதியாகத் தெரியும். ஆனால் ஊழிக்காலங்களில் எல்லாத் தடைகளையும் உடைத்துக் கொண்டு வெளிப்படும் வேகத்தைப் பெற்றுவிடும். 

காதலும் அதைப்போலத்தான் !

இந்த மட்பாண்டம் - பொசியும் நீர் உதாரணத்தில் என்னால் வாய்விட்டுச் சொல்லமுடியாத வேறு சில நுட்பமான விஷயங்கள்கூட இருக்கின்றன. "சொல்லாத சொற்களை"ப் படிக்கத்தெரிந்த வாசகர்கள் அதனையும் சிந்தித்துப் புரிந்துகொள்வார்களாக.